சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை மலையகத்திலிருந்து எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, சிட்னியில் வதியும் மூத்த இசைக்கலைஞர் திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதனின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுத்தர முடியுமா..? எனக்கேட்டார்.
அவரது
சில பாடல்களை அருந்ததி ஶ்ரீரங்கநாதன்
ஏற்கனவே இலங்கை வானொலிக்காக இசையமைத்து பாடியிருக்கிறார். அவற்றின்
ஒலிநாடாக்கள் தொடர்பாக பேசுவதற்குத்தான் வடிவேலன் அருந்ததியின் தொடர்புகளைக்
கேட்டிருந்தார்.
“நான் வசிப்பது மெல்பனில். அருந்ததி சிட்னியிலிருக்கிறார். எவ்வாறாயினும் முயற்சித்து அவரது தொடர்பிலக்கத்தை பெற்றுத் தருகின்றேன். “ என்று அவருக்குச்சொல்லிவிட்டு, சிட்னியில் வதியும்
எழுத்தாளர்களும் வானொலி ஊடகர்களுமான கானா. பிரபா, மற்றும் நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசர் ஆகியோரை தொடர்புகொண்டு, அருந்ததி பற்றி விசாரித்தேன்
அவர்கள் அருந்ததியின் தொடர்பு இலக்கத்தை
பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாகச் சொன்னார்கள்.
அதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி திங்கட்
கிழமை, அருந்ததி மறைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான தகவலை கானா. பிரபா சொன்னார்
எதிர்பாராத
நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை என்பதை இசையரசி கலாநிதி அருந்ததியும்
நிரூபித்துவிட்டார்.
அருந்ததி
ஶ்ரீரங்கநாதனை முதல் முதலில் 1980 களில் இலங்கை வானொலி கலையகத்தில்
சந்தித்திருக்கின்றேன். அவரை எனக்கு
அறிமுகப்படுத்தியவர் அவ்வேளையில் அங்கு தமிழ்ச்சேவைப் பணிப்பாளராகவிருந்த ( அமரர்
) வி. ஏ. திருஞானசுந்தரம்.
இவர் இலங்கை வானொலியில் கலைக்கோலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குமாறு என்னைக் கேட்டதுடன், அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் அருந்ததி ஶ்ரீரங்கநாதனையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.