“ நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் “ என்று எனது
பதிவுகளில் அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றேன்.
இலக்கியப்படைப்புகளை எழுதும்
எழுத்தாளர்களும், செய்திகளை மக்களுக்குத் தரும் ஊடகவியலாளர்களும் அவ்வாறுதான் உருவாக்கப்படுகிறார்கள்.
சிலர் தமது குடும்பத்தின்
பின்னணியிலிருந்தும், வேறும் சிலர், சமூக உறவுகளினாலும்
வெளியுலகத் தொடர்புகளினாலும் எழுத்துத் துறைக்கு
உள்வாங்கப்பட்டு, உருவாகியிருக்கிறார்கள்.
அவ்வாறு கலை, இலக்கிய,
கல்வித்துறை ஆர்வலர்களின் குடும்பத்திலிருந்து உருவாகியவர்தான் திருமதி வசந்தி தயாபரன்.
எங்கள் நீர்கொழும்பூரின்
இந்து இளைஞர் மன்றத்தின் செயற்குழுவில்
நான் அங்கம் வகித்திருந்த 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இம்மன்றம் நடத்திய மாணவர்களுக்கான நாவன்மைப் போட்டிகளுக்கு
கொழும்பிலிருந்து நடுவர்களை அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டிருந்தது.
அக்காலப்பகுதியில் நானும்
இலக்கியப்பிரவேசம் செய்திருந்தமையால், கொழும்பில் வாழ்ந்த இலக்கிய ஆர்வலர்கள் – ஆசிரியர்களாக
பணியாற்றிய ‘ பூரணி ‘ ‘ மகாலிங்கம், சிவராசா,
கந்தசாமி, அநு. வை. நாகராஜன், வ. ராசையா ஆகியோரின் நட்புறவு
கிடைத்தது.
இவர்கள் எங்கள் ஊரில் நடந்த
குறிப்பிட்ட நாவன்மைப்போட்டிகளுக்கு வருகை தந்தனர். இவர்களில் ராசையா மாஸ்டர் என நாம் அன்போடு அழைக்கும் அன்பர் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும்
சிறுவர்மலர் நிகழ்ச்சியில் வானொலி மாமா.
இந்நிகழ்ச்சிக்கு எங்கள்
ஊரிலிருந்து சிறுவர்களையும் அழைத்துச்சென்றிருக்கின்றேன்.
வ. ராசையா மாஸ்டரின் தலைமையில்
கொழும்பில் நடந்த இலக்கிய கூட்டங்களிலும் உரையாற்றினேன். இந்தத் தொடர்புகளினால், அவரது புதல்வி வசந்தி எனக்கு அறிமுகமானார்.
ராசையா மாஸ்டர் வீட்டில்
நடக்கும் சந்திப்புகளின்போது, எமக்கு சிற்றுண்டி , தேநீர் தந்து உபசரிக்கும், வசந்தியும்
தாயார் பூரணம் அவர்களும் அந்தக் கலந்துரையாடல்களில்
பார்வையாளர்களாக இருப்பார்கள். வசந்தி அப்போது
மாணவியாக இருந்திருக்கவேண்டும்.
எழுத்தாளர்களின் கருத்துக்களை
கூர்ந்து அவதானிப்பார். வசந்தியின் பெற்றோர்கள்,
கலை, இலக்கிய, இசைத்துறை ஆர்வலர்களாக இருந்தமையால், வசந்தியையும் இந்தத் துறைகள் தொற்றிக்கொண்டன.
வசந்தி, மற்றுமொரு இலக்கியவாதி
திருமதி மனோன்மணி சண்முகதாஸின் சகோதரர் தயாபரனை
காதல் திருமணம் செய்த பின்னர், இலக்கிய ஈடுபாட்டிலும், எழுத்துத்துறையிலும் தீவிரமானார்.
மூன்று புத்திரர்களுக்கு
தாயான பின்னரும்கூட வசந்தி, தனது இலக்கியச்
செயற்பாடுகளை தங்கு தடையின்றி தொடருகின்றார்.
கொழும்பில் இயங்கிய தமிழ்க்கதைஞர்
வட்டம், ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மாதாந்தம் இலங்கைப் பத்திரிகைகளில், இலக்கிய இதழ்களில் வெளியாகும் சிறந்த
சிறுகதைகளைத் தேர்வுசெய்து, பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வந்தது.
இந்த அமைப்பில் வசந்தியும்
ஒரு தூணாகவே நிற்பவர்.
மாணவப்பராயத்தில் வானொலி
நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, இசை, நடனத் துறைகளிலும்
ஈடுபட்டவர். கணவர் தயாபரனின் சகோதரி மனோன்மணி,
பேராசிரியர் அ. சண்முகதாஸின் அன்புத் துணைவியார்.
இத்தகைய பின்புலங்கள் அனைத்தும்,
வசந்தியையும் தேர்ந்த வாசகராகவும், எழுத்தாளராகவும் இலக்கியச்செயற்பாட்டாளராகவும் உருவாக்கியது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ( இளங்கலைமாணி தமிழ் சிறப்பு ) பயின்ற வசந்தி, கணக்கியல்,
வங்கியியல் கற்கை நெறிகளிலும் தேர்ச்சி பெற்றவர். தற்போது மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றுகிறார்.