பொதுமக்கள் நிரம்பிய மண்டபங்களில் தனது கணீர் குரலினால் பேசிவந்தவரும், தேவாரம், திருவாசகம் முதலானவற்றையும் , பழைய திரைப்படப் பாடல்களையும் பாடி வந்திருப்பவரும் மெல்பன் வாழ் தமிழ் அன்பர்களின் நல்லபிமானம் பெற்றவருமான எமது அன்பிற்கினிய நாகராஜா மாஸ்டர் அவர்கள், தனது குரலை நிறுத்திக்கொண்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.
1926 ஆம் ஆண்டில் இலங்கையின் வடபுலத்தில் கொக்குவிலில் பிறந்திருக்கும் அவர், தனது இறுதிமூச்சினை புகலிட நாட்டில் நிறுத்திக்கொண்டுவிட்டார்.
அவரை 1990 ஆம் ஆண்டு முதல் நன்கு அறிவேன். அவரை எமக்கு அறிமுகப்படுத்தியவர் எமது இலக்கியக்குடும்பத்தைச்சேர்ந்த சகோதரி ( அமரர் ) அருண். விஜயராணி.
அக்காலப்பகுதியில் நாம் உருவாக்கியிருந்த அவுஸ்திரேலியத்தமிழர் ஒன்றியத்தின் பாரதி விழா மெல்பனில் பார்க்வில் பல்கலைக்கழக உயர்தரக்கல்லூரி மண்டபத்தில் நடந்தது.
பாரதியாரின் பாடல்களை உள்ளுர் கலைஞர்களின் மெல்லிசையுடன் சில பாடகர்களைக்கொண்டு பாடவைத்த நிகழ்ச்சி ஒன்றையும் அந்த விழாவில் இணைத்திருந்தோம். அதற்கான ஒத்திகைகளுக்கு கிரமமாக அவர் வந்தவிடத்தில்தான் அவருடன் அறிமுகமாகி பேசிப்பழகுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த பாரதி விழாவில் அவரும் சில பாரதி பாடல்களைப்பாடினார்.
அவ்வாறு 1990 ஆம் ஆண்டு தொடக்கம் எம்முடன் நல்லுறவுபேணிவந்தவர், தொடர்ந்தும் நாம் ஒழுங்குசெய்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்.
உள்ளூர் அன்பர்கள் எவரேனும் மறைந்துவிட்டால், மறைந்தவரின் ஆத்ம சாந்திக்காக நடத்தப்படும் பிரார்த்தனைக்காக முதல் அழைப்பு நாகராஜா மாஸ்டர் அவர்களுக்குத்தான் செல்லும்.
அவரும் தாமதியாமல் வந்து, துயரத்தில் பங்குகொண்டு இறைவணக்கப்பாடல்களை மெய்யுருக இராகத்துடன் பாடுவார். வருகை தந்திருப்பவர்களும் மெய்மறந்து கேட்பார்கள்.
அவ்வாறு தமிழர் பொது நிகழ்ச்சிகளில் பெருந்தொகையானவர்கள் கூடியிருக்கும் இடத்தில் பெருங்குரல் எடுத்து பாடியவரின் இறுதி நிகழ்வுகள், சமகால நெருக்கடியின் இடைவெளிபேணல் விதிமுறையினால், சொற்ப எண்ணிக்கையினர் மத்தியிலிருந்து இடம்பெற்றதும் காலத்தின் துயராகும் !