யாழ் மத்திய கல்லூரியின் மதுர கானம் 2020 - செ .பாஸ்கரன்


.

யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் சிட்னிகிளையினர் சிட்னியில்  நேற்று சனிக்கிழமை 13.03.2020 மதுரகானம் 2020 நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியிலே இலங்கையிலிருந்து சக்தி ரிவி வெற்றியாளர் ஸ்ரீவத்சலா இலங்கையிலே புகழ்பெற்ற பாடகர் ஸ்டான்லி அதேபோல் இந்தியாவிலே ஜீ  தமிழ் ரிவி வெற்றியாளர் அஸ்லாம் அவரோடு இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட சுகன்யா விஜய் ரிவியில் பல நிகழ்ச்சிகளில் வெற்றிகளை தட்டி கொண்ட அமுதவாணன் நடனக் கலைஞர் பல் குரல் மன்னன் இப்படியான பல பெயர்களை பெற்றவர், இவர்களோடு  ஜீ  தமிழ் ரிவி யின் செல்வா இசைக்குழுவினர் 8 பேரடங்கிய இசைக்குழுவினர் இங்கே வருகை தந்திருந்தார்கள். நேற்றைய தினம் சனிக்கிழமை Parramatta RiversideTheater  இல்  இந்த நிகழ்வு இடம்பெற்றது.  குறிப்பிட்டதுபோல் யாழ் மத்திய கல்லூரி வழமையாக குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை தொடங்குவார்கள் அதேபோல் நேற்றைய தினமும் ஐந்து முப்பது மணிக்கு நிகழ்ச்சியை சரியாக ஆரம்பித்தார்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த பாடகி சுகன்யாவின் முதல் பாடலோடு நிகழ்ச்சி ஆரம்பமானது அதனைத்தொடர்ந்து பாடகர்கள் தனியாகவும் இரட்டையர்களாகவும்  மாறி மாறி பாடினார்கள். இந்த நிகழ்ச்சியை திரு மகேஸ்வரன் பிரபாகரன் தொகுத்து வழங்கினார். இவர் அவுஸ்திரேலியாவில் பிரபலமான ஒரு அறிவிப்பாளர், அவருடைய அறிவிப்பில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.  உலகமெங்கும் இருக்கின்ற வைரஸ் பரவல் இருந்தும்  இந்த நிகழ்ச்சிக்கு மண்டபம் ஏறக்குறைய நிறைந்ததாக மக்கள்  இருந்தார்கள். அதேபோல் பாடகர்கள் வருவார்களா இல்லையா என்று பலர் பலத்த சந்தேக த்தோடு இருந்தபோதும் அவுஸ்ரேலிய தமிழ் வானொலியில் இந்த நிகழ்வு நடைபெறும் என  கானா பிரபா வெள்ளிக்கிழமை இரவு இவர்களையெல்லாம் பேட்டி கண்டு அவர்கள் வந்துவிட்டார்கள் நிகழ்ச்சி கண்டிப்பாக இடம்பெற இருக்கின்றது என்று அறிவித்திருந்தார் அதேபோல் நானும் இந்த நிகழ்ச்சி பற்றி வானொலியில் குறிப்பிட்டு இந்த நிகழ்ச்சி இடம்பெறுகின்றது ஆகவே மக்கள் வர  விரும்புகின்றவர்கள் வரலாம் என்று அறிவித்திருந்தேன். 

நாத சங்கமம் - சிட்னி துர்கா கோவில்


படப்பிடிப்பு: ஞானி 


உலக பிரசித்தி பெற்ற ஈழத்து இசைக்கலைஞர்களின் நாத சங்கமம் சிட்னி துர்கா கோவிலில் அமைந்துள்ள மண்டபத்தில் மார்ச் மாதம் 14ம் திகதி மாலை  மேடை ஏறியது.

பங்குபற்றிவர்கள்: 
இணுவில் தவில் வித்வான் திரு தட்சணா மூர்த்தி உதயசங்கர்,  நாதஸ்வர சக்ரவர்த்தி  இணுவில் திரு குமரன் பஞ்சமூர்த்தி, யாழ் நாதஸ்வர கலைஞர்  திரு நாகதீபன் குமரதாஸ்,  யாழ் தவில் கலைஞர் நடராசா பிரசன்னா 


அவலநிலை போக்குதற்கு ஆண்டவனே வழிகாட்டு ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


          கட்டி   அணைத்தோம் 
          கைகுலுக்கி   மகிழ்வடைந்தோம்  
          இட்டமுடன்    உணவுகளை 
          எடுத்துண்டு இன்புற்றோம் 
          கட்டி அணைத்தவரை
          கைகுலுக்கி நின்றவரைtam
          எட்டவே நில்லென்று
          எச்சரிக்கை செய்கின்றோம் !        

          கைதந்தால் ஓடுகிறோம்
          கால்பட்டால் பதறுகிறோம் 
          முன்னின்று மூச்சுவிட்டால்
          பின்னோக்கி ஓடுகிறோம்
          தும்மல்வந்து விட்டாலே
          துடிதுடித்து நிற்கின்றோம்
          கொரனோவின் வில்லத்தனம்
          அளவின்றி பெருகிறதே ! 

          கொரனோவின் பரவலினால்
          கொள்கலங்கள் தடையாச்சு
          கடையெல்லாம் சனக்கூட்டம்
          பொருள்தேடி அலைகிறது 
          கல்விகற்கும் மாணவர்கள்
          கதிகலங்கி நிற்கின்றார்
          மெள்ளமெள்ள கொரனோவும்
          பள்ளிநோக்கி பார்க்கிறது   ! 

Coronavirus (COVID-19) ATBC வானொலி வழங்கும் தமிழில் ஒரு விளக்கப் பகிர்வு - கனா பிரபா


Coronavirus (COVID-19)

ATBC வானொலி வழங்கும் தமிழில் ஒரு விளக்கப் பகிர்வு

வைத்திய கலாநிதி கண்ணன் ராஜேஷ்கண்ணா  (GP), 
வைத்திய கலாநிதி சசி சசிகரன் (Geriatrician) 
வைத்திய கலாநிதி ரூபன் பொன்னுத்துரை (Emergency Physician) 
இவர்களுடன் நிகழ்ச்சித் தயாரிப்பு மற்றும் நெறியாள்கை திரு சிவசம்பு பிரபாகரன் 

இன்று பேசப்படும் இரு திரைப் படங்கள் - செ .பாஸ்கரன்

.


இந்த வாரம் இரண்டு நல்ல திரைப்படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது , ஒன்று சவுத் கொரியா திரைப்படமான Parasite இன்னும் ஒரு திரைப்படம் எமது  மண்ணிலே தயாரிக்கப்பட்டு சென்ற வாரம் சிட்னியில் திரையிடப்பட்ட சினம்கொள் முதலில் Parasite பற்றி பார்ப்போம். Parasite திரைப்படம் தென்கொரிய  திரைப்படம் ஆகும், இந்த திரைப்படத்தை Bong Joon  அவர்கள் இயக்கி இருந்தார்கள் ஸ்கிரீன்பிளே அதாவது எழுத்து இயக்கம் இரண்டிலும் அவர் பங்கு பெற்று இருந்தார். இந்த திரைப்படமானது Cannes  திரைப்பட விழாவில் பங்குகொண்டு வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து ஆஸ்கர் விருதுகள் நான்கு பெற்றிருக்கின்றது.  சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர்,  ஒரிஜினல் ஸ்கிரீன்பிளே, பெஸ்ட்  இன்டர்நேஷனல் பிலிம் இப்படி 4 விருதுகளை இந்த திரைப்படம் தட்டிக் கொண்டு சென்றிருக்கின்றது. 

ஒருஏழைக்  குடும்பம் பணக்கார குடும்பம் ஒன்றை திட்டமிட்டு ஏமாற்றுவது என்ற ஒரு கதைதான்.  முதலில் Cannes இல்  திரையிடப்பட்டது அதைத் தொடர்ந்து உலக அளவிலேயே இதனுடைய புகழ் பரவியது சர்வதேச திரைப்பட அகடமி விருதுகள் நான்கைத்  தட்டி சென்றிருக்கின்றது.  முதல் தடவையாக  இன்டர்நேஷனல் திரைப்படம் ஒன்று இந்த விருதுகளை பெற்று இருக்கின்றது. இந்த திரைக்கதையும் இசையும் மிக அருமையாக இருக்கின்றது. Event  சினிமாவிலே இந்த திரைப்படம் காண்பிக்கப்பட்ட போது அதை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தென் கொரிய திரைப்படத்திற்கு இந்த விருது கிடைச்சிருக்கு என்றவுடன் உலகம் முழுவதும் அது பேசப்படுகின்றது.  அதிகூடிய வசூலையும் இப்பொழுது அள்ளிக்கொண்டு இருக்கின்றது இத்திரைப்படம் .  பணக்கார வீட்டுப் பிள்ளையை படிப்பிப்பதற்காக செல்லுகின்ற ஒரு இளைஞன் தங்களுடைய வறுமையைப் போக்குவதற்காக அந்த பணக்கார குடும்பத்தை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறான் அதனால் என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் வருகின்றது இறுதியாக அந்த ஏழைகள்  எப்படி வாழ்ந்தார்கள் என்பதுதான் இதன் கதை.

கொரோனாவை குணப்படுத்த புதுப்புது சிகிச்சை முறைகள்!

Thursday, March 12, 2020 - 6:00am
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. ஆனால் இதுவரை அதற்குத் தடுப்பு மருந்து எதுவும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்து குறித்தும், பாதுகாப்பாக இருப்பதும் குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதில் மிகவும் ஆபத்தானது முதல் ஆபத்தில்லாதது வரை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பரவி வரும் சில வதந்திகளும் உண்மையில் அறிவியல் கூறுவதும் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.முகநூலில் பெரிதும் பகிரப்படுவது, கொரோனாவிலிருந்து தப்பிக்க வெள்ளைப்பூடு(பூண்டு) சாப்பிடுங்கள் என்பதாகும். பூண்டு சாப்பிடுவது நல்லது . அது நுண்ணுயிரை எதிர்க்கும் தன்மையுடையது. ஆனால் அதை சாப்பிட்டால் புதிய கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

விழிப்புணர்வில் அலட்சியம் கூடாது!
சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் இன்று பெரும்பாலான நாடுகளுக்குப் பரவி விட்டது. உலகில் ஏராளமான நாடுகளில் கொரோனா தொற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் இந்நோயானது ஏறக்குறைய உலகின் அத்தனை நாடுகளுக்குமே பரவி விடலாமென்ற அச்சமே நிலவுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 3300 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டி விட்டது.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமா அல்லது மேலும் தீவிரமடையுமா என்பதை ஊகித்துக் கொள்ள முடியாதிருக்கிறது. சீனாவில்தான் இந்நோய் முதன் முதலில் பரவிய போதிலும், இப்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் வீதம் படிப்படியாகக் குறைந்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக சீனா மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளின் காரணமாகவே அந்நாட்டில் இந்நோய் பரவும் வேகம் குறைந்து கொண்டு செல்கின்றது.

இலங்கைச் செய்திகள்


கோவிட் 19 பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு வழங்க கோருகிறது அரசு

முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் பிரதமர் மஹிந்த 

தென்கொரியா, இத்தாலியிலிருந்து வந்த 181 பேர் தனிமைப்படுத்தலுக்காக மட்டக்களப்பிற்கு

நான்காவது வருடத்தில் காலடி வைத்துள்ள தொடர் போராட்டம்

மறு அறிவித்தல் வரை திரையரங்குகளுக்கு பூட்டு

வவுனியா கொரோனா கண்காணிப்பு தடுப்பு முகாமுக்கு 213 பேர் வருகை

ஐரோப்பியர்களுக்கான வீசா இரு வாரங்களுக்கு நிறுத்தம்

வெள்ளவத்தை – பத்தரமுல்லை படகு சேவை இன்று முதல்கோவிட் 19 பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு வழங்க கோருகிறது அரசு
கொரோனா தொற்றுள்ள முதலாவது நபர் கொழும்பில் கண்டுபிடிப்பு

உலகச் செய்திகள்


கொரோனா வைரஸ்: இத்தாலியில் உயிரிழப்பு உச்சம்: இயல்பு வாழ்வுக்கு திரும்புகிறது சீனா

கொரோனா வைரஸ் உயிரிழப்பு 4000ஐ தாண்டியது: முழு இத்தாலியும் முடக்கம்

கொரோனா வைரஸ்: வடக்கு இத்தாலியில் 16 மில். மக்களை தனிமைப்படுத்த உத்தரவு

ஆப்கானிலிருந்து அமெரிக்க துருப்புகளின் வாபஸ் ஆரம்பம்

சவூதியில் மற்றொரு இளவரசர் கைதானார்

பிரபல ஹொலிவுட் தம்பதிக்கு வைரஸ்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா


கொரோனா வைரஸ்: இத்தாலியில் உயிரிழப்பு உச்சம்: இயல்பு வாழ்வுக்கு திரும்புகிறது சீனா

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 10 - துடி மற்றும் தக்கை


துடி மற்றும் தக்கை – தோற்கருவிகள்

அமைப்பு
உடுக்கையை போன்ற அமைப்பில் ஆனால் அதை விட சிறியதாகவும் சில இடங்களில் பெரியதாகவும் இருக்கிறது துடி. காட்டில் கிடைக்கும் பலா அல்லது குமுது மரத்தின் முற்றிய கிளைகளை வெட்டிக் கொணர்ந்து பிரத்தியேகமான கருவியால் குடைந்து முற்காலங்களில் குரங்கு அல்லது காட்டு ஆட்டின் தோல் போர்த்தி செய்யப்பட்டது. இப்பொழுது ஆட்டுத் தோல் பயன்படுத்தி துடி செய்யப்படுகிறது. அதுவும் இல்லையென்றால் நெகிழி பயன்படுத்துகிறார்கள்.
தக்கையும் உடுக்கையை ஒத்த வடிவமைப்பை உடையது அதைவிட பெரியது. உடல் பகுதி பலா மரத்தில் செய்து ஆட்டுக்குட்டியின் தோல் போர்த்தப்பட்டுள்ளது.
துடியும் தக்கையும் குச்சிக்கொண்டே ஒரு முகத்தில் மட்டும் கொட்டப்படுகிறது. உடுக்கயை போன்று கைகளால் இசைக்கப்படுவதில்லை.

குறிப்பு
உடுக்கை, தமருகம், துடி, தவண்டை, தக்கை, பாணி, திமிலை, இடக்கை, ஆகுளி இவையெல்லாம் ஒரே அமைப்புடைய வேவ்வேறு அளவிலான தோலிசை தொல் தமிழர் கருவிகள். இக்கருவிகள் அனைத்தும் நேரக்குடுவை(Hour Glass) அமைப்பையுடையவை. இக்கருவிகளின் பயன்பாடு தமிழர்கள் மத்தியில் மிகவும் அருகி வருகின்றது. என்னுடைய காதணி விழாவிற்கு இசைக்கப்பட்ட உடுக்கை, பம்பை, சிலம்பு ஆகிய கருவிகளை தற்காலத்தில் எங்கள் உறவினர்கள் யாரும் அமர்த்துவதில்லை.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் -04


உழுதுண்ணும் ஊரவர் !   வரப்புயர நீர் உயரும் !!  
மது  ஊரவர் விவசாயிகள்.  உழுதுண்டு வாழ்ந்தவர்கள் செறிந்திருந்த ஊர் அது! அஃது அன்றைய நிலை. உழுதுண்ணும் ஊரவர் எளிய வாழ்க்கை நடத்திய காலம். காலச் சுழற்சியுடன் கோலங்கள் பல மாறின. இன்றும்  மாறி வருகின்றன. எனினும், அன்று எமது படலைக்கொட்டிலில் இருந்து, உழுதுண்ணும் ஊரவரையும் அவர் தம் திறன்களையும் விடா முயற்சியையும் மெச்சிய நெஞ்சம் இன்னும் பசுமை இழக்கவில்லை.
வயல்களுக்கு உரம் தேவை. இயற்றை உரம் பெறப் பல வழிகளைக் கையாண்டவர்கள் அவர்கள். சாணமும்                                        ‘ சாதாழை ‘ யும் தாராளமாகப் பரப்புர். செம்மறியாடுகளைப்  ‘பட்டி ‘அடைத்துத்  ‘தெட்டம் தெட்டமாக ‘ ச் செழிப்புறச்செய்வர். இவை எல்லாம் மழைக்காலத்துக்கு முன்னதாக நிறைவுறும். செயற்கை உரம் பயன்படுத்தியதாக நினைவில்லை.
மழைக்காலம் வந்ததும், வயல்களுக்கு வரம்பு கட்டுதலும் ஏர் பூட்டி உழுது மறுத்தலும் நடைபெறும். வரப்புயர நீர் உயரும், நீருயர நெல்லுயரும் ஆகையால், தமது வயல் நீர் வெள்ளத்துடன் அடுத்த வயலுக்குச் செல்லாதவாறு  வரம்புகள் அமைப்பர். அகன்று உயர்ந்த வயல் வரம்புகள் பல மாரி காலத்து நடைபாதைகளும் ஆகும். அதனால் அகன்று உயர்ந்த  ‘நடைவரம்புகள்  ‘ சிலவும் உறுதியாக  அமைப்பர்.
ஆவணி மழையுடன் வரம்புகட்டல், உழுது மறுத்தல் ஆகியன நிறைவுபெற, நெல் விதைத்தல் தொடரும். விதை நெல்லைச் சுபமுகூர்த்தம்  பார்த்து விதைக்கத் துவங்குவர். இடதுகையாலே பனையோலைக் கடகத்தில் விதை நெல்லைச் சுமந்தபடி வலது கையில் பிடிபிடியாக நெல்லை எடுத்து ஒழுங்காக வீசி விதைத்துச் செல்லலும் ஒரு தனிக்கலை.
விதைத்து முடித்தவுடன் மீண்டும் உழுது மறுப்பர். கலப்பையாலேதான் அவர்கள் உழுவர். ஏர்பிடித்து, எருதுச்சோடிகளைப் பின் தொடர்ந்து உழுவதே பார்க்க அழகான காட்சி. அதற்கு மெருகூட்டுவது, அவர்களின் பரஸ்பர ஒத்துழைப்பும் கூட்டுமுயற்சியுமாகும். ஏனெனில், அவர்கள் தனியாக நின்று உழுவதில்லை. பல உழவர்கள் ஒன்றுகூடித்தான் உழுவர். பலர் வரிசைசேர்ந்து உழும்போது, அவர்களது எருதுகளின் கம்பீரமும் தோற்றமுங்கூட ஒரு தனிக்கவர்ச்சியூட்டும்.

இலக்கியப்பலகணி ---03 இலக்கிய உலகில் அற்பாயுளும் மேதாவிலாசமும் - ரஸஞானி


எமது  தமிழ்  சமுதாயத்தில்  எம்மவர்   மத்தியில்   அடிக்கடி                உதிர்க்கப்படும்  வார்த்தைகள்:
ஊழ்வினை, தலைவிதி,  விதிப்பயன், தலையெழுத்து. கர்மவினை!
அதாவது   இறைவன்   ஓர்   உயிரைப்படைக்கும்பொழுதே  
அதன்  தலையில்  அதன்விதியை  எழுதிவிடுவானாம்.  அதன்   பிறகு  அந்தவிதிப்படிதான்  யாவுமே  நடக்குமாம் என்பது  நம்பிக்கை. அதேசமயம்    விதியை  மதியால்  வெல்லமுடியும்   என்றும்        ஒத்தடம்தரும் வார்த்தைகளையும்    சொல்லிக்கொள்வார்கள்.


ஆல்பேர்ட் காம்யூ என்ற அல்ஜீரியாவில் பிறந்த எழுத்தாளர் நோபல் விருதும் பெற்றவர். இவரது அந்நியன் நாவலை நாம் தமிழிலும் படிக்கலாம். உயிர் வாழ்ந்த காலம் 47 ஆண்டுகள்தான்.
.
சுந்தரராமசாமியின்   ஜே.ஜே.  சில  குறிப்புகள்   நாவலும்  ஆல்பேர்ட் காம்யூவின் அகால   மரணம்   பற்றிய   செய்தியுடன்தான்   ஆரம்பிக்கிறது.   சுந்தரராமசாமி    தனது    நாவலின் நாயகன்,   ஜோசஃப்  ஜேம்ஸ்   (ஜே.ஜே)   பற்றிச்சொல்லும்போது,   மேதாவிலாசத்திற்கும்              அற்பாயுளுக்கும்   அப்படி   என்னதான்   நமக்கு   எட்டாதபடி ரகசிய   உறவோ?   என்றும்   ஆதங்கப்படுகிறார்.   தமிழில்          பாரதி,   புதுமைப்பித்தன்,   கு.ப.ராஜகோபாலன்,                                      கு. அழகிரிசாமி,   மு. தளையசிங்கம்   என்று அற்பாயுளில்   மறைந்துவிட்ட   படைப்பாளிகளின்   பட்டியலையும்    தருகின்றார்.
ஆல்பேர்ட்   காம்யூவின்   எதிர்பாராத   திடீர்   விபத்து   மரணம்,   எமக்கு   தமிழில் மேலும்    ஐந்து     படைப்பாளிகளை   நினைவுக்கு    கொண்டு

வருகிறது.


தமிழகத்தில்    சுப்பிரமணிய   ராஜூ,    மேத்தாதாஸன்,                  சு.சமுத்திரம்   இலங்கையில்   அங்கையன்    கைலாசநாதன்    லண்டனில்  நவசோதி.    இவர்கள்   ஐவரும்   வாகன    விபத்தில்    கொல்லப்பட்டவர்கள்.   சென்னையில்   சுப்பிரமணிய   ராஜூ    விபத்தில்    மறைந்த   இடத்தை   மல்லிகை    ஆசிரியர்                  டொமினிக்ஜீவாவுக்கு    காண்பித்தவர்   கவிஞர் மேத்தாதாசன்.

புதுக்கவிதை வீச்சாகியிருந்த 1970 காலப்பகுதியில்,  கவிஞர் மேத்தாவின் கவிதாளுமையால் கவரப்பட்டு விஜயராகவன் என்ற தனது இயற்பெரை மேத்தாதாசன் என மாற்றிக்கொண்டவர்.  ஹைக்கூ கவிதைகளும் எழுதியிருப்பவர். முதிர்கன்னிகள் பற்றி அவர் எழுதிய கவிதை இது:
கனம் குறையும் காலண்டர்

கதவோரம்
கல்யாணமாகாத பெண்!

மேத்தாதாசன், வயது முதிராமலேயே அற்பாயுளில் வாகனவிபத்தில் கொல்லப்பட்டார்.

வவுனியா மாவட்ட மாணவர்களுக்கு இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி


அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் 2020 ஆம் ஆண்டின்  முதல் காலாண்டிற்கான நிதிக்கொடுப்பனவு வவுனியா மாவட்ட மாணவர்களுக்கு  கடந்த சனிக்கிழமை  14  ஆம் திகதி  வழங்கப்பட்டது.
கடந்த 32 வருடங்களாக அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்  வவுனியா மாவட்டத்தின் நீண்ட கால தொடர்பாளர் அமைப்பான நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பணிமனையில் அதன் தலைவர் திரு. த. கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமகாலத்தில் எதிர்பாராத வகையில் தோன்றியிருக்கும்  கொரனோ வைரஸ் தாக்கம் தொடர்பாக மாணவர்களுக்கும் தாய்மாருக்கும் விழிப்புணர்வு விளக்கமும்  அளிக்கப்பட்டது.
நிறுவனத்தின் முகாமைக்  குழு உறுப்பினர் திரு. அறிவழகன், கள உத்தியோகத்தர் திருமதி பிரேமா ஆகியோர் மாணவர்களுக்கான 2020 ஆண்டிற்கான முதல் நான்கு மாதங்களுக்கான நிதியுதவிகளை வழங்கினர்.
பாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி வரையில் இயங்கமுடியாத சூழல் தோன்றியிருப்பதனால், இந்த நிகழ்வு இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 27 முருகபூபதி


பிதா,  அன்றும் வழக்கம்போன்று கணினி பயிற்சிக்குச் சென்று திரும்பினாள். மதியம் பன்னிரண்டு மணியும் கடந்திருந்தது.
ஜீவிகா, பெரியப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். அபிதாவைக்கண்டதும், அவளை அவர் ஏறிட்டுப்பார்த்துவிட்டு தலையை தாழ்த்திக்கொண்டார்.
“   அய்யா… நீங்கள்  நல்லவேளை  தப்பிட்டீங்க…  “  அபிதா அவரைப்பார்த்துச் சொன்னாள்.
“  எதிலிருந்து…!? “  என்ற ஆச்சரிய – கேள்விக்குறிகளுடன்  ஜீவிகாவும் பெரியப்பா சண்முகநாதனும் அவளை நோக்கினர்.
 “ கொரோனோ வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தலினால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை மட்டக்களப்பு பக்கம் அழைத்துச்சென்று தனிமைப்படுத்துகிறார்களாம்.  இந்த நடைமுறை நீங்கள் வந்து இறங்கிய பின்னர் ஆரம்பமாகியிருக்கிறது. நல்லவேளை , நீங்கள் அதிலிருந்து தப்பிவிட்டீர்கள். “  என்றாள் அபிதா.
பெரியப்பா ஆழ்ந்த பெருமூச்சை விட்டார்.
 “ உன்னைப்பற்றி ஜீவிகா சொன்னாள். ஏ. எல். வரையும் படித்திருக்கிறாயாம்.  அப்படியிருக்க, எதற்காக இந்த வீட்டு வேலைக்கும் சமையல் வேலைக்கும் வந்தாய். வந்தவிடத்திலும், கம்பியூட்டர் வகுப்புக்கு போகிறாய்.  உன்ர மனதில்  அப்படி என்னதான் திட்டம்…?  “
வீட்டுக்கு அவர் வந்து சேர்ந்த பின்னர், இவைதான் முதல் தடவையாக அபிதாவை ஏறிட்டுப்பார்த்து பேசும்  வார்த்தைகள்.
“  வீட்டு வேலையெல்லாம் செய்த பிறகு, சும்மாதான் இருக்கிறேன்  அய்யா. பொழுது போவதற்கு ஏதும் படித்தால் நல்லதுதானே..? அதுதான்.  “  சண்முகநாதனின் முகத்தை பார்ப்பதும் தாழ்த்துவதுமாக தயங்கித்தயங்கி அவளது உதடுகளிலிருந்து சொற்கள் பிறந்தன.
சண்முகநாதன் உரத்து சிரித்தார்.  இடதுபுறம் ஒரு தங்கப்பல் தெரிந்தது. பல்தான் தங்கம். மனதும் தங்கமா…? அபிதா தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
ஜீவிகா, அவர்கள் இருவரையும் பேசுவதற்கு விட்டுவிட்டு, தனது மடிக்கணினியை திறந்து ஏதோ எழுதத் தொடங்கிவிட்டாள்.
மஞ்சுளாவும் சுபாஷினியும்  கற்பகமும் வேலைக்குப்போயிருந்தனர்.  பெரியப்பா சண்முகநாதனுடன் மேலும் பேசுவதற்கு அபிதா ஊன்றுகோல் வார்த்தைகளைத் தேடினாள்.
 “ அய்யா, உங்களுக்கு ஏதும் குடிப்பதற்கு எடுத்து வரட்டுமா..?  காலையில் சாப்பிட்டீங்களா..? உங்களுக்கு இப்போது நேரம் வித்தியாசமாக இருக்கும் இல்லையா..?  “ அபிதாவின் அக்கறையில் சண்முகநாதன் சற்று நெகிழ்ந்ததை, அவரது புன்முறுவலிலிருந்து அபிதாவுக்கு புலனாகியது.

கொழும்பில் மலைகளைப் பேசவிடுங்கள் நூல் வெளியீட்டு அரங்கு


 “  மலையகம் என்ற உணர்வுடனும், உறவுடனும் ஒலிக்கும் குரல்   திலகருடையது “

                                                         தெளிவத்தை ஜோசப்  


அரசியலாளரும் எழுத்தாளருமான மல்லியப்புசந்தி திலகர் எழுதிய “மலைகளைப் பேசவிடுங்கள்” நூல் வெளியீடும்  மற்றும்  மூன்று நூல்களின் அறிமுகமும் அண்மையில்  கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்றது. 


“சாகித்ய ரத்ன” தெளிவத்தை ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில்,  வரவேற்புரையை திலகரின் மகள் ஓவியா வழங்க,   மலைகளைப் பேசவிடுங்கள், ‘சென்றுவருகிறேன் ஜென்ம பூமியே’ ‘இலங்கை சிறுகதை முன்னோடி இலங்கையர்கோன்’ ‘காலம் தெளிவத்தை சிறப்பிதழ்’ ஆகியவற்றின் அறிமுகத்தை எம். வாமதேவன் வழங்கினார்.


நூலாசிரியர்களான திலகர், தெளிவத்தை ஜோசப், அரு.சிவானந்தன் ஆகிய மூவரையும் அறிந்தவர் என்றவகையில் அவரது உரை நூலின் உள்ளடக்கம் மற்றும் நூலாசிரியர்களின் வகிபாகம் குறித்த பதிவாக அமைந்தது. 

லண்டன் புத்தக வெளியீடு - Cancelled due to COVID-19 (Coronavirus)


Due to the current Covid 19 situation, we are not having this Book Fair. We hope that this will be re-organised once things are clearer.
Sorry for the inconvenience.


தமிழ் சினிமா - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்


சினிமாவில் கதை, இயக்கம் என்பதை தாண்டி சில முகங்களுக்காகவே படம் பார்க்க வேண்டும் என நம்மில் பலருக்கும் தோன்றும் சரிதானே. மற்ற மொழி சினிமா பிரபலங்களுக்கும் நம் தமிழகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படியாக நடிகர் துல்கர் சல்மானுக்காகவும், இயக்குனர் கௌதம் மேனனுக்காகவும் படத்தை பார்க்கலாம் என சென்றவர்களில் இப்போது எழுத்தாக இங்கு உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் நானும் ஒருவன். சரி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்க்க நம் பார்வையை கொஞ்சம் கூர்மையாக்குவோமா...

கதைக்களம்

படத்தின் ஹீரோவாக துல்கர் சல்மான், அவருக்கு நண்பராக விஜே ரக்‌ஷன். இருவருக்கும் ஒருவருக்கொருவரே உற்ற துணை. இவர்களுக்கு குடும்ப பின்னணி எல்லாம் பெரிதாக கிடையாது. ஃபிரிலேன்சராக வேலை செய்யும் இருவரும் ஒரு ஜாலியான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கிடையில் துல்கர் ஹீரோயின் ரிது வர்மாவை காண்கிறார். வழக்கமான காதலர் போல பின் தொடரும் இவரும் அவரும் ஃபிரண்ட்ஸ் ஆகிறார்கள். இடையில் ரிதுவின் தோழி நிரஞ்சனி மீது லவ் வருகிறது. இதற்கிடையில் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக துல்கர், ரக்‌ஷன் இருவரும் சில திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
இதற்கிடையில் போலிசாக வரும் கௌதம் மேனன் வீட்டில் சிறு விபத்து சம்பவம். இதன் பின்னணி என்ன அவர் ஆராய தொடங்குகிறார். சில புகார்களும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் வர அவர் மறைமுக விசாரணையை தொடங்குகிறார்.
இந்நிலையில் ரக்‌ஷன், துல்கர், நிரஞ்சனி, ரிது என நால்வரும் கோவா செல்கிறார்கள். திடீரென போலிசார் துல்கர் மற்றும் ரக்‌ஷனை சுற்றி வளைக்கிறார்கள். இந்நிலையில் இருவருக்கும் ஏமாற்றம், பெரும் அதிர்ச்சி. கடைசியில் அவர்கள் நால்வரும் என்ன ஆனார்கள்? அவர்களின் பின்னணி என்ன, கௌதம் தேடி வந்ததன் மர்மம் என்ன என்பதே இந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கதை.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ துல்கருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தமிழில் ஓ காதல் கண்மணி படத்திற்கு பின் அவரை இப்போது தான் ரசிகர்கள் திரையில் மீண்டும் காண்கிறார்கள். வழக்கம் போல அவருக்கான சாக்லேட் பாய் கேரக்டர் போல தான் இந்த படத்திலும். ஆனால் ஒரு சென்சிட்டிவ் மைண்ட் பிளே.
ரக்‌ஷனை டிவி சானல் நிகழ்ச்சி தொகுப்பாளராக நம் அனைவருக்கும் நன்கு பரிட்சயமானவர். தற்போது இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். ஒரு செகண்ட் ஹீரோ போல தெரிந்தாலும் அங்கங்கு தன் ஸ்டைலில் கவுண்டர் கொடுக்கிறார். இன்னும் நன்றாக ஸ்கோர் பண்ணலாமே ரக்‌ஷன்.
தெலுங்கு ஹீரோயின் ரிது வர்மா விஜபி 2 படத்திற்கு பின் தமிழில் இரண்டாவது படமாக இதன் மூலம் வந்திருக்கிறார். இவரின் பின்னணி என்ன என்பது இரண்டாவது பாதியில் தெரிந்த பின் பலருக்கும் ஒரு ஷாக். கவனம் பெற்றாலும் ஹீரோவுடன் இவருக்கும் பெரிதளவில் ரொமான்ஸ், கெமிஸ்ட்ரி இல்லை.
சிகரம் தொடு, காவிய தலைவன், பென்சில், கபாலி என நிரஞ்சனியை ஏற்கனவே பல படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே. இப்படத்தில் சீரியஸான ரோல். அதிலும் ரக்‌ஷன் செய்யும் குறும்பை இவர் டாமினேட் செய்வது ஸ்கோர் செய்வது என கவர்கிறார்.
கௌதம் மேனன் ஒரு போலிஸ் அதிகாரியாக திரையில் வந்ததுமே பலரின் முகத்தில் புன்னகை பளிச்சிட்டது. சற்று கூடுதலான எதிர்பார்ப்பு. அவருக்கு உண்டான ஸ்டைலில் படத்தின் முக்கிய காட்சிகளை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் கிளைமாக்ஸ் சீன்கள் ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்பிரைஸ். சில இடங்களில் இவரின் நடவடிக்கைகள் கண்களை கவர்கின்றன. கேமியோ ரோல்களில் படத்தில் வந்து போகும் அவரை முழுமையாக இப்படத்தில் காண்பது ரசிகர்களுக்கு மனநிறைவு.
இயக்குனர் தேசிங் பெரிய சாமி, தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நவீன முறையில் நூதன திருட்டுகளை அரங்கேற்றும் நன்கு படித்த அதிமேதாவிகளை அம்பலப்படுத்திய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
இயக்கம், காட்சிகள் பதிவு, இசை என ஹேப்பியான ஒரு ஃபீல். ஆனால் படத்தின் நீளம் சற்று அதிகம். ஓரிரு பாடல்களின் கருத்துக்கள் மனதை ஈர்க்கின்றன.

கிளாப்ஸ்

கௌதம், ரிது, துல்கர், ரக்‌ஷன் ஆகியோர் ஸ்வீட்டான பெர்ஃபாமன்ஸ்...
மனங்களை கவரும் காட்சிகள், லொக்கேசன்...
ரக்சனின் அனிமேசன், துல்கரின் டெக்னாலஜி மைண்ட் கொஞ்டம் இண்ட்ரஸ்டிங்..

பல்ப்ஸ்

படத்தை இன்னும் கொஞ்சம் கிருஸ்ப்பாக கொடுக்கலாமே...
மொத்தத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காண்போரின் கண்களை கவரும் ஒன்று.