உரிமை மனு

.


தவண்டு தவண்டு முடியாமல் -
மீண்டும்
தொட்டில் தேடும்
மழலையின் அவஸ்த்தை 
அடைந்து கொள்ள முடியாமல் 
அடங்கிப் போகும் 
என் கனவுகளுக்குள்
º

குயில் கூடு கட்டுமென்று 
காத்திருப்பார் எவரும் 
கூடு கட்டும் காகத்தை 
கண்டுகொள்ள விரும்பவில்லை
º

தாகமுள்ள ஜீவனுக்கு
தண்ணீர் தர நாட்டமில்லை 
தாகமூட்டி சிலருக்கு ஏனோ
பன்னீர் பிச்சை போடுகிறார்?
º

போட்டிகள் இல்லாமலே 
தோற்றுப் போகிறேன்
போர்வைகள் இல்லாமலே
போர்த்தப் படுகிறேன் 
º

"அண்ணா" தந்த அன்னை நடராஜா மாமா நினைவில் - கானா பிரபா

.

மடத்துவாசல் பிள்ளையாரடி காலை ஆறரைப் பூசைக்கு கமக்காரர், அரச உத்தியோகத்தர், ஓய்வூதியர், மாணவர் என்று வயது, பால் வேறுபாடின்றி கோயிலின் ஒழுக்க விதிமுறைக்கேற்ப ஊரே கூடியிருக்கும்.
அப்போது அந்தச் சனக் கூட்டத்தில் ஒருவராக எளிமையான உருவம் பயபக்தியோடு நின்று கொண்டிருப்பார். அவர் தான் இணுவில் மண்ணில் ஆலமரமாக எழுந்து நிற்கும் அண்ணா தொழிலகம் என்ற மூத்த பிள்ளையை ஆக்கி வளர்த்த திரு.பொன்னையா நடராசா.
அவரைத் தொடர்ந்து அண்ணா தொழிலகத்தில் உற்பத்திகளைக் காவிக் கொண்டு போகும் அந்த நிறுவனத்தின் வாகனங்கள் ஒவ்வொன்றாய் வந்து பிள்ளையாரைக் கனம் பண்ணிய பின்னர் தான் தம் காரியத்தைத் தொடங்கும்.

பிள்ளையாரடியின் அந்த விடிகாலைப் பூஜையில் மட்டுமல்ல அந்த எளிமைத்தனம் ஒட்டியிருக்கும், அவர் வாழ்ந்து முடித்த ஜூலை 5, 2015 என்ற நாள் வரை எவராலும் அணுகக் கூடிய, அதிர்ந்து பேசாத அந்தத் தொழில் முனைவர் வாயால் கட்டாமல் வாழ்ந்து கட்டிய அவரின் வர்த்தக சாம்ராஜ்யம் பரந்து விரிந்திருக்கிறது. அண்ணா தொழிலகம் என்ற தொழில் கூடம் பொன் விழாவைக் கடந்து நில்லாமல் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்துக் கிளைகளாய்ப் பரவிய அந்தத் தொழில் முனைப்பில் உள்ளூர் உற்பத்திகள் பல்கிப் பெருகின. அதற்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது நடராசா மாமா என்று எல்லோராலும் அன்போடு அழைக்க வைத்த அவரின் ஆளுமை தான் முதன்மைக் காரணம்.

படித்தோம் சொல்கின்றோம் -- முருகபூபதி

.
கருணாகரமூர்த்தியின்    அனந்தியின்    டயறி.


புகலிடத்து    வாழ்வுக் கோலங்களில்  எம்மை   நாம்  சுயவிமர்சனம்   செய்துகொள்ளத்தூண்டும்  புதினம்.

ஒருவர்   மற்றும்  ஒருவருக்கு  எழுதிய  கடிதம்,   ஒருவரின் நாட்குறிப்பு  ஆகியனவற்றை   மற்றவர்கள்  பார்ப்பது  அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு  மத்தியில்,  சிலரது   கடிதங்களும் நாட்குறிப்புகளும்  உலகப்பிரசித்தம்  பெற்றவை   என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம்.
காந்தியடிகளின்  நாட்குறிப்பு,   நேரு   சிறையிலிருந்து  தமது  மகள் இந்திராவுக்கு   எழுதிய  கடிதங்கள்  என்பன  உலகப்பிரசித்தம். தினமும்   நிகழும்  சம்பவங்களை   குறித்து  வைப்பதற்காக அறிமுகமான  Diary ( Daily record of event)   தமிழில்  மட்டுமன்றி பிறமொழிகளிலும்   அவ்வாறு  அழைக்கப்படுகிறது.
உலகப்பிரசித்தி  பெற்றவர்களின்  டயறிகள்  பிற்காலத்தில்  அதிக விலையில்    ஏலம்போயிருப்பதையும்  நூதன  சாலைகளில் இடம்பெற்றிருப்பதையும்   அறிவோம்.
ஏற்கனவே   தமிழ்  இலக்கிய  உலகில்  நன்கு  அறியப்பட்டிருக்கும் பெர்லினில்   வதியும்  கருணாகரமூர்த்தியின்  மற்றுமொரு  வரவு அனந்தியின்  டயறி.    இதனை  அவர்  16  ஆண்டுகளுக்கு  முன்னரே எழுதத்தொடங்கி , அவரது  கணினியில்  வைரஸ்  ஆதிக்கம்  செலுத்தி,  அந்தக்குறிப்புகளை   இழந்துவிட்ட  சோகத்தில்  நெடுநாட்கள்   இருந்தபொழுது,   டயறிக்குறிப்புகளின்  பாங்கில் வெளியான   சில  ஆங்கில  தமிழ்  நாவல்களைப் படித்ததும்  மீண்டும் உற்சாகம்   கரைபுரண்டு  ஓடவும்  இந்த  நாவலை எழுதத் தொடங்கியிருக்கிறார்.
காலச்சுவடு  பதிப்பகத்தினால்  வெளியிடப்பட்டுள்ள  இந்நாவலில் காலச்சுவடு  ஸ்தாபகர்  சுந்தரராமசாமியையும்  தமது  என்னுரையில் நினைவுபடுத்தியுள்ளார்.
சு.ரா.  என  இலக்கியப்பரப்பில்  நன்கு  அறியப்பட்ட  சுந்தர ராமசாமியின்   ஜே.ஜே. சில குறிப்புகள்   மிகவும்  முக்கியமான படைப்பு.    ஜோசஃப்  ஜேம்ஸ்   என்ற  ஒரு  எழுத்தாளனைப்பற்றியது. ஆனால்,  அவனுடைய  எழுத்துக்களை   நாம்   பார்த்திருக்கவில்லை.   "தன்   உள்ளொளியை  காண  எழுத்தை  ஆண்டவன்   அவன் " என்றும்  - அற்பாயுளிலேயே   மறைந்துவிட்டான்  எனவும்  சொல்லியவாறு   சு.ரா.வே   கற்பனை  செய்துகொண்டு  எழுதிய புதினம்  ஜே.ஜே. சிலகுறிப்புகள்.

உலகச் செய்திகள்


பிரித்­தா­னிய இள­வ­ரசி சார்­லொட்­டிற்கு ஞானஸ்­நானம்

கிரீஸ் பொருளாதார நெருக்கடி: பிரான்ஸ் - ஜெர்மனி தலைவர்கள் அவசர ஆலோசனை

22 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தியா - இலங்கை இடையே பாலம் அமைக்க திட்டம்

இந்­தோ­னே­சிய கிழக்கு ஜாவா­வி­லுள்ள ரோங் எரி­மலை குமு­றலால் விமா­ன­சே­வைகள் இரத்து

பிரித்­தா­னிய இள­வ­ரசி சார்­லொட்­டிற்கு ஞானஸ்­நானம்


07/07/2015 பிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கேம்­பிரிட்ஜ் சீமாட்டி கத்­தரீன் தம்­ப­தியின் புதல்­வி­யான சார்­லொட்­டிற்கு ஞானஸ்­நானம் வழங்கும் வைபவம் சன்ட்­றிங்­ஹா­மி­லுள்ள சென் மேரிஸ் தேவா­ல­யத்தில் இடம்­பெற்­றது.


மெகா மியுசிகல் நைட் 18 July 2015

.
சுப்பர் சிங்கர் 4 இன் பாடகர்கள் சிட்னியில்

பிரபலங்கள் - அ.முத்துலிங்கம்

.

இரண்டு பிரபலங்களை ஒரே நேரத்தில் ஒருபோதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாஷிங்டனில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டேன். அந்த விழாவில் பிரபலம் இல்லாத ஒருவர் இருந்தார் என்றால் அது நான்தான். என்னுடன் ஒரு பெண்மணியும் இருந்தார். உலகப் புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் அவர். National Geographic, Time, Newsweek, போன்ற பத்திரிகைகளுக்கு படங்கள் எடுப்பவர். அத்துடன் நைக்கோன் நிறுவனம் அவரை அம்பாஸிடர் ஆக நியமித்திருந்தது. அவர் கழுத்திலே தொங்கிய நைக்கோன் காமிரா அவரைவிட பிரபலமானது. அதன் விலை 10,000 டொலர் என்று சொன்னார். அவர் கழுத்தை விட்டு அதைக் கழற்றுவதே இல்லை. அவர் மும்முரமாகப் படம் பிடித்து தள்ளிக்கொண்டே இருந்தார்.
Forest Whitaker சபையினுள் நுழைந்ததும் பரபரப்பு அதிகமானது. இவர்தான் The Last King of Scotland படத்தில் இடி அமீனாக நடித்தவர். அப்படி நடிப்பதற்காக தன் உடல் எடையை 50 கிலோ அதிகரித்தவர் என்று படித்திருக்கிறேன். 2006ல் அந்தப் படம் வெளியானபோது இரண்டு தடவை பார்த்தேன். 2007ல் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் பரிசு கிடைத்தது.
அவர் வந்ததும் எப்படியோ ஒரு வரிசை உண்டாகிவிட்டது. நிரையாக நின்று ஒவ்வொரும் விட்டேக்கரின் கைகளைக் குலுக்கி வாழ்த்தினார்கள்.  இப்படியான பிரபலங்களைச் சந்திக்கும்போது உங்களுக்கு ஒரு நிமிடம் கிடைத்தாலே அதிசயம். பின்னுக்கு நின்று ஒருவர் நெருக்கித் தள்ளுவர். ஆகவே வரிசை முன்னேறியபடியே இருக்கும். கைகொடுத்துவிட்டு நீங்கள் சொல்வதைச் சொல்லிவிட்டு விடைபெற்றுவிட வேண்டும். நீண்ட உரையாடலுக்கு அங்கே இடமில்லை.

”விழுதல் என்பது எழுகையே” - நிறைவுப் பகுதி 4

.
எழுதியவர்: நோர்வே நக்கீரா


ஜேர்மனியின் சர்வதேச விமானநிலையம் பிராங்பேட் விமான நிலையம் மேலெழுவதும் தரையிறங்குவதுமாக பறந்து கொண்டிருக்கிறன. 
விமானங்கள் பறப்பதை விட மக்கள் அதிவேகமாக அங்குமிங்குமாக ஓடுபாதையின்றி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சர்வதேசவிமான நிலையம் என்பதால் உலகமே அங்கு திரண்டிருந்தது. மக்கள் காலில் சிறகு கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள்
தன்தேவதையை, இலங்கையில் விட்டுவிட்டு வந்த தேவதையை மீண்டும் ஜேர்மனியில் காணத்துடித்துக்கொண்டிருந்தான் சீலன். 
தாயை, தாய்நாட்டை, தங்கையை, தன் இதயராணி பத்மகலாவை விட்டு கடைசியாக அவன் இலங்கையில் விமானம் ஏறும் போது  கண்டகாட்சிகள் மீண்டும் மீண்டும் மனத்திரையில் காணொளிகளாகக் கோலம் போட்டுக்கொண்டிருந்தன. 
தன்னையே தொலைத்து வி;டுவாள் தாய். இனியெப்போ காண்போம் என்பதுபோல் தங்கை. வரம்புடைத்து கண்ணீர் முத்துக்கள் மாலையாக அசையா அணங்காக வைத்த கண்வாங்காது காதலில் கசிந்து கொண்டிருந்த பத்மகலாவின் முகம் காட்சிப்படிமமாக அவன் கண்களில் தீட்சண்யமாகத் துலங்குகிறது.

நெஞ்சைத் தொட்ட நிகழ்வு - காயிதே மில்லத்தும் நாகூர் ஹனீஃபாவும் !

.
         -வி.எஸ். முஹம்மத் பஸ்லுல்லாஹ்


  மர்ஹூம் இசை முரசு நாகூர் இ.எம். ஹனீஃபா அவர்களுக்கு 19 வயது ஆன போது நடந்த நிகழ்வு. இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதே மில்லத் (ரஹ்) அவர்களுடன் இசைமுரசு நாகூர் ஹனீஃபாவும் கலந்து கொண்டார்கள்.
  தினசரி இரண்டு அல்லது மூன்று கூட்டங்களில் காயிதே மில்லத் சிறப்புரையாற்றினார்கள். தலைவர் பேசும் கூட்டங்களில் இசைமுரசு இரண்டு, மூன்று பாடல்களைப் பாடிக்கொண்டே வந்தார்கள். கடுமையான அலைச்சல், ஓய்வுமில்லை. கடைசிக்கூட்டம் இராமநாதபுரம் நகரில் நடந்தது. கூட்டம் முடிய நடு இரவு 1 மணி ஆகிவிட்டது. பின்னர் ஒன்றரை மணிக்கு முஸப்பரி என்ற பங்களாவில் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  எல்லோரும் உணவருந்தத் தயாராகி கைகழுவிக் கொண்டிருந்தபோது ஹனீஃபாவுக்கு வயிற்றில் ஒரு குமட்டல், இரத்த வாந்தி எடுத்து, மயக்கமுற்று விழுந்துவிட்டார். அருகிலிருந்த தலைவர் காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் மிகவும் பயந்துவிட்டார்கள். உடனே டாக்டர் அழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. ஒரு வாரக் காலமாகப் பாடி வந்ததாலும் ஓய்வு இல்லாததாலும் ஏற்பட்ட அசதிதான் இதற்குக் காரணம் என்று டாக்டர் கூறினார்.
  பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஹனீஃபா அவர்கள் கண் விழித்துப் பார்த்தபோது அவர் அருகில் தலைவர் காயிதே மில்லத் அவர்கள் சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்துத் திகைத்தார் இசை முரசு ஹனீஃபா .

உனக்குப் படிக்கத் தெரியாது

.

மேரி ஜேன் தூக்கத்திலேயே அலுப்புடன் புரண்டு புரண்டு படுத்தாள். கடினமான கரடுமுரடான படுக்கையின் மீது அவள் தூங்கியதுதான் அலுப்பிற்குக் காரணம். இந்தப் படுக்கை ஒன்றே ஒன்றுதான் அவளிடம் இருந்தது. கடினமான படுக்கைதான் ஒரு கறுப்பினக் குழந்தைக்குப் பொருத்தம். மென்மையான படுக்கைகள் வெள்ளை மனிதர்களுக்கு! என்றிருந்த காலமது.

என்று துவங்குகிறது இந்த புத்தகம். மேரி ஜேன் சுதந்திரமாகப் பிறந்தவள். பருத்திக்காட்டிற்கு செல்லும் வழியில் முன்னால் ஓடும் மேரியைப் பார்த்து அவளது தந்தை சந்தோஷமடைகிறார். இல்லாவிட்டால் அவளும் தொலைதூரத்தில் உள்ள ஒரு பண்ணையில் உள்ள வெள்ளை குழந்தைக்கு வேலை செய்ய அனுப்பப்பட்டிருப்பாள். அவளது தாயும் தந்தையும் அடிமையாக இருந்தவர்கள். உள்நாட்டுக் கலவரத்தின்போது ஆப்ரஹாம் லிங்கன் வெளியிட்ட "அமெரிக்காவின் தென்பகுதி வாழ் கருப்பின அடிமைகள் யாவரும் சுதந்திர மக்கள்" என்ற பிரகடனத்தால் சுதந்திரம் பெற்றவர்கள். அவர்கள் சுதந்திரம் பெற்றபின் பிறந்தவள் மேரி.

இலங்கைச் செய்திகள்


தேர்தல் தொடர்பில் 12 முறைப்பாடுகள்

தமிழ் முற்போக்கு கூட்டணி சத்தியாகிரக போராட்டத்தில்

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகை: ஒபாமா கையொப்பமிட்டார்

இதுவரை 135 முறைப்பாடுகள்

ஐந்து மாணவிகள் வன்புணர்வு ஆசிரியருக்கு விளக்கமறியல்

தேர்தல் தொடர்பில் 12 முறைப்பாடுகள்


06/07/2015  எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மேற்படி 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 


விழுதல் என்பது எழுதலே எனும் நெடுந்தொடருக்கான காணொளி

.
ஒரு வருடத்துக்கு மேலாக விழுதல் என்பது எழுதலே என்ற நெடுத்தொடரை அந்தாதி முறைப்படி எழுதிவந்தார்கள் உலகத்தமிழ் எழுத்தாளர்கள். இந்நெடுந்தொடரின் முடிவுகளை நால்வர் எழுதிமுடிக்கிறார்கள். அதில் 3 ஏற்கனவே வெளிவந்து விட்டது. எனது முடிவு நான்காவதாகும் அதற்கான காணெளி முன்நோட்டம் இது. இக்காணொளியில் நெடுந்தொடரின் மிகக்குறுக்கம் தரப்பட்டள்ளது. இதனை அடுத்து எனது முடிவு வெள்ளிக்கிழமைக்குப் பின் அனுப்பி வைப்பேன். . காரணம் முதலில் அவை இணையங்களிலேதான் வெளியிடப்படவேண்டும் என்ற விதி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்நெடுந்தொடர் கீழ்கண்ட இணையங்களின் தொடர்ந்து வெளியாகி வந்தது. முழுத்கதையையும்  வாசிக்க வேண்டுமாயின் இவ்விணையங்களுக்குச் சென்று வாசிக்கலாம்.

இணைப்பைச் சுடுக்கி காணொளியைக் காண்க


நிம்மதி - சிறுகதை - ஹிமானா சையத்

.

“அண்ணே ! நீங்க உக்காருங்க… மதுரை நம்பர் பேசுங்க” அபுல் அந்த நபரிடம் ரிஸீவரைக் கொடுத்தான்.
  “தம்பி ! உங்க அம்மாவ அறைக்குள்ளே போயி போனை எடுக்கச் சொல்லு. பினாங்குக்கு கனக்‌ஷன் கொடுக்கப் போறேன்.”
  “தம்பி ! நம்மல கவனிச்சிருப்பா !” அவசரப்பட்டாள் ஒரு பெண்மணி.
  அபுலைச் சூழ்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு அடுத்த எஸ்.டி.டி கெளண்டருக்குச் செல்லப் புறப்பட்ட டிப்டாப்பான ஒருவரை “பிரதர் – பிளீஸ் கம் இன், ஜஸ்ட் டென் மினிட்ஸ். திஸ் இஸ் பிஸி ஹவர்ஸ். பிளீஸ் கம் இன்” என்று அழைத்து உட்கார வைத்தான்.
  எஸ்.டி.டி கெளண்ட்டர் தெருவுக்கு பக்கத்துல வந்துவிட்டது இப்போது அரைநாள் வரை கூட காத்திருந்து பொறுமையுடன் பேசித் திரும்பியவர்கள், இப்போது அரைமணி நேரம் காத்திருப்பதற்கே பொறுமை இழக்கிறார்கள்.

தமிழ் சினிமா


பாபநாசம்மலையாள சினிமாவின் லாலேட்டான் என்று செல்லமாக அழைக்கப்படும் மோகன் லால் சரிவில் இருந்த போது அவரை தூக்கி நிறுத்திய படம் தான் த்ரிஷயம். வசூலில் மாபெரும் சாதனை படைத்த இந்த படம் தெலுங்கு சினிமாவிலும் வசூல் சாதனை படைக்க, கோலிவுட் சும்மா இருக்குமா?
உலக நாயகன் கண்ணீல் இப்படம் பட, இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பையே தமிழிலும் இயக்க வைத்து, தன் ஆஸ்தான இசையமப்பாளரான ஜிப்ரானுடன் கைக்கோர்த்து பாபநாசமாக வெளிகொண்டு வந்துள்ளார் கமல்ஹாசன்.
கதைக்களம்
மலையாளத்தில் பார்க்காதவர்களுக்கு மட்டும் தான், ஏனெனில் அப்படத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல், இருந்தாலும் ப்ரஷ்ஷாக வந்திருக்கிறது பாபநாசம்.
அம்மா, அப்பா யாரும் இல்லாமல் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தவர் சுயம்பு லிங்கம்(கமல்ஹாசன்). அதனால், ஒரு பைசா வரதட்சனை வாங்காமல் ராணியை(கௌதமி) திருமணம் செய்து கொண்டு, அன்பான 2 பெண் குழந்தை, அழகான் குடும்பம் என அரசாங்க விளம்பர அட்டையில் வருவது போல் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால், இவர்கள் வாழ்க்கையில் செல்போன் என்ற டெக்னாலஜி விளையாடுகிறது, கமலின் மூத்த மகள்(நிவேதா தாமஸ்) பள்ளியிலிருந்து ஒரு ட்ரீப் செல்ல, அங்கு ஒருவன் நிவேதா தாமஸ் குளிப்பதை படப்பிடித்து, என்னுடன் நீ வர வேண்டும் என மிரட்ட, கௌதமியும், நிவேதாவும் ஒரு கட்டத்திம் அவனை கொன்று புதைக்கிறார்கள். அந்த பையன் IG மகன் என்பதால் பிரச்சனை பெரிதாகின்றது.
இந்த விஷயம் கமலுக்கு தெரிய, இந்த கொலையை எப்படியெல்லாம் மூடி மறைக்கிறார், காவல்துறை இதை கண்டுப்பிடித்ததா? கமலுக்கு தண்டனை கிடைத்ததா? இல்லை தப்பித்தாரா? என நகத்தை கடித்து கொள்ளும் அளவிற்கு த்ரில்லாக செல்வது தான் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
கமல்ஹாசன் கண்டிப்பாக இவருடைய நடிப்பை மோகன் லாலுடன் ஒப்பிடுவார்கள், ஆனால், கமலை தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தை 100% கொடுத்திருக்க முடியாது. அதிலும் நெல்லை தமிழ் சார் எப்பவும் நீங்க தான் நடிப்பின் குரு என்று சொல்ல தோன்றுகின்றது.
கௌதமி பற்றி அனைவரும் படம் வருவதற்கு முன்பே மீனா அளவிற்கு இல்லை என்பது தான், ஆனால், உண்மையாக குறை சொல்லும் படி இல்லை, அதே நேரத்தில் மீனா அளவிற்கு இல்லை என்பது தான் நிதர்சனம். அதிலும் ரியல் லைப் ஜோடி என்பதால் கணவன், மனைவி காதல் காட்சிகள் படு யதார்த்தம்.
எம்.எஸ். பாஸ்கர், போலிஸாக வரும் கலாபவன் மணி என அனைவரும் தேர்ந்த நடிகர்கள் என்பதால் நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளனர்.
க்ளாப்ஸ்
நீண்ட இடைவேளைக்கு பிறகு வேஷ்டி, சட்டை நெல்லை தமிழ் என கமல் மனதை கொள்ளை கொள்கிறார். அதிலும் சந்தோஷம், துக்கம், பயம் என அவர் காட்டும் முக பாவனைகள் you are always great sir சொல்ல வைக்கின்றது.
இரண்டாம் பாதியில் வரும் அடுத்தடுத்த டுவிஸ்ட், அடுத்து என்ன நடக்கும் (மலையாளத்தில் பார்க்கதாவர்கள்) என சீட்டின் நுணிக்கு வரவைக்கின்றது.
பல்ப்ஸ்
படத்தில் நீளம் 3 மணி நேரம் என்பது மட்டும் தான், ஆனாலும் அதுவும் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.
மொத்தத்தில் தன் பாப்பா வாழ்க்கை நாசம் ஆக கூடாது என்று கமல் மட்டும் பதட்டமாகவில்லை, படம் பார்க்கும் அனைவரையும் நகம் கடிக்கும் அளவிற்கு பதட்டத்தை ஏற்படுத்துகின்றது இந்த பாபநாசம்.
ரேட்டிங்- 3.5/5    நன்றி cineulagam