நீர்கொழும்பில் தமிழ் குடும்பத்தில் கணவனும் மனைவியும் அடுத்தடுத்து மரணம்

.
நீர்கொழும்பில் தமிழ் குடும்பத்தில் கணவனும் மனைவியும் அடுத்தடுத்து மரணம் பிள்ளைகள் வெளிநாடுகளில் சமகால கொரோனோ தொற்றினால் ஒரு வார காலத்தில் கணவனும் மனைவியும் இறந்துள்ள துயரச் சம்பவம் கம்பகா மாவட்டத்தில் நீர்கொழும்பில் நடந்துள்ளது. நடராஜா கருணாலிங்கம் ( வயது 75 ) என்னும் மின்சார தொழில் நுட்பவியலாளர் கடந்த 11 ஆம் திகதி கொரோனோ தொற்றினால் மரணமடைந்ததையடுத்து, அவரது மனைவி ஜெயலக்‌ஷ்மி ( வயது 75 ) நேற்று 17 ஆம் திகதி மரணமடைந்துள்ளார். இவர்களது ஒரு மகன் அவுஸ்திரேலியாவிலும் ஒரு மகள் இங்கிலாந்திலும் வசிக்கின்றனர். இந்த அடுத்தடுத்த மரணங்களினால் இவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் ஆழ்ந்த சோகத்திற்குள்ளாகியுள்ளனர். சமூக இடைவெளிபேணவேண்டிய சூழலில் இறுதி நிகழ்வுகளும் நடைபெறவில்லை.

ஆலாலசுந்தரரை அகத்தினில் இருத்துவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .. ..... அவுஸ்திரேலியா

 

  இறைவன் மீது தோழமை உணர்வுடன் இப்பூவுலகில்


வாழ்ந்தவர் தான் ஆலாலசுந்தரர் என்று அழைக்கப்படும் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரர் பூமியில் பிறந்த வரலாறு தேவ உலகுடன் எம்பெருமான் சிவனுடன் இணைந்த வரலாறாகக் கருதப்படுகிறது. இறைவனுக்குத் தேவ உலகில் அணுகு தொண்டராக இருந்தவர் - மனந்தடுமாறி பேரின்பச் சூழலை மறந்து சிற்றின்பத்துக்குள் மனதினைச் செலு த்திய காரணத்தால் பூவுலகில் பிறவி எடுக்கும் நிலைக்கு ஆளா கிறார். தேவ உலகில் இவரின் சிந்தையினைக் கலைத்த பெண்களும் பூவுலகில் பிறக்கும் நிலை ஏற்படுகிறது. சிற்றின்ப ஆசைகளுக்கு உரிய இடம் பூவுலகமே ஆனதால் சுந்தரரின் சிற்றின்ப உணர்வு களைப் பகிர்வதற்கு - அவருக்குச் சலனத்தை ஏற்படுத்திய பெண்களே துணையாகவும் வந்து அமைகிறார்கள். அவர்களை மணந்து சுந்தரர் தான் வந்தவேலை முடிந்தவுடன் - எங்கு முன்னர் இருந் தாரோ அங்கேயே போகிறார் என்பதுதான் ஆலாலசுந்தரரின் வரலா றாய்ப் படிக்கின்றோம்.

நேற்று இன்று நாளை தமிழ் பெண்கள் - செ .பாஸ்கரன் ( C.Paskaran )

 .

ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் 14.08.2021 அன்று கவிஞர் பாடும்மீன்

ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் ZOOM வழியாக நடத்திய பதினேழு கவிஞர்கள்

பங்குபற்றிய கவியரங்க நிகழ்வில் இடம்பெற்ற என் கவிதை




நேற்று இன்று நாளை பற்றி

நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்

நெஞ்சில் வந்து போவதெல்லாம்

தமிழ் பெண்கள் வாழ்வின் நினைவுகள்


நேற்றைய காலம்

சின்னவளாய் நீ இருந்தபோது

உன் கனவு, உன் உலகம் , உன் வாழ்வென்றிருந்தாய்

எந்தப் பூட்டுக்களும் உன்னை கட்டுப்படுத்தவில்லை

நண்பர்கள் குழாமில் ஆண் பெண் பேதம்

அறவே இல்லை

ஓடினாய், சிரித்தாய், உயரத்தில் ஏறினாய்

சண்டைகள் போட்டு வீதியில் புரண்டாய்

சற்றே வளர்ந்தபின் சிறுமி என்றழைத்தனர்

மெலலச் சிரிஎன்று அம்மா சொன்னாள்

மரத்தில் ஏறுதல் மாபெரும் குற்றம்

அப்பா கம்புடன் அருகே வந்தார்

என்னடி பொடியன் தொட்டு பேசுறான்

ஆச்சிக் கிழவி அனலாய் கொதித்தாள்

விலங்குச் சங்கிலி சுற்றத் தொடங்கினர்


பெரியவள் ஆகி பெண்ணென்றானாய்

நிமிர்ந்து நடப்பததே தவறென்றுரைத்தனர்

தலையை குனிந்து நடக்கச் சொல்லினர்

வெளியில் போனால் காவல் பிசாசுகள்

அண்ணனும் தம்பியும் அருகே வந்தனர்

படித்தது போதும் பள்ளியை நிறுத்தினர்

வீட்டு வேலைகள் உனக்கெனத் தந்தனர்

பெருக்குதல், சமைத்தல், கழுவுதல், துடைத்தல்

அண்ணன் தம்பிக்கு கோப்பி கொடுத்தல்

அனைத்தும் அழகாய் செய்வதாய் சொல்லி

வேலைக்காரியாய் மாற்றியே வைத்தனர்

அஞ்சலிக்குறிப்பு ஆசிரியப் பெருந்தகை மணிமேகலை ( 1939 – 2021 ) பொன்னம்பலம் விடைபெற்றார் முருகபூபதி

எங்கள் நீர்கொழும்பூரில்  நாம் குழந்தைகளாக இருந்தபோது, எமக்கு


பாலர் வகுப்பிலும், அதன் பின்னர் ஆரம்ப  வகுப்புகளிலும் கற்பித்த மணிமேகலை ரீச்சர் லண்டனில் நேற்றைய தினம் ( ஓகஸ்ட் 10 ஆம் திகதி ) மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.

தனது  82 வயதில் மறைந்திருக்கும் எங்கள் மணிமேகலை ரீச்சர்  பசுமையான  எண்ணிறைந்த நினைவுகளை தந்துவிட்டு விடைபெற்றுவிட்டார்.

நீர்கொழும்பில்  இரண்டு ஆண் சகோதரர்களுடனும்  சில பெண் சகோதரிகளுடனும்  எமக்கு  1954 ஆம் ஆண்டிற்குப்பின்னர் அறிமுகமான மணிமேகலை ஆசிரியையின் அக்கா கௌரி ரீச்சர்  எமக்கு ஆங்கில பாடத்திற்கும்  மணிமேகலை ரீச்சர்  தமிழுக்கும்  சமயத்திற்கும்  ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள்.

இவர்களின் பெற்றோர் கார்த்திகேசு -  பாக்கியம் தம்பதியர் எமது குடும்பத்துடனும்  மற்றும் நீர்கொழும்பு  வாழ் சைவத்தமிழ் குடும்பங்களிடத்தும்   உற்ற உறவினர்கள் போன்று பழகியவர்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து எங்கள் ஊருக்கு தொழில் நிமித்தம் கார்த்திகேசு அய்யா,  இடம்பெயர்ந்து வந்த  காலப்பகுதியில் அங்கே   பிறந்த  சைவசமயத்தைச்சேர்ந்த தமிழ்ப்பிள்ளைகளுக்கென ஒரு பாடசாலை இருக்கவில்லை.

இவருடைய  மூத்த பிள்ளைகள்  அனைவரும் பிரதான வீதியில் அமைந்த புனித மரியாள் கலவன் வித்தியாலயத்திலேயே பயின்றனர்.

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 54 வீரகேசரி 50 ஆண்டுகள் நினைவுகள் ! எமக்கு சக்கரை சாதம், நிர்வாகத்தலைவர் குடும்பங்களுக்கு பெலி டான்ஸுடன் விருந்து !! “ உழைப்பாளியின் வியர்வை காயுமுன்னர் அவனுக்கான ஊதியத்தை வழங்கு “ ( புனித அல் – குர்ஆன் ) முருகபூபதி



எனது எழுத்தும் வாழ்க்கையும் என்னும் இத்தொடர் எனது எழுத்துலக வாழ்வின் கதை மாத்திரமல்ல.  என்னோடு இணைந்தும் இணையாமலும் வந்தவர்கள் பலரதும் கதையாகும்.

அவர்களிடமிருந்து கற்றதையும் பெற்றதையும்  முடிந்தவரையில் பதிவுசெய்துவருகின்றேன்.

வீரகேசரி அலுவலகத்தினுள் 1977 முதல் 1987 தொடக்கம் வரையில் பணியிலிருந்தமையால், அங்குள்ளவர்கள் அச்சமயங்களில்  மேற்கொண்ட பணிகள், மற்றும் அவர்களது பிற துறைகளைப்பற்றியும் சொல்லிக்கொண்டே கடந்து செல்லவிரும்புகின்றேன்.

வீரகேசரியில் ஒரு காலத்தில் மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பர் வ. ராமசாமி ஐயங்கரும் ஆசிரியராக பணியாற்றியவர் என்பதை முன்னர் வெளியான அங்கத்தில் குறிப்பிட்டிருப்பேன்.

புதுமைப்பித்தனுக்கும் இங்கு வந்து பணியாற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது. ஆனால், அவர் தமிழ்த்திரைப்படம் ஒன்றுக்கு வசனம் எழுதச்சென்றமையால், அந்த வாய்ப்பை இழந்தார்.

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராக பின்னாளில் மாறிய ஸ்ரெனிஸ்லஸ் என்ற இயற்பெயரையும் கொண்டிருந்த அன்டன் பாலசிங்கமும் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர்தான்.

படைப்பிலக்கியவாதிகள் அ.ந. கந்தசாமி, கே. கணேஷ். செ. கதிர்காமநாதன்,  சில்லையூர் செல்வராசன்,  அ.ச. முருகானந்தன், அங்கையன் கைலாசநாதன், க. சட்டநாதன்,  யோகா பாலச்சந்திரன், கமலா தம்பிராஜா,  கே. விஜயன், மூர்த்தி,  சோமசுந்தரம் ராமேஸ்வரன், கவிஞர் ஸி. எஸ். காந்தி  முதலானோரும் அங்கு ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர்கள்தான்.

பின்னாளில் தென்னிந்திய தமிழ்த் திரைப்படத்துறையில் பாடலாசிரியராக திகழ்ந்த கு. மா. பாலசுப்பிரமணியமும் ஒரு காலத்தில் அங்கே பணியிலிருந்தவர்.

யாழ்நங்கை என்ற புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்த திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்கள்தான் அங்கு நீண்ட நெடுங்காலம் சேவையாற்றிய மூத்த எழுத்தாளர்.

அவர் இந்த ஆண்டுதான் அங்கிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

பிற்காலத்தில் புகழ்பெற்ற பத்திரிகையாளராக விளங்கிய  எஸ். எம். கோபாலரத்தினம் முன்னர் வீரகேசரியில்தான் பணியாற்றினார்.  இவர்பற்றியும் முன்னர் விரிவான பதிவொன்றை எழுதியிருக்கின்றேன்.

இலட்சக்கணக்கான மக்களின் உயிர்த் தியாகத்தினால் ஈட்டிய பாரத தேசத்தின் விடுதலை

 Sunday, August 15, 2021 - 6:00am

- இந்திய 75 ஆவது சுதந்திர தினம் இன்று (15/08/2021)

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை இன்று (15) கொண்டாடுகின்றது. பல ஆண்டுகளாக கட்டப்பட்டிருந்த அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்து, ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாள் நாளை கொண்டாடப்படுகின்றது.

இந்திய சுதந்திரத்தின் பின்னணியில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்த் தியாகங்களும், வலிகளும், வேதனைகளும் இருக்கின்றன. இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி மூலம் தங்கள் சாம்ராஜ்யத்தை 1757ஆம் ஆண்டு கட்டமைத்தனர். இந்நிறுவனம் சுமார் 100 ஆண்டுகள் இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

எனது இராமாயணம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்.

 .

நான் இந்த நாட்டிற்கு 1995ல் வந்தேன்.


எனது நாட்டிய நாடகங்கள் மிகவும் பிரபல்யமாக இருந்ததால் இங்கு வந்த என்னைஈழத்தமிழர் கழகம்எனது இராமாயணத்தை மீண்டும் இங்கு மேடையேற்றும் படி கேட்டார்கள். இந்த இராமாயணம் முன்னர் கொழும்பு, யாழ்ப்பாணம், சென்னை ஆகிய இடங்களில் மேடையேற்றம் கண்டிருந்தது.

இன்று ATBC வானொலியில் பிரபலமாக இருக்கும் பத்மஸ்ரீ. மகாதேவா, சிவசம்பு.பிரபாகரன், ஸ்ரீபாலன் மற்றும் எனது மகன் அமிழ்தன், போன்ற பிரபல நடிகர்கள் இத்தனை பேரும் இராமாயணத்தில் ஆண் பாத்திரம் எடுக்க, பல இளம் பெண்கள் பெண் பாத்திரம் ஏற்று ஆடநான்கு மாதங்களில் இராமாயணம் தயாரானது. Blacktown Theatre இல் இது அமோக வெற்றியுடன் நடைபெற்றது. இதை உங்களில் பலரும் கூட இதைப்  பார்த்திருக்கலாம்.

ஆமாம், இராமாயணம் என்ற கர்னபரம்பரைக் கதை வாய் மொழியாக இந்தியா பூராவும் இருந்து வந்தது. இந்து சமயத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் திருமாலின் அவதாரம் என இராமனைப் பூஜிக்கிறது. இதே போன்று இந்தோனேஷிய இந்துக்கள் இராமனையே தம் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

எனது இராமாயணம் முதன் முதலில் 1974ம் ஆண்டு முதன் முறையாக மேடையேறியது. இதன் பின் 2வது தடவையாக மேடையேறப்போவதாகப் பத்திரிகையில் விளம்பரங்களும் விமர்சனங்களும் வெளியாகின. இதனால் இந்தோனேஷிய உயர்ஸ்தானிகர் ஆலயத்தில் இருந்து இந்தோனேஷிய High Commissioner அதைப் பார்வையிட விரும்புவதாகவும்; மேலும், அந்த நாட்டியத்தை இந்தோனேஷியாவில் காட்டுதற்கு முடியுமா என்று கேட்டும் ஒரு அழைப்பிதழ் வந்திருந்தது. எனக்கும் என் குழுவுக்கும் வந்திருந்த அந்த அழைப்பைப் பல்வேறு காரணங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது போயிற்று என்ற வருத்தம் எனக்கு இன்றைக்கும் உண்டு.

கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை மூன்று ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ... அவுஸ்திரேலியா



பனையென்பது செல்வமாகும் என்று கருதியே

வந்திருக்கிறார்கள். பனை யினைப் புலவர்கள் பல நிலைகளில் பார்த்திருக்கிறார்கள்.பனையின் பயனைப் பாடி இருக்கிறார்கள். பனையினை காதலிலும் கண்டு பாடியும் இருக்கிறா ர்கள்.காதலில் சிக்கித்தவிக்கும் நிலையில் பிரிவுத் துயரினை வெளிப்படுத்தும் பாங்கில் பனையினைக் காட்டுவதும் நோக்கத்தக்கது.

  திங்களும் திகழ் வான் ஏர்தரும் ; இமிழ் நீர்ப்
  பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே ;
  ஒலி சிறந்து ஓதமும் பெயரும்  ; மலி புனற்
    பல் பூங் கானல் முள் இலைத் தாழை
  சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ
  வளி பரந்து ஊட்டும் விரிவு இல் நாற்றமொடு
  மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
  அன்றிலும் என்புறு நாலும்  ; அன்றி ,
  விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
  யாமம் உய்யாமை நின்றன்று ;
  காமம் பெரிதே ; களைஞரே இலரே !

63 ஆண்டுகள் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீடு - ஒரு ரவுண்ட்அப்!

 .

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் குடியிருப்பாகக் காட்சியளிக்கும் வீட்டின் முகப்பில் ஒரு பக்கம் கருணாநிதியின் பெயரும், இன்னொரு பக்கம் அஞ்சுகம் அம்மாளின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

கோபாலபுரம் நான்காவது தெருவிருக்கும் இந்த வீட்டைத் தவிர்த்துவிட்டு இந்திய அரசியலை எழுதமுடியாது. தலைவர்கள், தொண்டர்கள், காவலர்கள், மீடியாக்கள் என எப்போதும் பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்த கருணாநிதியின் வீடு, இப்போது ஆழ்ந்த அமைதியில் உறைந்திருக்கிறது.

தெருவின் இருபுறங்களிலும் பிறந்தநாள்களுக்காக கருணாநிதி நட்ட செடிகள் மரங்களாகி நிழல் பரப்பி நிற்கின்றன. எவ்விதப் பகட்டும் இல்லாமல் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் குடியிருப்பாகக் காட்சியளிக்கும் வீட்டின் முகப்பில் ஒரு பக்கம் கருணாநிதியின் பெயரும், இன்னொரு பக்கம் அஞ்சுகம் அம்மாளின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.



போர்டிகோவில் கருணாநிதி இறுதிக்காலத்தில் பயன்படுத்திய டொயட்டோ அல்ஃபார்ட் கார் நிற்கிறது. முதுமையிலும் தளராமல் பயணங்களை மேற்கொண்ட அவருக்காக ஜப்பானிலிருந்து தருவிக்கப்பட்ட இந்தக் காரின் சிறப்பு, சொகுசான இருக்கைகள்தான். 7 பேர் அமரக்கூடிய இந்த காரில் கருணாநிதிக்கென்று ஒரு சக்கர இருக்கை பொருத்தப்பட்டிருந்தது. ரிமோட் மூலம் அந்த இருக்கையை வெளியில் இறக்கவும் ஏற்றவும் முடியும். இந்த ஹைபிரிட் கார் இன்னும் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரவில்லை. கருணாநிதியின் ஓட்டுநர் கோபி தினமும் வந்து காரைச் சுத்தம் செய்து வெளியில் எடுத்து, வீல் சேரை இயக்கி மீண்டும் அதே இடத்தில் நிறுத்துகிறார்.
போர்டிகோவைக் கடந்து உள்நுழைந்தால் ஒரு நூற்றாண்டு திராவிட இயக்க வரலாற்றைச் சொல்லும் புகைப்படங்களைத் தாங்கிய வரவேற்பறை. கருணாநிதியின் பொன்மொழிகளை சட்டமிட்டு ஆங்காங்கே மாட்டியிருக்கிறார்கள்.

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - நீரும் நெருப்பும் - ச. சுந்தரதாஸ் - பகுதி 9

.

இந்திய திரையுலகில் சாதனைகள் பல புரிந்து புகழ் பெற்ற நிறுவனம் ஜெமினி பிக்சர்ஸ். இதின் அதிபர் எஸ் எஸ் வாசன் தயாரித்த சந்திரலேகா அபூர்வ சகோதரர்கள், அவ்வையார், நந்தனார் போன்ற படங்கள் தமிழ் திரை வரலாற்றில் மறக்கமுடியாத படங்களாக இடம்பெற்றுள்ளன. அவ்வாறு வாசனால் உருவாக்கப்பட்ட அபூர்வ சகோதரர்கள் படத்தை 1971ஆம் ஆண்டு மணி கேசினி புரடக்சன்சார் வாசனின் அனுசரணையுடன் மீண்டும் நீரும் நெருப்பும் என்ற பெயரில் படமாக்கியது.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் இரட்டை வேடத்தில் எம் கே ராதாவும் கதாநாயகியாக பி பானுமதியும் நடித்தனர். புதிய படத்தில் இரட்டை வேடத்தில் எம் ஜி ஆர் நடித்தார் அவருக்கு ஜோடியாக ஜெயலலிதா. கலரில் பிரம்மாண்டமான செட் போட்டு ஜெமினி ஸ்டூடியோவில் நீரும் நெருப்பும் உருவானது.

எம்ஜிஆர் பால வயதில் நாடக சபையில் இருந்த போது அவருக்கு அன்பும் பரிவும் காட்டிய எம் கே ராதா நடித்த இரூ மாறுபட்ட கதாபாத்திரத்தை எம்ஜிஆர் ஏற்று திறம்பட நடித்திருந்தார்.

இரடடையர்களாக ஒட்டிப்பிறந்த குழந்தைகளை அரண்மனை வைத்தியர் பிரித்தெடு க்கிறார் உருவங்களை பிடித்தாலும் அவர்களின் உணர்ச்சிகளை பிரிக்க அவரால் இயலவில்லை. இதனால் ஒருவனுடைய மன உணர்ச்சி மற்றவனையும் பாதிக்கிறது ஒருவருடைய காதல் உணர்வுகள் மற்றவனை வாட்டி வதைக்கிறது. இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.


கிழவி வேடம் – சம்பவம் (3) - கே.எஸ்.சுதாகர்

 .

அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி மீது, திடீரென ஒரு பொருள் குறுக்காக எழுந்து நின்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அங்கே.

 

மணவிழாவின் கண்கொள்ளாக் காட்சியை நேரிலும், சுவர் வழியே தொங்கிக் கொண்டிருக்கும் எல்.சி.டி ஊடாகவும் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்கள், சிவபூசையில் புகுந்த கரடி மீது குவிந்தன.

 

திடீரெனப் பிரசன்னமான இராசப்புவின் கையில் பளிச்சென மின்னியது `ஐ போன்’. ஒவ்வொரு மேசையாக அலைந்து, தன் சுட்டு விரலினால் ஐ போனைத் தட்டி, முதல் நாள் தான் நடித்திருந்த நாடகமொன்றின் காட்சிகளைக் காட்டிக் கொண்டிருந்தார்.

அப்பு முதல் நாள் ஆச்சி வேடமிட்டிருந்தார்.

அமைதியாக திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அந்தக் காட்சி எரிச்சலைத் தந்தது.

“எப்படி இருக்கு என்ரை கிழவி வேசம். கொஸ்ரியூமிற்கு மாத்திரம் இருநூறு டொலர்கள் செலவாச்சு…..” வாயின் இருபக்கத்து அந்தங்களும் காதுவரை நீண்டிருக்க, `இகும் இகும்’ என்று சிரித்தபடி சொன்னதையே திரும்பச் சொல்லியபடி இருந்தார். ஏழெட்டுப்பெண்களின் மத்தியில், ஒரு ஆசனம் வெறுமையாக இருக்க அதற்குள் புகுந்துகொண்டார் அவர். தனது `ஐ போனை’ நீட்டி, சுற்றிச் சுழலவிடச் சென்னபோது அங்கே சலசலப்பு ஏற்பட்டது.

இதையெல்லாம் தூரத்தே இருந்து அவதானித்துக் கொண்டிருந்த ஒரு முதிய பெண்மணி கடுப்பானார். இராசப்பு  திருமணத்தைக் குழப்பிவிடுவார் என்று எண்ணினார். அப்புவுக்கு ஆப்பு வைக்க திடீரென கூட்டத்துனுள்ளே புகுந்தார் அந்தப் பெண்மணி. இராசப்புவைக் குற இழுவையாக இழுத்துச் சென்று விசாரணை செய்தார்.

 

“இலங்கையர்கோனின் எழுத்துக்கள்” - இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 10



இலங்கைச் செய்திகள்

 PCR, Rapid Antigen Test உச்சபட்ச கட்டண வர்த்தமானி வெளியீடு

தடுப்பூசி பெற்று இந்தியாவிலிருந்து வரும் இலங்கையருக்கு அனுமதி அவசியமில்லை

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகும் சிறார்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை வழங்க தீர்மானம்

பேராதனை தாவரவியல் பூங்காவின் 200 வருட பூர்த்தி

நல்லூர் உற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை!


 PCR, Rapid Antigen Test உச்சபட்ச கட்டண வர்த்தமானி வெளியீடு

PCR, Rapid Antigen Test உச்சபட்ச கட்டண வர்த்தமானி வெளியீடுMaximum Fee Fixed for PCR & Rapid Antigen Tests-Extraordinary Gazette Issued

கொவிட்-19 தொடர்பான PCR பரிசோதனை மற்றும் Rapid Antigen சோதனைகளுக்கு உச்சபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (11) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  அதற்கமைய,

  • PCR பரிசோதனை - ரூ. 6,500
  • Rapid Antigen Test - ரூ. 2,000

உலகச் செய்திகள்

 ஆப்கானில் ஐந்து நாட்களுக்குள் 8 நகரங்கள் தலிபான் வசம்

தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிய பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஈரானுடன் பதற்றம்: சி.ஐ.ஏ தலைவர் வில்லியம் பேர்ன் இஸ்ரேல் பயணம்

சீனாவில் பயங்கர வெள்ளம்: ‘சிவப்பு எச்சரிக்கை’ அறிவிப்பு

ஹெய்ட்டியில் பாரிய நிலநடுக்கம்; இதுவரை 300 இற்கும் அதிகமானோர் பலி



ஆப்கானில் ஐந்து நாட்களுக்குள் 8 நகரங்கள் தலிபான் வசம்

தலிபான்கள் ஆப்கானில் மேலும் இரண்டு நகரங்களை கைப்பற்றிய நிலையில் அந்தக் குழு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கைப்பற்றிய மாகாணத் தலைநகரங்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.