.
ஊடறு - பெண் படைப்பாளிகளின் தொகுப்பில் இணைந்திருந்த தேவா
சிலப்பதிகார இந்திர விழாவின் மகிமையை எழுதியவர் - ஜெர்மனியின் கோடை விழாவையும் பதிவுசெய்தார்
(கடந்த வாரத்தொடர்ச்சி)
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் மாதாந்த பௌர்ணமி விழாக்களுக்கு தேவா நாடகங்களும் எழுதித்தந்தார். அதில் ஒன்று அரிச்சந்திரன் - மயான காண்டம். சந்திரமதி பாத்திரமேற்று நடிப்பதற்கு எவரும் முன்வராதமையினால் நான் சந்திரமதியானேன்.
தேவாவும் எனது தங்கை ஜெயந்தியும் எனக்கு ஒப்பனை செய்து, எனது கோலத்தைப்பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர். ஆனால் நாடகத்தில் மயானகாண்ட காட்சியில் சந்திரமதி, லோகிதாசனின் உடல்மீது விழுந்து கதறிக்கதறி அழுதபோது அவர்கள் இருவரும் திரைக்குப்பின்னால் நின்று கண்கலங்கியதாக அறிந்தேன். சில நாட்கள் அவர்கள் என்னை சந்திரமதி என்றே அழைத்தனர்.
சந்திரமதியின் கழுத்தில் விழுந்த அட்டைக்கத்தி, வீசிய வேகத்தில் மடங்கியதனைப்பார்த்து சபையில் சிரித்தனர்.
இதனால் சிறிதுகாலம் அந்த அட்டைக்கத்தி பற்றியும் நினைத்து நினைத்து சிரித்தனர்.
அரிச்சந்திரன் நாடகத்தின் சந்திரமதி உங்களை அழவும் சிரிக்கவும் வைத்துவிட்டாள் என்று நான் சமாளித்தேன்.
திருஞானசம்பந்தர் - திருநாவுக்கரசர் சந்திக்கும் காட்சியையும் தேவா நாடகமாக எழுதித்தந்தார். அதில் வயதில் குறைந்த பிள்ளைகள் நடித்தனர்.
தேவாவுக்கும் நாடகமேடைப் பரிச்சயம் இருந்தது.
பாடசாலையில் படித்த காலத்தில் மாணவர் இலக்கிய மன்றத்தில் அவர் அவ்வையார் சுட்டபழம் சாப்பிட்ட காட்சியில் அவ்வையாராக நடித்தவர்.
எனது தொடக்க கால சிறுகதைகளை முதலில் அவரிடம் காண்பித்த பின்னரே இதழ்களுக்கு அனுப்புவேன்.
இவ்வாறு கலை, இலக்கியப்பயணத்தில் இணைந்திருந்தவர், திருமணமாகி ஜெர்மனுக்கு சென்றதனால் பெரிய வெற்றிடம் தோன்றிய தாக்கம் நீடித்திருந்தது.
குறுகிய இரண்டு ஆண்டு (1972 - 1974 ) காலத்துள் மல்லிகை, பூரணி, புதுயுகம் முதலானவற்றில் தேவி என்னும் புனைபெயரில் எழுதி கவனத்தை பெற்றிருந்தமையால், " அவர் எங்கே---? " என்று மல்லிகை ஜீவாவும் பூரணி மகாலிங்கமும்,
புதுயுகம் கனகராஜனும் கேட்டபொழுது அவருடைய திடீர் பயணம் பற்றிச்சொன்னேன்.
" இனி அவர் எழுதப்போவதில்லை " - என்று மல்லிகை ஜீவா மிகுந்த ஏமாற்றத்துடன் சொன்னார்.
பெண் எழுத்தாளர்கள் பலர் திருமணத்தின் பின்னர் இலக்கியத்திற்கு ஓய்வுகொடுக்கின்றனர் என்ற பொதுவான கருத்து அப்போது நிலவியது.