பனித்திரையில் அவள் முகம் - செ .பாஸ்கரன்

.

இன்று சிட்னியில் பனிப்புகார் நிறைந்த காலை காரோடி செல்லும்போது மனதில் எழுந்த கவிதை ( 03.04.2019)
பனித்திரை மூடிய பட்டு மெத்தை
வீதியெங்கும் விரிந்து கிடக்க
வானமும் பூமியும் தழுவிக் கொண்டன
முகம் பார்க்க முடியாத
புகார் குவியல்கள்
அருகே சென்று
அவள் முகம் பாரென
ஆதவனும் விலகிக் கொண்டான்
வானம் இறங்கி வந்தது
பூமியின் அழகில் மயங்கி நின்றது
வார்த்தைகள் வெளிவராத
மனதின் துடிப்பு
கண்கள் பேசின
கதைகள் ஆயிரம்
மூடிய இதழ்கள்
திறந்து கொண்டன
முளுவதும் நனைந்த
சுகத்தில் திளைத்தன
நாணம் மேலிட
விலகிக் கொண்டன
திரை விலகாத
பனிப்புகார்கள்
பாதையின் பார்வையை
மறைத்து நின்றது
புகார்களை கடந்து
என் மனத்திரையில்
கண்கள் விரிந்து கொள்ள
அவள் சிரித்தாள்
அவள் நினைவுகள்
இனிமையாய் இளமையாய்...

அன்பாலயத்தின் இளம் தென்றல் 2019 ஒரு பார்வை

.

அன்பாலயத்தின் இளம் தென்றல் 2019,  6ம் திகதி சனிக்கிழமை சிட்னி பஹாய் சென்டரில் மாலை 6 மணிக்கு ஆரம்பமானது. தமிழ் வாழ்த்தையும் தேசிய கீதத்தையும் ஈஸ்ட்வுட் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் பாடினார்கள். 

அபராஜிதன் தனது கணீரென்ற குரலில் நிகழ்வை தொகுத்து வழங்கியது  மிக நன்றாக இருந்தது இளைஞர்களுக்கு இப்படியான சந்தர்ப்பங்களை வழங்கிய அன்பாலயத்திற்கு பாராட்டுக்கள்.

தொடர்ந்து இடம்பெற்ற டாக்டர் சிவரதி கேதீஸ்வரனின் மாணவர்களின் கானாமிர்தம் அருமையான சங்கீத இசை நிகழ்வும் வீணை இசையும், வயலின் இசையும் சேர்ந்து சபையோரை மகிழ்வித்தது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற டாக்டர் ஜசோதராபாரதி சிங்கராஜர் அவர்களின் மாணவர்களின் கண்கவர் நடனம் இடம்பெற்றது .

தமிழ் விளையாடுவோம் LETS PLAY TAMIL - 2019


மெல்பேண் பாரதி பள்ளி South Morang வளாகத்தில் கடந்த 31.03.2019 ஞாயிற்றுக்கிழமையன்று காலை பத்து மணி முதல் பிற்பகல் இரண்டு மணிவரை தமிழ் விளையாடுவோம் - LETS PLAY TAMIL என்ற நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பாரதி பள்ளியின் SOUTH MORANG, BERWICK, CLAYTON, DANDENONG, EAST BURWOOD, ஆகிய ஐந்து வளாகங்களில் படிக்கும் தமிழ் மாணவ, மாணவிகள் யாவரும் ஒன்று கூடி மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.  
தமிழ் விளையாடுவோம் என்ற நிகழ்ச்சி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இந்த ஆண்டு மூன்றாவது ஆண்டாக நடைபெற்றுள்ளது. பாரதி பள்ளி வருடத்தில் ஒரு நாளை இந்த நிகழ்சிக்கென ஒதுக்கியிருக்கின்றார்கள். இதன் நோக்கம் மெல்பேண் வாழ் அனைத்து தமிழ் சிறார்கள் யாவரும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து வகுப்புரீதியாக தமிழ் விளையாட்டு நிகழ்ச்சிகளை, ஒருவருடன் ஒருவர் உரையாடி மகிழ்ச்சியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே. இந்த நிகழ்ச்சி பாரதி பள்ளி என்றில்லாமல் அனைத்து மெல்பேண் வாழ் தமிழ் சிறுவர்களுக்காகவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பயணியின் பார்வையில் - அங்கம் -01 எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம் வாழ்க்கை ! "ஊருக்கு உழைத்திடல் யோகம் - நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் - போருக்கு நின்றிடும்போதும் - உளம் பொங்குதல் இல்லாத அமைதி ஞானம்" - மகாகவி பாரதி - முருகபூபதி


இந்த ஆண்டு பிறந்தவேளையில், எனது பிள்ளைகளின் குடும்பத்தினருடன் ஒன்றுகூடல் நடந்தது. இந்நிகழ்வு எமது வருடாந்த சந்திப்புகளில் ஒன்று. பெரியவர்கள் முதல் பேரக்குழந்தைகள் வரையில்  மலர்ந்துள்ள புதிய ஆண்டில் என்ன என்ன செய்யவிருக்கிறோம் என்பது பற்றி பேசிக்கொண்டோம்.
இரண்டாவது மகள், என்னை எப்போதும் செல்லமாக " Pathy "என்று அழைப்பவள். " Pathy இலிருந்து தொடங்குவோம் " என்றாள்.
" பிரான்ஸ் செல்லவிருக்கின்றேன்" எனச்சொன்னதும், எனது மனைவி உட்பட அனைவரும் என்னை ஆச்சரியத்துடன் நோக்கினார்கள். பயணத்தின் காரணத்தை கேட்டார்கள். "பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, இலங்கை எங்கும் செல்லவிருக்கின்றேன்" எனச்சொன்னதும், " என்ன ஜோக்கா? " என்றார்கள்.
 " உண்மைதான் எனது ஆசானுக்கு பிரான்ஸில் நூற்றாண்டு விழா எடுக்கிறார்கள். என்னையும்  அழைத்துள்ளனர்" எனச்சொன்னதும், " ஆசான் என்றால், யார்? எங்களுக்கு புரியும் தமிழில் சொல்லுங்கள்" என்றனர் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் வதியும் பிள்ளைகள். தமிழ் ஆசிரியையாக இருந்த எனது மனைவி சிரிப்பை அடக்குவது தெரிந்தது.  
அவர்களுக்கு கதைசொல்லியாக மாறி, எனக்கு 1954 இல் அரிச்சுவடி சொல்லித்தந்த ஆசான் பண்டிதர் கதிரேசு மயில்வாகனன் அவர்களைப்பற்றிச்சொன்னேன். எனது கதை கேட்டவர்கள், வியப்பு மேலிட ஏக குரலில், " இன்னுமா உங்கள் ஆசிரியர்களை நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்!? நீங்கள் அபூர்வமானவர்தான் " என்றனர்.
எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கம்தான் வாழ்க்கை! எனது பதிவுகளில் இந்த வசனம் தவிர்க்கமுடியாதது. 1954 ஆம் ஆண்டு விஜயதசமி காலத்தில் எங்கள் ஊரில் பண்டிதர் அவர்களின் மடியில் அமர்ந்து தமிழ் எழுதபடிக்க கற்றுக்கொண்டதும், அன்று தொடங்கப்பட்ட விவேகானந்தா வித்தியாலயம் 32 குழந்தைகளுடன் உதயமானதும், சேர்விலக்க பதிவேட்டில் முதல் மாணவனாக எனது பெயர் எழுதப்பட்டதும் எதிர்பாராத நிகழ்வுகள்தான்!

அகவை 90 காணும் கவிஞர் அம்பி அவர்களுக்கு பாராட்டு விழா

.

வழியெனக்குப் பிறந்திடுமா ? மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா








மாடியொடு வீடிருந்தும்  
 மனநிறைவு வருகுதில்லை 
 கோடிபல வந்தாலும் 
 குறைமனதில் நிறைகிறது 
 நாடிவரும் நண்பருமே 
 நலனுரைக்க வகையற்றார் 
 வாடிநின்று வதங்குகிறேன்
 வழியெனக்கு பிறந்திடுமா 
என்செல்வம் தனையெண்ணி 
எல்லோரும் நாடுகிறார்
 என்மனதை பார்ப்பதற்கு
 எவர்மனமும் விரும்பவில்ல  
சுயநலமாய் சிந்தித்து
சுயலாபம் விரும்புகிறார்
சுத்தமுடை  மனம்தேட
நித்தமுமே  அலைகின்றேன் 

 தத்துவங்கள் சொல்லுகிறார்
  சித்தமதில் கொள்ளாமல் 
  அர்த்தமின்றி பழகுகிறார்
 அரிதாரப் பூச்சுடனே 
  எப்பவுமே தம்சுகத்தை
  தப்பாமல் காத்திடுவார்
  பக்கமதில் வரும்வேளை
  பதறிநான் நிற்கின்றேன் 

இலங்கைச் செய்திகள்

.

வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளினால் ஆர்ப்பாட்டம்

நீதியில்லையேல் நிரந்தர சமாதானமில்லை- இலங்கை குறித்து பிரிட்டன்

பிரதமரின் பிரதி பிரதானியாக அமிர்தநாயகம்

சர்வதேச நெருக்கடிகளுக்கான பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவுக்கு விஜயம்

நெளுக்குளத்தில் வாள்வெட்டு தாக்குதல் : படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில்

கனடா செல்ல முயற்சித்த 26 இலங்கையர்களுக்கு நேர்ந்தது என்ன?



வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளினால் ஆர்ப்பாட்டம்

03/04/2019 வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று காலை 9 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.


மறக்கமுடியாத கிரைஸ்ற்சேர்ச் - த. ரவீந்திரன்

.

 

எனக்கு கிரைஸ்ற்சேர்ச்சில் உள்ள University of Canterbury இல் முதுமாணிப் பட்டப்படிப்பு படிக்க 80 களில் வாய்ப்பு கிடைத்தது. அது South Island இல் உள்ள ஒரு அழகிய நகரம். South Island இல்தான் உலகிலேயே அழகான  இயற்கை எழில் கொண்ட இடங்கள் உள்ளன என்பது உலகம் முழுவதும் தெரிந்த விடயம்.
நெடுஞ்சாலையில் காரில் போகும்போது தூரத்தே தெரியும் செம்மறி ஆடுகளின் அழகே தனி. அடிக்கடி பூமி நடுக்கம் வருவதுண்டு. Auckland , Wellington போல் இல்லாமல் அங்கு மக்கள் தொகை மிகக்குறைவு. இங்குள்ள white kiwis மற்ற இனத்தவர்களுடன் சினேகிதமாக பழகுவார்கள்
என்னுடன் படித்தவர்களில் ஒருவர் Mark. எப்போதும் நகைச்சுவையாக பேசுவார். ஒருதடவை என்னிடம் "உமக்குத் தெரியுமா நான் இனவாதி இல்லை ?" என்றார். அவர் பகிடியாக சொல்கிறர் என்று முதலில் புரியவில்லலை. பின்புதான் புரிந்தது அவருடைய surname  என்பது  Blackmore என்று.
இப்படி அமைதியாக இருந்த இடத்தில் அவுஸ்திரேலிய வலது சாரி பயங்கரவாதியின் கொடூரச்செயலால் பல முஸ்லீம் மக்கள் படு கொலை பட்டுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கோணர் அமைதியை விரும்பினாலும் தனி ஒருவனால் மட்டும் சமாதானத்தையும் சகவாழ்வையும் குலைக்கமுடியும் என்பதை ஜீரணிக்க முடியாமல் உள்ளது.

படித்தோம் சொல்கின்றோம்: இயக்குநர் மகேந்திரனின் (1939 - 2019) சரிதம்பேசும் " சினிமாவும் நானும்" ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ.வின் 'மித்ர' பதிப்பித்த நூல் - முருகபூபதி


" நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை. என்றாலும்கூட எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படியிருக்கவேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானதில்லை, என் சமூகத்துக்கானதில்லை என்று அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியிலிருந்து உருவானதொரு கனவு. எனது திரைப்படங்கள் அதிலிருந்துதான் வரவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு அப்படிப்பட்ட கனவா? என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பிப்பார்த்துக்கொள்கிறேன்" என்று சொன்ன இயக்குநர் மகேந்திரன் கடந்த   02 ஆம் திகதி சென்னையில் மறைந்தார்.
" முள்ளும் மலரும் " மகேந்திரன் என அறியப்பட்ட இவரின் இயற்பெயர் ஜோசப் அலெக்ஸாண்டர். தமிழகத்தில்  இளையான்குடி இவரது பூர்வீகஊர். மாணவப்பருவத்திலேயே கையெழுத்து சஞ்சிகை நடத்தியிருக்கும் இவரது  எழுத்தனுபவம்,  பின்னாளில் சென்னையில் பத்திரிகை ஊடகத்துறையினுள் இவரை அழைத்துக்கொண்டது.


உலகச் செய்திகள்


மோடி அரசாங்கத்தின் ஊழல் குறித்த நூலிற்கு தடை

இன்று முதல் அமுலாகிறது புதிய சட்டம் ; ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை !

3 லட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை சீனா அழிக்க முடிவு

அரைநிர்வாண கோலத்தில் விசித்திர எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிதாரி மீது 50 கொலைக் குற்றச்சாட்டு

கின்னஸ் சாதனைப் படைத்த இளவரசர் ஹரி - மேகன் மார்க்லே

சீன கப்பல்களை வெளியேற்றுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி  எச்சரிக்கை

பாகிஸ்தான் சிறைகளிலுள்ள 100 இந்திய மீனவர்கள் விடுவிப்பு



மோடி அரசாங்கத்தின் ஊழல் குறித்த நூலிற்கு தடை

03/04/2019 ரபேல் விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய நூலிற்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளமை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ரபேல் ரக விமானங்களை கொள்வனவு செய்வதில் ஊழல்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி இதில்  பிரதமர் மோடிக்கு நெருங்கிய தொடர்புள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது
இந்நிலையில் நாட்டை உலுக்கும் ரபேல் ஊழல் என்ற பெயரில் எழுத்தாளர் விஜயன் நூலொன்றை எழுதியுள்ளார்.
இந்த நூலை நேற்று வெளியிடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் இந்தியாவின் தேர்தல் ஆணையம் இந்த நூலிற்கு தடைவிதித்துள்ளதாக தெரிவித்த தேர்தல்கால பறக்கும் படையினர் குறிப்பிட்ட நூலை அதனை வெளியிட்ட பாரதி பதிப்பகத்திலிருந்து பறிமுதல் செய்தனர்
இதேவேளை இவ்வாறு நூலை பறிமுதல் செய்வது ஜனநாயகவிரோத சட்டவிரோத நடவடிக்கை என இந்து ராம்; கருத்து வெளியிட்டுள்ளார்.
இது கருத்துசுதந்திரம் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என ராம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா - குப்பத்து ராஜா திரைவிமர்சனம்


ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் குப்பத்து ராஜா படம் இன்று திரைக்கு வந்துள்ளது. நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். படம் எப்படி வாருங்கள் பார்ப்போம்.
கதை:
கதையின் நாயகன் குப்பத்து ராஜா பெயர் ராக்கெட் (ஜீ.வி.பிரகாஷ்). சேட்டு கடையில் வண்டி சீஸ் செய்யும் வேலை செய்கிறார். குப்பத்தில் வாழ்ந்தாலும் குடிகார அப்பா எம்எஸ் பாஸ்கர், நண்பர்கள், காதலி என மகிழ்ச்சியாக இருக்கிறார்.
ஆரம்பம் முதலே அந்த பகுதியில் பெரிய கையான பார்த்திபனுடன் ஜீவிக்கு அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. மேலும் ஊர் கவுன்சிலர், வேறு சில ரௌடிகளுடனும் அவருக்கு பகை வளர்கிறது.
ஒரு சமயத்தில் ஜீவி பிரகாஷின் அப்பா எம்.எஸ்.பாஸ்கரை யாரோ கொலை செய்துவிடுகிறாரக்ள். அதற்காக பார்த்திபன் உட்பட பலர் மீதும் சந்தேகப்படுகிறார் ஜீ.வி பிரகாஷ். அது யாரென கண்டுபிடித்தாரா என்பது தான் மீதி படம்.
படத்தை பற்றிய அலசல்:
ஜீ.வி.பிரகாஷ் குடித்துவிட்டு எந்நேரமும் ரகளை செய்யும் ரோல். வியாசர்பாடி தர லோக்கல் பையனாக திரையில் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
ஜீ.வி.பிரகாஷ் காதலியாக நடித்த பாலக் லால்வாணி தமிழ் தெரியாது என்பதற்காக வாயில் சிவிங்கம் வைத்து நடித்துள்ளார் போல.. படத்தில் ஒரு இடத்தில் கூட லிப்சிங்க் இல்லை. நடிகை பூனம் பஜ்வா படம் முழுவதும் கவர்ச்சியை வாரி இறைத்துள்ளார். தொப்புள் தெரியும் அளவுக்கு சேலை, தோள் தெரியும் அளவுக்கு கவர்சியான ஜாக்கெட் என அவரை கிளாமருக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.
பார்த்திபன், படம் முழுக்க கையில் இரண்டு எம்ஜிஆர் புகைப்படம் போட்ட பெரிய மோதிரத்தோடு தான் சுற்றுகிறார். எம்ஜிஆர் ரசிகர் என காட்டுவதால் என்னமோ அவரை மக்களுக்காக ஓடி ஓடி உழைப்பவர் போல காட்டியுள்ளாரோ இயக்குனர்?
எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு மட்டுமே குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ஈர்த்தது. மகன் எவ்வளவு வயதானாலும் அவன் எப்போதும் தந்தைக்கு குழந்தைதான் என கூறுவதில் இருந்து, மகனுக்கு ஒரு பைக் மட்டும் வாங்கி கொடுத்துவிட்டால் நான் சீமானாக கண்ணை மூடுவேன் என கூறும் தருணம் வரை எம்எஸ் பாஸ்கரின் நடிப்பு மனதில் நிற்கிறது.
முதல் பாதியில் வரும் யோகி பாபாவுவின் கவுண்டர் மற்றும் காமெடி ஒரு சில இடங்களில் சிரிக்கவைக்கிறது.
கிளாப்ஸ்:
- ஒளிப்பதிவு மற்றும் ஆர்ட் ஒர்க். பெரும்பாலான காட்சிகள் லைவ் லொகேஷன்களில் எடுத்தது போல தத்ரூபமாக செட் போட்டு எடுத்துள்ளனர் .
- கதையோடு கச்சிதமாக பொருந்திய பாடல்கள்.
பல்ப்ஸ்:
- திரில்லர் படத்திற்கான கதை என்றாலும் கணிக்கும்படியாக உள்ளது.
-அழுத்தம் இல்லாத கதாபாத்திரங்கள், சுவாரஸ்யத்தை கூட்டாத ட்விஸ்டுகள்.
மொத்தத்தில் குப்பத்து ராஜாவை எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு முறை பார்க்கலாம்.
நன்றி CineUlagam