சைத்தான்
எப்போதும் வித்தியாசமான முயற்சிகள் தொடர்ந்து செய்பவர் விஜய் ஆண்டனி. இதே வருடத்தில் பிச்சைக்காரன் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இவர் மீண்டும் சைத்தான் மூலம் களம் இறங்கியுள்ளார். இந்த முறையும் ரசிகர்களை கவர்ந்தாரா பார்ப்போம்.
கதைக்களம்
விஜய் ஆண்டனி ஒரு IT கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார், அழகான பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார்.
அப்போது தான் அவர் காதில் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. அந்த குரல் இவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது.
மேலும் அந்த குரல் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் பெயரை திரும்ப திரும்ப சொல்கிறது.
இதன் பின் ஜெயலட்சுமியை தேடி விஜய் ஆண்டனி போக, அவரால் அவர் குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதன் பின் என்ன ஆனது, ஜெயலட்சுமி யார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
விஜய் ஆண்டனி பாய் வேஷம் போட்டாலும் சரி, ஐயர் வேஷம் கட்டினாலும் சரி அப்படியே பொருந்தி போகிறார். அப்பாவி லுக்கிற்காகவே அளவெடுத்து செய்தவர் போல, தனக்கு அடிக்கடி கேட்கும் குரலை கண்டு அவர் பயப்படும் போது நம்மையும் பயத்தில் ஆழ்த்துகிறார். ப்ளாஷ் பேக் காட்சிகளில் வரும் வாத்தியார் கதாபாத்திரம், விஜய் ஆண்டனி நடிப்பில் எத்தனை முதிர்ச்சி பெற்றுள்ளார் என்பதை காட்டுகின்றது.
அருந்ததி நாயர் தான் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம், அதை உணர்ந்து அவரும் நடித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன், சாருஹாசன் என பலரும் சில நேரம் வந்தாலும் தங்கள் கதாபாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.
படத்தின் முதல் பாதி கதை எதை நோக்கி செல்கின்றது, யார் இந்த ஜெயலட்சுமி? என்பதிலேயே ஆடியன்ஸை திரையில் ஒன்ற வைக்கின்றது. அதிலும் இடைவேளை டுவிஸ்ட் அடுத்து என்ன என எதிர்ப்பார்த்து உட்கார வைக்கின்றது.
படத்தின் இரண்டாம் பாதி சைக்கோ த்ரில்லரிலிருந்து வேறு ஒரு களத்தில் பயணிக்கின்றது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வேகமாக சென்றிருக்கலாமோ என நினைக்க வைக்கின்றது.
கிளைமேக்ஸில் விஜய் ஆண்டனிக்குள் ஏற்படும் மாற்றம் அதன்பின் அவர் செய்யும் வேலை என அனைத்தும் கமர்ஷியல் ஆடியன்ஸை கவரும் வகை. இசையும் அவரே என்பதால் மிரட்டியுள்ளார். அறிமுக இயக்குனராக ப்ரதீப் இரண்டு மணி நேரத்தில் இத்தனை விஷயங்களையும் தெளிவாக சொல்லி முடித்ததிலேயே அவர் வெற்றி பெற்றுவிட்டார்.
க்ளாப்ஸ்
விஜய் ஆண்டனியின் யதார்த்தமான நடிப்பு, சொல்ல வந்த விஷயத்தை மிகவும் தெளிவாக கூறியவிதம்.
படத்தின் பின்னணி இசை.
பல்ப்ஸ்
விஜய் ஆண்டனி மாற்றத்திற்கு இரண்டாம் பாதியில் சில காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதற்கான காட்சி அமைப்புகளில் கொஞ்சம் அழுத்தம் இல்லை. குறிப்பாக வில்லன் கதாபாத்திரம்.
மொத்தத்தில் விஜய் ஆண்டனி மட்டுமில்லை, நம்மையும் ஜெயலட்சுமி யார் என்று தேட வைத்துவிடுகிறார்கள்.