தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்
தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் நடிகர்களுக்கிடையேயான ஈகோ குறைந்து கொண்டே போகிறது போல, விஜய், அஜித்தில் ஆரம்பித்து விஜய் சேதுபதி வரை இரண்டு ஹீரோ படங்களில் நடிக்க சம்மதிக்கின்றனர்.
அந்த வகையில் அட்டக்கத்தி தினேஷ், நகுல், ஐஸ்வர்யா தத்தா, பிந்து மாதவி, சதீஷ் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் தான் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும். இப்படத்தை அறிமுக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.
கதை
படத்தில் காதல், நகைச்சுவை தாண்டி கொஞ்சம் சயின்ஸும் பேசப்பட்டுள்ளது என்பது தான் கொஞ்சம் வித்தியாசம். நகுல் கல்லூரி மாணவர்களுக்கு ப்ராஜக்ட் எழுதி தருபவராக வர, இவருக்கு ஐஸ்வர்யா தத்தாவின் அறிமுகம் கிடைக்கிறது. சில நாட்களில் இவர்கள் நட்பு வழக்கம் போல் காதலாக மாறுகிறது.
அதேபோல் இன்னொரு பக்கத்தில் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை பார்க்கும் தினேஷிற்கு, பிந்து மாதவி மீது காதல், இதையெல்லாம் விட காமெடியன் சதீஸும் இப்படத்தில் மூன்றாவது ஹீரோவாக வந்து செல்கிறார்.
ஏனெனில் படத்தில் இவருக்கும் ஜோடி உண்டு, இவர்கள் எல்லோரும் எப்படி காதலில் இணைந்தார்கள், என்பதை மட்டும் இல்லாமல் பல சயின்ஸ் சுவாரசியங்கள் கூறி முடிகிறது கிளைமேக்ஸ்.
நடிகர், நடிகைகளின் பங்களிப்பு
நகுல் ஒரு இளம் விஞ்ஞானி போல் யதார்த்தமாக நடித்துள்ளார். அதிலும், இவர் செய்து காட்டும் சயின்ஸ் விஷயங்கள் எல்லாம் ஈர்க்கின்றது. நகுலின் அம்மாவாக வரும் ஊர்வசி, வழக்கமான தன் கலகல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அட்டக்கத்தி தினேஷ் எப்போதும் போல் தன் அப்பாவி முகத்தில், குறிப்பாக பில்டிங் விற்கும் காட்சிகளில் கைத்தட்டல் வாங்குகிறார். சதீஸ் படம் முழுவதும் வந்து நகைச்சுவைக்கு கேரண்டி கொடுக்கிறார்.
க்ளாப்ஸ்
சதீஸின் நகைச்சுவை காட்சிகள் நன்றாக வந்துள்ளது. தமனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம், பிந்து மாதவியும் தன் கதாபாத்திரம் உணர்ந்து நன்றாகவே நடித்துள்ளார்.
அட்டக்கத்தி தினேஷ் படத்திற்கு படம் தன் நடிப்பை மெருகேற்றி வருகிறார். இந்த படத்திலும் இவரது நடிப்பு அனைவரையும் கவரும் படி உள்ளது. நகுல்-ஐஸ்வர்யா தத்தா காதல் காட்சிகள் புதுமையாக உள்ளது.
பல்ப்ஸ்
சில காட்சிகளில் சயின்ஸ் பற்றி பேசும் போது கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. திரைக்கதை கொஞ்சம் தடுமாறுகிறது.
மொத்தத்தில் தமிழுக்கு எண் 1ஐ கண்டிப்பாக ரசிகர்கள் அழுத்தலாம்.
ரேட்டிங்-3/5