சிறுகதைகள்

கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காவது பரிசினை வென்ற சிறுகதை - 2010)





யோகராணிக்குக் குளிக்கச் சேறு இன்றிப் பெரிதும் அவதிப்பட்டாள். தோளில் சுமந்த நீண்ட பொலிதீன் பையோடு சேற்று நீர் தேடி ஊர் முழுதும் அலைந்தபடியிருந்தாள். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அவள் குளித்து வந்த அழுக்குச் சேற்று வாய்க்கால் மூடப்பட்டுவிட்டது. மூடப்பட்ட காலம் தொட்டு அவள் அள்ளிக்குளிக்கப் பயன்படுத்தும் அகன்ற பெரும் அழுக்குச் சிரட்டையைப் போல, அவளும் தலையில் ஈரம் படாமலே வீதிகள் தோறும் சுற்றி வந்தாள். இத்தனைக்கும் ஊரின் மத்தியில் பெரிய ஆறு, நாணல்களைத் தொட்டபடி ஓடிக்கொண்டிருக்கிறது.

அவளுக்கென்று தனி இருப்பிடம் இல்லை. இருட்டிவிட்டால் போதும். எந்த இடத்தில் நிற்கிறாளோ அதற்கு அண்மையிலுள்ள வீட்டின் திண்ணையில், மாட்டுக்கொட்டகையில், கிணற்றடியிலெனத் தங்கிவிடுவாள். அவளால் யாருக்கும் எந்தத் தொந்தரவுமற்ற காரணத்தால் ஊரார் எதுவும் சொல்வதில்லை. இன்னுமொரு காரணம் இருக்கிறது. விடியலின் முதல் கிரணம் கண்டு அவள் விழித்தெழுந்து, எந்த இடத்தில் தங்கினாளோ அந்த இடம், முற்றம், கிணற்றடி என எல்லா இடத்தையும் மிகவும் நேர்த்தியாகக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு நகர்வாள். சூழ இருக்கும் குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு போவாள். தான் அழுக்காக இருந்தாளே ஒழிய சூழ இருந்தவைகளை ஒரு போதும் அழுக்கடைய விட்டதில்லை அவள்.

வீடுகளில் கொடுக்கப்படும் எஞ்சிய பாண், ரொட்டி, சோற்றுக்கென அவளது நீண்ட பொலிதீன் பைக்குள் ஒரு சிறிய பொலிதீன் பையிருந்தது. ஓரங்களில் கிழிந்து அழுக்கேறிய இன்னுமொரு உடுப்போடு ஒரு போர்வையையும் சுருட்டி அவள் அந்த நீண்ட பொலிதீன் பைக்குள் பத்திரப்படுத்தியிருந்தாள். அவ்வப்போது பார்த்துத் தனது அழகிய இறந்த காலத்தை மீட்டவென அந்தப் போர்வைக்குள் அவளது குடும்பப் புகைப்படமொன்றையும் ஒளித்துப் பாதுகாத்து வந்தாள்.

அவளது தங்கையின் பிறந்தநாளொன்றில் தனது கணவரோடு சேர்த்து மூவருமாக ஜானகி ஸ்டுடியோவில் போய் எடுத்துச் சட்டமிட்ட புகைப்படமது. யாரும் அருகில் இல்லாப் பொழுதுகளில் மட்டும் வெளியே எடுத்து அவ்வப்போது பார்த்துக் கண்ணீர் உகுப்பவள், பூனை அசையும் சிறு சலனத்துக்கும் பதறியவளாகப் படத்தை ஒளிப்பாள். மூளை பிசகிவிட்டதெனப் பெரியவர்களாலும், பைத்தியம் எனச் சிறுவர்களாலும் அழைக்கப்படுபவள் முன்னர் அழகானவளாகவும், அன்பானவளாகவும், மிகத்தூய்மையானவளாகவும் இருந்தவள்தான்.

எண்பதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கம் வழங்கிய கல்லூரி குவார்ட்டஸில் அவனும் யோகராணியும் தங்கியிருந்த காலப்பகுதியில்தான் ஜே.வி.பி குழப்பமென எல்லோராலும் அழைக்கப்பட்ட ஜே.வி.பி கலவரம் அவ்வூரிலும் உச்சத்தை எட்டியது. வசந்தனுக்கு ஆசிரியர் வேலை. அவ்வூரின் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்புக்களுக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுத்துவந்தான். நல்லவன். அவர்களது சொந்த ஊர் இதுவல்லவெனினும் இங்கு மாற்றல் கிடைத்தவனுக்குத் துணையாகத் தனது வாசிகசாலை உதவியாளர் பணியையும் விட்டுவிட்டு வந்த யோகராணி தையற்தொழிலைச் செய்துகொண்டு வீட்டோடு இருந்து வந்தாள்.

இக் கலவரம் ஆண்டாண்டு காலமாக நீடித்தது. இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்திய அமைதிப் படையினரின் பயங்கரவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியது. ஏனைய திசைகளிலெல்லாம் ஜே.வி.பி. கலகக்காரர்களின் பயங்கரவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. தினமும் கலகக்காரர்களால் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தது. இரவுகளில் வீடுகளில் பெரும் வெளிச்சம் துப்பும் விளக்குகளை ஏற்றிவைப்பது கூடத் தடுக்கப்பட்டிருந்த காலமது. அதற்கும் மேலாக மின்மாற்றிகளும் மின்கம்பங்களும் கிளர்ச்சிக்காரர்களால் தகர்க்கப்பட தேசத்தின் ஊர்கள் தோறும் இருள்கள் சூழ்ந்தன. கம்யூனிசத்துக்கும், இடதுசாரிக் கொள்கைகளுக்கும் ஆதரவாகப் பெரும் படைகளாக பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் திரண்டனர். தபாலகங்கள், அரச நிறுவனங்கள், அரச கட்டடங்கள் பலவற்றையும் உடைத்தும் எரித்தும் அழிக்க முனைந்தனர். பஸ், ரயில் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன. மீறி நகர்ந்தவை எரிக்கப்பட்டன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மறு அறிவித்தல் வரை இழுத்து மூடப்பட்டன. வீதிகள் வெறிச்சோடின.

கலகக்காரர்கள் தாங்கள் சொல்வதைச் செய்ய மறுக்கும் அனைவரையும் கொன்றார்கள். தமது பணத்தேவைகளுக்காக வீடுகள் புகுந்து கொள்ளையடித்தார்கள். ஆட்களைக் கடத்திக் கப்பம் கேட்டார்கள். அவர்களை அழித்து ஒழிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் தினமும் தொடர்ந்தன. தினந்தோறும் இரவுகளில் எல்லா வீதிகளிலும் காவல்துறையினர் மற்றும் கருப்புப்பூனைப் படையினர் ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்களை வேட்டையாடவென வலம் வந்தனர். சந்தேகத்துக்குரியவர்களைக் கைது செய்தனர். அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் மீண்டு வரமாட்டார்கள்.

யோகராணிக்கு ஒரு தங்கையிருந்தாள். பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவள் கம்யூனிசக் கொள்கைகளில் கவரப்பட்டாள். அதன் கூட்டங்களுக்குத் தவறாது சென்றுவந்தவள் படையினரால் தேடப்பட்டு வந்த பொழுது எப்படியோ தப்பித்து சகோதரியிடம் அடைக்கலம் தேடிவந்தாள். நள்ளிரவொன்றில் அவளுக்கான பதுங்குகுழி வீட்டின் அருகேயிருந்த காட்டுக்குள் வசந்தனாலும் யோகராணியாலும் தோண்டப்பட்டது. மேலால் குறுக்கே தடிகளிட்டு தென்னோலை, வாழை இலைச் சருகுகள் என மூடப்பட்ட குழியில் உமாவின் நாட்கள் கழிந்தன.

பகல் வேளைகளுக்கும் சேர்த்து இரவில் தயாரிக்கும் உணவினை யோகராணி எடுத்து வருவாள். பல இரவுகள் தங்கையுடனே பதுங்குகுழி இருளுக்குள் கழித்தாள். இடையிடையே தங்கையைத் தேடிப் படையினர் வீட்டுக்கு வரும் நாட்களில் நெஞ்சு பதறியபடி அவள் தம் வீட்டில் இல்லையெனப் பதிலளித்தார்கள் வசந்தனும் யோகராணியும். மழை நாட்களில் குழியினோரமாக நீரும், சேறுமாக ஒழுகி வழியும். தூங்க விடாமல் விஷப்பூச்சிகளும், தேளும், தவளையும் குழிக்குள் ஒதுங்கும். குளிருக்கும் சகதிக்கும் மத்தியில் உயிரற்ற பிணம் போல அச்சத்தில் உறைந்து கிடப்பாள் உமா.

இப்படியாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இருந்துவந்த வேளையில்தான் கல்லூரியில் வசந்தன் கற்பித்து வந்த வகுப்பறைக் கட்டிடம் ஒரு இரவில் கிளர்ச்சியாளர்களால் எரியூட்டப்பட்டது. தீப்பற்றியெரிவதைக் கண்ட கல்லூரி வளாக குவார்ட்டஸில் தங்கியிருந்த அவன் ஓடிவந்து வீதியில் நின்று நெருப்பு , நெருப்பெனக் கத்தினான். செய்வதறியாத அல்லது ஏதும் செய்யப் பயந்த ஊராட்கள் வேடிக்கை பார்த்தனர். இது குறித்து முதலில் காவல்துறைக்கும் அதிபருக்கும் அவன் தான் அறிவித்தான். கிளர்ச்சியாளர்களின் கோபம் அவனில் சூழ்ந்தது. கால வரைமுறையற்ற விடுமுறை கல்லூரியில் விடப்பட்டது.

இச் சம்பவத்திற்குப் பிறகு ஊருக்குள் தினந்தோறும் காவல்துறை விசாரணைகளும் கரும்பூனைப்படையின் கடத்தல்களும் அதிகரித்தன. கிளர்ச்சிக்காரர்களெனக் கண்டறியப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள் ஒவ்வொருவராகக் கரும்பூனைப் படையினரால் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்டனர். கடத்தப்பட்டவர்கள் வீதிகளினோரமும், மின்கம்பங்களிலும் சுடப்பட்டும் , எரிக்கப்பட்டும் ,வதைக்கப்பட்டும் பிணங்களாகக் கிடந்தனர். நதிகளில் பிணங்கள் மிதந்துவந்தன. ஊரிலிருந்த கிளர்ச்சிகளோடு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் காடுகளுக்குள் மரங்கள் மேலும், பதுங்குகுழிகளுக்குள்ளும் ஒளிந்து வாழ்ந்தனர்.

இவ்வாறான நாட்களின் ஒரு பிற்பகலில் ஊரார் அனைவருக்கும் அடையாள அட்டைகளோடு கல்லூரி மைதானத்துக்கு வரச் சொல்லிக் காவல்துறையினரால் அறிவிப்புச் செய்யப்பட்டது. ஊரார் அனைவரோடும் வசந்தனும் யோகராணியுமாக எல்லோரும் வரிசையில் நிற்கவைக்கப்பட்டார்கள். கரும்பூனைப் படையினரால் கண்களிரண்டும் இருக்குமிடத்தில் மட்டும் துளையிடப்பட்டு முழுவதுமாகக் கறுப்பங்கி அணிந்து சாக்கினால் தலை மூடப்பட்ட உருவம் ஒவ்வொரு வரிசையாக படையினரோடு பொதுமக்களைப் பார்த்தபடி நகர்த்தப்பட்டது. முன்னமே கைதுசெய்யப்பட்ட கிளர்ச்சியாளனாக இருக்கக்கூடுமான அது தலையசைத்துக் குறிப்பால் காட்டியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அடைக்கப்பட்டனர்.

அவ்வுருவம் வசந்தனையும் பார்த்துத் தலையசைத்த கணத்தில் யோகராணி அதிர்ந்தாள். பெருங்குரலெடுத்த அழுகை அவளையும் மீறி வெளிப்பட்டது. பாரிய வெளிச்சம் சுமந்த இடி அவள் தலையில் வீழ்ந்து வாழ்வினை இருளாக்கியது. மயங்கிவீழ்ந்தவளை வீட்டுக்குத் தூக்கிவந்து மயக்கம் தெளிவித்து அகன்றது கூட்டம். சித்திரவதை தாங்காமல் சொன்னானோ, அவர்களாகக் கண்டுபிடித்தார்களோ அன்றைய இரவிலேயே உமா ஒளிந்திருந்த காட்டுக்குள் கரும்பூனைகள் நுழைந்தன. அவள் கதறக்கதறத் தாக்கிக் கடத்தப்பட்டாள். காப்பாற்றவென மறித்த யோகராணிக்கும் பல அடிகள் விழுந்து இறுதியாகத் துப்பாக்கியின் பின்புறத்தால் பின்மண்டையில் அடிவாங்கி அவ்விடத்திலேயே மயங்கிவிழுந்தாள்.

அவ்விரவில் பலத்துக் கத்தியும் கதறியும் ஊராட்கள் எவரும் காப்பாற்றவென வரவில்லை. எல்லோரிடத்திலும் மிகுந்த அச்சம் சூழ்ந்த நாட்களவை. அடிபட்டுக்கிடந்தவள் முற்றத்தில் அப்படியே கிடந்தாள். மறுநாட்காலை கல்லூரி வாசலருகே டயர் போட்டுப் பாதி எரிந்த நிலையில் வசந்தனின் சடலம் கிடந்தது. உமா குறித்தான எந்தத்தகவலும் யாருக்கும் இன்றுவரைக்கும் தெரியவரவேயில்லை. காகங்களால் குதறப்பட்ட சடலத்தின் சதைத்துணுக்குகள் கல்லூரிக்கிணற்றில் மிதந்தன.

அப்பொழுதிலிருந்துதான் அவள் சித்தம் பேதலித்திருக்கக்கூடும். ஆட்சிகள் மாறின. கிளர்ச்சிக்காரர்கள் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர். மீளப்பெற முடியாத்திசைகளில் அவளது வசந்தங்கள் தொலைந்தன. காலங்களுமாற்றாத் துயர்களைச் சுமந்து வாழத்திணிக்கப்பட்டாள். என்றோ உதித்து மறைந்த சேகுவேராவின் கருத்துக்களில் அவளது குடும்பம், வாழ்க்கை, சுயம் எல்லாம் அழிந்தது. நீண்ட அழகிய நதி நீரோட்டம், பழகிய வனங்கள், கடை வீதிகள், தெரியாத சனங்கள் அவளுக்கு அச்சமூட்டி அசைந்தன.

பகல் முழுதும் வயல்வெளிகளில் தங்கினாள். வயல்வரப்பினூடு ஓடும் சேற்றுநீரில் உடுத்த உடையோடு சிரட்டையால் அள்ளிக் குளிக்கப்பழகினாள். மழையென்றில்லை. வெயிலென்றில்லை. அவளுக்குக் குளிக்கவேண்டும். அதுவும் ஆனந்தமாகச் சிரித்துச் சிரித்து அவள் குளிப்பாள். வழியும் நீரின் சொட்டுக்களில் வசந்தனை, உமாவைக் காணுபவளாக இருக்கக்கூடும். குளித்துத் துடைத்து, உடை மாற்றி அதே வயல்வரப்பில் ஈர ஆடையைக் காயப்போட்டுவிட்டு அந்திநேரத்தில் ஊருக்குள் நடக்கத் துவங்குவாள்.

இப்பொழுது அவளுக்குப் பகலில் தங்கவும் குளிக்கவும் வாய்ப்பற்றுப் போனது. வயல்வெளிகள் மூடப்பட்டுப் பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குளிக்கச் சேற்றுநீர் தேடி ஊர் முழுதும் அலைந்தவள் ஓர் நாள் விடியலில் செண்பகமக்கா வீட்டுப் பாழடைந்த கிணற்றில் பிணமாக மிதந்தாள். குளிக்கவெனப் பாய்ந்திருக்கக் கூடுமென ஊருக்குள் பேசிக் கொண்டனர்.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

மண்குதிரையும் மரக்குதிரையும்- முருகபூபதி





அந்த நதிக்கரையோரக்கிராமம் அமைதியானது. பசுமை நிறைந்த ஒரு புல்வெளிதேசத்தில் ஒதுக்குப்புறமாக இயற்கை அழகுடன் துலங்கியது. அங்கே ஒரு குடிசையில் அந்தக்கிராமவாசி ஒரு குதிரையுடனும் மிக இளம் வயது மகனுடனும் வாழ்ந்து வந்தான். குதிரைக்கென தனியாக ஒரு சிறிய லாயமும் அமைத்திருந்தான். குடிசையைச்சுற்றியிருந்த சிறிய நிலத்தில் பயிர்செய்து விளைபவற்றை ஒரு வண்டியில் ஏற்றி குதிரையின் துணையுடன் நதியைக்கடந்து அடுத்த கிராமத்து சந்தையில் விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தனது மகனை பராமரித்து வளர்த்து வந்தான்.  


ஒழுங்கான மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக்கிராமத்தில் அந்த மகனைப்பெற்றுவிட்டு தாய் இறந்துபோனாள். அன்று முதல் அந்த சிறிய மகனுக்கு தாயும் தந்தையும் அந்த குதிரைப்பாகன்தான்.

அந்தக்குதிரையும் ஏற்கனவே அயல் கிராமவாசி ஒருவனிடமிருந்துதான் இவனுக்குக் கிடைத்தது. அந்தக்கிராமவாசியும் இவனது நண்பன். அவனும் நோயுற்று இறந்துபோகவே குதிரை இவனது பராமரிப்புக்கு வந்தது. தனது மகனை நன்கு பராமரித்தது போலவே அந்தக்குதிரையையும் இவன் நன்றாக பராமரித்து வந்தான்.

இவனது மகனுக்கு தானும் ஒருநாளைக்கு தனியே குதிரைச்சவாரி செய்யவேண்டும் என்ற ஆசை வந்தது. தனது விருப்பத்தை தகப்பனிடம் ஒருநாள் சொன்னான்.

“ அப்பா எனக்கும் உங்களைப்போன்று இந்தக்குதிரையில் ஏறி அந்த நதியைக்கடந்து அயல் கிராமம் சென்று அங்கிருப்பவர்களையெல்லாம் பார்த்துவருவதற்கு ஆசையாக இருக்கிறது” என்றான்.

அதற்கு குதிரைப்பாகன், “ மகனே நீ இன்னும் கொஞ்சம் வளரவேண்டும். அதன் பிறகு உனக்கு நானே குதிரையேற்ற பயிற்சி தந்து பழக்குகிறேன். அதுவரையில் பொறுத்திரு”- என்றான்.

“ அப்படியானால் எனக்கு விளையாடுவதற்கு ஏதாவது செய்து தரமுடியுமா?”- எனக்கேட்டான்.

குதிரைப்பாகன், விடாக்கண்டனான மகனுக்கு அந்த நதிக்கரையோர சதுப்புநிலத்து மண்ணிலிருந்து ஒரு மண்குதிரையை அழகாக செய்துகொடுத்தான். அதற்கு அழகிய வர்ணங்களும் பூசி அழகுபடுத்திக்கொடுத்தான்.

அதனைப்பார்த்து மகன் மிகவும் மகழ்ச்சி அடைந்தான். தனக்கும் ஒரு அழகிய குதிரை கிடைத்துவிட்டது என்ற பெருமிதத்தில் துள்ளிக்குதித்தான்.

ஒருநாள் தந்தையான பாகன், உயிருள்ள குதிரையுடன் வண்டியை பிணைத்துக்கொண்டு நிலத்தில் பயிரிட்ட மரக்கறிவகைகளுடன் அயல்கிராமத்து சந்தைக்குப்போய்விட்டான்.

தந்தை சென்றபின்னர், மகன் அந்த மண்குதிரையை தூக்கிக்கொண்டு நதிக்கரைக்கு வந்தான். அதில் ஏறினால் நதியைக்கடந்து தந்தையைப்போன்று தானும் அக்கரைக்கிராமத்துக்குச்செல்ல முடியும் என நம்பினான்.

மண்குதிரையை நதியில் நிறுத்திவிட்டு அதன் முதுகில் ஏறினான். அதிலிருந்து சவாரி செய்யலாம் என நம்பினான். ஆனால் அந்தமண்குதிரை நதியில் தாழ்ந்து கரைந்து அந்தமண்குழம்பு சேறாக அவனது உடல்பூராவும் படிந்துவிட்டது. மிகுந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பி அழுதுகொண்டிருந்தான்.

அவனது தந்தை அயல் கிராமத்து வியாபாரத்தை முடித்துக்கொண்டு குதிரையில் திரும்பிவந்தபோது, மகன் குடிசை வாசலிலிருந்து சேறுபூசிய தோற்றத்தில் அழுதுகொண்டிருந்தான். மண்குதிரையை நம்பி தான் ஏமாந்து விட்டதாக அழுது புரண்டான்.

தந்தை அவனைத்தேறுதல்படுத்தி நதிக்கு அழைத்துச்சென்று தோயவார்த்து சேறைப்போக்கினான்.

“ மண்குதிரையை நம்பி ஏறினாயே. அது உனக்கு விளையாடுவதற்குத்தானே செய்து கொடுத்தேன். சரி கவலைப்படாதே உனக்கு ஒரு மரக்குதிரை செய்து தருகின்றேன்.”- எனச்சொல்லிவிட்டு அந்தக்கிராமத்து பெரியமரமொன்றிலிருந்து ஒரு பெரிய கிளையை வெட்டி அதிலே ஒரு அழகான குதிரையொன்றை உளியினால் செதுக்கிக்கொடுத்தான். அதற்கும் அழகிய வர்ணங்களைத் தீட்டினான்.

மகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். மண்குதிரை நதியில் கரைந்துபோன துக்கத்தை மறந்து இப்போது மரக்குதிரையில் ஏறி விளையாடினான். அது கரையவில்லை. உடையவில்லை என்பது அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

மற்றுமொரு நாள் தந்தை நதியைக்கடந்து குதிரை வண்டிலுடன் அடுத்த கிராமத்துக்கு சென்றதன் பிறகு, இவன் அந்த மரக்குதிரையை எடுத்துக்கொண்டு நதிக்ரைக்கு வந்தான். நதியருகே அதனை நிறுத்திவிட்டு அதன் முதுகில் ஏறி சவாரி செய்ய நினைத்தான். அந்த மரக்குதிரை நின்ற இடத்திலிருந்து நகரவோ அசையவோ இல்லை. அதன் பிருஷ்டத்திலும் முதுகிலும் முடிந்தவரையில் அடித்தும்பார்த்தான். அது நகரவே இல்லை. அன்று மாலைவரையில் அப்படியே அந்த மரக்குதிரையிலேயே பசியுடன் தந்தையின் வரவுக்காக காத்திருந்தான்.

மாலை மங்கிக்கொண்டிருந்தது.

அவனது தந்தையும் கிராமத்து சந்தை வியாபரத்தை முடித்துக்கொண்டு குதிரை வண்டியில் திரும்பினான். மகன் நதிக்கரையிலே அந்த மரக்குதிரையிலிருந்து அழுதுகொண்டிருப்பதைப்பார்த்துவிட்டு, “ மகனே... என்ன நடந்தது? ஏன் அழுகிறாய்?”- எனக்கேட்டான்.

“ அப்பா, இந்தக்குதிரையும் என்னை ஏமாற்றிவிட்டது. இதில் ஏறி நானும் உங்களைப்போன்று அந்தக்கரைக்கு சென்றுவரலாம் என நினைத்திருந்தேன். அந்த மண்குதிரை நதியில் கரைந்து எனக்கு சேறையும் பூசிவிட்டது. இந்த மரக்குதிரையோ எவ்வளவுதான் அழகாக இலட்சணமாக இருந்தும் நகரவே முடியாமல் ஒரே இடத்தில் நின்றுகொண்டே மிலாந்திக்கொண்டிருக்கிறது.” என்று மகன் ஏக்கத்துடனும் ஏமாற்றத்துடனும் சொன்னான்.

 மகனே. மண்குதிரையினதும் மரக்குதிரையினதும் இயல்பை தெரிந்துகொள்ளாமல் அவற்றிலே ஏறி சவாரி செய்ய நினைத்தது உனது தவறு. அவை பொழுதுபோக்குக்காக உனக்கு விளையாடுவதற்காக செய்து தரப்பட்டவை. இதோ பார் உயிருள்ள குதிரை. இப்பொழுது நீயும் சற்று வளர்ந்து விட்டாய். ஒரு நாளைக்கு நீயும் இதில் ஏறி சவாரிசெய்து நதியைக்கடந்து அடுத்த கிராமத்துக்குச்சென்றுவா.”- என்றான் அந்த குதிரைப்பாகனான தந்தை.

மகனுக்கு முதல் கட்டமாக ஒரு ஆலோசனையும் சொன்னான்.

“ நாளை அயல் கிராமத்தில் சந்தை கூடமாட்டார்கள். அதனால் நான் அங்கே போகமாட்டேன். வண்டிலுக்கும் அவசியம் இருக்காது. நீயே இந்த உயிருள்ள குதிரையை எடுத்துச்செல்.” என்றான் தந்தை.
மகன் மிகவும் உற்சாகமடைந்தான்.

மறுநாள் விடிந்ததும் தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு முதல் தடவையாக அந்தக்குதிரையில் ஏறி நதிக்ரைக்கு வந்து நதியைக்கடந்தான். குதிரை அவனை குதூகலத்துடன் அழைத்துச்சென்றது.

அதில் சவாரி செய்வதில் அவனுக்கு எந்தச்சிரமமும் இருக்கவில்லை. அது அவனது விருப்பத்துக்கு ஏற்றவாறு வேகமாகவும் விரைந்தும் சென்றது. அதன் முதுகிலிருந்து சவாரி செய்வது அவனுக்கு புது அனுபவமாகவும் இருந்தது. அதன் முதுகை ஆதரவுடன் தடவிக்கொடுத்தான்.

அப்போது அந்த முதுகில் பல இடங்களில் குத்துகாயத்தழும்புகளைப்பார்த்தான். எப்படி இந்தத் தழும்புகள் வந்தன? அவன் யோசித்தான். குதிரையிடமே கேட்டுப்பார்த்தான்.

“ குதிரையே எனக்கு உன்னை நன்றாகப்பிடித்துவிட்டது. இனிமேல் நீதான் எனது நல்ல சிநேகிதன். அதுசரி.. இது என்ன? உனது முதுகிலே பல காயங்கள் ஆறிப்போன தழும்புகள் இருக்கின்றன. என்ன நடந்தது?” எனக்கேட்டான்.

“ மகனே... அதெல்லாம் பெரிய கதை. ஒன்றல்ல இரண்டல்ல பல கதைகள் அந்த தழும்புகளுக்குப்பின்னே இருக்கின்றன. நீ எனது முதுகை தடவும்போது அவை இப்போது நினைவுக்கு வருகின்றன. உனது அப்பா என்னை ஒரு குதிரைப்பாகனிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு முன்னர், நான் பல குதிரைப்பாகர்களிடம் நன்றாக உழைத்திருக்கின்றேன். எனது எஜமானர்களுக்கு நல்ல விசுவாசமாகவும் இருந்திருக்கின்றேன்.

ஆனால் அவர்கள் சுயநலவாதிகள். தங்களது இருப்பை வெளிப்படுத்துவதற்காக என்மீது சவாரி செய்தவர்கள். எனது வேகத்தையும் விவேகத்தையும் ஓட்டத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்தவுடன் ஏன் தங்களாலும் அப்படி இருக்கமுடியவில்லை என்ற எரிச்சலும் பொறாமையும் அவர்களுக்கு வந்துவிட்டது. தாங்கள் அமர்ந்து சவாரிசெய்த முதுகிலேயே குத்தி தங்கள் பொறாமையையும் இயலாமையையும் வெளிப்படுத்திக்கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கு குதிரையின் குணம் தெரியாது. அதனால்தான் குதிரையின் குணம் அறிந்துதான் அதற்கு கடவுள் கொம்பு கொடுக்கவில்லை என்று உன்னையும் உன்னைச்;சார்ந்த மக்களும் காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.” – என்றது குதிரை.

“ சரி குதிரையாரே... உனக்கு அவர்கள் முதுகிலே குத்தியபோது பேசாமலா இருந்தாய்?”- எனக்கேட்டான் அவன்.

“ம்ஹ_ம்... நானா? குத்துவலி பொறுக்காமல் ஒரு துள்ளுத்துள்ளி அவர்களை கீழே விழுத்தி எனது பின்னங்காலால் ஒரேஒரு உதைதான் கொடுப்பேன். அதன் பின்னர் எழுந்திருக்கவே மாட்டார்கள். ஊரேல்லாம் என்னைப்பற்றி பிதற்றிக்கொண்டு திரிவார்கள். நான் அதனைப்பற்றி கவலைப்படுவதில்லை. நீயும் இன்று என்னில் சவாரி செய்கிறாய். நாளை உனக்கும் என்மீது பொறாமை வரலாம். வந்தால் நீயும் முதுகிலே குத்தலாம். குத்தினால் என்ன நடக்கும் தெரியும்தானே?”

“ நன்றி குதிரையாரே... நீயும் அப்பாவும் எனக்கு நல்ல புத்திமதி புகட்டியிருக்கிறீர்கள். அப்பா மண்குதிரையினதும் மரக்குதிரையினதும் இயல்புகளை எனக்கு சொல்லாமல் சொல்லித்தந்தார். ஆனால் நீயோ இந்த உலகமே அறிந்துகொள்ளத்தக்க அறிந்துகொள்ளவேண்டிய செய்தியொன்றை எனக்கு இப்போது சொல்லித்தந்திருக்கிறாய். உன்னை நான் மறக்கவே மாட்டேன்.”

அந்தக்குதிரை அவனை அந்த அழகான கிராமத்தின் இயற்கை எழில்கொஞ்சும் ரம்மியமான இடங்களுக்கெல்லாம் தனது முதுகிலே வைத்து அழைத்துச்சென்றது. அவன் அந்தக்கிராமங்களின் பசுமையை ரசித்தான்.
 
 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஆலம் விழுது - சிறுகதை சோனா பிறின்ஸ்  11.07.210

அலுவலக வேலையில் முழுமையாக ஈடுபட முடியாமல்இ கண்ணனுக்கு மனம் கனத்தது. எத்தனையோ வருடங்களாக குழந்தைக்காக ஏங்கியவனுக்குஇ ஆழக்கடலில் தேடிய முத்தாகக் கிடைத்த தன் மகள் சரண்யாஇ முதல்நாள் இரவு தூங்கும் வரைக்கும் அழுததை நினைக்கஇ கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அதனைப் பிறர் பார்த்து விடாமல் மறைத்துக் கொண்டான்.  


எதற்காகத் தன் மனைவி தேவகி இப்படி நடந்து கொள்கின்றாள் எனக் குழம்பினான் கண்ணன். நன்கு படித்தவளால் ஒரு குடும்பப் பெண்ணாக நடந்து கொள்ள முடியவில்லையா? ஒரு வேளை அதிகம் படித்ததினால்தான் பிறர் மனங்களைப் படிக்கும் தன்மையை இழந்து விட்டாளா? என மனதிற்குள் கேள்விக்கு மேல் கேள்வி எழுந்தது அவனுக்கு. புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் கண்ணன் தன் இனத்தையும் தாயக மண்ணையும் மறந்ததில்லை.அதனால் அந்தக் கடமைகளில் ஈடுபடுவான். இது பிடிக்காமல் “இன்னும் எதற்காக அந்தக் கண்றாவியைக் கட்டிக் கொண்டு அழகின்றீர்கள்? வெளிநாட்டவரின் நாகரீகத்தை பின்பற்றிஇ நடை உடை போன்றவற்றில் மாற்றங்களைக் கொண்டு வந்து வாழ வேண்டும”; என்றும் கூறுவாள்.இதனால் சரண்யா தமிழ் பேசுவதையோ தமிழ்ப் பாடசாலைக்கு செல்வதையோ தேவகி அடியோடு வெறுத்தாள்.

முதல்நாள் இரவு சரண்யா மிகவும் ஆவலோடே “அப்பா வருகின்ற சனிக்கிழமை எங்கள் தமிழ்ப் பாடசாலையின் கலைவிழா நடக்கப் போகின்றது” என அதுபற்றி ஆவலுடன் கூறிக் கொண்டிருக்கும் போதினிலேஇ திடீரென்று புயல் போல் வந்த தேவகி சரண்யாவின் கரங்களைப் பிடித்து இழுத்தவாறு “ஏய் வாயை மூடு உனக்கு எத்தனை தடைவ சொல்வது தமிழில் பேசாதே தமிழைப் பற்றிப் பேசாதே என. தமிழ்ப்பாடசாலையும் தேவையில்லை ஒன்றும் தேவையில்லை” என வீடே அதிரும்படி கத்தினாள்.

அவ்வேளை மிரண்டு போய் அழுது கொண்டிருந்த சரண்யாவிற்கு ஆதரவாகப் பேச நினைத்த கண்ணன் “தேவகி! இப்படிச் செய்யாதே நீ இன்று ஆங்கிலத்தில் கத்தினாலும் நீயும் தமிழ் படித்துத்தானே இருக்கின்றாய்? எதற்காக பிள்ளைக்குத் தமிழ் தெரியக்கூடாது என்று நினைக்கின்றாய்?” என்றபோது “நீங்க நிறுத்துங்கோ உங்களைப்போல் அவளையும் மாற்றாதீங்கோ” என்று கத்திவிட்டு சரண்யா கதறக் கதறக் அறைக்குள் இழுத்துச் சென்றாள்.இப்படிப்பட்ட இரட்டைக் கலாச்சார மோதல்களால் தன் இல்லத்தில் இடம் பெறும் சண்டை சச்சரவை சமாளிக்கவும் முடியாமல் அதனை நிறுத்தவும் முடியாமல் தான் தோல்வியை மெல்ல மெல்ல தழுவிக் கொள்வதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இப்படிப்பட்ட வீட்டுப் பிரச்சினையால் அலுவலகத்திலும் கவனக் குறைவாக பணியாற்றியதையிட்டுஇ மேலதிகாரிகளின் கண்டனத்திற்கும் ஆளாகியிருந்தான் கண்ணன்.

ஒருவாறு வேலையை முடித்தக் கொண்டு தொடர்வண்டியில் வீடு நோக்கிப் புறப்பட்டவன்இ ஜன்னல் அருகில் அமர்ந்து கொண்டு வெளியே கண்களை ஓடவிட்டான். உள்ளுக்குள்ளே குழந்தைகள் அங்கும் இங்கும் சத்தம் போட்டு ஓடித்திரிந்தன . அதனால் கவனம் ஈர்க்கப்பட்டவனாய் அவர்களைத் திரும்பிப் பார்த்தான் .அழகான நான்கு குழந்தைகள். இருவர் இரட்டைப் பிறவிகள் போன்றும் மற்றைய இருவரும் இரட்டையர்களுக்கு முன்னும் பின்னும் பிறந்தவர்கள் போன்றும் இருந்தார்கள். அவர்களது பெற்றோர் ஒருவருடன் ஒருவர் அன்போடு சாய்ந்து அமர்ந்து கொண்டு பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.பார்க்கும் போது நல்லதொரு மகிழ்ச்சியான குடும்பம் போல் தோன்ற மனதிற்குள் இருந்து கூடவே ஏக்கமும் பெரு மூச்சும் வெளிப்பட்டது.

திடீரென அக்குழந்தைகளில் ஒன்று ஓடி வந்து அவனருகில் இருந்து பேசத்தொடங்கியது.அக் குழந்தை கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டு தானும் அக்குழந்தையிடம் பெயர் வயது கல்வி பற்றி விசாரித்த வேளை திடீரென்று அப்பிள்ளை “என் அப்பா அம்மாவிற்கு பேச வராது” எனக்கூறிய அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு திடுக்குற்றான். அதன்பின்பே அக்குடும்பத்தின் மகிழ்ச்சிக்கான காரணத்தை அவனால் கண்டுகொள்ள முடிந்தத. பழைய பாடலில் சொல்வதுபோல்இ உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது என்ற உண்மையை எதிரே கண்டான்.

ஆண்டவன் கேட்பதற்கு இரண்டு செவிகளையும் பேசுவதற்கு ஒரு நாவையும் கொடுத்துள்ளான். ஆனால் மனிதன் செவிஇரண்டையும் மூடிக்கொண்டு பேசிப்பேசி மற்றவர்களை பழிவாங்குவதே வாழ்க்கை என எண்ணியவனாயஇ; தான் இறங்கும் இடம்வரவே இறங்குவதற்கு ஆயத்தமானான்.

வீட்டுக்கு வந்து குளித்து ஆடைமாற்றிக்கொண்டுஇ தேநீர்க் கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டுஇ தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் அமர்ந்தான். அவ்வேளை சண்டைக்கு தயாரானவள் போல் தேவகி அவன் முன்னே வந்துஇ “இதோ பாருங்க! இன்றைக்கே எனக்கு முடிவு தெரிந்தாகணும். என் வாழ்க்கை முறையும் உங்க வாழ்க்கை முறையும் ஒன்றுக்கொன்று முரணானது . எனவே நீங்கள் என் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டு வீட்டில் ரகளையோடு வாழ்வதை விடுத்து எனக்கேற்றவாறு மாறவேண்டும்.பொதுத் தொண்டு போன்றவற்றை தூக்கி எறிந்து விட்டு என்கூட வாழ வேண்டும் அல்லது திருமணவாழ்வில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்” என்றாள்.

இடி விழுந்தது போல் உறைந்து போனான் கண்ணன்.அதன் பின் அவள் என்ன சொன்னாள் எனபது அவனுக்கு கேட்கவில்லை .பிள்ளைக்காக எல்லாவற்றையும் விட்டு விட்டு குடும்பத்தோடு வாழலாமா? என நினைத்தான். மறுகணம் தாயகத்தின் அவல நிலைக்குள் தவித்துக் கொண்டிருந்தஇ பிஞ்சு முகங்கள் நினைவில் வந்தன. இல்லை தாயகத்திற்கான வாழ்க்கை தான் சிறந்தது என நினைத்தான். மறுகணம் தன் பிள்ளை நாளை தேவகியுடன் தனித்து விடப்பட்டு வளரும் போதிலே தமிழைஇ தமிழ் கலாச்சாதத்தைஇ தெரியாத பிள்ளையாக வளர்ந்து விடுமே எனத் தயங்கினான். இந்த மனப் போராட்டங்களுடன் நீண்ட நேரம் உறக்கமில்லாமல் உறங்கிப் போனான். அதிகாலை மனப் பாரம் குறைந்தது போன்று விழித்துக் கொண்டவனுக்கு.

தன் பிள்ளை தன்னிடம் சட்ட முறைப்படி வந்து நிற்கும் நாட்களில் தன்னால் தமிழையும் தமிழ்க்கலாச்சாரத்தையும் ஊட்டி வளர்க்க முடியும் என நினைத்தவனுக்கு ஒரு தெளிவான முடிவு மனதில் தோன்றியது. அதாவது தாயகத்தில் எத்தனையோ விதவைகள் பிள்ளைகளை வளர்த்தெடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்இ ஆகவே அங்குள்ள ஒரு விதவைத் தாய் தன் பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கான சகல செலவினங்களையும் புலம் பெயர் மண்ணிலும் இருந்தவாறே அனுப்பிஇ அக்குடும்பத்தை கரையேற்ற வேண்டும். இன்னொரு பெண்ணுடன் தன்னால் வாழ முடியாதுஇ எனவே தூர இருந்து உதவவேண்டும். என்றைக்கும் மனைவி எனும் ஸ்தானத்தில் இருந்தவள் தேவகி மட்டும்தான் என்ற முடிவுடன் அலுவலகம் செல்வதற்கு ஆயத்தமானான்.
 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பூவும் பொட்டும் (சிறுகதை)
உஷா ஜவாகர் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சிட்னியில் அமைந்துள்ள பிளேமிங்டன் (Flemington ) பிள்ளையார் கோயிலை நோக்கி 'விர்' என்று ஒரே சீரான வேகத்துடன் தன் புத்தம் புதிய காரை மிகவும் பெருமிதத்துடன் செலுத்திக் கொண்டிருந்தாள் விஜயகௌரி அம்மாள்

விஜயகௌரி அம்மாளுக்கு சுமார் எழுபது வயது மதிப்பிடலாம் போன்று தோன்றியது.தலைக்கு 'டை' அடித்திருந்தாலும் அந்த டையையும் மீறி வெளியே தெரிந்த நாலைந்து வெள்ளிக் கம்பிகள் அவளது வயதை பறைசாற்றிக் கொண்டிருந்தன.
அந்தக் காலத்திலேயே கொழும்பில் தனியார் பாடசாலையில் படித்தது மட்டுமல்லாமல் பின்னர் கணக்கியல் துறையிலும் நன்றாகப் படித்துச் சித்தியடைந்து மும்பத்தைந்து வருடங்கள் கணக்காளராக வேலை பார்த்த கம்பீரம் அவளது முகத்துக்குத் தனிக்களையைக் கொடுத்திருந்தது.
தான் நன்கு படித்தவள், நல்ல வேலையிலிருந்தவள் என்ற ஆணவம் அவள் உள்ளத்தில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும்.
இப்போதும் கைகள் இரண்டும் காரின் ஸ்டீரிங் வீலைப் பிடித்திருந்தாலும் கண்கள் மட்டும் தன் அருகே அமர்ந்திருந்த தன் ஒன்று விட்ட சகோதரியை அவ்வப்போது நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன.

விஜயகௌரி அம்மாளின் ஒன்றுவிட்ட சகோதரி சாந்தா அம்மாள் 'லிட்கம்' (Lidcombe ) என்ற இடத்தில் வசிப்பவர். சுமார் அறுபத்தியிரண்டு வயது நிரம்பியவர். அவர் பத்தாவது வரை தான் படித்தவர். இருபது வயதிலேயே திருமணம் நடைபெற்று விட்டது. வேலைக்குச் சென்ற அனுபவம் ஏதும் கிடையாது
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் தான் அவரது பரந்த உலகம். ஆஸ்திரேலியாவுக்கு சாந்தா அம்மாள் சில வருடங்களுக்கு முன்பு தான் குடிபெயர்ந்திருந்தார். காரோட்டிய அனுபவமும் கிடையாது.

பிள்ளையார் கோயிலுக்கு வெள்ளிகிழமைகளில் பகல் பூசைக்கு செல்வதற்கு சாந்தா அம்மாள் விஜயகௌரி அம்மாளிடம் கார் லிப்ட் கேட்பதுண்டு. இப்போதும் விஜயகௌரி அம்மாள் காரோட்டிக் கொண்டிருக்க பக்கத்திலிருந்த சாந்தா அம்மாள் தலையைக் குனிந்தபடி மௌனமாக இருந்தார்.
விஜயகௌரி அம்மாள் தான் பேச்சை ஆரம்பித்தார். "சாந்தா பார்த்தியா? நான் புதுசா போட்டிருக்கிற நெக்ளச என்ர இரண்டாவது மகன் தான் வாங்கித்தந்தான். நெக்ளசின் நடுவில போட்டிருக்கிற சிவப்புக் கல்லு என்ர நிறத்துக்கு நல்ல எடுப்பா இருக்குது என்ன?"

சாந்தா அம்மாள் "ஓம் நல்ல எடுப்பாத் தானிருக்கு அக்கா!" என முனங்கினார். " இந்த நாலு சோடி தங்க காப்பும் எண்ட மூத்த மகன் போன மாசம் துபாய்க்குப் போகேக்க வாங்கிட்டு வந்தவன். மூத்த மருமகளும் என்னில நல்ல பட்சம். மகன் எனக்கென்று எக்பென்சிவ்வா(Expensive ) என்ன வாங்கீட்டு வந்தாலும் ஒண்டும் சொல்ல மாட்டா நல்ல பிள்ளை!

ஆ! இப்ப கதையை எங்க விட்டேன்? எப்பிடி இந்த துபாய் காப்புக்கள் நல்லா மினுங்குது என்ன?" என்றாள்.
" ஓம் அக்கா நல்லாத் தான் மினுங்குது!" என்று சுரத்தில்லாமல் பதில் அளித்தாள் சாந்தா அம்மாள். "உன்ர பிள்ளைகள் அவ்வளவு நல்லாப் படிகேல்லை! அது தான் உனக்குப் பட்டுச் சேலைகளோ, நேக்ளசோ, பவுன் காப்புகளோ ஒண்டும் புதுசாக் கிடைகிரலை! எண்டாலும் நீ பாவம் தான். உனக்கு காரும் ஓட்டத் தெரியாது. கார் ஓட்டத் தெரிஞ்சா மட்டும் போதுமே! இங்க சிட்னியில புதுக் கார் வாங்குறது எண்டா எவ்வளவு காசு செலவழியும் தெரியுமா? கார் வாங்கலாம் எண்டு நீ கனவு காண மட்டும் தான் முடியும்!"
அகங்காரம், ஆணவம், செருக்கு எல்லாம் கலந்த விஜயகௌரி அம்மாளின் பேச்சைக் கேட்ட சாந்தா அம்மாளுக்கு ஏனடா விஜயகௌரி அம்மாளின் காரில் ஏறினோம் என்ற எண்ணமே ஏற்பட்டது.
சுய பட்சாதாபதில் அவள் சட்டென்று தலையை குனிந்து கொண்டாள். "நீ அக்கா அக்கா எண்டு அவவுக்கு பின்னுக்குப் போனாலும் அவ ஒரு நாளும் உன்னை மதிக்கிறேலை . பிறகு ஏன் நீ அவவோட பழகிறநீயோ தெரியாது" எனத் தன் கணவர் தனக்குக் கூறிய அறிவுரையை நினைத்துக் கொண்டே கண்களின் ஓரம் பூத்த நீர் மொட்டுக்களைத் துடைத்துக் கொள்கிறார் சாந்தா அம்மாள்.
கோயில் மண்டபத்துக்கு வெளியே காரை நிறுத்திய விஜயகௌரி அம்மாள் சாந்தா அம்மாளைப் பார்த்து "கார் கதவை மெல்லமா சாத்து! நீ கதவை இறுக்கிச் சாதினாப் புதுக் கார் பழுதாய் போய்விடும் . உனக்குச் சொந்தக் கார் வைச்சிருந்தா தானே காரின் அருமை தெரியும்" என்று நக்கலாகச் சிரித்துக் கொண்டே விஷம் கலந்த வார்த்தைகளைச் சிந்திவிட்டு கோயிலின் உள்ளே சென்றார்.





22222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222