உயிர்ப்பு தொகுப்பின் வெளியீட்டு அரங்கு 2006 ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் திகதி சனிக்கிழமை பிரஸ்டன் நகர மண்டபத்தில் , மரபு கலை, இலக்கிய இதழை வெளியிட்ட அதன் ஆசிரியர் திரு. விமல். அரவிந்தன் தலைமையில் நடந்தது என்று கடந்த 56 ஆவது அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
அன்று நடந்த விழா இங்கு
வதியும் மூத்த – இளம் தலைமுறையினர் சங்கமிக்கும் அரங்காகவே சிறப்புற்றிருந்தது. குறிப்பிட்ட ஆறாவது எழுத்தாளர் விழா பற்றி ஊடகங்களில் வெளியான பதிவை இங்கே மீண்டும் நினைவூட்டுகின்றேன்.
புலம் பெயர்ந்து வந்த தமிழர்கள் தம்முடன் தமது இயல்புகளையும்
அழைத்து வந்திருந்த போதிலும் இவர்கள் மத்தியில் கலை , இலக்கிய உணர்வுள்ளவர்கள் , அந்த இயல்புகளுக்கும் அப்பால் அடுத்த தலைமுறையின் தேவை கருதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழின அடையாளம் பேணப்படவேண்டும் என்ற கருத்தியலுக்கு
வலுச்சேர்க்கும் பணிகள் ஒருபுறம் மேற்கொள்ளப்படும் அதே சமயம் – புகலிட இலக்கியத்தை
ஆரோக்கியமான திசையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பிரயத்தனமும் நீட்சி
பெற்றுள்ளது.
2006 ஜனவரி 7 ஆம் 8 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியா மெல்பனில் நடந்த ஆறாவது எழுத்தாளர் விழாவின் நிகழ்ச்சிகள், விழா அமைப்பாளர்களின் நோக்கத்தை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அறிகுறியை காண்பிக்கிறது.
“அறிந்ததைப் பகிர்தல் , அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்” என்ற
சிந்தனையை முன்னிறுத்தி 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த எழுத்தாளர் விழா , பின்பு
ஆண்டுதோறும் மாநிலங்களில் நடைபெற்றது.
இம்முறை ஆறாவது எழுத்தாளர் விழா மெல்பன் பிரஸ்டன் (Preston Town Hall , Melbourne) நகர
மண்டபத்திலும் , பண்டூரா (Bundoora Park) பூங்காவிலும் இரண்டு நாட்கள் நடைபெற்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளிலும் (2001 முதல் 2005
வரையில்
) எழுத்தாளர் லெ. முருகபூபதி இவ்விழாக்களின் பிரதம அமைப்பாளராக செயல்பட்டார்.
இம்முறை (ATLAS) என்று அழைக்கப்படும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (Australian
Tamil Literary & Arts Society) என்ற அமைப்பு இவ்விழாவை ஒழுங்கு செய்திருந்தது.
அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் ,
பத்திரிகையாளர்கள் , ஊடகவியலாளர்கள் வருடாந்தம் ஒன்றுகூடும் இவ்விழாவில் இம்முறை
கருத்தரங்கு ,நூல் விமர்சன அரங்கு , நூல் வெளியீடு , குறும் திரைப்பட அரங்கு ,
கவியரங்கு என ஐந்து நிகழ்வுகள் இடம் பெற்றன.
சமூகம் . கல்வி , இலக்கியம் முதலான தலைப்புகளில் கருத்தரங்கு
அமர்வுகள் முதல்நாள் விழாவில் காலைமுதல் மாலை வரை நடைபெற்றன.
விழாவை ஒழுங்கு செய்த அமைப்பின் கீதத்தை மெல்பன் கவின்கலை இசைக்கல்லூரி மாணவர்கள் பாடியதைத் தொடர்ந்து , திருமதி.உஷாகெளரி சந்திரனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.