நீதிக்கும் போராட்டம் நியாயத்துக்கும் போராட்டம்
சாதிக்கும் போராட்டம் சமயத்துக்கும் போராட்டம்
போதிக்கும் குருமார்க்கும் போராட்டம் போராட்டம்
போராட்டம் இப்போது போராடி நிற்கிறதே !
கோவில்சிலை போகுதென்று போராட்டம் ஒருபக்கம்
கோவிலையே தகர்ப்போமென்று போராட்டம் மறுபக்கம்
சாமியில்லை சாமியில்லை என்றுசொல்லிப் போராட்டம்
சன்மார்க்கம் காத்திடுவார் தம்பாட்டில் போராட்டம் !
மருத்துவர்கள் வசதிக்காய் வகைவகையாய் போராட்டம்
மருந்திலே கலப்படத்தை தடுத்துவிடப் போராட்டம்
நோயாளி சுகம்பெற்று வருவதற்கும் போராட்டம்
போராட்டம் மருத்துவத்தைப் பொறிவைத்தே நிற்கிறது !
கற்றறிந்தார் காசுக்காய் போராட்டம் நடத்துகிறார்
கல்விகற்கும் மாணவரும் போராட்டம் நடத்துகிறார்
அற்பத்தனம் கொண்டுநிற்கும் அனைத்துக் கல்விமுதலைகளும்
ஆதாயம் தேடுதற்கும் போராட்டம் நடத்துகிறார் !
ஊழலென்னும் பேயதனை ஒழித்துவிடப் போராட்டம்
உணர்வதனை இழக்கவைக்கும் மதுவொழிக்கப் போராட்டம்
வாழ்வதற்குத் தொழில்தேடும் மக்களது போராட்டம்
மாற்றுத் திறனாளிகளும் போராட்டம் நடத்துகிறார் !