மரண அறிவித்தல்

It is with great sadness that we inform you of the passing away of


Mrs Anusutham Kathirgamalingam
[former Teacher at Saiva Mangaiyar  Kazhakam ,Wellawatte]

wife of
Late S.Kathirgamlingam Attorney at Law , Srilanka

Mother of
Mrs Mathi Nathan
Mrs Nanthini Jeyaratnam
Mrs Premini Sritharan
Mr Prabhaharan
Mr Immaharan

Viewing followed by religious rites and cremation
9.00 am – 12 noon
On Sunday 28 July 2013

at the
Magnolia Chapel
Macquarie Park Cemetery,
Cnr Delhi Rd and Plassey Rd, North Ryde
            Contact: (02) 8721 6743

மரண அறிவித்தல்

.

ஸ்ரீமதி முத்துப்பிள்ளை சின்னத்தம்பி 

இன்றே ஆடிப் பிறப்பாகும் -புலவர் சா இராமாநுசம்

.

இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி எழுதுதல் மிகவும் சிறப்பாகும்



ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
    ஆன்றோர் பழமொழி என்மனதை
நாடி  வந்திட இக்கவிதை-ஐயா
    நவின்றேன் இங்கே காணுமிதை
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
   தேவை அளவே நீர்சேர்த்தே
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
   படையல் இட்டுத் தொழுவாரே


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
     எழுதுதல் மிகவும் சிறப்பாகும்
ஒன்றே சொல்வேன் உழுவாரே-இவ்
     உலகம் ஏத்தி தொழுவாராய்
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
     நன்மை விளையா அதுவரையில்
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
     அகத்தில் அதனைக் கொள்ளுவரே

ஞாயிற்றுக்கிழமை நடந்த கலை ஒலி மாலை 2013.


சென்ற ஞாயிற்றுக்கிழமை 14.07.2013 அன்று அவுஸ்ரேலிய  தமிழ்  ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடாத்திய கலை ஒலி  மாலை 2013. அரங்கம் நிறைந்த நிகழ்வாக இடம் பெற்றது. 5 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவித்திருந்த நிகழ்வு 5,30 மணிக்கு ஆரம்பமானது. அதற்கான காரணம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம் பெற்றுக்கொண்டிருந்த விளையாட்டு காரணமாக ஏற்பட்ட வாகன நெரிசல் என்பது எல்லோரும் அறிந்தது. அதற்காக நிகழ்ச்சி அறிவிப்பாளர் சபையோரிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.


குத்து விளக்கு அவுஸ்ரேலிய  தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனதின் அனுசரணை யாளர்களால் ஏற்றிவைக்கப்பட்டது . அவுஸ்ரேலிய தேசிய கீதத்தை அபிசாயினி பத்மஸ்ரீயும்  தமிழ் வாழ்த்தினை கேசிகா அமிர்தலிங்கமும் மிக அழகாக பாடினார்கள். அதனைத் தொடர்ந்து அவுஸ்ரேலிய  தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கீதத்திற்கு நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் மாணவிகள் நடனம் ஒன்றை வழங்கினார்கள் .தொடர்ந்து போரினால் இறந்த மக்களுக்காக ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிட்னி துர்க்கை அம்மன் கோயில் நடாத்திய இராப்போசன விருந்து 20-07-2013

.



படப்பிடிப்பு ஞானம்

சிட்னி துர்கை அம்மன் ஆலய இராப்போசன விருந்து கடந்த சனிக்கிழமை இரவு 20.07.2013 அன்று இடம் பெற்றது. நிகழ்ச்சியை திருமதி காந்திமதி  தினகரன் தொகுத்து வழங்கினார். ஆலய கட்டிட நிதிக்காக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி மண்டபம் நிறைந்த மக்களுடன் காணப்பட்டது.

திரு திருமதி சுரேந்திரன் அவர்கள் மங்கள விளக்கேற்ற, சிட்னி துர்கை அம்மன் ஆலய  தலைவர் திரு மகேந்திரன்  ஆலயகட்டிடத்தின்  நிலைபற்றி எடுத்துரைத்தார் . தொடர்ந்து செப்டெம்பர் மாதம் 6ம் 7ம் 8ம் திகதிகளில் மூன்று நாட்கள் நடைபெற இருக்கும்  உலகத் தமிழ் இலக்கிய மகாநாடு பற்றி திரு அருள் அஞ்சலோவும் பண்டைய இலக்கியம் பற்றி திரு அன்பு ஜெயாவும்  கருத்துக்கள் வழங்கினார்கள்.

தொடர்ந்து சிட்னி துர்கை அம்மன் ஆலயத்தில் தொண்டாற்றும் திரு கே ரி லிங்கம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார் . தொடர்ந்து காதுக்கினிய பாடல் நிகழ்வும் திரு சொக்கனின் நெறியாள்கையில் நாடகமும் இடம்பெற்றது .

காலமானார் கவிஞர் வாலி

 

18/07/2013  திரையுலகின் சகாப்தமான கவிஞர் வாலி தனது உடல்நல குறைவால் தனது 82 ஆவது வயதில் காலமானார். நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

35 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் ஆரம்பித்த கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் எதுகை மோனையில் பாடல்கள் எழுதுவதில் இவரைவிட சிறந்த கவிஞர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி

உலகச் செய்திகள்


கறுப்பின இளைஞனின் மரணத்திற்கு கிடைத்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொதித்தெழுந்த மக்கள்

இந்தியாவின் கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி போராட்டம்!

பீகாரில் பாடசாலையொன்றில் 11 குழந்தைகள் பலி

சவூதியில் உள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கென புதிய விதி முறைகள் அறிமுகம்

மெட்ராஸ் கஃபே படத்தை தடை செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம்

இன்று  (18/07/2013) 95 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் மண்டேலா

பங்களாதேஷில் இஸ்லாமிய கட்சியின் சிரேஷ்ட தலைவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு
======================================================================


கறுப்பின இளைஞனின் மரணத்திற்கு கிடைத்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொதித்தெழுந்த மக்கள்

15/07/2013     அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் குற்றச்செயல்களைக் கண்காணிக்கும் சமூகப் பணியாளர் ஒருவர், கறுப்பின இளைஞர் ஒருவரை கொலைசெய்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஜோர்ஜ் சிம்மர்மேன் என்ற குறித்த பணியாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  ட்ரேவோன் மார்ட்டின் என்ற 17 வயதான இளைஞன் உயிரிழந்தார்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. அக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பை இச் சம்பவம் ஏற்படுத்தியிருந்தது.






ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை - செ .பாஸ்கரன்

.
மனதை விட்டகலாத  அந்த நாட்கள் . ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை  என்ற எண்ணங்கள் மனதில் குதூகலத்தைஉருவாக்கிவிட கூழும்   கொழுக்கட்டையும்  நாவில் நீர் சுரக்க வைக்கும் . அதற்கும் மேலாக  நாளை பாடசாலைக்கு  விடுதலை என்கின்ற எண்ணம் காற்றில் மனம் சிட்டாய் பறந்த அந்த நினைவுகள் வந்து போகின்றது . 17,07. 2013 அன்று இங்கு யாருக்குமே தெரியாமல் வந்து போய் விட்டது .நவாலியூர்  சோமசுந்தர புலவரின் பாடல் வரிகள் மனதை வருடி செல்கிறது.



ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு

வாலியின் 82 நினைவலைகள்

.


1. பாடல் எழுதுவதற்கு சிலர் மூட் வேணும் என்பார்கள். வாலிக்கு அப்படியில்லை, எந்த சூழலிலும் எழுதுவார். பாடல் வ‌ரி எழுத வரலைன்னாதான் மூட் ச‌ரியில்லைன்னு வேடிக்கையாகச் சொல்வார்.

2. புதிய இசையமைப்பாளர் என்றால், நாலஞ்சு படம் பண்ணுங்க, அப்புறம் பார்த்துட்டு உங்க இசையில எழுதறேன் என்று திருப்பி அனுப்பி விடுவார். ஜென்டில்மேனுக்காக ரஹ்மானிடமும் அதேதான் சொன்னார். நான் சேகரோட மகன் என்று ரஹ்மான் சொன்னதும் ஆச்ச‌ரியப்பட்டு பாடல் எழுத சம்மதித்தார். அந்தப் பாடல்தான் ஜென்டில்மேனில் வரும் சிக்கு புக்கு ரயிலே.

3. இளம் கவிஞர்களின் பாடல் வ‌ரிகள் சிறப்பாக இருந்தால் பாராட்ட தயங்க மாட்டார். ந.முத்துக்குமார் சிவா மனசுல சக்தி படத்தில் எழுதிய, ஒரு கல் ஒரு கண்ணாடி பாடலை கேட்டு, எம்‌ஜிஆர் இருந்திருந்தால் இந்த பல்லவிக்கே ஒரு வீடு ப‌ரிசளித்திருப்பார் என பாராட்டியிருக்கிறார்.

4. வாலி எழுதிய சில பாடல்கள் பயங்கர எதிர்ப்பை சந்தித்தன. முக்கியமாக சகலகலாவல்லவனில் வரும் நேத்து ராத்தி‌ரி யம்மா, இந்துவில் வரும் சக்கரவள்ளி கிழங்கே சமைஞ்சது எப்படி. மிகப்பpய வார்த்தை தாக்குதல்களை சமைஞ்சது பாடலுக்காக வாலி எதிர்கொண்டார்.

5. வாலியும், நாகேஷும் வாடா போடா நண்பர்கள். வாய்ப்பு தேடிய காலத்தில் தி.நகர் காபி ஹவுஸில் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். வாலிக்கு பேப்பர் வாங்கித் தந்து, எதையாவது எழுது என ஊக்கப்படுத்தியவர் நாகேஷ்.

6. இளையராஜா இசையில் வாலி முதலில் எழுதிய பாடல், பத்ரகாளி படத்தில் இடம்பெற்ற, வாங்கோண்ணா...

7. திருச்சி ஆல் இந்தியா ரேடியாவில் வாலி வேலை பார்த்த போது அவர் எழுதிய நாடகங்களுக்கு மனோரமா நடித்திருக்கிறார்.

8. வாலியின் தந்தை ஸ்ரீனிவாச அய்யங்கார், தாய் பொன்னம்மாள். வாலிக்கு ஒரு மூத்த சகோதரர், மூன்று மூத்த சகோத‌ரிகள். 

வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 2. அமிழ்தம்



ஞானா -    (உரத்து) அமிழ்தம் அநியாயமாய் போகுது. . .. அமிழ்தம்           அநியாயமாய் போகுது வந்து பாருங்கோம்மா . . ..

சுந்தரி -    என்ன பிள்ளை ஞானா கத்திக் கொண்டிருக்கிறாய் நான் ஏங்கியெல்லே போனன். எங்கை தடக்கிக் கிடக்கி விழுந்திட்டாயோ எண்டு.

ஞானா -    இல்லை அம்மா. உந்த தண்ணி பைப்பை பாருங்கோ. . இப்ப இரண்டு கிழமையாய் தண்ணி ஓடிக்கொண்டிருக்குது. கவனிப்பார் ஒருத்தரும் இல்லை.

சுந்தரி -    உன்ரை அப்பருக்கு நான் எத்தனையோ முறை சொல்லிப்போட்டன் ஒரு washer  வாங்கியந்து பூட்டிவிடுங்கோ எண்டால் மனிசன் அசையுதில்லை. அது சரி நீ ஏன் அமிழ்தம், அமிழ்தம் எண்டு கத்தினனீ.


ஞானா -    தண்ணீர் அமிழ்தம்தானே அம்மா. . .உலகத்திலை உயிர்கள் சாகாமல் இருக்கச் செய்யிறது தண்ணீர் தானே அம்மா. அதுதானே திருவள்ளுவர் தண்ணீரை அமிழ்தம். எண்டவர்;.

சுந்தரி    -    அட ட டா. . .நீ அங்கை போட்டியோ. உன்ரை அப்பருக்குச்  சொல்லு இந்நச்      சாவா மருந்தை சள சள       எண்டு ஓட விடவேண்டாம் எண்டு

கலை, இலக்கிய, சமூக நேசன் புலம்பெயர்ந்த பூபதிக்கு 62 வயது - அருண்.விஜயராணி



இதமான   கடற்காற்று….  ஆர்ப்பரிக்கும்   கடல்… அந்தக்காற்றை   சுவாசித்தவாறும் கடலோசையை   கேட்டவாறும்   மாலையில்   சூரிய   அஸ்த்தமனத்தின் அற்புதக்காட்சியை   ரசித்தவாறும்  தனது   தாத்தா,  பாட்டி, தாய்,  தந்தை, அக்கா, தங்கை,   தம்பிமாருடன் மனிதநேயத்துடனும்   எண்ணற்ற   கனவுகளுடனும் வாழ்ந்து வளர்ந்த   இளைஞன்,   அந்தக்கடற்கரையோர   நகரத்தில் தமிழ் சார்ந்த பல பணிகளில் ஊர்மக்களுடன்   இணைந்திருந்தான்.
தனது   ஆரம்பக்கல்விக்கு   துணையாக   நின்ற பாடசாலையிலும் அதற்கு வித்திட்ட வெகுஜன அமைப்பான இந்து இளைஞர் மன்றத்திலும் இயல், இசை, நாடகத்தின் வளர்ச்சிக்கு பக்கபலமாக   நின்றான்.   பாடசாலை   பழைய   மாணவர் மன்றத்தை உருவாக்குவதிலும்  அதன்   ஊடாக மாணவரிடையே   ஊக்குவிப்பு   போட்டிகளை நடத்துவதிலும் உறுப்பினர்களுடன்  இணைந்திருந்தான்.
இவ்வாறு   இலங்கையின்   மேற்கே   தமிழ் அலைகள் ஆர்ப்பரிக்க, அதில் தன்னாற்றலால் நீச்சலிட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆச்சரியப்படத்தக்கது அல்ல. உள்ளார்ந்த படைப்பிலக்கவாதி எங்கிருந்தாலும் அப்படித்தானிருப்பான்.
அவனுக்கு   எழுத்தின்மீதும்  வாசிப்பின்  மீதும்   பற்றுதல்  அதிகம். பெற்றவர்களின் கனவு வேறுவிதமாக இருக்க அவனோ   தனது   கனவை வேறுவிதமாக வளர்த்து நனவாக்கிக்கொள்ள முயன்றான். அவனது உழைப்பு வீண்போகவில்லை. தான் நேசித்த கடல் மாந்தர்கள்   பற்றிய கதைகளையே முதலில் எழுதி முதல் தொகுப்பிற்கு   தேசிய சாகித்திய விருதையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டான்.

இலங்கைச் செய்திகள்


எனக்களிக்கப்பட்டுள்ள பொறுப்பை தமிழர்களுக்காக முழு மூச்சுடன் நேர்மையாக செய்து முடிப்பேன் : சி.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவானமையால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் - முபாறக்

வீடமைப்பு கடன் வசதி : அம்பாறை கரையோர தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி

'பறக்கும் மீன்கள்" திரைப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஷிராணி தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது 25ஆம் திகதி விசாரணை

யாழ் தேவி செப்டெம்பர் முதல் கிளிநொச்சி வரை பயணம்

=====================================================================
எனக்களிக்கப்பட்டுள்ள பொறுப்பை தமிழர்களுக்காக முழு மூச்சுடன் நேர்மையாக செய்து முடிப்பேன் : சி.வி.விக்னேஸ்வரன்


15/07/2013     காதலித்த பெண்ணை கைவிட்டு பெற்றோர்கள் பார்த்த பெண்ணை மணப்பது போல் ஒரு ஏக்கம் நிறைந்த உணர்வு வட மாகாண சபை முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டவுடன் நான் உணர்கிறேன். எவ்வாறாயினும் எனக்களிக்கப்பட்டுள்ள பொறுப்பை தமிழர்களுக்காக முழு மூச்சுடன் நேர்மையாக செய்து முடிப்பேன் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை முதன்மை வேட்பாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
 

மூதறிஞர் இலக்ஷ்மண ஐயரின் ஆக்கங்களின் தொகுப்பு: அன்பான வேண்டுகோள்.


மூதறிஞர்  அமரர் கி. இலக்ஷ்மண ஐயரின்  ஆக்கங்களை  தொகுத்து  வெளியிடும்  முயற்சியில்   அன்னாரின்  குடும்பத்தினர்  ஈடுபட்டுள்ளனர். அவரால்  எழுதப்பட்ட  கட்டுரைகள்  மற்றும்  விமர்சனங்களின்  பதிவுகள்  வெளியான  பத்திரிகை,  இலக்கிய   இதழ்கள்,  சிறப்பு  மலர்கள்  தம்வசம்  வைத்திருக்கும்  அன்பர்கள்,  அவற்றை  குறிப்பிட்ட  தொகுப்பு  நூலுக்கு  தந்துதவுமாறு   கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.   தொகுப்பு  பூர்த்தியானதும்    மீண்டும்   உரியவர்களிடம்  அவை   சேர்ப்பிக்கப்படும்.
அனுப்பவேண்டிய  முகவரி:


Mrs. Mangalam Vaasan
23, Kingsley Crescent,
Mont Albert
Victoria – 3127

இயல்புகளே மனிதர்களின் அடிப்படை அழகு -முருகபூபதி

இயல்புகளே  மனிதர்களின்  அடிப்படை  அழகு
மூத்த  பத்திரிகையாளர்  அமரர் டேவிட் ராஜூ நினைவுகள்



 கொழும்பு பொரளையிலிருக்கும் கனத்தை மயானத்துக்கு இதுவரையில் இரண்டு தடவைகள்தான்  சென்றிருக்கின்றேன். முதல் தடவை  1982  இறுதியில் பேராசிரியர் கைலாசபதியின் இறுதிச்சடங்கு.
 இரண்டாவது  தடவை சுமார் 28 வருடங்களின் பின்னர் 2010 இறுதியில் -- நாம் நடத்திய சர்வதேச மாநாட்டுப்பணிகளுக்காக இலங்கை  வந்தபோது  ஊடகவியலாளர் டேவிட் ராஜூவின்  இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளச்சென்று  கனத்தை மயானத்தினுள் பிரவேசித்தேன்.
 கைலாசபதி இந்துவாக தகனமானார்.  டேவிட் ராஜூ கத்தோலிக்கராக அடக்கமானார்.
அந்தப்புதைகுழிக்கு  முன்பாக  பலரும் திரண்டிருக்க பாதிரியார் தமது உரையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.  அனைவரும் பொங்கிய சோகத்தை அடக்கியவாறு அமைதியாக நிற்கிறார்கள். டேவிட் ராஜூவின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்   கண்ணீர்  சொரிய அந்த நிகழ்வில் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்திக்கொண்டிருந்தார்கள்.
 நான் சற்றுத்தள்ளி  தலைகுனிந்தவாறு  சில மனித எலும்புத்துண்டுகளையும்  எலும்பு எச்சங்களையும்  பார்த்துக்கொண்டு நிற்கிறேன்.
 புதைகுழி  தோண்டப்பட்டபோதோ அல்லது அதற்கு முன்னமிருந்தோ அந்த எலும்புத்துண்டங்கள் நிலத்திலிருந்து  வெளிப்பட்டிருக்கலாம். ஒரு பரம ஏழையினதோ பெரும் செல்வந்தரினதோ  படிப்பறிவில்லாத  பாமரனினதோ எவருக்கும் பயனற்ற ஒரு போக்கிரியினதோ அல்லது ஒரு அறிஞனுடையதாகவோ  அந்த எலும்பு எச்சங்கள் இருக்கலாம்.
  ஆடி அடங்கும்  வாழ்க்கையடா… ஆறடி  நிலமே  சொந்தமடா… என்று ஒரு பாடல் நீர்க்குமிழி படத்தில் வரும்.  டேவிட் ராஜூவின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபோது எனக்கு அந்தப்பாடல்தான் நினைவுக்கு  வந்து ‘சுடலை ஞானம்’ உதித்தது.


போராட்டக் கதிரையா அன்றி கதிரைப் போராட்டமா?

.
வடக்கு மாகாண சபைத் தேர்தலும் கூட்டமைப்பின் ‘முதல்வர்’ தெரிவும்!

-குந்தவிதேவி-

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நீண்ட காலமாக பல தரப்பினராலும் மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒன்றாகும்.  இந்த ஆவலுக்கான காரணங்கள் பலவாகும். ஏனைய ஏழு மாகாண சபைகளதும் அதிகாரம் ஆளுங்கட்சியிடமே உள்ளது. என்னதான் தில்லுமுல்லுப் பண்ணினாலும் வடக்கின் அதிகாரம் ஆளுங்கட்சிக்கு எட்டப் போவதில்லை என்பது முடிந்த முடிவாகும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போதே இதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கின. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உதவியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு நிச்சயமான போதிலும் அது தவற விடப்பட்டது. ஆனால் வடக்கில் கூட்டமைப்பு தனித்தே அதிகாரத்தைக் கைப்பற்றும் என்பதால் தான்  எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

செப்டெம்பரில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தேர்தலின் முடிவினைப் பலரும் பலவேறு காரணங்களுக்காக எதிர்பார்க்கின்றனர். தென்னிலங்கை மட்டுமின்றி, புலம் பெயர் தமிழர்களும் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தத்தமது சொந்தக் காரணங்களுக்காக இந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். குறிப்பாக வெளிநாட்டுத் தூதரகங்கள் இப்போதே நாடிபிடித்துப் பார்க்கும் பணியை ஆரம்பித்துவிட்டன.

தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுவிழா

.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுவிழா 27 ஆம் 28 ஆம் திகதிகளில் இருநாள் பெருவிழாக்கள்!(Photos)

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ். மறை மாவட்டமும் இணைந்து முன்னெடுக்கும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுவிழா நிகழ்வுகளில் எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் இருநாள் பெருவிழாக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தமிழுக்காய் வாழ்ந்த தமிழ்த்தூது தனிநாயகம்   பெருமகனை நனைவுகூர்ந்து போற்றும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் நூற்றாண்டு விழாக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.
எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற திறந்த வெளியரங்கில் தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாக் குழுச் செயலர் அருட்கலாநிதி அ.பி.யெயசேகரம் தலைமையில் இடம்பெறும்
நிகழ்வுகளில் அடிகளார் குறித்த ஆடல் அளிக்கை, கவியரங்கம, ‘தமிழ் நாயகம்’ – நூற்றாண்டு மலர் வெளியீடு, அடிகளாரின் ‘தமிழ்த்தூது’ நூலின் புத்தாக்கப் பதிப்பு வெளியீடு என்பன இடம்பெறவுள்ளன.
28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் ஆய்வரங்கம் இடம்பெறும். இந்நிகழ்வின் போது நூற்றாண்டு விழாவையொட்டி வடபுல மாணவரிடையே ஐந்து மாவட்டங்களிலும் ஏககாலத்தில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம்பெறும்.
28 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு யாழ். திருமறைக் கலாமன்றத் திறந்த வெளியரங்கில் நூற்றாண்டு விழாக் குழுத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறும். இதில் பட்டிமண்டபம், திருமறைக் கலாமன்றம் வழங்கும் ‘அற்றைத் திங்கள்’ நாடகம் என்பன சிறப்பு நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளன.

விபுலானந்த அடிகளார்

நன்றி:தினக்குரல் 

தமிழ் சினிமா




அன்னக்கொடி

இயக்குனர் பாரதிராஜா மண்வாசனை நிறைந்த கதையம்சத்துடன் அன்னக்கொடி திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற பெயரில் படத்தை தொடங்கிய பாரதிராஜா என்ன காரணத்தினாலோ அன்னக்கொடி என்று பெயர் மாற்றிவிட்டார்.
செருப்புத் தைக்கும் தொழிலாளி மகன் கொடிவீரனுக்கும் (லட்சுமணன்) சாராயம் காய்ச்சி விற்பவளின் மகளான அன்னக்கொடிக்கும் (கார்த்திகா) ஆடும் மேய்க்கப் போன இடத்தில் காதல் மலர்கிறது.
அதே ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து ஊரையே வளைத்து போடுவது மட்டுமல்லாமல் அவர்களிடம் பணம் வாங்கியவரின் மனைவியை அபகரிக்கும் கொடூர மனம் படைத்தவரின் மகனாக வருகிறார் சடையன் (மனோஜ்).
அன்னக்கொடியின் தாயார் சடையனிடம் வட்டிக்கு பணம் வாங்குகிறார். இதனை வாங்குவதற்காக அன்னக்கொடியின் வீட்டிற்கு சென்ற சடையன் அவளது அழகில் மயங்கி அவளை வாழ்க்கை துணையாக்க நினைக்கிறான்.
இதற்கிடையில் கொடிவீரன் தன் தந்தையுடன் அன்னக்கொடி வீட்டிற்கு அவளை பெண் கேட்டு செல்கிறான்.
ஒரு தாழ்ந்த சாதிக்காரப் பையன் தன் வீட்டிற்கு பெண் கேட்டு வருவதற்கு என்ன தைரியம் என்று அவர்கள் மீது சாணியை கரைத்து ஊற்றி அவமானப்படுத்திவிடுகிறாள் அன்னக்கொடியின் தாயார்.
இதனால் கோபம் கொண்ட கொடிவீரன் அன்னக்கொடியின் தாயாரை எட்டி உதைக்கிறான்.
இதனை அறிந்த சடையன் இச்சந்தர்ப்பத்தினை நயவஞ்சமாக பயன்படுத்திக்கொண்டு தனக்கு அடிமையான பொலிசின் உதவியுடன் கொடிவீரன் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரையும் சிறையில் தள்ளுகிறான்.
சிறையில் தள்ளப்பட்ட கொடிவீரனுக்கு 6 மாதமும் அவரது தந்தைக்கு 2 மாதமும் சிறைத்தண்டனை விதிக்கிறார்கள்.
இதற்கிடையில் அன்னக்கொடியின் தாயார் இறந்துவிடுகிறார். எனவே அவர் வாங்கிய கடனை திருப்பித் தராததால் அன்னக்கொடியை அடைய துடிக்கிறார் சடையன்.
இறுதியில் சிறையிலிருந்து திரும்பும் கொடிவீரன் அன்னக்கொடியை மணப்பானா? அல்லது சடையனுக்கு அன்னக்கொடி உரித்தாவாளா? என்ற விறுவிறுப்புடன் மீதிக்கதை தொடர்கிறது.
இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கும் லட்சுமணன் புதுமுக அறிமுகம். நடிப்பில் கொஞ்சம் தேர்ந்துள்ளார். ஆனால் புதுமுகம் என்பதை அவ்வப்போது தன் முகத்தில் காட்டிக்கொள்கிறார்.
நாயகியாக கார்த்திகா கோ படத்தில் மாடர்னாக நடித்த இவர் இப்படத்தில் அப்படியே கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். கதாபாத்திரத்திற்கு பொறுத்தமாக உள்ளார்.
படத்தின் வில்லனாக வரும் மனோஜ், முதன் முதலான வில்லன் கதாபாத்திரம் என்பதால் கொஞ்சம் வில்லத்தனம் காட்டியிருக்கலாம்.
ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய வழக்கமான இசைவிருந்தை அளிக்கவில்லை போல் தெரிகிறது, பின்னணி இசையும் சுமார் ரகம் தான்.
வழக்கமான தன்னுடைய கிராமத்து விருந்தை மக்களுக்கு அளிக்க முயற்சி செய்துள்ளார் பாரதிராஜா என்று தான் சொல்லவேண்டும்.
நடிப்பு: லட்சுமணன், மனோஜ், கார்த்திகா
இசை: ஜி.வி..பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: சாலை சகாதேவன்
தயாரிப்பு: மனோஜ் கிரியேஷன்ஸ்
இயக்கம்: பாரதிராஜா
நன்றி விடுப்பு 

“ஆஸ்திரேலியா – பல கதைகள்” - சிறுகதைப் போட்டி


வணக்கம்,

தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டும்  “ஆஸ்திரேலியா – பல கதைகள்” என்ற தலைப்பில் தமிழ்ச்சிறுகதைப் போட்டி ஒன்றை  தாய்த்தமிழ்ப் பள்ளி நடத்திக்கொண்டிருக்கிறது. இது ஆஸ்திரேலிய கண்டத்துக்குட்பட்ட ஒரு போட்டியாகும்.

இப்போட்டியானது இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும்.
இளையோர் பிரிவு – 17 வயதிற்குட்பட்டோர்
பெரியோர் பிரிவு – 17 வயதிற்கு மேற்பட்டோர்

போட்டியின் விதிமுறைகள்:
1.  போட்டியில் கலந்துகொள்வோர் ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றை வசிப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.
2.  கதைக்களம் மற்றும் சூழல் ஆஸ்திரேலிய கண்டத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
3.  கதைக்களன்  குடும்பம், காதல், அமானுஷ்யம், அனுபவம், மர்மம், நகைச்சுவை என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உண்மைக் கதையாகவும் இருக்கலாம், புனைக்கதையாகவும் இருக்கலாம்.
4.  கதையின் அளவு  500  வார்த்தைகளுக்குக்  குறையாமலும்  1500   வார்த்தைகளுக்கு  மிகாமலும்  இருக்க வேண்டும்.
5.  ஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பலாம். ஆனால் வெவ்வேறு கதைக்களன்களில் இருக்கவேண்டும்.
6.  போட்டிக்கு வரும் சிறுகதை எந்தவொரு வடிவிலும் வேறெங்கிலும் வெளியாகியிருக்கக் கூடாது.