.
நேற்றையமாலைப்பொழுது என்றும் இல்லாதவாறு ரம்மியமாக இருந்தது. நீண்ட இடைவெளிகளுப்பின்பு இலக்கிய வாதிகள் எழுத்தாளர்கள் என பலர் ஒன்றுகூடி இருந்ததுதான் அதன் சிறப்பு.
22 வருடங்களாக தமிழையும் இலக்கியத்தையும் இரண்டு கண்களாகக் கொண்டு இயங்கிக் கொண்டு வருகின்ற அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆதரவில் ஐந்து நூல்களின் அறிமுக விழா தூங்காபி கொமினிற்றி மண்டபத்தில் இடம்பெற்றது. மெல்பேணில் இருந்து எழுத்துக்களையும் இலக்கியத்தையும் முன்னெடுத்துக் கொண்டும் எழுத்தாளர்களை ஊக்குவித்து கொண்டிருக்கும் எழுத்தாளர் திரு முருகபூபதி அவர்களின் முயச்சியால் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியை சட்டத்தரணி கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் மிக அழகாக தலைமை தாங்கியிருந்தார். நிகழ்ச்சி திருமதி கனகா கணேஷ் அவர்களுடைய வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது. ஒரு இலக்கிய விழாவிற்கு அல்லது ஒரு நூல் அறிமுக விழாவிற்கு இத்தனை பெரிய கூட்டம் வருகை தந்து இருந்தது என்பது ஒரு மிகப்பெரிய விடயம் என்று கூறலாம். இலக்கியம் பேசுகின்றபோது அல்லது இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஒன்று கூடுவது என்பது குறைவாகவே இருந்து கொண்டு இருக்கின்ற நிலையிலே இந்தவிழா சிறப்பாக இருந்தது.
தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வரலாற்று சுவடுகள் ஒளிப்படத் தொகுப்பு திரையில் காண்பிக்கப்பட்டது. 22 வருடங்களாக இலக்கியத்திற்கும் எழுத்தாளர்களுக்கும் எப்படி எல்லாம் இந்த சமூகம் சேவை செய்து கொண்டிருக்கின்றது என்பதை மிக அழகாகவும் பாரதியாருடைய பாடல்கள் பின்னணியில் ஒலிக்கவும் கொடுத்திருந்தார்கள்.
அதைத்தொடர்ந்து கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியன் தலைமைஉரையை மிகச் சுருக்கமாகவும் ஆழமாகவும் ஆற்றியிருந்தார். அவருடைய உரை அவருடைய இலக்கிய அறிவையும் ஆளுமையும் வெளிக்காட்டியது. முதலிலேயே ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சன்முகம் சபேசன் அவர்களின் காற்றில் தவழ்ந்தத சிந்தனைகள் என்ற கட்டுரை நூல் பற்றி எழுத்தாளர் விக்னேஸ்வரனின் உரை அமைந்தது. மிக அழகாக தொட்டு சென்றார். காற்றில் தவழ்ந்த இந்த உரை பல பத்திரிகைகளிலே வந்திருக்கின்றது, இப்போது சிட்னியில் வெளியிடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.