.
நீண்டு பரந்த கடலினை
– நான்
நீந்திக் கடக்க விழைகிறேன்
ஆண்டுகள் போயின ஆயினும்
- பெரும்
ஆழியை நீந்த முயல்கிறேன்!
பொங்கும் உணர்வுகள்
மோதிடும் - எழில்
பூத்த கனவுகள்
ஆடிடும்
நுங்கு நுரைக்கடல்
மீதிலே - எனை
நோக்கி அலைகளும்
சாடிடும்!
வெள்ளை மணற்கரை
தன்னிலே - கடல்
வெண்ணுரை சிந்திநின்
றாடிடும்
கொள்ளை அழகு குலவிடும்
- அந்தக்
கோலம் கலைந்துபின்
னேகிடும்!
வானத்து வெண்மதி
தண்ணொளிக் - கதிர்
வண்ணக் கரங்களை
நீட்டிடும்
கானம் இசைத்துக்
கடலலை - நிலாக்
காதலில் வீழ்ந்து
புரண்டிடும்!
காதல் வெறிகொண்ட
பேரலை - இரு
கண்கள் மறைத்தெனைச்
சாடிடும்
ஏதும் வழியின்றி
வீழுவேன் - இடர்
எய்திடும், பின்னரும் நீந்துவேன்!
சிந்தும் நுரைகளில்
மேல்விழுந்(து) – ஒளி
சேரும் பொழுதினில்
தென்படும்
விந்தை நிறங்களின்
ஓவியம் - எழில்
விஞ்சு வடிவங்கள்
காட்டிடும்!
காணும் வடிவங்கள்
எத்தனை? – முன்பு
கண்ட வடிவங்கள்
எத்தனை?
ஆணெனப் பெண்ணெனக்
கூடியே - இங்கு
ஆடிய ஆட்டங்கள்
எத்தனை?
எத்தனை நாடகம்
கண்டனன்? - இங்கு
எத்தனை மேடைகள்;
கண்டனன்?
நித்தமும் ஆடிடும்
நாடகம் - இந்த
நீணில மீதென்று
நிற்குமோ?
உள்ளக் கடலலை மோதிடும்
- அதில்
உள்ளவை வெண்ணுரை
யாகிடும்
நள்ளிரு ளாகிய வேளையில்
- உயிர்
நல்லொளி காணத் துடித்திடும்!
நீண்டு பரந்த கடலினை
– நான்
நீந்திக் களைத்தின்று
செல்கிறேன்!
ஆண்டுகள் எத்தனை
போயினும் - இந்த
ஆழியை வென்றிட
நீந்துவேன்!