மரண அறிவித்தல்

என்னுள் நிறைந்த என் அம்மா - செ பாஸ்கரன்

.

எல்லைகளற்ற  மேகக்கூட்டம் போல்
என் அம்மாவின் நினைவுகளும்
நெஞ்சை நிறைக்கிறது

நான் தவழ்ந்து திரிந்தபோது
என் பின்னே நடந்து திரிந்தவள்
நான் நிமிர்த்து நின்றபோது
என்னைத் தொடராதிருந்தவள்

தூரநின்று  அழகை ரசித்தவள்
துயரம் என்று  கண்ணீர் விடுகையில்
அருகில் இருந்து அணைத்துக்கொண்டவள்

எந்தன் விழியாய் என்னுள் ஒளியாய்
கேள்வியும் அவளாய் விடையும் அவளாய்
இருளில் ஒளிரும் இன்ப விளக்காய்
எனக்காய்  எல்லாம் அவளே ஆனவள்

மெய்என்றிருந்த பொய்யை விடுத்து
காற்றில் கலந்து நறுமணம் ஆனவள்
மீண்டும் எழுந்து  மூச்சுக் காற்றாய்
என்னுள் நிறைகிறாள் .

எல்லைகளற்ற  மேகக்கூட்டம் போல்
என் அம்மாவின் நினைவுகளும்
நெஞ்சை நிறைக்கிறது


ராமநாதன் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் சிட்னியின் நிகழ்வு

.
ராமநாதன் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் சிட்னியின் நூற்றாண்டு விழா நிகழ்வு சனிக்கிழமை 10 05 2014 அன்று இரவு ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. அந்த நிகழ்வின் ஒருசில படங்களை காணலாம்.

அன்னையர் தின வாழ்த்துக்கள் 11 05 2014

.

இசை வேள்விக்காக இராகங்களை இனம் காணும் போட்டி


தமிழ்முரசு வாசகர்களுக்கு,
எம்
 அன்பார்ந்த வணக்கங்கள்.


வீணா
 வேணு கான இசை நிகழ்ச்சியாக அரங்கேறவிருக்கும்
 இசை வேள்வியை முன்னிட்டு SBS தமிழ்த் தேசிய வானொலியுடன் இணைந்து இராகங்களை இனம் காணும் போட்டி ஓன்றை நடாத்துகின்றோம்.
இளம் கர்நாடக இசைக் கலைஞர் அகிலன் சிவானந்தன் அவர்கள், (அவுஸ்திரேலியக் கம்பன்கழக இணை பொறுப்பாளர் - மெல்பேர்ண் வளாகம்) ஆறு இராகங்களை ஆலாபனை செய்து வழங்க,கீழ்க்காணும் இணையத்தளத்தில் SBS தமிழ்த் தேசிய வானொலி நிலையத்தார் பதிவேற்றியுள்ளனர்.http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/334685/t/Win-Tickets-for-Isai-Velvi-2014/

இராகங்களை
 இனங்கண்டுஅதே ஒழுங்கில் வரிசைப்படுத்தி இதேஇணையதளத்திலோ அல்லது 
tamil.program@sbs.com.au எனும் மின்னஞ்சல்முகவரிக்கோ பதிவுசெய்து அனுப்பி வையுங்கள்போட்டி முடிவு திகதி : 19/05/2014 23:59:59.
இந்த ஆறு இராகங்களையும் சரியாக வரிசைப்படுத்தும் நேயர்களுள்அதிர்ஷ்டசாலிகளுக்குஇசை வேள்விக்கான - இரு தனிநபருக்கான நுழைவுச் சீட்டுக்கள் காத்திருக்கிறது.

உலகப் புகழ் பெற்ற வீணை வல்லோன் கலைமாமணி இராஜேஷ் வைத்தியா,புல்லாங்குழல் இசைக்கலைஞர் வாரிஜாஸ்ரீ வேணுகோபால் ஆகியோர்தென்னிந்திய மற்றும் சிட்னிக் கலைஞர்களுடன் இணைந்து வழங்கவுள்ள,அவுஸ்திரேலியக் கம்பன் கழக இசை வேள்விமே மாதம் 24ம் திகதிசனிக்கிழமைமாலை 5:30 மணிக்கு, 107 Derby Street, Silverwater இல் அமைந்துள்ள Sydney Baha'i Centreஇல் நடைபெறவுள்ளது.

அன்புடன்,
-அவுஸ்திரேலியக்
 கம்பன் கழகத்தினர்-


அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் வழங்கும் இசை வேள்வியை இரசிக்க வருகை தருமாறு வீணை வல்லோன் இராஜேஷ் வைத்தியா மற்றும் வாரிஜாஸ்ரீ வேணுகோபால் அவர்கள்  விடுக்கும் அன்பழைப்பு: 


http://www.youtube.com/watch?v=Pt3-0fRhibo

நன்றி.

சைவ மன்ற போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வு


.திரும்பிப்பார்க்கிறேன் -- முருகபூபதி -வரலாற்றுப்பதிவாளர் சிட்டி சுந்தரராஜன்

.
 இணைந்திருந்து இயங்கிய இலக்கிய வரலாற்றுப்பதிவாளர்  சிட்டி சுந்தரராஜன்
தமிழக இலக்கிய முன்னோடிகளுடன் நெருக்கமான உறவைப்பேணியவர்
   ஆக்க இலக்கியப்படைப்புகளை இருவர் அல்லது மூவர் அல்லது நால்வர் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் இணைந்து எழுதமுடியுமா?
இம்முயற்சியை பரிசோதனையாகவே மேற்கொண்ட சிலரின் படைப்புகள் குறித்து அறிந்திருக்கின்றோம்.
பல வருடங்களுக்கு முன்னர் எஸ்.பொன்னுத்துரை - இ.நாகராஜன் குறமகள் வள்ளிநாயகி இராமலிங்கம் - சு.வேலுப்பிள்ளை கனகசெந்திநாதன் - முதலானோர் இணைந்து மத்தாப்பு என்ற நாவலை படைத்தனர்.
பின்னர் எஸ்.பொன்னுத்துரை - வ. அ. இராசரத்தினம் - எம்.ஏ. ரஹ்மான் -  சாலை இளந்திரையன் ஆகியோர் இணைந்து சதுரங்கம் என்ற நூலை எழுதினார்கள்.
1970 களில் வீரகேசரி வாரவெளியீட்டில் அருண். விஜயராணி -தேவமனோகரி  - மண்டூர் அசோக்கா  - தாமரைச்செல்வி ஆகியோர் இணைந்து நாளைய சூரியன் என்ற தொடர்கதையை எழுதினார்கள்.
அதேபோன்று புலோலியூர் இரத்தினவேலோன் மற்றும் கோகிலா மகேந்திரன் இருவரும் இணைந்து நெடுங்கதையொன்றை எழுதியிருக்கிறார்கள். தற்பொழுது ஐரோப்பா - கனடா அவுஸ்திரேலியா - முதலான நாடுகளைச்சேர்ந்த பல எழுத்தாளர்கள் இணைந்து ஒரு தொடர்கதையை எழுதத்தொடங்கியிருக்கிறார்கள்.
படைப்பு இலக்கியமும் கரு - உருவம் - உள்ளடக்கம் சார்ந்ததுதான். ஒரு குழந்தையை ஒரு பெண்மாத்திரம்தான் கருவில் சுமந்து பெற்றெடுக்கமுடியும். அதுபோன்றதே படைப்பு இலக்கியமும். எனவே இருவரோ பலரோ இணைந்து ஒரு ஆக்க இலக்கியத்தை சிருஷ்டிக்க முடியாது  என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.

இலங்கைச் செய்திகள்


வட மாகாண முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ். பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

யாழில் வெடி பொருட்கள் மீட்பு

வெருகல் பிரதேசத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை: ருவான் வணிகசூரிய

===============================================================


வட மாகாண முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி

05/05/2014   வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறிய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளவேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெ ளியாகியுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று நண்பகல் திடீர் சுகவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவர் உடனடியாகவே யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நீரிழிவு நோயினால் உடலில் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சிறிய சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நோய்வாய்ப்பட்டுள்ள வடக்கின் முதலமைச்சர் தொடர்ந்தும் யாழ்.போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 


என்னைப் பெற்ற அம்மா!... .......காலத்தால் அழியா நினைவுகள்!.
என்னைப் பெற்ற அம்மா விற்கு
என்னிற் கொள்ளை அன்பு!
எடுத்துக் கூற வார்த்தை ஏது?
இயம்பி டுவேன் நம்பு!
ஆசை யோடு உச்சி மோந்து
அணைத்து மடியில் இருத்திப்
பாசத் தோடு அமுது தந்து
பாலும் ஊட்டும் அம்மா!
நெஞ்சில் என்தன் தலையைச் சாய்த்து
நீவி மகிழும் அம்மா!
கெஞ்சும் விழியால் அன்பைச் சிந்திக்
கொஞ்சும் தெய்வ அம்மா!
கிள்ளை மொழியிற் பேசும் என்னை
மெள்ள  அள்ளித் தூக்கி
வெள்ளைப் பட்டுச் சட்டை போட்டுப்
பள்ளிக் கனுப்பும் அம்மா!

சங்க இலக்கியக் காட்சிகள் 7 (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
----------------------------------------------------------------------------------
காட்சி 7
உறவும்  மகிழ்வும்கார்காலம் வந்தது. அதனால் போரும் நின்றது. அரசனின் போர்ப்படையில் பணியாற்றிய தலைவன் வீடு திரும்புகின்றான். மனம் நிறைந்த ஏக்கத்தோடு தலைவனைப் பிரிந்திருந்த தலைவி அவன் வந்ததும் அளவில்லா ஆனந்தம் அடைகின்றாள். கார்காலம்தான்  இன்பம் நுகர்வதற்கு ஏற்ற காலம். வீடு திரும்பிய தலைவன் தலைவியுடன் கூடிமகிழ்ந்திருக்கிறான். இருவரும் எல்லையில்லா இன்பத்தில் திளைத்திருக்கிறார்கள். வீட்டில் இருந்து மகிழ்ந்ததோடு மட்டுமன்றி இருவரும் வெளியே சுற்றுலா செல்ல விரும்புகிறார்கள். உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்கிறார்கள். பக்கத்து ஊர்களுக்குச் செல்கிறார்கள்.

பெருஞ்சோறு அல்லது பெருவிருந்து

உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்


இந்நாட்டு மக்கள் தனக்கு பெறுவெற்றியை ஈட்டித்தருவர் என்று கருதும் மன்னன் அவர்களுக்கு சோறு அளித்தல் பெருஞ்சோறு அல்லது பெருவிருந்து என வழங்கப்படும். போருக்குச் செல்லும் முன்  வீரர்களுக்கு பெருஞ்சோறு அளித்தலும் நறவம் என்னும் கள் வழங்குதலும் பண்டைக்கால தமிழர் மரபாகும்.

சங்க கால சேர மன்னர்களில் ஒருவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தம்பியாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற அரசன் பெருஞ்சோறு அளித்ததை பாலைக்கௌதமனார் என்ற புலவர் பதிற்றுப்பத்தில் பாடியுள்ளார்.

வருநர் வரையார் வார வேண்டி
விருந்துகண் மாறா(து) உணீஇய பாசவர்
ஊனத்(து) அழித்த வால்நிணக் கொழும்குறை
குய்யிடு தோறும் ஆனா(து) ஆர்ப்பக்
கடல்ஒலி கொண்டு செழுநகர் நடுவண்
அடுமை எழுந்த அடுநெய் ஆவுதி

சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற 100 பேர்: கோவைக்கு பெருமை சேர்த்த முருகானந்தம்:

.
பெண்களே வெளியே சொல்ல கூச்சப்படும் ஒரு விசயத்தில், ஒரு ஆணாகMurukanantham-1, பெண்களுக்கான 'சானிடரி நாப்கினை' மலிவு விலையில் தயாரித்து, அடிமட்ட ஏழை பெண்களுக்கும் போய்ச்சேரும் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார், கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர்.

இதனால் இவர், உலகின் செல்வாக்குமிக்க 100௦ நபர்களில் ஒருவராக அமெரிக்காவின், 'டைம்ஸ்' பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் 29ம் தேதி, அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் விருது பெறவுள்ளார். சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100௦௦ பேரில், இந்தியாவிலிருந்து நரேந்திரமோடி, கெஜ்ரிவால், அருந்ததிராய் போன்ற பிரபலங்களும் அடங்குவர். இவர்களுடன் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார், கோவையில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த முருகானந்தம்,49.

தனது சாதனை குறித்து, அவர் கூறியதாவது:எனது சொந்த ஊர் கோவை, பாப்பநாயக்கன்புதூர். அப்பா நெசவுத் தொழிலாளி. அம்மா விவசாயக்கூலி. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துவிட்டார். வீட்டின் வறுமையை போக்க, 'கிரில்' பட்டறைக்கு வேலைக்குப் போனேன். ஒருநாள் என் மனைவி, எதையோ மறைச்சி எடுத்துட்டுப் போனாங்க.என்னனு கேட்டப்ப, 'இது, பொம்பளைங்க சமாச்சாரம்'னு சொன்னா. விடாப்பிடியா விசாரிச்சப்ப, அது அழுக்குத்துணின்னு தெரிஞ்சது. நாப்கின் பயன்படுத்தலாமே என்றேன். 'விலை அதிகம்' என்றாள். அப்போதுதான் புரிந்தது, கிராமப் பெண்கள், ஏழை பெண்கள் வசதி இல்லாம, பழையதுணிகளை பயன்படுத்துறாங்கன்னு.

கடவுச்சொல் -- அ.முத்துலிங்கம்

.                        
அன்று காலை விடிந்தபோது அது அவர் வாழ்க்கையில் மிகவும் ஆச்சரியமான நாளாக மாறும் என்பது சிவபாக்கியத்துக்கு தெரியாது. செப்டம்பர் மாதத்தில் இலைகள் நிறம் மாறுவது பார்க்க அவருக்கு பிடிக்கும். அவர் வசித்த நாலாவது மாடி மரங்களின் உயரத்தில் இருந்தது இன்னொரு வசதி. யன்னலைத் திறந்தவுடன் குளிர் காற்று வீசியது. முன்னே நிற்பது வெள்ளையடித்ததுபோல பேர்ச் மரம். சற்றி தள்ளி சேடர் மரம். ஆக உயரமானது. ஆஷ் மரப்பட்டைகள் சாய்சதுரமாகவும் இலைகள் எதிரெதிராகவும் இருக்கும். ஐந்துகோண மேப்பிள் இலை அவசரமாக நிறம் மாறும். கடைசியாக மாறுவது ஓக்.
தகவல் பெட்டியில் மாலை நாலு மணிக்கு தண்ணீர் அப்பியாசம் என நினைவூட்டல் குறிப்பு கிடந்தது.  நியூ யோர்க்கில் இருந்து 80 மைல் தூரத்தில் இருக்கும் முதியோர் காப்பகத்துக்கு அவரைக் கொண்டுவந்து மகள் விட்ட நாளிலிருந்து அவர் தினம் மறக்காமல் செய்தது தண்ணீர் உடற்பயிற்சி. அது அவரை ஆரோக்கியமாக வைத்திருந்தது. குளித்து உடுப்பை மாற்றி அரை மணிநேரம் பிரார்த்தனை செய்தார். ஒரு துண்டு ரொட்டியில் அப்ரிகோட் ஜாம் பூசி சாப்பிட்டுவிட்டு தேநீர் பருகினார். அங்கே வந்து ஐந்து வருடமாகிவிட்டது. மகள் அவருக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. ஐந்து நட்சத்திர ஹொட்டலில் இருப்பதுபோல வசதிகள். கடன் அட்டையில் கீழே இருக்கும் சுப்பர்மார்க்கட்டில் என்னவும் வாங்கி சமைக்கலாம். அல்லது வேண்டிய உணவுக்கு ஓடர் கொடுக்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். ரேடியோ கேட்கலாம். தினம் மருத்துவர் வந்து சோதிப்பார். வேண்டுமானால் முழுநாளும் படுத்துக் கிடக்கலாம். ஒருவர் கேள்வி கேட்கமாட்டார்கள்.

எனது அம்மாவுக்கும், அம்மாக்களுக்கும்

.

தாராளம் எனும் வார்த்தை, 
எங்கிருந்து தருவிக்கப்பட்டது? 
விளக்கங்கள் ஏதேனும் உள்ளதா? 
இல்லையேல் இது இருக்கட்டும் ! 
"தாராளம்" 
அம்மாவின் மனது கொடுக்கும், 
அன்புக்கு உரிமைப்பட்ட வார்த்தை !! 
---------------------------------------------------------------- 
எதிர்பார்ப்புகளை எடுத்தெறிந்துவிட்டு, 
உருவாக்கியதை உச்சம் கொண்டுபோகவே, 
போராடி வாழ்ந்து முடிக்கிற ஒரு பிறவி, 
அம்மாவன்றி வேறு எவர் பூமியில்? 
----------------------------------------------------------------------------
தயங்காமல் தருகிறாள், 
கேட்டதை எப்படியேனும், 
அப்படி வாழ முனைவது, 
நூறு சதவீதம் முழுமைபெறாது, 
காரணம் தாய் வளர்ப்பு அல்ல படைப்பு !! 
--------------------------------------------------------------------- 
சாலையோரம் கூவி பண்டங்கள் விற்கும், 
நடைபாதை தேய்த்த ஜீவன்களுக்கு, 
வெட்கம் கூச்சங்கள் இருப்பதில்லை, 
கூப்பாடு போட்டு கதறி விற்பதில், 
அவர்தம் மன ஓட்டங்களெல்லாம், 
பிள்ளைகளின் பசிபோக்கும் முனைப்பிலேயே, 
"அவர்கள் அம்மாக்கள்" 

தமிழ்மகன் “இராபர்ட் கால்டுவெல்”- சிறப்புக்கட்டுரை --சிவசுப்பிரமணியன்

.


இன்று (07.5.2014) தமிழ்த்தாயின் தலைமகன் “கால்டுவெல்” அவர்களின் 200-வது பிறந்தநாள்.அவரை பற்றிய சிறப்புக்கட்டுரை:

’’இந்த நாட்டை ஆண்டுவந்த ஆங்கிலேயர்களின் மூலமாகத்தான் நம் மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளது. அந்த வகையில், தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் நம்மைப்போல பலகோடி மக்கள்   இருந்தாலும் தமிழின் பெருமையை நிலைநாட்டிய பெருமை “இராபர்ட் கால்டுவெல்” என்ற ஆங்கிலேயர் ஒருவருக்குத்தான் சேரும்.

காலங்காலமாக தமிழறிந்த புலவர்கள் எல்லோரும், மன்னர்களையும், பணக்காரர்களையும் புகழ்ந்து பாடியும், கோவில், திருவிழாவில் புராணக்கதைகளை சொல்லியும் தங்களின் வயிற்று பிழைப்புக்கு மட்டுமே தமிழை பயன்படுத்தி வந்தனர்.

தமிழ் மொழிக்கு உள்ள வரலாற்று, பழமை, தொன்மை, தனித்து நிற்கும் சொல்வளம் போன்ற பல சிறப்புதன்மைகள் நமக்கெல்லாம் முழுமையாக தெரியவில்லை. தெரிந்த சிலர் சொன்னதை உலகம் ஏற்கவில்லை, அல்லது அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையின் நம்மவர்களால் சொல்ல முடியவில்லை. தெரியாமலிருந்த அல்லது மறைக்கப்பட்ட தமிழ்மொழியின் பெருமைகளையெல்லாம் எல்லாம் உலகுக்கு எடுத்துக்காட்டியவர் “இராபர்ட் கால்டுவெல்”

1834-ம் ஆண்டு மே 7-ம் நாள், அயர்லாந்து நாட்டின் "கிளாடி' ஆற்றங்கரையிலுள்ள “பெல்பாஸ்ட்” என்ற சிற்றூரில் பிறந்தவர் “இராபர்ட் கால்டுவெல்” இவருக்கு தரமான கல்வியை கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில், கால்டுவெல்லை பள்ளியில் சேர்க்கும் வயதில், அவரது பெற்றோர்கள் தங்களின் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் கூட்டிக்கொண்டு போய் "கிளாஸ்கோ' நகரில் குடியேறினர்.


பள்ளியில் சேர்ந்து படித்த “கால்டுவெல்” தனது 16-வயதுக்குள், ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங் களைக் கற்றுத் தேர்ந்தார். அதன்பின் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சிறந்த ஓவியக்கலைஞரானார். தம் இருபதாம் வயதில், கிறித்துவ சமையப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர் சங்கத்தில் (Propagation of the Gospel Mission) சேர்ந்தார்.


உலகச் செய்திகள்


மலேசிய எம்.எச்.370 விமானம்: அல் கொய்தாவுடன் தொடர்புடைய 11 தீவிரவாதிகள் கைது

மலேசிய 'எம்.எச்.370' விமானத்தை கண்டுபிடிப்பது தொடர்பில் அவுஸ்திரேலியாவில் பேச்சுவார்த்தை

மீட்பு பணியில் ஈடுப்பட்டிருந்த சுழியோடி உயிரிழப்பு

தீ அனர்த்தத்தின் போது 4 ஆவது மாடியில் இருந்து பிள்ளைகளை தூக்கி வீசிய தாய்

பாகிஸ்தானில் மதநிந்தனை செய்தவருக்கு ஆதரவாக வாதிட்ட சட்டத்தரணி சுட்டுக்கொலை

மலேசிய எம்.எச்.370 விமானம்: அல் கொய்தாவுடன் தொடர்புடைய 11 தீவிரவாதிகள் கைது

05/05/2014    மலேசிய எம்.எச். 370 விமானம் காணாமல் போனமைக்கு பின்னணியில் இருந்த சந்தேகத்தில் அல் - கொய்தாவுடன் தொடர்புடைய 11தீவிரவாதிகளை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். 

சிட்னி தமிழ் அறிவகம் புதிய நேரங்கள்

.

பெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள் எங்கே? --கோ. தனஞ்ஜெயன்

.

பெண்களை முதன்மைப்படுத்தும் திரைப்படம் அரிதினும் அரிதாக வெளிTamil film-1வருகிறது. அப்படியிருக்க அதுபற்றிய சொல்லாடலும் தமிழ்ச் சூழலில் அரிதாகவே இருக்கிறது.

ஆனால் இந்திப் பட உலகில் பேஷன், நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா, த டர்ட்டி பிக்சர், ஹீரோயின், காஹானி, இங்க்லிஷ் விங்கிலிஷ், இஷ்கியா, குலாப் கேங், ஹைவே, குயீன் என பல படங்கள் வெற்றி பெறுகின்றன. கான்சி, பாபீ ஜாஸூஸ், மேரீ கோம் என பல படங்கள் தயாராகி வருகின்றன. தமிழில் மட்டும் ஏன் இது நடப்பதில்லை? இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்க்கும் முன், தமிழில் வெற்றி கண்ட, பெண்களை மையப்படுத்திய படங்களைப் பற்றி பார்ப்போம்.
ஒரு சாதனைப் பட்டியல்
1938-ல் கே.சுப்ரமணியத்தின் சேவாசதனம் என்ற படம் தொடங்கி, சகுந்தலா, கண்ணகி, மீரா, மணமகள், அவ்வையார், அடுத்த வீட்டு பெண், கொஞ்சும் சலங்கை, அன்னை, நானும் ஒரு பெண், வெண்ணிற ஆடை, இதய கமலம், சித்தி, எங்கிருந்தோ வந்தாள், வெகுளி பெண், அரங்கேற்றம், சூரியகாந்தி, அவள் ஒரு தொடர்கதை, அவளும் பெண் தானே, அன்னக்கிளி, பத்ரகாளி, அவர்கள், அவள் அப்படிதான் என்று கருப்பு வெள்ளை காலத்தில் ஒரு சாதனைப் பட்டியலே போடலாம். சினிமா வண்ணம் பூசிக்கொண்ட பிறகு, நீயா, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னி சாட்சி, விதி, புதுமைப் பெண், சம்சாரம் அது மின்சாரம், பூவே பூச்சுடவா, சிந்து பைரவி, ஒரே ஒரு கிராமத்திலே என பல படங்கள் 1990 வரை பெண்களை மையப்படுத்தி வந்தன. இந்த நிலை 1991 முதல் மாறத் தொடங்கி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், மிருகம், பூ, ஆரோஹணம் என வெகுசில படங்களே அவ்வாறு பெண்களை மையப்படுத்தின. கடந்த 20 வருடங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன?

நண்பருடன் வீதியில் புரண்டு சண்டையிட்ட ஜேம்ஸ் பெக்கர்: இருவருக்கும் பற்கள் உடைவு


06/05/2014    அவுஸ்திரேலியாவின் செல்வந்தரான கசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பெக்கருக்கும் அவரது வர்த்தக பங்காளிக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக ஆஸி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வீதியில் நைன் நெட்வேர்க் வலையமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரியான டேவிட் கிஞ்சலுடனேயே பெக்கர் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்குமிடையிலான கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே இந்த சண்டை ஏற்பட்டுள்ளதுடன் சண்டையில் இவர்களின் பற்களும் உடைந்துள்ளதாக தெரியவ
இறுதியில் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இந்த சண்டையானது 35 வருட நட்பின் வளர்ச்சி மற்றும் தாழ்ச்சியின் ஒரு பகுதி எனக் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்தும் தாம் நண்பர்களாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜேம்ஸ் பெக்கர் இங்கு கசினோ சூதாட்ட நிலையங்களுடன் கூடிய ஹோட்டல்களை நிர்மாணிக்க முதலீடு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 


2014 பட்ஜெட்டில் அரசியல்வாதிகளுக்கு சம்பள வெட்டு

.வரவு செலவுத் திட்ட ஏற்றத்தாழ்வுகளை சமாளிப்பதற்கு சகல அவுஸ்திரேலிய பிரஜைகளும் பங்களிப்பு நல்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் கூட்டணி அரசாங்கம், அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை நிறுத்தவுள்ளது.
சம்பள அதிகரிப்பை நிறுத்துவது பற்றிய அரசாங்கத்தின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு பிரதம மந்திரி சுயாதீன சம்பள தீர்ப்பாயத்திடம் கோரிக்கை விடுப்பார் என அரச செலவினங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோ ஹொக்கி தெரிவித்தார்.
இதன் பிரகாரம், ஜூலை முதலாம் திகதி தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2.4 சதவீத அதிகரிப்பை இழப்பார்கள். பின்வரிசை உறுப்பினர்களைப் பொறுத்தவரையில், இது 3,900 டொலராக அமையவுள்ளது.
பிரதம மந்திரி ரோனி அபொட் 500,000 டொலர்களை சம்பாதிக்கிறார். சம்பள அதிகரிப்பு நிறுத்தப்படுவதால் அவர் 10,000 டொலர்களை இழக்க நேரிடும்.
இது தொடர்பான தீர்மானம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. அனேகமாக சம்பள வெட்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

குக்கூ - சினிமா விமர்சனம்

.


வருடத்திற்கு ஒரு படம்தான் இது போன்று வரும்.. தமிழ்த் திரையுலகில் ஒரு சிலர்தான் தங்களது அறிமுகப் படத்தில் இப்படி முத்திரை பதிப்பார்கள். இது போன்ற கதையம்சத்துடன் படத்தை எடுக்க முன் வர, தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும். முதலில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றிகள்..

தினம்தோறும் கண்ணில்லாத மனிதர்களைப் பார்க்கிறோம். பேருந்து நிலையம், ரயில் நிலையம்.. ரயில்கள்.. என்று எங்கும் அவர்களது குரல்கள் ஒலிக்கின்றன. ஒரு சில இடங்களில் வரிசையாக கைப்பிடித்தபடியே அவர்கள் நடந்து செல்வதைப் பார்க்கின்றோம். ஒரு நிமிடம் யோசிக்கிறோம். நாம் பரவாயில்லையே என்று முருகனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.. ஆனால் அவர்களுடனான ஒரு நாள் வாழ்க்கையை வாழ நாம் யோசிப்பதில்லை. பயமாக இருக்கிறது நமக்கு.  கண் இருப்பவர்களுக்குத்தான் இருட்டை பார்த்து பயம். பார்வையற்றவர்களுக்கு எதைப் பார்த்தும் பயமில்லை.

ஆண்டவனின் படைப்பில் மிகக் கொடூரமானது இந்தக் கண்ணில்லாதவர்கள்தான்.. இவர்களது வாழ்க்கையை வைத்து இதுவரையிலும் நிறைய தமிழ்ப் படங்கள் வந்திருந்தாலும் அனைத்துமே ஒவ்வொரு ரகம்.. ராஜூ முரூகனுக்கு இது முதல் படம் என்பதால் படத்தில் காதல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது அவரது தலையெழுத்து.  கதையம்சம் வித்தியாசமாக இருந்தாக வேண்டும் என்பது அவரது எழுத்தாளர் என்ற தகுதிக்குரிய தலையெழுத்து. இயக்கம் என்பது மூன்றாவதாக அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள காட்ட வேண்டிய வித்தை.. இதையும் சரியாகவே செய்திருக்கிறார்..

ஏதோ ஒரு ஊரில் தமிழ் என்பவனுக்கும், சுதந்திரக் கொடி என்பவனுக்கும் இடையில் நடந்த காதலைப் பற்றிச் சொல்கின்ற கதையல்ல இது. இதன் மாந்தர்கள் நம் அருகிலேயே இருக்கலாம்.. அல்லது நாம் கேள்விப்பட்டிருக்கலாம். கண்ணில்லாதவர்கள் என்றில்லை. கண்ணிருந்தும் மற்ற சாதாரணமானவர்களை போலவே இந்த ஜோடிகளை பார்த்திருக்கலாம்.. இது ஒன்றுதான் இதில் இருந்த வித்தியாசம்..

ரயில்களில் பொருட்களை விற்றுக் கொண்டும், பகுதி நேரமாக மேடைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டும் பொழைப்பை நடத்தும் தமிழ் என்னும் பார்வையற்ற ஹீரோவுக்கு சுதந்திரக்கொடி என்னும் இன்னொரு பார்வையற்ற பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. வழக்கம்போல மோதலில் ஆரம்பித்து கடைசியில் காதலிக்க வைக்கிறது காதல்.. அதுதான் காதல்..

கண் இல்லையென்றாலும் ஆள் அழகு என்பதால் ஹீரோயின் மீது நடுத்தர வயதுள்ள குடும்ப நண்பரான ஷேர் ஆட்டோ டிரைவருக்கு ஆசை.. ஹீரோயினின் டீச்சர் வேலைக்காக எம்.எல்.ஏ.வுக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணத்தை தானே கொடுத்து ஹீரோயினை புக் செய்து வைத்திருக்கிறார் டிரைவர். இந்த காதல் விவகாரம் ஹீரோயின் வீட்டுக்கும் தெரிய.. அவசர கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். இன்னொரு பக்கம் தமிழை ஏமாற்றி பணம் பறிக்கவும் முயல்கிறார்கள் ஹீரோயினின் அண்ணனும், டிரைவரும்.. 

இந்தக் காதல் கடைசியில் என்ன ஆனது என்பதைத்தான் 2 மணி 40,நிமிட படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

கண் பார்வையற்றவராக நடிப்பதென்பது சாதாரண விஷயமல்ல.. ‘அட்டகத்தி’ தினேஷின் இந்த நடிப்பார்வத்திற்கு ஒரு சல்யூட்டே செய்ய வேண்டும்போல் உள்ளது. இத்தனை குறுகிய காலத்தில்.. திரையுலகத்திற்கு வந்த புதிதிலேயே இது போன்ற சோதனை முயற்சி நடிப்பை மேற்கொள்வது பெரிய நடிகர்களே செய்யத் தவங்குவதுதான்.. தன்னுடைய உடல் மொழியால் பல இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார் தினேஷ். ஒரு இடத்தில்கூட அவர் நடிக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது.. இயக்கத்தின் வேகம் காரணமாய் கிளைமாக்ஸில் திரைக்கதை மெலோ டிராமாவாக ஆகிவிட்டாலும் இவருடைய நடிப்பில் எதுவும் சோடையில்லை..

ஹீரோயின் அவரைத் தாக்கியவுடன் அவர் காட்டும் ரியாக்சன்.. ஹீரோயின் அவரை தனியே அழைத்துச் சென்று அவர் நெற்றியில் பட்ட காயத்தைத் தொட்டுப் பார்த்து ஜெயம் செய்யும் காட்சியில் அவருடைய முகம் காட்டும் திகைப்பு.. நீ எப்படி இருப்ப என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்பது.. உங்க முகத்தைக் கொஞ்சம் தொட்டுப் பார்த்துக்கவா என்று கபோதி இன்ஸ்பெக்டரிடமே பேசுவது.. இப்படி பல இடங்களிலும் ஒரு கண் பார்வையவற்றவனைத்தான் திரையில் பார்க்கிறோம் என்பதை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் தினேஷ்.. வெல்டன்..

ஹீரோயின் மாளவிகா. அறிமுகம்.. புதுமுகம் என்கிறார்கள். நம்ப முடியவில்லை. இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் மிகவும் பிடித்திருக்கிறது. அறிமுகம் இல்லாத நபர்கள் கிண்டல் செய்வதை பொறுக்காதவர்.. தன்னை ஏமாற்றினால் பிடிக்காது என்கிறார். தன் மீது பரிதாபம் காட்டுவதை ஏற்காதவர்.. பழைய துணிகளை வேண்டாம் என்று மறுப்பவர்.. கடன் கேட்பதைக்கூட தவறு என்று நினைப்பவர்.. இப்படி கண்ணிருக்கும் ஒரு மனிதரிடத்தில் காணக் கிடைக்காத குணங்களையெல்லாம் பார்வையில்லாத இந்தப் பெண்ணிடம் சுமத்தி அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர்..

அழகைவிடுத்து நடிப்பும் அந்த நடிப்பும் அழகுதான்.. ஹீரோவை முதல் முறை பார்த்தவுடன் பேச்சில் கடுப்பாகி முகத்தைச் சுழித்துவிட்டு பேசும் காட்சியிலேயே மனம் ஒன்றிப் போய்விட்டது.. டிரெயினில் தான்தான் இடத்தை மாற்றிச் சொல்லி இறக்கிவிட்டதை தினேஷ் சொல்லச் சொல்ல அருகில் இருந்து கேட்டபடியே கோபமாகும் அந்த முகத்தின் வசீகரம்..  கையில் இருக்கும் ஸ்டிக்கால் தாக்கியவுடன் ‘ஐயோ’ என்ற பாவத்தை நம்மிடமிருந்து வரவழைக்கவில்லை என்பதை இப்போதுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

பாடல் காட்சிகளின் மாண்டேஜ் சீன்களில் மாளவிகாவின் முக பாவனைகள் அனைத்தும் எக்ஸலண்ட்.. ஹீரோவின் ஆடியோ கேஸட்டை கேட்டுவிட்டு முகச் சுழிப்பைக் காட்டிவிட்டாலும், அடுத்த கணம் யோசித்துப் பார்க்கின்ற அழகுக்கு இன்னொரு பாட்டு வைத்திருக்கலாம்.. காத்திருக்க வைத்த கோபம்.. மற்றவர்களின் முன் தன்னை கிண்டல் செய்த கோபம்.. பெர்பியூமை ஊருக்கே தாரை வார்த்த கோபம்.. கேக்கில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு தன் கையில் கொடுத்திருக்கிறார் என்பதையறிந்தவுடன் முகத்தில் தோன்றும் அறுவறுப்பு.. அத்தனையும் மாளவிகா என்றொரு நடிகையை அடையாளம் காட்டியிருக்கிறது. கோடம்பாக்கம் இவருக்கு ஆதரவு கொடுத்தால் அவருக்கும் புண்ணியம் நமக்கும் புண்ணியம்தான்..

ஹீரோவின் உடன் எப்போதும் துணைக்கு வரும் இளங்கோ, இளையராஜாவின் ரசிகரான முருகதாஸ், சந்திராபாபுவாக நடித்த ஈஸ்வர்.. அவருடைய இரண்டு மனைவிகள்.. அது தொடர்பான காட்சிகள்.. இடையிடையே அவ்வப்போது ஒலிக்கும் ராகதேவன் இளையராஜாவின் இசைப் பாடல்கள்.. அரசியல் புரோக்கர் என்றாலும், பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று நினைக்கும் ஒரு லோக்கல் அரசியல்வாதி ஈ.ராமதாஸ்.. என்று கேரக்டர்களின் துணையோடு படத்தை ஒரு அழகான ஓவியமாகவே கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.

அத்தனைக்கும் முதல் காரணம் கதையல்ல.. இயக்குநரின் இயக்கத் திறமை.. ஒரு ஷாட்டில்கூட நீங்கள் குறை கண்டுபிடிக்க முடியாது.. ஒரு இடத்தில்கூட எடிட்டிங் பிசிறு தட்டவில்லை.. காட்சிகளை அளவோடு வெட்டி எடுத்திருக்கிறார்கள்.. இத்தனைக்கும் மேலாக இவரிடமிருக்கும் பலம் வசனங்கள்தான்.. எழுத்தாளரான ராஜுமுருகனுக்கு வட்டியும், முதலுமாகக் கிடைத்த வசனங்களும் படத்திற்கு ஒரு பிளஸ்..

டிரெயினில் யாருடனும் பேசாமல்.. ஒரே சீட்டில்.. வருடக்கணக்கானப் பயணிக்கும் ஒரு அய்யராத்து அம்பி.. பிச்சைக்காரனை கூட நிமிர்ந்து பார்க்காத குணம்.. அவரை பேச வைத்துவிட்டால் 50 ரூபாய் என்று டிரெயினில் பந்தயமெல்லாம் நடக்கிறது. ஆனால் முடியவில்லை.

ஒரே ஒரு நாள்.. ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தியர்கள் மீது தாக்குதல் என்றவுடன், பதறிப் போய் தனது ஒண்ணுவிட்ட அத்திம்பேருக்கு போன் செய்து.. அங்கே நிலைமை எப்படியிருக்கு என்று விசாரித்துவிட்டு தன் பையனை பார்த்துக்குங்கோ என்று அக்கறையுடன் சொல்லிவிட்டு மீண்டும் அதே வெறித்த பார்வையுடன் சன்னல் பக்கம் திரும்பிக் கொள்ளும் இந்த அம்பிகள்தான் மிகப் பெரிய சுயநலவாதிகள் என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும் ராஜூமுருகனின் உள்குத்து எத்தனை பேருக்கு புரிந்திருக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் இதே அய்யராத்து அம்பிதான்.. போஸ்டரில் இருக்கும் ஹீரோ ஆவடி ரயில்வே ஸ்டேஷனில் இருக்கிறார் என்பதை ராஜூ முருகனுக்கு போன் செய்து சொல்கிறார்.. ஆக எது தேவையோ அப்போதுதான் இவர்கள் பேசுவார்கள் என்பதை ராஜூ சொல்கிறாரோ என்னவோ..? நாம் எப்படி இதனை எடுத்துக் கொள்வது..?

தமிழ்நாடு மின் மிகை மாநிலம் ஆக வேண்டும் என்கிற ஆசையையும், குஜராத்தை போல ஒளிர வேண்டும் என்ற நப்பாசையையும் வசனத்தில் சொல்லியிருக்கிறார். ஆர்.டி.ஐ. சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியிலும் தோலுரித்திருக்கிறார்.. வசனங்கள்தான் இத்தனை நீள படத்தை கொஞ்சம் போரடிக்காமல் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.  சந்திரபாபுவின் வீட்டில் தண்ணயடித்துவிட்டு பேசும் பேச்சுக்களும்.. “பொம்பளைங்களுக்குள்ள சண்டையை மூட்டிவிட்டுக்கிட்டே இருக்கணும். அப்பத்தான் நாம நல்லாயிருக்க முடியும்..” என்ற சந்திரபாபுவின் பேச்சும் செம ரகளை..! தான் இடம் பெற்ற காட்சி முழுவதும் மெளனமாகவே வலம் வந்து கொண்டிருந்த திரை எம்.ஜி.ஆர். ஒரேயொரு காட்சியில் ஒட்டு மொத்த கைதட்டலையும் பெற்றுவிட்டார். இந்தத் திரைக்கதைக்காக ராஜூவுக்கு மீண்டும் ஒரு ஷொட்டு..!

பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் அவ்வப்போது காட்டப்படும் சென்னையின் கழுகுப் பார்வையுடன் தொடர்ச்சியான காட்சிகள் ஆச்சரியப்படுத்துகின்றன. அதிகாலை ரயில் நிலையத்தை அடிக்கடி காண்பித்து நமக்கு ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும், ஹாஸ்டல் காட்சிகளிலும்தான் கேமிராவுக்கு நிறைய வேலைகள் கொடுத்திருக்கிறார்கள்.. மிக இயல்பாக வெளிச்சம் உள்ள பகுதிகளிலேயே ஒளிப்பதிவு உறுத்தாமல் கேரக்டர்களை பதிவு செய்திருக்கிறார் வர்மா..  இந்த கிரேடிங் முறை மட்டும் இல்லாவிட்டால் ஒளிப்பதிவாளர்கள் செத்துவிடுவார்கள் என்பார்கள். இதில் அதனை பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதையே தேடித்தான் பார்க்க வேண்டும்..  

சந்தோஷ் நாராயணானின் இசையில ‘கல்யாணமாம் கல்யாணம்’ பாடலும், ‘ஆகாசத்துல’ பாடலும்தான் லயிக்க வைத்தன. பின்னணி இசையில் சோகத்தைத் ததும்பி தந்திருக்க வேண்டியது..  தராமல் போனதன் விளைவு ஒட்டு மொத்தமாய் படத்தின் அந்த பீலிங்கும் கிடைக்காமல் போய்விட்டது..

குறைகளே இல்லையா என்கிறீர்களா..? இருக்கிறது.. அதுதான் கிளைமாக்ஸ்.. 15 நிமிடங்களுக்கு முன்பாக முடிந்திருக்க வேண்டிய படம்.. மேலும் மேலும் இழுத்து புனேவரைக்கும் கொண்டு போயிருக்க வேண்டிய தேவையே இல்லை.. புனே ரயில்வே ஸ்டேஷனில் இருவரும் ஒருவரையொருவர் அடையாளம் காணுவதில் இருக்கும் லாஜிக் மிஸ்டேக் படத்தின் ஒட்டு மொத்த கலைத்தன்மையையும் குலைத்துவிட்டது.. ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் கிளைமாக்ஸில் அடித்த சிக்ஸரை போல மருத்துவமனையிலேயே படத்தை முடித்து நன்றி கார்டு போட்டிருக்கலாம். ஏன் இதனை இப்படி இழுத்துக் கொண்டு போனாரென்று தெரியவில்லை..!

முதல் படம் என்பதால் காதலைத் தொடாமல் படமெடுக்க முடியாது என்கிற நிதர்சன உண்மை இருந்தாலும், மாற்றுத் திறனாளிகளை கதையின் மாந்தர்களாக வைத்திருக்கும்போது அவர்கள் மீது எழும் பரிதாப உணர்வை ஏனோ இப்படம் நமக்குள் விதைக்கவில்லைதான். இதற்கு மூல காரணம் படத்தில் ஒரு காட்சியில்கூட இன்னொருவரின் உதவியினால் இவர்கள் தங்களது ஒரு நாள் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதற்கான காட்சிப் படிமத்தை இயக்குநர் வைக்கவே இல்லை.

ரோட்டில் கிடக்கும் ஹீரோயினின் அந்தக் கடிகாரத்தைக்கூட அத்தனை பிஸியான டிராபிக்கிலும் ஹீரோதான் போய்த் தேடிப் பார்த்து எடுத்து வருகிறார். வருவோரும், போவோரும் கண்டு கொள்ளாமல் செல்கிறார்கள் என்பதை தொடர்ந்து காட்டியிருப்பது நம்பத் தகுந்ததாக இல்லாமல் வலிந்து திணிக்கப்பட்டதாகவும் போய்விட்டது.

படம் முடிந்து வெளியே வரும்போது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் அவல வாழ்க்கையை.. அவர்களைப் பற்றிய ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டோம்.. பார்த்தோம் என்று சொல்ல முடியாத அளவுக்கு படம் நமக்குள் காதல் காவியமாக வியாபாதித்ததுதான் ராஜூமுருகனே எதிர்பாராதது..!

படத்தில் தவிர்த்திருக்க வேண்டிய ஒரே விஷயம்.. ஹீரோவின் நண்பர், பார்வையற்றவரான இளங்கோவும் மது அருந்துவதை போன்று காட்சி வைத்திருப்பதுதான். இப்படி நிஜத்திலும் நடக்கிறதுதான். எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு நாள் நான் பார்த்தபோது வரிசையாக அமர்ந்திருந்த 5 பார்வையற்ற ஆண்களின் கைகளில் சிகரெட்.. திக்கென்றாகிவிட்டது. யார் இதனை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது.. கொடுமையல்லவா..?  இந்தப் படத்தை மற்றவர்களின் துணையுடன் பார்க்கவிருக்கும் பார்வையற்றவர்களின் மனதில் இந்தக் காட்சி மட்டும் ஏதேனும் விபரீதத்தை ஏற்படுத்துவிடக் கூடாது என்று கர்த்தரிடம் பிரார்த்திக்கிறேன்..

100 லாஜிக் மீறல்கள்.. 1000 ஓட்டைகள் என்று பலரும், பலவும் பேசினாலும்.. ஒரு புதுமுக இயக்குநர் இப்படியொரு கதையை கருவாக வைத்து.. தைரியமாக முனைந்து... இயக்கத்தில் ஒரு சிறிய தவறுகூட இல்லாமல் இயக்கிக் காண்பித்திருப்பதற்கு தமிழ்த் திரையுலகமே ராஜூ முருகனுக்கு ஒரு சல்யூட் அடிக்க வேண்டும்..!

நன்றிகள் ராஜூ முருகனுக்கு..!


நன்றி truetamilan

SOORYA FESTIVAL OF DANCE & MUSIC 30.05.14

.