தமிழ் இலக்கியங்கள் பசியைப் பற்றி நிறையவே பேசி இருக்கிறது. இசையையும் நடனத்தையும் வாழ்க்கை முறையாக வைத்திருந்த பாணர்கள் என்கிற கலைஞர்களை எப்போதும் பசியோடிருக்கும் படியாகப் பார்த்துக்கொண்டது சங்ககாலச் சமுதாயம்.
 பசியைப் பற்றி அதிகமாகப் பாடிய மனுஷிஒளவை. தமிழில் நாலு அல்லது ஆறு பேர் ஒளவை என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள். நாம் பேசப் போவது 'வாக்குண்டாம்,’ 'நல்வழி’ எழுதிய ஒளவை பற்றி. பசி வயிற்றோடு அவள் ஒரு சம்பாஷணை நடத்துகிறாள்.
'வயிறே... சும்மா ஒரு வேளைக்கு சோறு கிடைக்காமல் போனால்அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறாய். சரிநிறையக் கிடைக்கும்போது இரண்டு மூன்று வேளைக்கும் சேர்த்து எடுத்துக்கொள் என்றாலும் மாட்டேன் என்கிறாய். நான்படும் அவஸ்தை உனக்குப் புரியாது. எப்போதும் எனக்குத் துன்பத்தையே தரும் வயிறே. உன்னோடு வாழ்தல் அரிது!’ என்கிறாள்.
பசியேமனித குலத்தைத் துரத்தும் ஆதிப் பகை. மனித ஆத்மாவைக் கொல்கிற அழிக்க முடியாத கிருமி அது. இன்னொரு மனிதனுக்கு முன்னால் மனிதனை மண்டியிட வைக்கிற பெரும் பாவி அது. காதல்கூட பசித்தவனைப் பகிஷ்கரிக்கிறது. முத்தம் கொடுத்துப் பசியாற முடியாது. பசித்த வயிறு காதலின் ஈரத்தை வளரச் செய்கிறது.