சஞ்சுதா, ஷிவாந்தி பகீரதனின் அரங்கேற்றம். நாட்டிய கலாநிதி - கார்த்திகா கணேசர்

.


11ஆம் திகதி மாசி மாதம் 2018 இல் சஞ்சுதா, சிவந்தி பகீரதனின் அரங்கேற்றம் NIDA மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. வாசலிலே கோலங்கள் அழகூட்ட அலங்கரிக்கப்பட்ட விநாயகர் எழுந்தருளி இருக்க, சஞ்சுதா, ஷிவாந்தியின் அழகிய ஆடற் கோலங்கள் எம்மை வரவேற்றது. வெகு அழகாக அச்சிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் மேலும் கவர்ச்சியூட்ட மண்டபத்தில் போய் அமர்ந்தோம்.
சகோதரிகள் ஆடல் பயிற்சியை மீனா பீடில் இன் வழி நடத்தலில் 2000 ஆண்டு ஆரம்பமானது. தொடர்ந்து மீனாவின் மகள் ஜனனி ஆடல் மேல் கொண்ட ஆர்வத்தால் இந்தியன் டான்சிங் ஸ்கூல் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இவர் பரதத்துடன் ஹிப் ஹாப் போன்ற மேற்கத்திய நடனங்களையும் கற்றவர். மேலும் பாலிவுட் நடனத்தில் ஆர்வம் உடையவர், அதனால் தான் நடத்தும் நிறுவனத்தில் இவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்தார். மீனா ஜனனியின் வழிநடத்தலில் இவற்றை எல்லாம் கற்ற சஞ்சுதா, ஷிவாந்தி சகோதரிகள் இவற்றை எல்லாம் அரங்கங்களில் ஆடி வந்தவர்களே. பல வருடங்கள் இவர்கள் பயிற்சி இவர்களை ஆடலில் பரந்து விரிந்த அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் என்ன சந்தேகம். இது தவிர இவர்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பாலர் பருவத்திலிருந்தே பங்கு கொண்டு  வளர்ந்தவர்கள். ஆசிரியர்களுடன் இணைந்து தமிழாக்க கோயில்களான திருவையாறு, பந்தணை நல்லூர், மயிலாடுதுறை, கங்கை கொண்ட சோழபுரம், கும்பகோணம், சிதம்பரம் என பல கோயில்களிலும் ஆடியுள்ளனர்.
அவை தவிர பல மேலை நாடுகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

களிப்புற்று நின்றிடுவோம் ! - எம். ஜெயராமசர்மா


       விண்ணுக்கும் காதல் மண்ணுக்கும் காதல்                                        
            மண்ணிலுள்ள மனிதருக்கு மனமெல்லாம் காதல் 
      ஆண்டவனின் அருங்கொடையாய் அமைந்திருக்கும் காதல்தனை
               அனைவருமே வாழ்த்திநின்று ஆனந்தம் அடைந்திடுவோம் ! 

      மானிட  இனத்துக்கு மருந்தாக இருப்பதுதான்
             வரமாக வந்திருக்கும் காதலெனும் உணர்வாகும்
     காதலுடன் வாழுகின்றார் காலமெலாம் வாழுகின்றார்
             காதலினை போற்றிநின்று களிப்புற்று நின்றிடுவோம் ! 

    காதலிலே பலவகைகள் காணுகிறோம் வாழ்க்கையிலே
         காதலிலே மோதல்வரும் களிப்புமங்கே சேர்ந்துவரும் 
   மோதலுடன் காதல்வந்தால் முடிவல்ல எனநினைப்பீர்
         காதலது தளைப்பதற்கு கால்கோளே அதுவன்றோ ! 

    காதலில்லா வாழ்வினைநாம்  கசப்பென்றே எடுக்கவேண்டும்
          காதலென்னும் பயிர்வளர்ந்தால் கனிவுமங்கே துளிர்த்துவிடும் 
   காதலித்துப் பாருங்கள் கண்டிடுவீர் பேரின்பம்
         ஆதலினால் காதல்தனை அனைவருமே வாழ்த்திடுவோம் !

    காதல்பற்றிக் காவியங்கள் கருத்துடனே வந்திருக்கு
           காதலிக்கும் காதலர்கள் காதலுடன் வலம்வருவார்
   காதலுடன் நாம்படித்தால் காதலுடன் வாழ்ந்திடலாம்
          காதலுடன் யாவரையும் கைகுலுக்கி நின்றிடுவோம் ! 
    
       
       


அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் மறைவு


அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர், பெருமதிப்புக்குரிய திரு கந்தையா நீலகண்டன் அவர்கள இறையடி எய்திய செய்தி சற்று முன்னர் அறிந்து பேரதிர்ச்சியும், கவலையும் கொள்கிறேன்.

செய்ற்கரிய செய்தோர் பெரியோர் என்னும் வாக்குக்கமைய திரு கந்தையா நீலகண்டன் சைவநெறிக்காக உழைத்த அருந்தகை என்பதை நேரிலும் அவரின் செய்ற்பாடுகளின் வழியேயும் அறிந்தவன் என்ற வகையில் அவரின் பிரிவை ஈழத்தமிழினத்தின் இன்னொரு பேரிழப்பாக எடுத்துக் கொள்கிறேன்.

இந்து மாமன்றம் செய்த பல்வேறு அறப்பணிகளுக்கு அன்னாரின் சிறப்பான வழி நடத்தல் மிக முக்கியமான காரணியாகின்றது. அண்மையில் மன்னாரில் இந்து ஆலயங்களுக்கு எழும் அச்சுறுத்தல்களைத் தக்க் நேரத்தில் கவன ஈர்ப்பாகக் கொண்டு வந்தார்.

அவரின் ஒவ்வொரு சிட்னி விஜயத்திலும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது எனக்கு.  நீண்டதொரு வானொலிப் பேட்டி வழியாக இந்து மாமன்றம் முன்னெடுக்கும் விரிவான பணிகளைச் சொல்லி வியப்பில் ஆழ்த்தியவர்.
ஐயனே உங்கள் இழப்பில் வேதனையுறுகிறேன் 😞
உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் 🙏

விதிப்பயன் ( உருவகக்கதை) - முருகபூபதி


அந்த வீட்டில் எலியின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. முதலில் எங்கிருந்தோ வந்தது அந்த எலி. ஒருநாள் வீட்டின் பின்வளவிலிருந்த  புதரிலிருந்து வெளிப்பட்ட எலியை பார்த்தது தரையில் மேய்ந்துகொண்டிருந்த கோழி.
கோழி அந்த வீட்டின் வளர்ப்புப்பிராணி. அது இடும் முட்டைகள் அந்த வீட்டின் தேவைக்குத்தான் பயன்பட்டன. அதனால் ஒரு முட்டையைத்தானும்  பாதுகாத்து அடைகாத்து குஞ்சுபொரித்து தனது இனத்தை விருத்தியாக்கமுடியவில்லை.
சில நாட்களில் எலியின் பொந்திலிருந்து மேலும் சில எலிக்குஞ்சுகள் வெளிப்பட்டன. அவை அண்ணன் தம்பிகளாக பெருகி, அந்த வீட்டிலிருந்து நிறைய தானியங்களை சூறையாடிக்கொண்டிருந்தன. அதனால்  கோழிக்கு கிடைக்கும் தானியங்கள் குறைந்தன.
அயல்வீட்டில் செல்லப்பிராணியாக வளரும் பூனையுடன் கோழி சிநேகம் பூண்டது. அடிக்கடி பூனையுடன் பேசும்போது தான் வசிக்கும் வீட்டின் எலிகளின் அட்டகாசம் பற்றி புலம்பியது.
" பூனையாரே... அந்த வீட்டில் நானும் எனது கணவர் சேவலும்தான் வாழ்ந்தோம். வீட்டின் எஜமானியம்மா எம்மிருவருக்கும் போதியளவு தானியமும் உணவும் தந்து பராமரித்தார்கள். அதனால் அவர்களுக்கு தினமும் முட்டைகள் கொடுத்தேன். எங்கிருந்தோ வந்த எலி தானியங்களையும் திருடிக்கொழுத்து, தனது சந்ததியையும் பெருக்கிக்கொண்டது."
" எலியை அந்த வீட்டுக்காரர்கள் வளர்க்கவில்லை. வளர்க்கவேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை. ஏனென்றால் எலியை வளர்த்தால் எலிப்புழுக்கைதான் கிடைக்கும் உன்னை வளர்த்தால் முட்டை கிடைக்கும். இப்போது உன்னை வளர்க்கிறார்கள். ஒருநாளைக்கு நீயும் தேவைப்பட்டால் அடித்து இறைச்சியாக்கி உண்டுவிடுவார்கள். மனிதர்கள் எதனையும் தங்கள் தேவையின் பொருட்டுத்தான் வளர்ப்பார்கள்." என்றது பூனை.
" நீங்கள் வளரும் வீட்டிலும் அப்படித்தானா...? பூனையாரே...?" எனக்கேட்டது கோழி.
" நான் வளரும் வீட்டிலும் அவர்களின் தேவைக்குத்தான் வளர்க்கப்படுகின்றேன். ஆனால், அவர்கள் ஒருநாளும் என்னை அடித்து கறிசமைக்கமாட்டார்கள், எனக்கு தினமும் பாலும் உணவும் தருகிறார்கள். நான் இருந்தால் அங்கு எலிகள் வராது என்பது நிச்சயம். அதனால் வளர்க்கிறார்கள் "  என்றது பூனை.
இவ்வாறு கோழியும் பூனையும் முற்றத்திலிருந்து உரையாடிக்கொண்டிருந்தபோது ஒரு எலி, கோழி வளர்க்கப்படும் வீட்டுக்குள் பிரவேசித்தது. அதன் தம்பியான மற்றும் ஒரு எலி பூனை வளர்க்கப்படும் வீட்டுக்குள் சென்றது.
இதனைக்கண்டுவிட்ட கோழி உரத்து கொக்கரக்கோ என சத்தமிட்டு தனது கோபத்தை உணர்த்தியது.  "பூனையாரே... அங்கே பாரும் அண்ணன் தம்பிகளான அந்த எலிகளில் ஒன்று எங்கள் வீட்டுக்குள்ளும் மற்றும் ஒன்று உங்கள் வீட்டுக்குள்ளும் பிரவேசிக்கின்றன. நான் உரத்து சத்தமிடுகின்றேன். நீங்கள் ஏன் மெளனமாக இருக்கிறீர்கள்?" என்றது கோழி.
" ஏய்.... நான் கவனிக்காமலா இருக்கின்றேன். உன்னைப்போல் நான் அவசரக்காரன் அல்ல. நீ ஒரு முட்டை போட்டுவிட்டு உரத்து கொக்கரிப்பாய். எலிகள் அப்படி அல்ல. எத்தனை எலிக்குஞ்சுகளை ஈன்றாலும் சத்தமிடாது இருக்கும். நான் பதுங்கியிருந்து பாய்ந்து பிடித்து உண்பேன்."
" உங்கள் வீட்டுக்குள்ளும் ஒரு எலிபோய்விட்டது. இனி அங்கும் இனவிருத்தி செய்து தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும். பிறகு உங்களுக்கும் எனக்கும் இந்த இடம் சொந்தமில்லாமல் போய்விடும்" என்று கவலைப்பட்டது கோழி.
" பொறுத்திரு இன்னும் சில நாட்களில் இங்கிருக்கும் அனைத்து எலிகளையும் பிடித்து சாகடித்துவிடுகின்றேன்." என்றது பூனை.
" எத்தனை நாட்களில்...?"
" சில நாட்களில்."
" பூனையாரே உறுதியாகச்சொல்லுங்கள். இன்னும் எத்தனை நாட்களில்...?"

படித்தோம் சொல்கின்றோம் குரலின் வலிமையை பேசும் மற்றும் ஒரு குரல் அ.முத்துக்கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் ஃபிடல் காஸ்ரோவின் மறுபக்கம் - முருகபூபதி


" ஒருமுறை அவர் தன் விருப்பத்தைச்சொன்னார்," என் அடுத்த பிறவியில் நான் எழுத்தாளராகவேண்டும்" என்று. அது உண்மையும்கூட. அவர் எழுதுவார். எழுதுவதை கொண்டாட்டமாக உணர்பவர் ஃபிடல். வாகனத்தில் பயணிக்கும்பொழுதுகூட அவருடைய கை எழுதுவதில் முனைப்போடு இருக்கும். மனதுக்குள் ஊறும் சில நுட்பமான உணர்வுகளையோ, சில அந்தரங்க கடிதங்களையோ எழுதிக்கொண்டிருப்பார்." இவ்வாறு உலகினால் பெரிதும் ஆகர்சிக்கப்பட்ட பேராளுமை ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி அவரது நெருங்கிய தோழர் கேபிரியேல் கார்ஸியா மார்க்வஸ்  சொல்லியிருக்கும் தகவலை  அ.முத்துக்கிருஷ்ணனின் அழகிய மொழிபெயர்ப்பில் படிக்கின்றோம்.
குரலின் வலிமை என்ற இந்தச்சிறிய நூல் 32 பக்கங்களை கொண்டிருந்தாலும் வாசகர்களை பெரிதும் ஈர்க்கத்தக்க பல தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது.
"கடுகு சிறிதானாலும் காரம் பெரிது" எனச்சொல்வார்களே! அத்தகைய கருத்துச்செறிவு மிக்கது முத்துக்கிருஷ்ணன் மொழிபெயர்த்திருக்கும் குரலின் வலிமை.
ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகர எண்ணங்கள் பற்றியோ, கியூபாவை கைப்பற்ற ஏர்ணஸ்ட் சேகுவேராவுடன் அவர் நடத்திய போராட்டங்கள் பற்றியோ, அரசியல் வாழ்வுபற்றியோ, வாழ்க்கைச்சரிதம் பற்றியோ இந்த நூல் பேசவில்லை.
நாம் அறியாத பல பக்கங்களை அவருக்கு நெருக்கமாக இருந்த கேபிரியேல் கார்ஸியா மார்க்வஸ்  சொல்லும்போது  சுவாரஸ்யமான தகவல் குறிப்புகளினால் எம்மையும் நெருங்கவைக்கிறது இந்த நூல்.
மாயாவாத இயற்பண்பியல் எழுத்துக்களினால்  வாசகர்களை பெரிதும் கவர்ந்த  இலக்கிய மேதை கேபிரியேல் கார்ஸியா மார்க்வஸ்  எழுதிய ' ஒரு நூற்றாண்டு காலத் தனிமை' நாவலை வாசித்த பின்னர்தான் ஃபிடல் காஸ்ட்ரோ, இவருக்கு நெருங்கிய  நண்பராகியிருக்கிறார்.
அந்த நெருக்கத்தினால் இவரது வீட்டுக்கு நள்ளிரவிலும் வரும் ஃபிடல், அந்த நாளின் கடைசிப்பொழுதையும் கழிக்கத்தான் வருகிறார். குளிர்சாதனப்பெட்டியிலிருந்து பாலாடைக்கட்டிகளை எடுத்து உண்ணுகிறார். மெக்ஸிக்கோவிலிருக்கும் நண்பரை அழைத்து முன்பு ஒரு நாள் விரும்பிச்சாப்பிட்ட உணவைப்பற்றிய சமையல் குறிப்புகளைக் கேட்டுப்பெறுவார். சிறிய கரண்டிகளில் வெனிலா ஐஸ்கிரீமை உண்ணத்தொடங்குவார்.
அத்தகைய ஒரு இனிமையான நள்ளிரவுப்பொழுதில் கேபிரியேல் கார்ஸியா மார்க்வஸ்  கேட்கிறார்: " இந்த உலகில் எதைச்செய்ய உங்களுக்கு மிகுந்த விருப்பம்?"
அதற்கு ஃபிடலின் உடனடியான பதில்: " ஏதேனும் ஒரு தெருமுனையில் வேலை அவசரங்கள் ஏதுமின்றி காலாற நடக்கவேண்டும்."
இந்த வரிகளுடன் குரலின் வலிமை என்னும் இச்சிறிய நூலின் இறுதிப்பக்கம் நிறைவுபெறுகிறது.
முத்துக்கிருஷ்ணனின் எழுத்துக்களையும் அவர்மேற்கொள்ளும் கள ஆய்வுப்பணிகளையும் இதழ்களிலும் ஊடகங்களிலும் படித்திருப்பதனாலும் மெல்பனில் ஒரு சில சந்திப்புகளில் அவருடன் உரையாடியிருப்பதனாலும் அவருடைய சிந்தனைகள் காலத்தின் தேவையாகியிருப்பதனாலும் சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானவராகியிருக்கிறார்.கடந்த வாரமும் மெல்பன் வந்திருந்த அவர், தமிழகத்தில் கீழடியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வாராய்ச்சி தொடர்பாக விரிவுரையாற்றினார்.
சில மாதங்களுக்கு முன்னர் அவரிடமிருந்தே அவர் மொழிபெயர்த்திருக்கும் குரலின் வலிமை நூலை பெற்றுக்கொண்டேன்.
இந்த நூலை படிப்பதற்கு அதிகம் நேரம் ஒதுக்கவேண்டியதில்லை. 32 பக்கங்கங்கள்தான்! ஆனால், இந்த நூல்பற்றி எழுதுவதற்கு அதிகநேரத்தை தேடுதல் சார்ந்து செலவிட நேர்ந்தது.

இங்கேயும் ஒரு காதல் கதை (சிறுகதை) - கானா பிரபா




“என்ன சுகந்தி பேசாமல் இருக்கிறீர்?”

“இல்லை அத்தான் உங்களைச் சந்திச்சு எவ்வளவு காலம் இருக்கும்... எதையுமே கதைக்கப் பிடிக்கேல்லை உங்களுக்குப் பக்கத்தில் இருக்கிறதே போதும் எனக்கு அது போதும்”

“நீர் அத்தான் எண்டு கூப்பிடேக்கை சிரிப்பாக இருக்கும் ஆனால் என்னவள் என்ற உரிமையை எனக்கு இன்னும் அழுத்தமாக உள்ளுக்குள்ள சொல்லிக் கொள்ளும் அது”

“ஊர் உலகத்துத் தான் நீங்கள் கண்ணன், ஆனால் உங்களை நான் காதலிக்கத் தொடங்கின நாளில் இருந்து அத்தான் தான், வெளியில் உங்களை நான் பேர் சொல்லி அழைக்கும் போது மனசுக்குள்ள அத்தான் என்று சொல்லித் தான் முடிப்பன்” 

“உமக்கு ஞாபகம் இருக்குதா பள்ளிக்கூடம் முடிஞ்ச கையோட அதே யூனிபோர்மோட இப்பிடித் தானே உங்கட  வீட்டு நாவல் மரத்தில நான் ஒரு பக்கம் நீர் ஒரு பக்கம் இருந்து கொண்டு நாவல் பழங்களைப் பிடுங்கிச் சாப்பிட்டுக் கொண்டு கதை பேசினதை?”

“எப்படியத்தான் அதையெல்லாம் மறக்கேலும் அப்பாவின்ர ஷேவிங் ப்ளேட் எடுத்து மரத்தில ‘சுகந்தி’ என்று நீங்கள் எழுத நான் பதிலுக்கு ‘கண்ணன்’ என்று எழுத, யார் வடிவாக எழுதினது என்றெல்லாம் எங்களுக்குள் போட்டி வைத்தோமே ஹாஹா”

“தேவராசா மாமா, அதான் உங்கட அப்பா வந்து என்ன திருக்கேதீஸ்வரப் பக்கம் இருக்கிற குரங்குகள் மாதிரி மரத்தில குந்திக் கொண்டிருக்கிறியள் இறங்குங்கோ கெதியா எண்டு சொல்லும் வரைக்கும் அதில தானே இருப்பம் என்ன, ஹும் அந்த நாவல் மரமும் பட்டுப் போயிருக்கும் என்ன...”

“எனக்கு அதையெல்லாம் நினைச்சால் அழுகை அழுகையா வரும் நான் சாமத்தியப்பட்ட கையோட உங்கட அம்மா தானே தடுத்தவ இனிமேல் இரண்டு பேரும் இப்பிடித் தனியா எல்லாம் மரம் வழிய ஏறக் கூடக் கூடாதெண்டு அப்ப தானே ஒரு நாள் நீங்கள் வந்து என்னைக் காதலிக்கிறதாச் சொன்னீங்கள்?”

CARELANKA - அங்குரார்ப்பணம் - தகவல் அமர்வு


இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் நலன்களையும் அபிலாஷைகளையும் கவனத்தில் கொண்டு, மெல்பனில் தொடங்கப்பட்டுள்ள  CARELANKA அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும் தகவல் அமர்வும் எதிர்வரும் 24-02-2018 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY CENTRE (Karobran Drive, Vermont  South, Victoria 3133) மண்டபத்தில் நடைபெறும்.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறும், கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறும் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்துவாழும்  எமது இலங்கை அன்பர்களை  அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
திரு. பந்து திசாநாயக்க -                0419 874 469
Dr. (திருமதி) வஜ்னா ரஃபீக் -         0433 267 670
Dr. ஞானசேன விஜேசேகர  -          0432 531 985
திரு. இராஜரட்ணம் சிவநாதன் - 0412 067 019









இலங்கை செய்திகள்


யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட்

இலங்கை இராணுவத்தில் யாழ். இளைஞர், யுவதிகள்

8,325 பேர் ஆறாம் திகதி பதவியேற்பு

வவுனியாவில் இராணுவத்தினரின் நல்லிணக்க பொங்கல்!!!

வர்த்தகர் படு கொலை வழக்கில் வாஸ் குனவர்தனவுக்கு 5 வருட கடூழிய சிறை!!!





யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட்


14/02/2018 யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக  இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 

உலகச் செய்திகள்


பிரித்தானியாவை உலுக்கிய நிலநடுக்கம் : பதற்றத்தில் மக்கள்

தென்னாபிரிக்காவிலும் அரசியல் நெருக்கடி: பதவி விலகினார் ஸுமா!

தென்னாபிரிக்காவின்  ஜனாதிபதியானார் சிரில் ரமபோஷா 

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிப் பிரயோகம் ; 17 பேர் பலி, பலர் பணயக் கைதிகள் : துப்பாக்கிதாரி கைது

அபுதாபியில் முதல் இந்து கோவிலிற்கு அடிக்கல் நாட்டினார் மோடி!!!




பிரித்தானியாவை உலுக்கிய நிலநடுக்கம் : பதற்றத்தில் மக்கள்


17/02/2018 பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதி மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தின் முக்கிய பகுதிகளில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமா - நாச்சியார் – திரை விமர்சனம்



காவல்துறை அதிகாரி ஜோதிகா. இவரது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு கற்பழிப்பு புகார் ஒன்று வருகிறது. இதுகுறித்து விசாரிக்கும் போது ஜி.வி.பிரகாஷ் தான் குற்றவாளி என்பது தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் ஜி.வி.பிரகாஷை கைது செய்யும் ஜோதிகா, 18 வயதுக்குட்டபட்டவர் என்பதால் அவரை சிறுவர் காப்பகத்தில் சேர்க்கிறார். கற்பழிக்கப்பட்ட இவானாவை தனது கட்டுப்பாட்டில், தனது வீட்டிலேயே வைத்து பாதுகாக்கிறார்.
பின்னர் ஜி.வி.பிரகாஷிடம் நடத்தப்படும் விசாரணையில், ஜி.வி.பிரகாஷ் – இவானா காதலித்து வந்தது தெரிய வருகிறது. இந்நிலையில், இவானாவுக்கு குழந்தையும் பிறக்கிறது. குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் குழந்தை – ஜி.வி.பிரகாஷின் டி.என்.ஏ. ஒத்துப் போகாததையடுத்து ஜி.வி.பிரகாஷ் ஒரு அப்பாவி என்பது தெரியவருகிறது.
இதையடுத்து இவானாவை கற்பழித்த குற்றவாளி யார் என்பது குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் ஜோதிகா, அதற்காக பல இன்னல்களை சந்திக்கிறார். இவானாவுக்கு நெருக்கமானவர்கள் அனைவரையும் விசாரிக்கிறார்.
கடைசியில் இதற்கு காரணமாக குற்றவாளியை ஜோதிகா கண்டுபிடித்தாரா? அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இவானாவுக்கு பிறந்த குழந்தை பற்றிய தகவல் ஜி.வி.பிரகாஷூக்கு தெரியவந்ததா? கடைசியில் ஜி.வி என்ன முடிவு எடுத்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
ஜோதிகா இதுவரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு நேர்மையான, முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக அவரது கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார். இருப்பினும் கமர்ஷியலாக நடித்து வந்த ஜோதிகாவை போலீஸ் அதிகாரியாக, இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பாலாவால் மட்டும் தான் காட்ட முடியும்.
ஜி.வி.பிரகாஷ் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை வெகுளித்தனத்துடன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் உடனான காதல் காட்சிகளில் இவானா ரசிக்க வைத்திருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ், தமிழ் குமரன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.
வழக்கமான பாலா படம் போல இல்லாமல், இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. காதல், பாசம், கற்பழிப்பு என காட்சிகள் நகர்ந்தாலும், அதில் பாலாவின் வழக்கமான அழுகாச்சி உள்ளிட்ட அழுத்தமான, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் இல்லாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
பின்னணி இசையில் இளையராஜா கலக்கியிருக்கிறார். பாடலிலும் ரசிக்க வைத்திருக்கிறார். ஈஸ்வரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `நாச்சியார்’ மிரட்டுகிறாள்.    நன்றி tamilcinema.news