ஆன்மீகப் பொக்கிஷம் ! - எம் . ஜெயராமசர்மா


             ஆடைதனைக் குறைத்தார்
                  ஆணவத்தைக் களைந்தெறிந்தார்
             நாடிநின்றார் நம்ரமணர்
                    நல்வழியைக் காண்பதற்கு 
              ஓடிவந்தார் அண்ணாமலை
                    ஒடுக்கிநின்றார் மனமதனை
image1.JPG
               வாடிவிடா அவரிருந்தார்
                      வழங்கிநின்றார் அருளையெலாம் ! 

            தன்னையே அறிவதற்குத்
                தவமிருந்தார் ரமணரிஷி
            தனிமைதனை இனிமையாய்
                  தவமுனிவர் ஏற்றுநின்றார் 
            பொய்மையாம் உடலுக்குள்
                  மெய்மையைத் தேடிநின்றார்
             மெய்மையை உணர்ந்தவவர்
                    மேதினியில் ரிஷியானார் !

துரைராஜா ஸ்கந்தகுமார் நினைவுகள் எமது தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்திற்கும் தார்மீக ஆதரவு வழங்கிய சமூகப்பணியாளர் - முருகபூபதி


-->
ஒவ்வொரு வருடமும் முடிவடையும் டிசம்பர் மாதமும், புதிய வருடம் தொடங்கும் ஜனவரி மாதமும்  எனக்கு  சற்று மனக்கலக்கமாக இருக்கும்.
கடந்த சில வருடங்களாகவே இந்தக்கலக்கம் தொடருவதற்கு காரணம் சிலரது இழப்புகள்!!! அவர்களில் எனக்கு நன்கு தெரிந்தவர்கள், அல்லது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் இருப்பார்கள்.
கடந்த 2017 டிசம்பர் மாதத்திலும் புதிய ஆண்டின் (2018)  தொடக்கத்தில் ஜனவரி மாதத்திலும் எதிர்பார்த்தவாறே மனக்கலக்கம் வந்தது. இலங்கையில் தெய்வநாயகம் பிள்ளை ஈஸ்வரனும் சென்னையில்  பரீக்‌ஷா ஞாநியும் மெல்பனில் துரைராஜா ஸ்கந்தகுமாரும் அடுத்தடுத்து மறைந்துவிட்டார்கள். 
அண்மையில் மெல்பனில் மறைந்த துரைரராஜா ஸ்கந்தகுமார் அவர்களை நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த 1987 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே நன்கறிவேன். சுமார்  முப்பது ஆண்டுகளுக்கும் மேலான  பழக்கம். அவர் 1985 இல் இங்கு வந்திருக்கிறார்.
முதல் சந்திப்பிலேயே அவர் எனது அன்புக்குரியவராகவும் மரியாதைக்குரியவராகவும் திகழ்ந்தமைக்கு அவருடைய தந்தையார் யாழ்ப்பாணம் முன்னாள் மேயர் (அமரர்) துரைராஜாதான் காரணம்.
மல்லிகைஜீவா, டொமினிக்ஜீவா என அறியப்பட்ட காலத்தில் இலங்கையில் தமிழில் முதல் முதலில் சிறுகதை ( தண்ணீரும் கண்ணீரும் ) இலக்கியத்திற்காக தேசிய சாகித்திய விருதுபெற்று, அதனை கொழும்பில்  வாங்கிக்கொண்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில் ஊர்மக்களுடன் சேர்ந்து அவருக்கு சிறந்த வரவேற்பு மரியாதை  வழங்கியவர் மேயர் துரைராஜா.
டொமினிக்ஜீவா இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்தவர். அந்த இயக்கம் வடபகுதியில் நடத்திய பல போராட்டங்களில் முன்னின்றவர். மாற்றுக்கருத்துள்ள அரசியலைச் சார்ந்திருந்த துரைராஜா அவர்கள். தங்கள் ஊர் எழுத்தாளனுக்கு இலக்கிய விருது கிடைத்ததை பாராட்டி வரவேற்பு வழங்கியதை ஜீவா இன்றும் நினைவில் வைத்து அகம் மகிழ்கின்றார். தனது சில பதிவுகளிலும் இதனை அவர் குறிப்பிட்டு நான் வாசித்திருப்பதனால், அத்தகைய நல்லியல்புகள் கொண்டிருந்தவரின் புதல்வரான ஸ்கந்தகுமாரும் தமது நல்லியல்புகளினால் என்னை கவர்ந்திருந்தார்.
மாற்றுச்சிந்தனைகளை  வரவேற்பவர்கள் அரிதாகியிருந்த காலகட்டத்தில் (இன்றும் இந்த நிலைதான் நீடிக்கிறது)  நான் 1987 இல்  முதல் முதலில் மெல்பனில் சந்தித்த நாமெல்லோரும் "ஸ்கந்தா" என அழைக்கும் ஸ்கந்தகுமாரும் தமது தந்தையின் இயல்புகளுடனேயே எனக்கு அறிமுகமானவர்.
விக்ரோரியா  இலங்கைத்தமிழ்ச்சங்கம் என்றபெயருடன் அக்காலப்பகுதியில் இயங்கிய இன்றைய ஈழத்தமிழ்ச்சங்கத்தில் ஸ்கந்தா பொருளாளராகவும் "சோமா அண்ணர்" சோமசுந்தரம் தலைவராகவும் "டொன்காஸ்டர்" மகேஸ்ரன் செயலாளராகவும் பதவியிலிருந்த  1988 - 1989 காலப்பகுதியில் ஸ்கந்தா எம்முடன் நட்புறவோடு பழகியவர்.
அக்காலப்பகுதியில் இங்கிருந்த நண்பர்கள் சிலர் இணைந்து மக்கள் குரல் என்ற கையெழுத்து இதழைத் தொடங்கியிருந்தார்கள். மக்கள் குரல் மாற்று அரசியல் சிந்தனையை முன்வைத்த விமர்சன ஏடு.

அஞ்சலி குறிப்பு: - முருகபூபதி

.
   நவீன நாடகத்துறையிலும் இதழியலிலும்  சமூகப்பார்வையை  வேண்டி நின்ற கலைஞன்
"என்னைக்கடனாளியாக்கிவிட்டுச்சென்ற ஞாநி"


                                                                           
சென்னை கே.கே. நகரில் இலக்கம் 39, அழகிரிசாமி தெருவில் ஒரு வீடு. எப்பொழுதும் கலகலப்பிற்கு குறைவிருக்காது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைப்படத்துறையினர், தொலைக்காட்சிகளைச்சேர்ந்தவர்கள், தொழிற்சங்க, அரசியல் செயற்பாட்டாளர்கள்.... இவ்வாறு யாராவது வந்துபோய்க்கொண்டேயிருப்பார்கள்.
அவ்வாறு வந்துபோய்க்கொண்டிருந்தவர்களும் இன்னும் பலரும் அதே வீட்டில் யாரை இதுவரைகாலமும் பார்க்க வந்தார்களோ, அவரை வழியனுப்ப வந்திருக்கும்போது நான் அவுஸ்திரேலியாவிலிருந்து இந்த அஞ்சலிக்குறிப்புகளை எழுதுகின்றேன்.
அந்த வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறிய கிணறு இருக்கிறது. அருகிலே சில மரங்கள், செடிகள். சிறிய முற்றம். அந்த இடத்திற்கு  கேணி என்றும் பெயர். அங்குதான் இங்கு குறிப்பிட்ட துறைகளைச்சேர்ந்தவர்கள் சந்தித்து  உரையாடுவார்கள். எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் உட்பட பலரும் அங்கு வந்து உரையாற்றியிருக்கிறார்கள். ஜெயமோகன் தொலைவிலிருந்து வருவதால் அங்கு தங்கியிருந்தும் சென்றிருக்கிறார்.
இவ்வாறு பலர் வந்துசென்ற இடம்,  நேற்றிலிருந்து  ஞாநியின் மறைவால் நிறைந்திருக்கிறது.

பிரித்தானிய பாராளுமன்றில் முதல் தடவையாக தைப் பொங்கல் விழா!


தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை  அடையாளப்படுத்தும் பல அம்சங்கள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள் அதற்கு முக்கியமான நிலம், நீர், ஆதவன், விலங்குகள் போன்றவற்றை காலகாலமாக நன்றியுடன் நினைவு கூறும் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் இன்றளவும் தொடர்கின்றன. அவை உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகை அடையாளப்படுத்தவும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கவும் வழிவகுத்துள்ளன. 

தம் நிலத்தையும் பாரம்பரிய இனத்துவத்துக்கான அடையாளங்களையும் தக்க வைக்கப் போராடும் தாயகத்திலுள்ள எம் உறவுகள் துன்ப துயரங்களைக் கடந்து "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற எதிர்பார்ப்புடன் எப்போதுமே  எதிர்காலம் பற்றிய தம் நம்பிக்கையைக் கை விட்டதில்லை. தாங்கவொண்ணாத பல இழப்புகளையும் சுமைகளையும் உள்ளத்தில் பெருநெருப்பாக சுமந்து கொண்டு தத்தமது நாளாந்த கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். எதிர்வரும் தைப் பொங்கல் தாயகத்தில் மட்டுமல்ல உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர் மனங்களில் நம்பிக்கையையும் சமூக ஒற்றுமையையும் மேலோங்கச் செய்யட்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்துகின்றது. 

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து

.
கவிஞர் வைரமுத்துவின் ்சர்ச்சைக்குரிய கட்டுரை தினமணியில் வந்தது


மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் - விலங்குகள் - பறவைகள் - தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. 

புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.

மார்கழியின் அதிகாலை மனோகரமானது. 
தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது;
தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது; 
இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது; 
கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது. 
தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது. 
"இன்னுமா உறக்கம்! 
எல்லே இளங்கிளியே! 
எழுந்து வா வெளியே' என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது. 
"மார்கழி நீராட வாரீரோ மங்கையரே' என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது. 

அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். 
இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. 
இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.
பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. 

அகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” - கானா பிரபா

ஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த அனுபவம் இதுகாறும் எனக்குக் கிட்டியதில்லை.
https://2.bp.blogspot.com/-V74PCiotBAA/Wl_GM7r8s9I/AAAAAAAAdlc/-Mt0uNwYqQ8R-OlQUxrGBK-UeBRQdscagCLcBGAs/s1600/26815032_10215384311226338_3752750410903475386_n.jpgஇம்முறை “பான் கீ மூனின் றுவாண்டா” என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழகத்தின் கிழக்குப் பதிப்பகம் வழியாக வெளிவந்த பின்னர் அதை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற உந்துதல் எழ முக்கிய காரணமே அந்தத் தலைப்புத் தான். பின்னர் இந்தச் சிறுகதைகளை வாசிக்க முன்னர் ஆர். அபிலாஷ் வழங்கிய கச்சிதமான முன்னுரை தான் அகரமுதல்வனின் எழுத்தின் நிறத்தைக் காட்டியது. சொல்லப் போனால் இந்தச் சிறுகதைத் தொகுதியை முழு மூச்சில் வாசித்து முடிப்பதற்கும் ஆர்.அபிலாஷின் சிறப்பானதொரு பகிர்வே காரணியாயிற்று.
ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகளை முற்போக்கு எழுத்தாளர் காலத்தில் இருந்து வாசித்து வருபவன். 1964 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில முதன் முதலில் தமிழ்மூலமான பட்டப்படிப்புக் கல்விக்கு தேர்வான மாணவர்குழு ஒன்று வெளியிட்ட "விண்ணும் மண்ணும்" என்னும் சிறுகதைத்தொகுதி யோகேஸ்வரி, ராஜகோபால் (செம்பியன் செல்வன்), குணராசா (செங்கை ஆழியான்), செ.யோகநாதன் உள்ளிட்ட மாணவர்களின் சிறுகதைகளால் நிரம்பியிருந்தது. பின்னாளில் ஈழத்துச் சிறுகதை, நாவல் உலகின் முக்கிய ஆக்க இலக்கிய கர்த்தாக்களாகவும் ஆயினர். இந்த இடத்தில் இவர்களைக் குறிப்பிடக் காரணம். இவர்களின் வயதை ஒத்த அல்லது நான்கைந்து வயது மூத்த பருவத்தினரான அகரமுதல்வனின் எழுத்துகளை அந்தக் காலத்து எழுத்தாளர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கவும் இந்தச் சிறுகதைத் தொகுதி உதவியது. இருபத்தைந்து வயதாகியிருக்கும் அகர முதல்வனின் எழுத்து, களம் எல்லாமே இன்னும் பத்துப் பதினைந்து வயது மூத்த அனுபவ வெளிப்பாடாகவே எண்ண வைத்தது.
“பான் கீ மூனின் றுவாண்டா” என்ற தலைப்புள் புதைந்திருக்கும் போரியல் வாழ்வின் துயர் தோய்ந்த வடுக்கள் தான் ஒவ்வொரு சிறுகதைகளின் பின்புலமாக அமைந்திருக்கின்றன. ஆகவே இவற்றைப் போரின் முகங்களாகக் கூடக் கதை மாந்தர் வழியே நிறுவ முடியும். எழுதப்பட்டிருக்கும் பத்துச் சிறுகதைளில் தொண்ணூற்றைந்துக்குப் பின்னான ஈழத்துப் போரியல் வாழ்வு, குறிப்பாக வன்னிப் பெரு நிலப்பரப்பின் வழியே காட்டப்படுகிறது அல்லது ஏதோவொருவகையில் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் எல்லாமே வெவ்வேறு அவலச் சுவையையைக் காட்டும் பன்முக வெளிப்பாடாக அமைந்திருக்கின்றன. தீபாவளி என்ற சிறுகதையின் பின்புலம் இந்திய அமைதிப்படைக்காலத்து அட்டூழியம் என்றாலும் அது
இரண்டாயிரங்களின் நிகழ் உலகிலேயே மீட்டுப்பார்க்கப்படுகிறது.
பொதுவாகச் சிறுகதைத் தொகுதி மரபில் குறித்த சிறுகதையொன்றே அத் தொகுதியின் தலைப்பாக அமைந்திருக்கும். இங்கே அந்தத் தலைப்பு எல்லாச் சிறுகதைகளையும் கிளையாகக் கொண்ட மூல வேராக இருக்கிறது.

சர்வதேச இளம் பெளத்த துறவிகள் மாநாட்டின் ஆரம்ப விழா

.

சர்வதேச இளம் பெளத்த துறவிகள் மாநாட்டின் ஆரம்ப விழா (29) கண்டி பல்லேகலையில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது வழங்கி கெளரவித்தனர். அருகில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்கவும் காணப்படுகிறார்.
யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன், சாவ­கச்­சேரி மாவட்ட நீதி­பதி திரு­மதி ஸ்ரீநிதி நந்­த­சே­க­ரன் ஆகி­யோரை உலக பௌத்த இளை­யோர் சங்­கச் சபை மதிப்­பு­றுத்­தி­யது.
நியா­யத்தை நிலை­நாட்­டு­ வ­தற்­காக ஆற்­றிய சேவை­யைப் பாராட்டி உலக பௌத்த இளை­யோர் சங்­கச் சபை­யி­னால் இவர்­கள் மதிப்­ப­ளிக்­கப்­பட்­ட­னர்.
கண்டி பல்­லே­க­ல­யில் உள்ள மத்­திய மாகாண சபைக் கேட்­போர் கூடத்­தில் நடை­பெற்ற இளை­யோர் சங்க சபா­வின் 14ஆவது வரு­டாந்த மாநாட்­டில் இந்த நிகழ்வு இடம்­பெற்­றது. நீதி­ப­தி­க­ளுக்கு விரு­தும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

தமிழர் ஒன்றுகூடல் - Toongabbie 26/01/2018






பரத நாட்டியத்தில் உலக சாதனை

.


24 உலக நாடுகளில் ஒரே தரத்தில் ஒரே நேரத்தில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட நாட்டிய மணிகள் பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தினைத் தளமாகக் கொண்டு செயல்படும் Hiddenidol என்ற அமைப்பு இசை, நடனத் திறன் ஆதியனவற்றினை வெளி உலகின் அவதானத்துக்குக் கொண்டு வரும் நோக்குடன் செயலாற்றி வருகின்றது. இந் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக செயல்பட்டுவரும் Shri N. Balakumar  ன் முன்னெடுப்பினால் முதன் முறையாக உலக நாட்டிய சாதனை என்ற தலைப்பில் 2017 ம் டிசம்பர் மாதம் 31 திகதி இந்திய நேரப்படி பிறபகல் 4 மணிக்கு 11 ஆயிரம் பரத நாட்டிய கலைஞர்கள் உழவர்களுக்கு கௌரவம் வழங்கும் வகையில் நாட்டியமாடிச் சாதனை படைத்துள்ளனர். இச் சாதனை உலகில் முதன்முறையாக இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கைச் செய்திகள்


விடுதலை புலிகளின் தங்கத்தை தேடி முள்ளிவாய்க்காலில் தேடுதல் வேட்டை

கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ரஷ்ய ரொசடம் அரச கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு…!

யாழ். நூலகத்துக்கு பெறுமதி மிக்க அன்பளிப்பு

இந்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஜனாதிபதியை சந்தித்தார்

இந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கை விஜயம்




விடுதலை புலிகளின் தங்கத்தை தேடி முள்ளிவாய்க்காலில் தேடுதல் வேட்டை

17/01/2018 இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலை புலிகளால் புதைக்கபட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி, தேடுதல் நடவடிக்கை ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படையினரின் பங்குபற்றலுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை நடைபெற்றது.
இறுதிவரை இடம்பெற்ற அகழ்வில் எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணி நிறுத்தப்பட்டது.  நன்றி வீரகேசரி  

உலகச் செய்திகள்


மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த 400 புகலிடக் கோரிக்கையாளர்களை லிபியா மீட்பு!!!

இஸ்ரேலிய பிரதமரின் இந்திய விஜயமும், மோடியின் விருந்துபசாரமும்....

பை பை தீவில் வெடித்த அதிவேகப் படகு : 16 பேர் காயம்



மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த 400 புகலிடக் கோரிக்கையாளர்களை லிபியா மீட்பு!!!

16/01/2018 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்துப் பயணித்த 400 புகலிடக் கோரிக்கையாளர்களை லிபிய கரையோர காவல் பிரிவினர் நேற்று மீட்டுள்ளனர்.
400 புகலிடக் கோரிக்கையாளர்களுடன்  மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த 2 படகுகளின் இயந்திரங்களிலும் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடலில்  தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் இவர்களை  காப்பாற்றியுள்ளதாக லிபிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாகவும் லிபிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி

தமிழ் சினிமா

ஸ்கெட்ச்

தமிழ் சினிமாவில் கதைக்கு தேவையென்றால் தன்னை எந்த அளவிற்கும் வருத்தி நடிக்கக்கூடியவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ஸ்கெட்ச். இப்படத்தின் மூலம் சரியான ஸ்கெட்ச் போட்டு மக்களை கவர்ந்தாரா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் ஸ்கெட்ச் விக்ரம்.
ஸ்கெட்ச் திரைவிமர்சனம்விக்ரம் ஸ்கெட்ச் போட்டால் மிஸ் ஆகாது என கூறும் அளவுக்கு டியூ கட்டாதவர்களின் வண்டிகளை நண்பர்களோடு சேர்ந்து தூக்குவதில் அவர் கில்லாடி. ஐயர் வீட்டு பெண்ணான தமன்னாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.
காதல் ஒருபுறமிருக்க, எதிர் கேங் ஆர்.கே.சுரேஷுடன் அடிக்கடி சிறிய மோதல் நடக்கிறது. அதுமட்டுமின்றி பிரபல தாதாவான குமாரின் காரை திட்டம் போட்டு தூக்குகிறார் விக்ரம். அங்கு ஆரம்பிக்கிறது அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் பெரிய சிக்கல்.
அதற்கு யார் காரணம் என்பதை நம்மை யூகிக்க விடாமல், எதிர்பார்க்காத கிளைமாக்ஸுடன், மீதி கதையை காட்டியுள்ளார் இயக்குனர் விஜய் சந்தர்.

படத்தை பற்றிய அலசல்

படத்திற்கு படம் தோற்றத்தில் வித்தியாசம் காட்டும் விக்ரம் இந்த படத்திலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. வழக்கம்போல நடிப்பிலும் அசத்தியுள்ளார். ஸ்கெட்ச் போட்டு வண்டியை தூக்குவது, காதல், நண்பர்கள் சென்டிமென்ட் என படத்தின் பல இடங்களில் அவரது நடிப்புக்கு தியேட்டரில் க்ளாப்ஸ் அள்ளுகிறார்.
ஹீரோயின் தமன்னாவுக்கு பெரிய ரோல் இல்லை என்றாலும், கச்சிதமாக நடித்துள்ளார்.
தமனின் பாடல்கள் படத்தில் ஸ்பீட் பிரேக்கர்களாக மட்டுமே இருந்தன.

க்ளாப்ஸ்

  • விக்ரமின் நடிப்பு,
  • தமன் இசை,
  • சென்ட்டிமெண்ட் காட்சிகளை சரியாக கையாண்ட விதம்.

பல்ப்ஸ்

  • ஸ்பீட் பிரேக்கர்களாக வரும் பாடல்கள். யமஹா ஸ்கூட்டர் விளம்பரத்திற்காக ஒரு பாட்டு வெச்சதெல்லாம் டூமச்.
  • விக்ரம் தவிர மற்ற கதாபாத்திரங்கள் எதுவுமே அழுத்தமாக இல்லாதது.
  • அவுட்டேட்டட் கதை.
  • மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்ட கிளைமாக்ஸ் படத்தின் கதையோடு சுத்தமாக ஒட்டாமல் போனது.
மொத்தத்தில் ஸ்கெட்ச் வழக்கமான வடசென்னை மாஸ் மசாலா படம்.
நன்றி  CineUlagam