இயல்புதான் மனிதர்களின் அடிப்படை அழகு. காலம், நட்பு,
சுற்றுச்சூழல், அனுபவம் என்பன ஒரு மனிதரின் அடிப்படை இயல்புகளை மாற்றினாலும், மாற்றவே முடியாத குறிப்பிட்ட சில இயல்புகளையும் கொண்டிருப்பவர்கள்தான் மனிதர்கள்.
அதனைப் புரிந்துகொண்டால் பொதுவாழ்வில் வரும் சிக்கல்கள், பிரச்சினைகளை எளிதாக தீர்த்துக்கொள்ள முடியும். ஏன் இவ்வாறு எழுதுகின்றேன் என்பதை இந்த அங்கத்தை
படிக்கும்போது புரிந்துகொள்வீர்கள்.
1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஒரு நாள் (அன்று சனிக்கிழமை ) இரவு எட்டு மணியளவில்
சோமா சோமசுந்தரம் அண்ணர் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அக்காலப்பகுதியில் விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின்
ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழும்,
புதிய நிருவாகிகள் தெரிவிற்கான பரிந்துரை படிவங்களும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு
தபாலில் வந்திருந்தன.
மக்கள் குரல் ஆசிரிய பீடத்தைச்சேர்ந்த சிலரை சங்கத்தின்
புதிய
நிருவாகக்குழுவில் சேர்ப்பதற்கு தயாரானோம்.
துணைத்தலைவர் பதவிக்கு தருமகுலராஜா, இதழ் ஆசிரியர் பதவிக்கு இராஜரட்ணம் சிவநாதன், துணைப் பொருளாளர் பதவிக்கு எஸ். பாலச்சந்திரன்,
செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு கொர்னேலியஸ்,
பல் மருத்துவர் ரவீந்திரராஜா.
என்னையும் விண்ணப்பிக்கச்சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன்.
எனக்கு அப்போது இங்கே வதிவிட உரிமை கிடைக்கவில்லை. ஏனைய ஐவரும் வதிவிட உரிமையும் குடியுரிமையும்
பெற்றவர்கள்.
நண்பர் திவ்வியநாதன், அந்தப்போட்டியில் பங்கேற்கவில்லை.
சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணன் தலைவர் பதவிக்கு தனது
விண்ணப்பத்தை அனுப்பியிருந்தார். அதனை முன்மொழிந்து வழிமொழிந்தவர்கள்: சட்டத்தரணி விமலேஸ்வரன்
( இவர் சங்கத்தின் செயலாளராகவிருந்த Doncaster மகேஸ்வரனின்
தம்பி ) , கணகேஸ்வரன் ( இவர் லண்டனில் வாகனவிபத்தில் கொல்லப்பட்ட எழுத்தாளர் க. நவசோதியின்
தம்பி )
ரவீந்திரன் அண்ணரின் விண்ணப்பத்திற்கும் எமது மக்கள்
குரலுக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
இந்நிலையில் சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம் அண்ணர்,
“எமது மக்கள் குரல் நிருவாகிகளை சந்திக்கவேண்டும். அதற்கு எனது வீட்டில் ஏற்பாடு செய்ய முடியுமா..? “ எனக்கேட்டார்.
“ எதற்கும் நண்பர்கள் சிவநாதன், தருமகுலராஜா ஆகியோருடன்
இதுபற்றி பேசுங்கள். “ என்றேன். அதன்பிரகாரம்
அவர்களுடனும் சோமா அண்ணர் பேசினார். மறுநாள்
ஞாயிற்றுக்கிழமை முற்பகல் பத்து மணிக்கு எனது குடியிருப்பில் நால்வரும் சந்திப்பது
என முடிவாகியது.