இலங்கை – இந்திய ஒப்பந்தம்
கைச்சாத்திடப்பட்டு, இந்த ஆண்டுடன் 35 ஆண்டுகளாகின்றன.
1987 இற்குப்பின்னர், அதாவது குறிப்பிட்ட ஒப்பந்தம் உருவாகியபின்னர்
இலங்கையிலும் இந்தியாவிலும் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
ராஜீவ்காந்தி, ஜே.ஆர்.
ஜெயவர்தனா, பிரேமதாச ஆகியோர் மறைந்துவிட்டனர். இவர்களில் இருவர் தற்கொலைக் குண்டுதாரிகளினால்
கொல்லப்பட்டவர்கள். அந்த உடன்படிக்கையில் ஒப்பமிட்ட ஜே.ஆர். இயற்கை மரணமெய்தினார்.
1987 இற்கும் மலர்ந்துள்ள
2022 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கையிலும் இந்தியாவிலும் அதிபர்கள், பிரதமர்களும்
மாறிவிட்டனர்.
1987 இல் பிறந்த குழந்தைகள்,
திருமணமாகி
பெற்றோர்களுமாகியிருப்பர்.
2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்த போர்க்காலத்தில் பிறந்த குழந்தைகளும்
13 வயதை நெருங்கிவிட்டனர்.
எனினும் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தரும் என்ற நம்பிக்கையை
உருவாக்கிய அந்த ஒப்பந்தம் இதுவரையில் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இன்றளவும்
அது ஏட்டுச்சுரக்காய்தான்.
அந்தச்சுரக்காயை வைத்துக்கொண்டு
பேசுகிறார்கள்… பேசுகிறார்கள்… முடிவற்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ஷவும்
இந்தியப் பிரதமர் மோடியும் சில தடவைகள் இலங்கையிலும்
இந்தியாவிலும் மற்றும் சில நாடுகளில் நடந்த உலக மாநாடுகளிலும் சந்தித்து பேசியும்விட்டனர்.
மீண்டும் சந்திப்பார்கள்.
பரஸ்பரம் கைகுலுக்குவார்கள். சுகநலன் விசாரிப்பார்கள். பருவகாலம் பற்றி பேசுவார்கள்.
அவ்வாறாயின், 35 வருடத்திற்கு முன்னர்
உருவான இந்த ஒப்பந்தம் பற்றி ஏதும் பேசமாட்டார்களா..?
இலங்கையில் இன்னமும் தேசிய
இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்ற உண்மை இந்தியப்பிரதமருக்கு இதுவரையில் தெரியாதா..? குறிப்பிட்ட
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13 ஆவது திருத்தச்சட்டத்தின்
பிரகாரம் மாகாணங்களுக்குரிய அதிகார பரவலாக்கம் நடக்கவில்லை என்பதாவது தெரியாதா..?