வடிவழகைப் பாடாத கவிஞரில்லையே
நானுமுன்னைப் பாடவெண்ணும் ஆசையினாலே - இங்கு
பாடுகிறேன் பால்நிலவே நின்றுகேட்டிடு !
உண்ணமறுக்கும் குழந்தைக் கெல்லாம் உன்னைக்காட்டியே - இங்கு
உணவையூட்டி உளம்மகிழ்வார் உலகில்பலருமே
விண்ணில்நீயும் ஓடியோடி விந்தை காட்டுவாய் - அதை
வியந்துவியந்து பிள்ளைபார்த்து விரும்பி மகிழ்ந்திடும் !
பூரணையாய் வந்துநீயும் பொலிந்து விளங்குவாய் - அதை
பூரிப்போடு பலரும்பார்த்து உளம் மகிழுவார்
காதலர்க்கு களிப்பையூட்ட களத்தில் இறங்குவாய் - அதை
கவிதையிலே பலகவிஞர் கண்டு வாழ்த்துவார் !
உன்வரவை ஆவலோடு உலகம் நோக்கிடும் - இங்கு
உன்வரவால் பலரும்வாழ்வில் உளம் மகிழுவார்
மின்மினிகள் வானில்சூழ விரைந்து ஓடுவாய் - நாளும்
உன்னொளியால் உலகைநாளும் உவகை யூட்டுவாய் !
இறைவனது தலையின் மீது இருக்கிறாயென - இங்கு
இந்துமதம் சொல்லியுன்னை உயர்த்தி நிற்குது
குறையுடைய நிலவேயுன்னை நிறைவு படுத்தவே - நாளும்
இறைவன் உனனை தன்னிடத்து ஏற்றுக்கொண்டனன் !