புன்நகை ! - ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )


                 கழுத்தில் நகை போடலாம்
                       கையில் நகை போடலாம்
                  கண்ட  இடத்தில்  எல்லாம் 
                         காசால் நகை போடலாம் 
                   எங்கு நகை போட்டாலும் 
image1.JPG                       புன்நகையே பெரும் நகையே 
                   பொன் நகையை புறந்தள்ளி
                       புன் நகையே முன்னிற்கும் ! 

                பட்டம்  பல  பெற்றிடுவார்
                   பதவி  பல  வகித்திடுவார் 
               திட்டம் போட்டுச் சொத்துக்களை
                   சேர்த்து  நிற்பார்  பலவழியில் 
               எத்தனைதான் பெற்றும்  அவர்
                    புன்நகையை இழந்து நின்றால் 
               மொத்த உள்ள அவர்வாழ்வு 
                     முழுமை அற்றே போகுமன்றோ ! 

            சேதாரமில்லை செலவழிப்பு ஏதுமில்லை
                 ஆதாயம் என்று எண்ணி 
             அதிக பணம் இதற்குவேண்டாம் 
                     நாள் முழுக்க உழைத்தாலும்
             நல்ல சொத்துச் சேர்த்தாலும்
                      ஆள் முகத்தில் புன்னகையே
              அவர் சொத்தாய் ஆகுமன்றோ  ! 

           

விஜயகலாவும் விடுதலை புலிகளும்


07/07/2018 குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் ' விடுதலை புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ' என்று பொதுவில்  கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார்.ஆனால், 'விடுதலை புலிகளை மீண்டும் கொண்டுவருவதே எங்கள் நோக்கம் ' என்று அவர் கூறியது தான் ' சட்டப்படி ' பிரச்சினையாகி விட்டதுபோலும்.

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் -- (04) ஆரையூர் கண்ணகை வரலாறும் வழிபாடும்: தேடலில் இறங்கியிருக்கும் பிரசாத் சொக்கலிங்கம் - முருகபூபதி


மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் என்பன ஐதீகங்களாக போற்றப்பட்டாலும், இவற்றில் வரும் பெண்பாத்திரங்களுக்கு கோயில்கள் அமைத்து வழிபடும் மரபும் தொன்றுதொட்டு நீடிக்கிறது. இந்தக்காவியங்களில் வரும் ஆண் பாத்திரங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். மகாபாரதத்தில் குந்தி முதல் பாஞ்சாலி வரையிலும், இராமாயணத்தில் சீதையும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள்தான். குந்தியைத்தவிர ஏனைய மூவரும் வழிபாட்டுக்குரியவர்களாகிவிட்டனர்.

இலங்கையில் திரெளபதை அம்மன், கண்ணகி அம்மன், சீதை அம்மன் கோயில்கள் அமைத்து சைவத்தமிழர்களும் பௌத்த சிங்களவர்களும் வழிபடும் மரபும் தொடர்ந்து பண்பாட்டுக்கோலமாகவே மாறிவிட்டது சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலையும் மக்களிடத்தில் காவியமாகியிருக்கிறாள். மணிமேகலை தமிழ்க்காப்பியம் மட்டுமல்ல, அது பவுத்த காப்பியமும்தான் என்று நிறுவுகிறார் தமிழக எழுத்தாளர் பேராசிரியர் . மார்க்ஸ். ( ஆதாரம்: தீராநதி 2017 ஜூன்)


கண்ணகி வழிபாடு, திரௌபதை அம்மன் வழிபாடு என்பன கிழக்கிலங்கையில் மிகவும் முக்கியத்துவமாகியிருக்கின்றன. இராவணன் சீதையை கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறைவைத்தமையால் அங்கு சிங்கள மக்களால் சீதாஎலிய என்னுமிடத்தில் சீதை அம்மனும், வடமேற்கு இலங்கையில் உடப்பு மற்றும் கிழக்கிலங்கை பாண்டிருப்பில் தமிழர்களினால் திரௌபதை அம்மனும், கன்னன் குடாவில் ஶ்ரீகண்ணகி அம்மனும் குடியிருக்கிறார்கள். பாரத நாட்டில் தோன்றிய காவிய மாந்தர்களில் குறிப்பாக பெண்களுக்காக இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் வழிபாட்டு மரபை தோற்றுவித்திருப்பதின் பின்னணி விரிவான ஆய்வுக்குரியது.

நடந்தாய் வாழி களனி கங்கை ...... அங்கம் 07 தலைநகரில் தோன்றிய விஹாரைகளின் பின்னணியில் மறைந்திருக்கும் அரசியல் கங்காரமையாக மாறிய முனுசாமி தோட்டம் - ரஸஞானி


இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இராச்சியங்களுடன் மேலும் சில சிறிய இராச்சியங்களையும் கொண்டிருந்தது.
கோட்டை இராச்சியம் அமைந்திருந்த பிரதேசம்தான் இலங்கையின் தலைநகரமாக விளங்கும் கொழும்பு. களனி கங்கையை ஒரு புறத்தில் எல்லையாகவும், இந்துமகா சமுத்திரத்தின் காலிமுகத்தை (Gall Face) மறு எல்லையாகவும் கொண்டிருக்கும் கொழும்பின் பெயர் வந்த கதைகளும் பலவுண்டு.
இலங்கைக்கு வெளியிலிருந்து முதலில் கடல்மார்க்கமாக படையெடுத்துவந்த போர்த்துக்கேயரால் 1505 இல் கொழும்பு எனப்பெயர் சூட்டப்பட்டதாகவும், முன்னர் இருந்த கொலன்தொட்ட என்ற பெயரிலிருந்து இந்தப்பெயர் எடுக்கப்பட்டதாகவும், பழைய சிங்கள இலக்கண நூலான சிடசங்கரவ கொழம்ப என்பதற்கு, துறைமுகம், அல்லது கோட்டை என்று பொருள் சொல்லியிருப்பதனால், அதிலிருந்து மருவி, கொழும்பு எனப்பெயர் வந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு ஊருக்கும் காரணப்பெயர்களை ஆராயப்புகுந்தால் அது, நதி மூலம் ரிஷி மூலம் தேடும் செயலுக்கு ஒப்பானதாகும்.
களனிகங்கை தீரத்தில் பேலியாகொடை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. பூபாலவிநாயகர் ஆலயம். அதன் வரலாறு தெரியவில்லை. எனினும் அதன் அறங்காவலர்கள் திருவிளங்கநகரத்தார் சமூகத்தினர்தான் என்பது தெரிகிறது. இச்சமூகத்தினருக்கு, கொழும்பிலும் நீர்கொழும்பிலும் குருநாகலிலும் மாத்தளையிலும் கோயில்கள் இருக்கின்றன. வணிக வைசியர்களான அவர்கள் நல்லெண்ணை வியாபாரம் தொடக்கம் பல வர்த்தகங்களில் ஈடுபட்டவர்கள். அவர்களின் முன்னோர்கள் செக்குகள் வைத்து நல்லெண்ணை உற்பத்தி செய்தவர்கள்.
இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் அதனை ஒரு பெளத்த நாடாகவே மாற்றிக்கொண்டு வரும் செயல்களிலேயே மாறி மாறி பதவிக்கு வந்திருக்கும் ஐ.தே.கட்சி, மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன ஈடுபட்டுவந்துள்ளன.

வேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - பகுதி 6 – ச. சுந்தரதாஸ்


சிங்கள மொழியில் இதுவரை சுமார் 1300 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களுள் சாதனை புரிந்த படங்களில் ஒன்றாக எதத்சூரியா அதத்சூரியா விளங்குகிறது. 

தமிழில் ஏவி. எம், எஸ். எஸ் வாசன், கே. பாலாஜி போன்ற ஏராளமான தயாரிப்பாளர்கள் வேற்று மொழியில் வந்த படங்களை தழுவியே தமிழில் வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்கள். அதனை அவர்கள் குறையாக எண்ணியதில்லை. ரசிகர்களும் அப்படங்களை நிராகரித்ததில்லை. 

இதே பாணியை சிங்களத்திலும் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பின்பற்றினார்கள். ஒரு படத்திற்கு மிகத்தேவை திரைக்கதை. அதில் கோட்டை விட எவரும் தயாராக இல்லை. ஒரு மொழியில் வெற்றி பெற்றால் மறு மொழியிலும் வெற்றி பெறும் என்பது திரையுலகின் சாஸ்த்;திரம். அது இன்றளவும் தொடர்கிறது என்பது சாஸ்வதம். 

தமிழ் ஹிந்திப் படங்களை தழுவித்தானே உங்களுடைய படங்கள் சிங்களத்தில் வருகின்றன? என்று ஒரு தடவை லெனின் மொறயஸிடம் கேட்கப்பட்டது. உண்மைத்தான் ஆனால் நாங்கள் பிரேமுக்கு பிரேம் அப்பட்டமாக கொப்பி பண்ணுவதில்லை. மூலப்படத்தின் கதைக்கருவையும், சில காட்சிகளை மட்டுமே எடுககிறோம். மற்றும் படி புதிதாக காட்சிகள் சிங்களத்திற்கு ஏற்றாற்போன்று சம்பவங்களை எனது திரைக்கதை மூலம் உருவாக்குகிறேன். அவை சிங்கள ரசிகர்களை கவருகின்றன. படங்களும் வெற்றி பெறுகின்றன. 

தயாரிப்பாளர் படத்திற்கு முதலீடு செய்யும் போது இலாபத்திற்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறார். இது இயற்கை. அவருடைய வேண்டுகோளுக்கு  இணங்கி நாங்களும் செயற்பட வேண்டியுள்ளது. ஆனாலும் படத்திற்கு படம் நாங்கள் வழங்கியுள்ள உழைப்பை அவதானிக்க வேண்டும் என்று லெனின் மொறயஸ் தெரிவித்தார். லெனினுடைய இந்தக் கருத்தை அவருடன் பணியாற்றிய எஸ். ஏ. அழகேசன் ஆமோதிக்கிறார். 

21ஆவது உலகக் கிண்ணப் போட்டிகள் - ரஷ்யா 2018


உருகுவே கோல்காப்பாளர் தாரைவார்த்த  2 வது கோலுடன் அரை இறுதிக்குல் கால்பதித்த பிரான்ஸ்

5 தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலுக்கு ஆப்பு வைத்த பெல்ஜியம்

28 வருடங்களின் பின் தகுதிபெற்றது  இங்கிலாந்து

பெனல்டிகளில் கோட்டை விட்டது ரஷ்யா அரை இறுதியில் நுழைந்தது குரோஷியா



உருகுவே கோல்காப்பாளர் தாரைவார்த்த  2 வது கோலுடன் அரை இறுதிக்குல் கால்பதித்த பிரான்ஸ்

06/07/2018 கோல்காப்பாளர் பெர்னாண்டோ முஸ்லேரா இழைத்த பெருந்தவறு காரணமாக இரண்டாவது கோலைத் தாரைவார்த்த உருகுவேயை, நிஸ்னி, நொவ்கோரோட் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் பிரான்ஸ் வெற்றிகொண்டது.

அம்மாவின் பிள்ளை (சிறுகதை) யோகன்- கன்பெரா


கதவைத் தட்டும் சத்தம் கேக்குது. சரி இப்பவும் ஒரு பொய் சொல்ல வேணும். கொஞ்சம் பதட்டமாக இருக்கு. கதவைத்  தட்டுவது பக்கத்துக்கு யுனிட் ஜோன்  என்று எனக்கு நல்லாத் தெரியும். இதோட மூன்றாவது தரமாகத் தட்டுது. பாவம். முதல் இரண்டு தரமும் கேட்டும் கேளாதது போல இருந்து விட்டேன். அதுக்கு மனம் கேட்கவில்லை போலும். வீட்டுக்குப் போய் போன் அடிச்சிது. பாத்ரூமில குளிச்சுக் கொண்டிருந்ததாலும், பியானோ வாசித்துப் பழகிக் கொண்டிருந்ததாலும் கதவு தட்டிய சத்தம் கேக்கவில்லை எண்டு ரெண்டு பொய் சொன்னேன். இப்ப இன்னொரு பொய்யா?

அப்பாவும் அம்மாவும் ஆறு மணிக்கே  எழும்பி வெளிக்கிட்டு எனக்கும் குட்டிக்கும் கிஸ் தந்து விட்டு வேலைக்குப் போட்டினம். எங்களை வீட்டிலை தனியா விட்டிட்டு அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போனது இதுதான் முதல் தரம்.
அம்மா திரும்ப திரும்ப சொல்லி விட்டுத்தான் போனா. யார் வந்து கதவைத் தட்டினாலும் திறக்க வேண்டாம் என்று. பக்கத்து யூனிட் ஜோன் எண்டாலும்  கூட என்று. நான் ஓமெண்டு தலையை ஆட்டினேன்.
எனக்கு பத்து   வயது நடக்கிறதாம். என்னையொத்த வயதுப் பெண் பிள்ளைகளை கிட்னப் பண்ணுகிறார்களாம். டிவி யிலும் நெடுகிலும் காட்டுவினம். நான் டிவி பார்ப்பதும் குறைவு. என்னை பார்க்க விடுவதில்லை.  பிள்ளைகளுக்கான  சனல் மட்டும் தான் பார்க்கலாமாம். ஏன் அம்மாவும் அப்பாவும் என்னை இப்பிடிப் பயப்படுத்துகினமோ தெரியவில்லை.

செரிங்கட்டிவிதிகள் - ச.நாகராஜன்



.
    இயற்கையின் உயிரியல் படைப்பு மர்மத்தை ஆராய்வதற்குத் தகுந்த ஒரு இடமாக விஞ்ஞானிகள் கருதியது ஆப்பிரிக்காவின் வட டான்ஜானியாவில் ஆரம்பித்து, தென் மேற்காக கென்யா வரை பரந்துள்ள மிக அழகிய செரிங்கட்டி வன பிராந்தியம் தான்! சுமார் 12000 சதுர மைல் பரப்பைக் கொண்டுள்ள இந்த இடத்தில் தான் செரிங்கட்டி சரணாலயம் உள்ளது.
உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இந்தப் பகுதி ஒரு ஆச்சரியகரமான ஆய்வுக் கூடம்.
1957ஆம் ஆண்டு டான்ஜானியா தேசீயப் பூங்காவின் அழைப்பின் பேரில் இங்கு இரு விஞ்ஞானிகள் வந்தனர். பெர்னார்ட் ஜிமெர்க் மற்றும் அவரது மகன் மைக்கேல் ஆகிய இருவரும் இந்தப் பகுதியை ஆய்வு செய்து மிகச் சரியாக மிருகங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அயர்ந்து போனார்கள்; அவர்களது ஆய்வு முடிவைக் கேட்டு உலகமே அயர்ந்து போனது!
கொம்புகளை உதிர்க்காத ஒரு அரிய வகை ஆப்பிரிக்க மானினம் மட்டும் 99481. வரிக்குதிரைகள் 57199.கேஸல் வகை மானினம் 1,94,654. நீலமும் மஞ்சளும் கொண்ட புள்ளின மான்கள் 5172. அரிய வகை இம்பாலா மான்கள் 1717. எருமைகள் 1813. ஒட்டைசிவிங்கிகள் 837.யானைகள் 60. மொத்தமாக 3,66,980 பிராணிகளை அயராமல் அவர்கள் எண்ணி பட்டியலிட்டனர்.

இரட்டைக் குடியுரிமையும், இல்லாமல் போன உரிமையும். - சட்டத்தரணி (பாடும்மீன்) சு.ஸ்ரீகந்தராசா -

.


இரட்டைக் குடியுரிமை என்றால் என்ன? அது எப்படி எடுக்கப்படுகிறது? அதனை எப்படிக் கைவிடலாம்? கைவிடுவதென்றால் எந்த நாட்டுக் குடியுரிமையைக் கைவிடலாம்? என்பது பற்றியெல்லாம் எந்தவிதத் தெளிவும் இல்லாமல் சில ஊடகங்களில் செய்திகள் என்ற பெயரில் தகவல்கள் வெளிவருகின்றன. அப்படிச் செய்ய முடியும், இப்படிச் செய்யமுடியாது, அந்தநாடு விடாது, இந்தநாடு அனுமதிக்காது, அவரால் கைவிடவே முடியாதாம், இவரால் இரண்டுமாதங்களில் கைவிட முடியுமாம் என்றெல்லாம் க்கலாகவும், நகைச் சுவையாகவும்கூடச் சில செய்திகளைப்பார்க்கிறோம். அதனால், இரட்டைக் குடியுரிமை பற்றிய சில விடயங்களையும், இலங்கை அரசியலில் அதன் தார்ப்பரியங்களையும் பற்றிச் சில தகவல்களை இச் சிறு கட்டுரையில் தரவிரும்புகின்றேன்.

இலங்கைப் பிரசை ஒருவர் வேறு ஒரு நாட்டில் குடியுரிமை பெறுகின்றபோது அவரது இலங்கைக் குடியுரிமை இயல்பாகவே இரத்தாகிவிடும் என்பது சட்டத்தின் ஏற்பாடாகும். ஆனால், அவ்வாறு வேறு நாடு ஒன்றில் குடியுரிமை பெற்றுக் கொண்டவர் இலங்கைக் குடியுரிமையினையும் தக்கவைத்துக் கொள்வதற்கான ஏற்பாடே இரட்டைக் குடியுரிமையினைப் பெறுவதாகும்.  

இந்த வாய்ப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அவர்களது பதவிக்காலத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர்  மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக வந்தபோது, மீண்டும் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  இரட்டைக் குடியுரிமையை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. வேறு நாடுகளில் குடியுரிமையினை பெற்றிருக்கும் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் அன்றிலிருந்து இன்றுவரை இரட்டைக் குடியுரிமையினைப் பெற்றிருக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதனைப் பெற்றவர்கள் உள்ளார்கள். 

இலங்கைச் செய்திகள்


புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா

இராஜங்க அமைச்சர் விவகாரம் தொடர்பில் பிரதமரின் அதிரடி உத்தரவு!!!

இராஜாங்க அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு

முல்லைத்தீவில் விகாரை அமைப்பதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் 

விஜயகலாவின் கருத்துக்கு அவரது கட்சியும் கண்டனம்

இராஜாங்க அமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!!!

விஜயகலாவை கைதுசெய்யக் கோரி  மூன்று முறைப்பாடுகள்

விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் கோரிக்கை

அரசாங்கத்திற்கு இடைஞ்சலின்றி அமைச்சுப் பதவியிலிருந்து விலக விஜயகலா தீர்மானம் 

விஜயகலாவின் அதிரடி தீர்மானம்

மக்களுக்காகவே பதவி துறந்தேன் - விஜயகலா

விஜயகலாவை விசாரிக்க குழு நியமனம்

விஜயகலாவை விசாரிக்க நால்வர் கொண்ட ஒழுக்காற்று குழு

மஹிந்த ராஜபக்ஷவின் 112 கோடி விவகாரம் : நியூயோர்க் டைம்ஸிடம் ஆதாரங்களை கோரி கடிதம்

"விஜயகலாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்"

வேலணை வேணியன் காலமானார்


புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா

02/07/2018 வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்கினால்தான் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

ஞான வேள்வி 2018 (ஜுலை 10, 11, 12)

.

அன்புடையீர்,
கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் மூன்று நாள் சிறப்புப் பேருரைகள் உங்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
திருக்குறள் (10)மகா பாரதம் (11) சார்ந்த தலைப்புகள் முதலிரு நாட்களிலும் அமைந்து,
மூன்றாம் நாள் பேருரையானது, பலருடைய வேண்டுகோளுக்கிணங்க,
'கேள்விகளால் ஒரு வேள்வி' என்ற தலைப்பில்,
உங்களுடைய தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கேள்விகள்-சந்தேகங்களை தெளிவுறுத்தும் அரங்கமாக அமையவுள்ளது. 
தங்களுடைய கேள்விகளை தயவு செய்து பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு ஜுலை 8ம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வையுங்கள்.
kambanaustralia@kambankazhagam.org

கம்பன் விழா 2018 ஜுலை 14-15

.

'கற்றிட நினைந்திடுவாய்!
கம்பன் எழுதித்தந்ந 
பொற் குவியலுக்கு விரைந்தோடு!' - மஹாகவி து. உருத்திரமூர்த்தி-
இளைஞர்களும் பெரியவர்களும் இணைந்து அரங்கேற்றும் நற்றமிழ் இலக்கியத் திருநாட்கள் கம்பன் விழா!
சிட்னி வாழ் அன்புடையோராகிய உங்கள் அனைவரையும் இன்புற்று அழைக்கின்றோம்.
தங்கள் வருகையால்தான் விழா சிறப்புறும்,
நட்புடன் வருக!
-கழகத்தார்-

உலகச் செய்திகள்


குகையில் சிக்கிய சிறுவர்கள் வெளியில் வர  4 மாதங்கள் ஆகும்

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று நடக்கப் போகும் சவுதி அரேபியா!!!

ஜப்பானில் கடும் மழைக்கு பலியானோர் 38 ஆக உயர்வு

வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு

தாய்லாந்து படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 10 வருட சிறை


குகையில் சிக்கிய சிறுவர்கள் வெளியில் வர  4 மாதங்கள் ஆகும்

04/07/2018 தாய்லாந்து குகை ஒன்றில் காணாமல் போன 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் ஒருவரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.

தமிழ் சினிமா - செம்ம போத ஆகாத திரை விமர்சனம்

அதர்வா நீண்ட வருடமாக ஒரு நல்ல ஹிட் படத்திற்காக காத்திருக்கின்றார். அதனால், இந்த முறை தன் சொந்த தயாரிப்பிலேயே அதுவும் தன் முதல் பட இயக்குனருடன் இணைந்து செம்ம போத ஆகாத படத்தை தயாரித்து நடித்துள்ளார், செம்ம போத ஆகாத அதர்வா எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

அதர்வா படத்தின் முதல் காட்சிலேயே காதல் தோல்வியில் இருக்க, அதை மறக்க மூச்சு முட்ட குடிக்கின்றார், அந்த சமயத்தில் கருணாகரன் உன் கவலையை மறக்க சரியான வழி இன்னொரு பெண்ணை அடைவது தான் என்று தவறான ஐடியா கொடுக்கின்றார்.

அதை தொடர்ந்து அவர் வீட்டிற்கு ஒரு பெண் வர, அதர்வாவிற்கு ஆரம்பத்திலிருந்தே தயக்கம் தான் இருக்கின்றது, சரி பழைய காதலியை மறக்கவேண்டும் என்று இந்த பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று முடிவெடுக்கும் சமயத்தில் அவர் வெளியே செல்லும் நிலை ஏற்படுகின்றது.
வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தால் அந்த பெண் இறந்துள்ளார், அதர்வாவிற்கு ஒன்றுமே புரியவில்லை, யார் இவளை கொன்றார்கள் என தேட, ஆரம்பிக்க அதற்கான விடை கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அதர்வா தமிழ் சினிமாவில் இன்னும் சில வருடங்களில் தவிர்க்க முடியாத நடிகராகிவிடுவார், தன் நடிப்பின் தரத்தை பரதேசியிலேயே நிரூபித்தாலும், அவருக்கு ஒரு கமர்ஷியல் வெற்றி தேவைப்படுகின்றது, அதற்காகவே தேர்ந்தெடுத்த கதை தான் இந்த செம்ம போத ஆகாத போல, படம் முழுவதும் ஒரு வித பதட்டத்துடன் பயணிப்பது என சிறப்பாக நடித்துள்ளார்.
படம் கொலை, சஸ்பென்ஸ், த்ரில்லர் என்று சென்றாலும் படம் முழுவதும் கருணாகரன் தனக்கு கிடைத்த கேப்பில் கலாட்டா செய்கின்றார், அதிலும் இறந்த பிணத்துடன் ஒரு அறைக்குள் அவர் சிக்கிக்கொண்டு செய்யும் கலாட்டா சிரிப்பிற்கு முழு கேரண்டி.
ஆனால், போதை கொலை பழி ஹீரோ மீது, அதை தொடர்ந்து ஒரு கும்பல் சேஸிங் என ’ப்ரியாணி’-யை இயக்குனர் பத்ரி சைடிஷாக எடுத்துக்கொண்டார் போல, கிளைமேக்ஸ் டுவிஸ்ட் நன்றாக இருக்கின்றது, அந்த சூட்டோடு படத்தை முடிப்பார்கள் என்று பார்த்தால், அதை தொடர்ந்து சேஸிங், சண்டை என கொஞ்சம் படம் நீள்கின்றது, இருந்தாலும் அலுப்புத்தட்டவில்லை. அதே நேரத்தில் ஒரு பெண் இறந்த அடுத்தக்கனம் எதையும் யோசிக்காமல் அதர்வா பாலக்காடு போவது, அங்கு தடயங்களை வைத்து வில்லனை கண்டுப்பிடிப்பது என லாஜிக் அத்துமீறல் தான்.
கோபி அமர்னாத்தின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்புல்லாக இருக்கின்றது, அதிலும் படத்தில் ஆரம்பக்காட்சி அதர்வா வீட்டில் அந்த பெண் வந்தபிறகு நடக்கும் காட்சியெல்லாம் நமக்கே ஒரு வித போதை தான். படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் தான், பாடல்கள் கோட்டை விட்டாலும், பின்னணியில் மிரட்டியிருக்கின்றார்.

க்ளாப்ஸ்

கடைசி வரை படத்தை கலகலப்பாக எடுத்து சென்றவிதம்.
யுவனின் பின்னணி இசை, கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.

பல்ப்ஸ்

லாஜிக் மீறல்கள் பல இடங்களில், படம் நீண்ட நாள் கிடப்பில் இருந்ததால் கொஞ்சம் பழைய படம் போல் தோன்றுகின்றது. அதர்வா காதல் காட்சிகள் பெரிதும் ஈர்க்கவில்லை.
மொத்தத்தில் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்றால், கண்டிப்பாக ஜாலியான ஒரு ரைடாக இந்த செம்ம போத ஆகாத இருக்கும்.  நன்றி CineUlagam