.
சிட்னி பெருநகரத்தில் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகளின் அதிபர்களே,
ஆசிரியர்களே நிர்வாக நண்பர்களே
அனைவருக்கும் என் அன்பு வணக்கம்
இவ்வாண்டின் முதல் தவணையைப் பூர்த்தி செய்து இரண்டாவது தவணையை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் முக்கியமானதும் அவசியமானதுமான இரண்டு விடயங்களைத் தெரிவிக்க, தமிழ் முரசு அவுஸ்திரேலியா இணைய இதழூடாக உங்களைத் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி
1.
மொழிக்கல்வி மாநாட்டில் Professor David Nunan
சென்ற ஆண்டின் இறுதியில் மாநில அரசு சமூகமொழிக் கல்வி அபிவிருத்திக்கெனெ 11 மில்லியன் டொலர்களை அடுத்த மூன்று வருடங்களில் செலவிடவுள்ளதாக அறிவித்ததை நீங்கள் அறிவீர்கள். இத்தொகையில் ஆறரை மில்லியனுக்கும் சற்று அதிகமான தொகை சமூக மொழிப்பாடசாலை ஆசிரியர்களின் தராதரத்தை உயர்த்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொறுப்புக் கூறலில் உயர்ந்த தரத்தைப் பேணுவதோடு கற்பித்தல் துறை சார்ந்த தகுதியினை வளர்க்க விரும்பும் பாடசாலைகளுக்கு சுமார் இரண்டு மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் பாலர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மொழிகல்விப் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு எட்டு இலட்சம் டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிதி ஒதுக்கீடு மூலம் சமூகமொழிப் பாடசாலைகளில் மொழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தரமானதும் பொருத்தமானதுமான மொழிக் கல்வியை வழங்கும் அரசின் எண்ணமும் இத்துறை சார்ந்த சமூக ஆர்வலர்களின் எண்ணமும் வெளிப்படுகிறது.