ஈழத்து
இலக்கிய உலகில் பெரிய ஆளுமைகளாக விளங்கிய விமர்சகர்கள் – பேராசிரியர்கள் கைலாசபதி
– சிவத்தம்பி ஆகியோர் மீது மல்லிகை ஜீவா பெருமதிப்பும் பேரபிமானமும் கொண்டிருந்தவர்.
சிவத்தம்பி, ஜீவா இணைந்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில்
( மாஸ்கோ சார்பு ) அங்கத்துவம்பெற்றிருந்தவர்.
கைலாசபதி
சீனசார்பு நிலையெடுத்தவர். எனினும் அக்கட்சியில்
( பீக்கிங் சார்பு )
இணையாமல், தொழிலாளி – செம்பதாகை முதலான
இதழ்களில் புனைபெயர்களில் எழுதினார். தேசிய
கலை இலக்கியப்பேரவை கைலாசபதியை கொண்டாடியது.
அத்துடன்
கைலாஸ் சீனாவுக்குச்சென்று திரும்பி, தமது மனைவி சர்வமங்களத்துடன் இணைந்து மக்கள் சீனம் -காட்சியும் கருத்தும் என்ற நூலையும் எழுதினார்.
சிவத்தம்பி,
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார். அத்துடன்
இச்சங்கம் நடத்திய மாநாடுகளின்போது தீர்மானங்களை
வரைவதற்கும் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரனுக்கு
பக்கத்துணையாக விளங்கினார்.
ஜீவா
கைலாசபதியை பன்மையில் மரியாதையுடன் அழைப்பார்.
ஆனால், சிவத்தம்பியுடன் ஒருமையில் , “ என்னடாப்பா, நீ…. வா…
போ….” என்று உரிமையுடன் பேசுவார்.
ஒருசந்தர்ப்பத்தில் ஜீவாவிடம் இந்த இரண்டு
இலக்கியப்பேராளுமைகள் பற்றியும் உங்களது பார்வை என்ன..? என்று கேட்டபோது, ஜீவா பின்வருமாறு தெரிவித்தார்.
அச்சமயம்
கைலாசபதி உயிரோடு இல்லை. அவர் 1982 டிசம்பரில் மறைந்துவிட்டார்.
ஜீவா
சொல்கிறார்:
இந்தக்கேள்விக்கு
பதில்சொல்வது அத்தனை சுலபமானது அல்ல. ஒரே கேள்வி – பதிலில் சட்டென சொல்லக்கூடியதுமல்ல.
இருவரையும் சமகாலத்தில் தெரிந்துகொண்டவன். சமமாகவே தெரிந்துவைத்திருப்பவன்.
மிக
நெருக்கமாகவும் பேசிப்பழகியவன். இதில் சங்கடம் என்னவென்றால் ஒருவர் ( கைலாஸ் ) மறைந்துவிட்டார்.
எனவே கருத்துச்சொல்வதில் கஷ்டம் இதில் உள்ளது.
கைலாசின்
மனவுணர்வுகளை லேசில் புரிந்துகொள்ளமுடியாது. உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளவே மாட்டார்.
சிவத்தம்பி
அப்படி அல்ல ! குழந்தைப்பிள்ளை. நேசிப்புக்கு மிக நெருக்கமானவர். கைலாசின் நேர் சம்பாஷணையை
வைத்து அவரது அறிவின் ஆழத்தை அளவிட்டுவிட முடியாது. ஆனால், சிவத்தம்பியுடன் பேசும்போது,
அவரது எழுத்தைவிட அவருடன் சம்பாஷிக்கும் ஒவ்வொரு வேளையும் நான் பிரமித்துப்போவதுண்டு.
இப்படியானவரிடம்
நான் ஒரு மாணவனாக ஓரிரு வருடங்கள் இருந்திருந்தால் எத்தனை அறிவுபெற்றிருப்பேன்…? என்று எனது மனம்
ஏக்கமடைவதுண்டு.