கடந்த 12 ஆம் திகதி
முற்பகல் நடைப்பயிற்சிக்கு
சென்றுகொண்டிருந்தபோது, கனடாவில் வதியும் எழுத்தாளர்,
இலக்கிய நண்பர் ஜெகதீசனிடமிருந்து, எமது மூத்த
ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் முதல் நாள் நள்ளிரவு வவுனியாவில் மறைந்து விட்டார் என்ற துயரமான செய்தி எனது மின்னஞ்சலுக்கு வந்தது.
அதனைப்படித்ததும் அதிர்ச்சியில் மனம் நிலைகுத்தியது. தாமதிக்காமல் “ என்ன நடந்தது..? “ எனக்கேட்டு எழுதினேன். சில
நிமிடங்களில் பின்வரும் குறிப்பு வந்தது:
ஊடகவியலாளர் பாரதி ராஜநாயகத்தின் முகநூல் பதிவு
“ நீண்ட காலமாக காலனுடன்
போராடிக்கொண்டிருந்தவா். அவரது
மனத்துணிவுதான் அவரை இயக்கிக்கொண்டிருந்தது.
மருத்துவமனையில் இருக்கும் போதும் மடிக்கணினியில் வேலை செய்துகொண்டுதான்
இருப்பாா்.
மூன்று தினங்களுக்கு முன்னா் - ஞாயிற்றுக்கிழமை அவரைப் பாா்ப்பதற்காக
ராமும் நானும் சென்றிருந்தோம்.
அவரால் பேச முடியவில்லை. ஆனால், நாம் புறப்படும் போது “இருங்கோ இருங்கோ
கதைப்பம்” என்றாா். அவரது உடல்நிலை மோசமாக இருப்பது தெரிந்தது. ஆனால், இவ்வளவு
விரைவாக விடைபெறுவாா் என்பது எதிா்பாா்க்காதது.
தன்னுடைய வாழ்நாள் சாதனையாக பல நுால்களையும் எழுதியிருக்கின்றாா். இன்னும்
ஒரு நுால் தயாரிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனையும் முடித்து
வெளியிட வேண்டும் என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது.
கொஞ்சம் சுகமாக இருந்தாலும் கணினியைக் கொண்டுவரச் சொல்லி வேலையைத்
தொடங்கிவிடுவாா் என்று அவரது மனைவி சொன்னா். வேலை மீதிருந்த பேராா்வமும்
மனத்துணிவும்தான் அவரை இயக்கிக்கொண்டிருந்தது. “
நண்பர் இராஜநாயகம் பாரதியின் மேற்கண்ட பதிவுடன் எனது நினைவுகளை இங்கே
பகிர்ந்துகொள்கின்றேன்.
வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில் மாணிக்கவாசகம், வவுனியா பிரதேச
நிருபராக இருந்தார். அவரது கையெழுத்துக்களை, முதலில் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்தபோதும்,
அதன்பின்னர் 1984 தொடக்கம் 1987 தொடக்கம் வரையிலும் ஆசிரிய பீடத்திலிருந்தும் பார்த்து வந்திருக்கின்றேன்.
நான் ஆசிரிய பீடத்திலிருந்த சுமார் மூன்று ஆண்டுகள் எனது கடமை நாட்களில் தினம் தினம் தொலைபேசியில் பேசும் ஒருவராகவும்
நண்பர் மாணிக்கவாசகம் திகழ்ந்தார்.
அக்காலப்பகுதி வட, கிழக்கு பிரதேசங்கள் போர் மேகங்களினால்
சூழப்பட்டிருந்தது. அத்துடன் ஆயுதம் ஏந்திய தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும்
முப்படைகளுக்கும் பொலிஸாருக்குமிடையில்
அடிக்கடி மோதல்கள் நடந்தன.
ஆயுதப்படையினரின் தேடுதல் வேட்டை, சுற்றிவளைப்பு முதலான சொற்களே எங்கள்
வீரகேசரியின் பெரும்பாலான செய்திகளின் தலைப்பாக அமைந்திருக்கும்.
அவற்றை எழுதியவர்களில் ஒருவராக பி. மாணிக்கவாசகம் இருப்பார்.
பிரசேத நிருபர்களுக்கு மாதச் சம்பளம் என்றில்லை. அவர்கள் எழுதும் செய்திகள் வீரகேசரியில்
வெளியானால் மாத்திரமே அதற்குரிய வேதனம் கிடைக்கும். அவர்களின் செய்திகள் அச்சில் வெளிவரும்
பட்சத்தில், ஆசிரிய பீடத்தின் ஒரு மூலையில்,
பிரதம ஆசிரியர் – செய்தி ஆசிரியர் அமர்ந்திருக்கும் பகுதியில் செல்வி
நிர்மலா மேனன் என்ற சகோதரி காலை, முதல் மாலை வரையில் அடிமட்டம் (Foot Rule ) வைத்து செய்திகளை
அளந்து, அதற்குரிய வேதனத்தை ஒரு பேரேட்டில் குறித்துக்கொண்டிருப்பார்.
ஒரு பிரதேச நிருபரிடமிருந்து வரும்
செய்திகள் எத்தனை அடி நீளத்தில் எத்தனை அங்குலத்தில் அச்சில் வருகின்றதோ,
அதற்கேற்பவே வேதனம் கிடைக்கும்.