.
நம்பிக்கையோடு வாழ்கிறவர்கள்
நம்பிக்கையின்மையை விதைக்கிறார்கள்
நிலையான வாழ்வு பெற்றவர்கள்
நிலையாமையை உபதேசிக்கிறார்கள்
வசதி படைத்தவர்கள்
வசதியின்மையைப் பேசி
வாழப்பழகிக் கொள்ள வேண்டுமென்று
வார்த்தைகளால் நோகடிக்கிறார்கள்
புத்திசாலிகளென்று போற்றப்படுபவரோ
இதெல்லாம் இயல்பென்ற மடமையை
வியாக்கியானம் செய்து தங்கள்
வரட்சியை வாரி வழங்குகிறார்கள்
வேஷமான வாழ்க்கையே
விவேகமாகி இருக்கிறது
வானத்துக் கீழிருக்கும் எதுவொன்றிலும்
தனக்குப் போட்டியாய் இன்னொருவர்
தப்பியும் வந்துவிடலாகாது என்பதில்
தனிக்கவனம் செலுத்துகிறார்கள்
இத்தனைக்கும் நடுவே தட்டுத்தடுமாறி
எழுந்து வந்தவர்களும்
இருப்புக்கு இதுவே வழியென்று
இப்படியே ஆகிப்போகிறார்கள்
பாறை இடுக்குக்கு இடையேயும்
புஷ்பம் பூப்பது நம்பிக்கையாய்
ஜோதி ஸ்தம்பமாய் நெஞ்சில்
சுடர் ஏற்றிக் கொள்கிறது
இதுவும் கடந்து போகுமென்ற
நம்பிக்கை ஒன்றே நீர்ப்பாய்ச்சி
வாழ்க்கையின் வெற்றிகளை
வளம் பெற மலரச் செய்கிறது
எல்லோரும் சேர்ந்து எல்லோரின் கைபற்றி
ஓரடியாவது முன்வைப்பதே
எல்லோருக்குமான மகிழ்ச்சியை
முன்வைத்து நிரந்தரப்படுத்துகிறது
nantri Jeevee