கற்றுத் தந்தபாடம் அர்த்தமுள தன்றோ ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


விட்டுவிடு என்றால் விட்டுவிட மாட்டார்
செத்திடுவாய் என்றால் செவிமடுக்க மாட்டார்
தொற்றிவந்த கொரனா கற்றுத்தந்த பாடம்
விட்டுவிட்டு விலகி நிற்கவைத்த திப்போ   !

மதுவருந்தும் பலபேர் மாறிவிட வைத்து                                 
புகைவிரும்பும் பலபேர் அதைநினையா நிற்க                            
தனிமை எனும்பாடம் தந்ததிந்த கொரனா                                    
அதுவெமது வாழ்வில் அதிகநன்மை யன்றோ !

சூழல் தூய்மையாக துணையாக நின்று                                
வீடு கோயிலாக ஆகிவிட வைத்து                                    
பாடசாலை வீட்டில் புகுந்திடவே வைத்த                               
பாடமது எமக்கு நல்திருப்பம் அன்றோ    !

கடை  உணவெமது வயிறடையா வண்ணம்                             
வீட்டுணவு உடலைக் காத்திடவே வைத்து                                  
கூட்டமதில் இணையா குடும்பதில் இணைய                           
காட்டி நின்றபாடம் கருத்தினிலே கொள்வோம் !

அஞ்சலிக்குறிப்பு: தமிழ் ஈழக்கனவுடன் வாழ்ந்த மண்டூர் மகேந்திரன் முருகபூபதி


தமிழ் ஈழக்கனவுடன் வாழ்ந்த மண்டூர் மகேந்திரன் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்துள்ளது. 
1970 இல் உருவான  ஶ்ரீமா – என். எம். பெரேரா – பீட்டர் கெனமன் கட்சிகளின் கூட்டரசாங்கம் ஜனநாயக சோஷலிஸ குடியரசை நிறுவியதையடுத்து.,  சட்டமேதை என நன்கு அறியப்பட்ட  கொல்வின் ஆர். டீ. சில்வா எழுதிய புதிய அரசியல் அமைப்பின் எதிரொலியாக , அதுவரையில் சமஷ்டி கோரிவந்த தமிழரசுக்கட்சியினரும் தமிழ் இளைஞர் பேரவையினரும் அந்த அரசியல் அமைப்பினை தீவிரமாக எதிர்க்கத் தொடங்கினர்.
அதே சமயம் , அந்த கூட்டரசாங்கம் சில முற்போக்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியது. உள்நாட்டு உற்பத்தியை பெருக்கியதுடன், பல நிறுவனங்களை அரசுடைமையாக்கி இலங்கை வானொலியை – ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமாக்கியது.  திரைப்படக்கூட்டுத்தாபனம் அமைத்து உள்ளுர் சிங்கள – தமிழ் சினிமாவுக்கும் ஊக்கம் கொடுத்தது.
அத்துடன் தென்னிந்திய வணிக இதழ்களின் மீதும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால், இலங்கையில் பல தமிழ் சிற்றிதழ்களும் வெளிவரத்தொடங்கின. வீரகேசரி நிறுவனமும் மாதம் ஒரு நாவல் திட்டத்தில் பல ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வெளியிடத்தொடங்கியது.
அஞ்சலி, ரோஜாப்பூ ,  மாணிக்கம் ,  தமிழமுது,  பூரணி  முதலான கலை இலக்கிய இதழ்களும் வெளிவரத்தொடங்கின.
இக்காலப்பகுதியில்  கொழும்பில் இயங்கிய தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் இணைந்து இயங்கியவர்தான் மண்டூர் மகேந்திரன்.
அச்சமயம் கொழும்பில் புதுக்கடை பிரதேசத்தில் இயங்கிய இலங்கை வங்கிக்கிளையில் பணிபுரிந்த இணுவையூர் இரகுபதி பால ஶ்ரீதரனும் அவ்விளைஞர் பேரவையில் முக்கிய பங்கெடுத்திருந்தார்.
இவர் கலை, இலக்கிய ஆர்வம் மிக்கவர்.  இவருடன் அதே வங்கியில் பணியாற்றிய கைலாசபிள்ளை என்பவரின் மனைவி சரோஜினியும்  கலை, இலக்கிய ஆர்வத்துடன் மாணிக்கம் என்ற மாத இதழை தொடங்கினார்.
இந்த இதழ் கொழும்பு பாமன்கடையில் கல்யாணி வீதியில் அமைந்திருந்த கைலாசபிள்ளை – சரோஜினி தம்பதியரின் இல்லத்திலிருந்து வெளிவந்தது.

தாய்வீடு அச்சுப் பத்திரிகை இனி ஒலி இதழாகவும் - படிக்கலாம் & கேட்கலாம் - கானா பிரபா


கனடாவில் இருந்து வெளிவரும் “தாய்வீடு” மாதப் பத்திரிகை பல்லாண்டுகளாக நடப்புச் செய்தி விமர்சனங்கள், வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு குறித்த திரட்டுகளோடு வெளிவரும் கனகாத்திரமான இதழாகும்.

இன்று தொழில் நுட்பத்தின் அடுத்த பாய்ச்சலாக ஒலிப்புத்தகங்கள் பெருகி வரும் சூழலில் தாய்வீடு பத்திரிகை இந்த ஜூன் மாத இதழில் இருந்து ஒலியிலும் பயணிக்க ஆரம்பிக்கிறது. அதாவது குறித்த பத்திரிகையின் கட்டுரைகளை அழுத்தும் போது அது ஒலி ஊடகம் வழியாக வாசிக்கின்றது. விளம்பர பக்கத்தை அழுத்தினால் குறித்த விளம்பரதாரரின் இணையப் பக்கம் செல்கிறது.

தமிழை வாசிக்கப் பழகுவோருக்கும்மொழியைச் செவி வழியாக உய்த்துணர்வோருக்கும் இந்த ஒலி இதழ் முயற்சி ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றது.

பத்திரிகைத் துறையில் புதுமை படைத்திடும் தாய்வீட்டுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

இந்த ஒலி வழி வாசிப்புச் செயன்முறை குறித்த என் காணொளிப் பகிர்வு இது.






'வடக்கின் கல்வி வளர்ச்சி?' -பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்-




















'2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேற்று அடிப்படையிலான மாகாணத் தர வரிசையில் வடமாகாணம் கடைசி நிலை.' என்று எல்லா சமூக வலைத்தளங்களும் கண்ணீர் வடிக்கின்றன.

இதற்கான காரணங்கள், காரணங்களை வேரோடு களைவதற்கான வழிமுறைகளைக் காண்பதை விடுத்து, பெரும்பாலும் புள்ளிவிவரங்களை மட்டும் அடுக்குவதையே அவ்வலைத்தள செய்திகளில் காண, சலிப்பேற்படுகிறது. புள்ளிவிவரங்கள் போதாது என்று, கணினி மென்பொருளின் உசாத்துணையில் தயாரான சலாகை வரைபு, வட்ட வரைபு என, ஒரே அமர்க்களம். அந்தப் புள்ளி விவரங்களில் பலவற்றை உபயம் செய்தது பரீட்சைத் திணைக்களம். ஏனைய சிலவோ வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அறுவடை.
 
பாவம், பரீட்சைத் திணைக்களம். பலரைப் பிழிந்து, பெறுபேற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு, புள்ளி விவரங்களை, வரைபுகளை வெளியிட்டால், எல்லா எழுத்தர்களும் அவ்வரைபுகளால், இணைய வெளிகளை நிரப்பி, இனி பரீட்சை எடுக்கவுள்ள மாணவர்களை வெருட்டித் தள்ளுகின்றனர்.
 
என்றுமில்லாதவாறு இம்முறை வடமாகாணக் கல்விநிலை குறித்து ஒரு திடீர் அக்கறை நம் கல்வியாளர்களிடம் பெருக்கெடுத்திருக்கிறது. அவர்களைப் பார்த்து ஒரேயொரு கேள்வி.
'க.பொ.த. சா.த. பெறுபேற்று அடிப்படையிலான மாகாணத் தரவரிசையில், இந்த முறை மட்டும்தானா வடமாகாணம் கடைசிக்கு வந்துள்ளது?' இல்லையே, 
இது பல்லாண்டுகளாக உள்ள தொடர் நிலைமைதானே.
 
நீங்கள் அனைவரும் தரவுகளை இறக்கும் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத் தளத்தையே பாருங்கள். கடந்த 2014 இலிருந்து வடமாகாணம் கடைசியாகத்தான் உள்ளது. 
சென்ற ஆண்டு (2018 பரீட்சை) மட்டும்தான், ஒரு சின்ன முன்னேற்றம். ஆம், வட மாகாணம் கடைசிப் பிள்ளையிலிருந்து கடைசிக்கு முதல் பிள்ளையாக முன்னேறியுள்ளது. ஆனால், அதற்காக மகிழ்ச்சியடைய முடியாது.

தென்னாடுடைய சிவனே போற்றி ! துரும்பைத் தூணாக்கும் ஊடகத்துறையில் நேர்ந்த அனுபவம் !! முருகபூபதி


பிளேட்டோ என்ற கிரேக்க தத்துவாசிரியர் பற்றி அறிந்திருப்பீர்கள். இவர் சோக்ரடீஸின் மாணவர். அரிஸ்டோட்டலின் குரு.
இரண்டு பெரும் ஆளுமைகளுக்கு இடைப்பட்ட இவரும் ஒரு எழுத்தாளர்தான். தத்துவஞானிதான்.
பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். அதனால், பிளேட்டோவுக்கும் தனது எழுத்தாளர் வர்க்கம் பற்றி நன்கு தெரியும்.  ஒரு சமயம் எழுத்தாளர்களின் ஆக்கினை தாங்கமுடியாமல்,  “  எல்லா எழுத்தாளர்களையும் நாடு கடத்தவேண்டும்   “ என்று சொன்னதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
எழுத்தாளர்களின் குணாதிசயம் எத்தகையது..?  என்பதை சமகால முகநூல் எழுத்தாளர்களிலிருந்தும் எடைபோடமுடியும்.
எழுத்தாளர்களிடையே கருத்தொற்றுமையை தோற்றுவிப்பதும் சிரமம் என்பதையும்  அறிவீர்கள். இந்த பாரம்பரிய அலகை  சிவபெருமான் – நக்கீரர் தொடக்கம், கவிச்சக்கரவர்த்தி கம்பன் – ஒட்டக்கூத்தர்  முதலாக  மட்டுமல்ல, இன்றைய நவீன உலகின் எழுத்தாளர்கள் வரையில் பார்க்கமுடியும்.
ஷாம்பூ கண்டுபிடிக்கப்படாத  சீயக்காய்பொடி  காலத்திற்கு முற்பட்ட காலத்தில்,  பெண்களின் கூந்தலின் மணம் செயற்கையா…?  இயற்கையா..? என்ற பட்டிமன்றத்தில் மோதுண்டபோது, சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத்திறந்து நக்கீரனை எரித்தார். அதே நெற்றிக்கண்ணினால்தான்  ஆறுமுகனையும் படைத்தார்.  அவரது பிள்ளைகள் விநாயகருக்கும் ஆறுமுகனுக்கும் நெற்றிக்கண்ணிருந்திருந்தால், அவர்களுக்கும் பிள்ளைப்பாக்கியம் கிடைத்திருக்குமா…?  ஆனால்,  அவர்களும் போயும்  போயும் ஒரு மாம்பழத்திற்காகத்தான் சண்டை பிடித்தார்கள்!
ஏ.பி. நாகராஜனின்  திருவிளையாடல் – கந்தன் கருணை திரைப்படங்களையும்  எனது பாட்டி தையலம்மாவுடன்                            ( அம்மாவின் தயார் )  சென்று பார்த்தபோதுதான் இதுபற்றி ஒருநாள்  அவரிடம்  துடுக்குத்தனமாக கேட்டேன்.  பாட்டி முருகபக்தை.  கதிர்காமம்  சென்று மொட்டை அடித்து காவடி எடுத்து ஆடியவர்.   எனது கேள்விக்குப் பாட்டி, ,   “ எம்பெருமான் சிவனால், ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்  “ என்றார். 

'அமுதம் ஈந்தான்' -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-






லகம் உய்யக் காவியம் செய்தவன் நம் கம்பன்.
காலத்தால் முன்னும், பின்னும், நடுவும் நின்ற,
புலவோர்தம் சிந்தனைகள் அனைத்தையும்,
தன் காவியத்துள் அமைத்துக் காட்டி விந்தைசெய்தான் அவன்.
கம்பனுக்குப் பின் வந்த கவிஞர்கள் அனைவரும்,
அவனைப் போற்றிப் புகழ்ந்தமை வெளிப்படை.
'கவிச்சக்கரவர்த்தி' எனும் பட்டத்திற்கேற்ப,
மற்றைக் கவிஞர்கள் பணியும்படியாய் வாழ்ந்த,
கம்பனது புலமை தனித்துவமானது.
🌊🌊🌊🌊
வை.மு.கோபாலக்கிருஷ்ணமாச்சாரியார் போன்ற பேரறிஞர்கள் செய்த,
கம்பகாவிய உரை நூலின் ஆரம்பத்தில்,
'தனியன்கள்' எனும் தலைப்பில்,
மற்றைப்புலவர்கள் கம்பனைப் புகழ்ந்து பாடியதான,
சிலபாடல்கள் பதிவாகியுள்ளன.
அவற்றுள் சில கற்றோர்தம் இதயத்தைப் பெரிதும் களிக்கச் செய்வன.
இக்கட்டுரையில் அக்கவிதைகளுள் ஒன்றை, 
'ஒருசோற்றுப் பதமாய்' விளக்க முற்படுகிறேன்.
🌊🌊🌊🌊
ஒருவருடைய ஆற்றலால் வசீகரிக்கப்பட்டு,
அவரைத் தலைவராய் ஏற்கும் ஒருவன்,
அத் தலைவன் போலவே தானும் செயற்பட விரும்புதல் இயற்கை.
இன்றைய இளைஞர் பலர் நடிகர்கள்பால் ஈடுபட்டு,
அவர்களைப் போலவே செயல்புரிய முனைவது இதற்காம் உதாரணம்.
🌊🌊🌊🌊
கம்பன் திருமாலின் கல்யாண குணங்களில் தன் மனதைப் பறிகொடுக்கிறான்.
அதனால் அத்திருமாலை 'அவர் தலைவர்' என்று உரைத்து,
தன் மனத்துள் அவரைத் தலைவராய் வரிந்து கொள்கிறான்.
அங்ஙனம் வரிந்து கொண்டதால்,
திருமாலின் குறித்தஒரு செயல் போல,
தானும் ஒன்றை இயற்ற விரும்புகிறான்.
🌊🌊🌊🌊

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 19 – பூரிகை மற்றும் வாங்கா- சரவண பிரபு ராமமூர்த்தி


பூரிகை மற்றும் வாங்கா - ஊதுகருவிகள்
உய் என்னும் மொழியற்ற வாயொலியின் பயனாய் (ஊய்தல் வினைச் சொல் வழியே) உயிர் என்னும் சொல் பிறந்தது போல், புர் என்னும் மொழியற்ற வாயொலியின் பயனாய் பூருதல் என்ற வினைச்சொல் ஊதுதல் என்ற பொருளை உள்நிறுத்தும். இது கொஞ்சம் திரிந்து, பூரித்தல் என்ற வினைச்சொல் தொனித்தல் என்ற பொருளிலும், மூச்சை உள்ளிழுத்தல் என்ற பொருளிலும் எழும். பூரி என்ற பெயர்ச்சொல் தான் இந்த கருவியின் பெயராகி போனது. பூரிகை என்பதும் இதுவே.

பூரிகை  திருசின்னத்தை ஒத்த அமைப்பையுடையது. எக்காளத்தைப் போல புனல் வடிவிலான அனசும் நீண்ட நேரான உலவு பகுதியும் உடையது. கிளாரினெட்டை போன்று வளைந்த வடிவம் கொண்டது வளவுபூரி. வளைந்து இருப்பதால் இது வளவுபூரி. முற்றிலும் இயற்கையாக இயங்கவல்லது. எக்காளத்தைப் போல, தட்டையான அமைப்பையுடைய அனசு, நீண்ட உலவு, நடுவில் வளைவெடுத்து, பின்னர் மீண்டும் நீண்டு நிற்கிறது.

வாங்காவும் கிளாரினெட்டை ஒத்த வடிவம் கொண்டது. ஆனால், முற்றிலும் இயற்கையாக இயங்கவல்லது. எக்காளத்தைப் போல, பெரிய புனல் வடிவிலான அனசு, நீண்ட உலவு, நடுவில் வளைவெடுத்து, பின்னர் மீண்டும் நீண்டு நிற்கிறது. வாங்கா என்ற பறவையின் ஒலிக்கு இணையான இசையை வெளிப்படுத்துவதால் இப்பெயர். வாங்கா என்கிற பறவையின் ஓசை போலவே ஒரு குழலின் ஓசை இருந்ததாக சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. இந்தப் பறவையின் பெயரிலேயே தான் தற்காலத்தில் வாங்கா கருவி அழைக்கப்படுகிறது.
வங்காக் கடந்த செங்காற் பேடை
எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
குழலிசைக் குரல் குறும்பல வகவும்”                       (குறுந்)

வாங்காவும் பூரிகையும் அனசு பகுதியின் அமைப்பில் வேறுபடுகிறது. பூரிகையின் அனசு சற்று சிறியதாகவும் தட்டையாகவும் வாங்காவின் அனசு மிகவும் பெரிதாகவும்(பெரிய புனல் வடிவில்) இருக்கின்றது.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -18 வள்ளுவன் வகுத்த அரசியல் பற்றிய எனது கவியரங்கு கவிதை ! சமகாலமும் வேலணை திருக்குறள் மாநாடும் !!


இலங்கையில் சப்ததீவுகள் பற்றி அறிந்திருப்பீர்கள்.
நயினா தீவு, புங்குடுதீவு, அனலை தீவு, எழுவை தீவு, நெடுந்தீவு. இவை தவிர பாலைதீவு, கச்சதீவு முதலான தீவுகளும் இலங்கையைச் சூழ்ந்துள்ள இந்துமகா சமுத்திரத்தாயின் குழந்தைகளாக பூகோளப்பரப்பில் காணப்படுகின்றன.
குறிப்பிட்ட தீவுகளுக்குச்செல்லும் மார்க்கத்தில் வருகிறது வேலணை. அதனை வேலணை  என அழைப்பதற்கு காரணம் என்ன..? தமிழ் கலைக்களஞ்சியம் இவ்வாறு சொல்கிறது:  
வேலணை என அழைக்கப்பட என்ன காரணம் என்று தெளிவான பதிவுகள் இல்லாவிடினும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றன.    வேல் + அணை = வேலணை "வேல் அணைந்த இடம்" என்றும்,  முருக வழிபாடு இந்தத் கிராம மக்களிடம் முதன்மை பெற்றிருந்ததனால் “வேலன் இணைந்த இடம்” என்றும் பின்னாட்களில் மருவி,  வேலணை எனவும், பண்டை நாளில் வேலன் என்ற தலைவனின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வந்தமையினால் வேலணை எனப் பெயர் பெற்றது என்றும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றன.  மேலும்  கடம்பன் என்ற கடற்கொள்ளையனை அடக்குவதற்காக வேலன் என்ற சங்ககால தென்னாட்டு இளவரசன் வந்து தரையிறங்கிய இடம் வேலணை என்றும் வெண்ணிலவுப் பெண்ணரசி  என்ற நாவலில் எழுத்தாளர்    மீ. பா. சோமு குறிப்பிட்டுள்ளார்.

ஒளிமயமான பாதையில் நாடு




"கொரோனா வைரஸ் நாட்டில் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள இன்றைய சூழலில் 'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய வேலைத் திட்டத்தை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. குறிப்பாக வேலையற்ற  இளைஞர், யுவதிகளுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாட்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்று பலமான  பெரும்பான்மை அரசாங்கத்தை  அமைக்கும் என்ற நம்பிக்கை  மக்கள் மனங்களில் நாளுக்கு நாள்  வளர்ந்து வருகின்றது. தற்போது  ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் நாட்டைக் கட்டியெழுப்பும் பல்வேறு திட்டங்கள் இதற்கான சிறந்த சாட்சியங்களாக அமைந்திருக்கின்றன.
காலத்திற்குக் காலம் பதவிக்கு வரும் அரசாங்கங்கள் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தாலும் அவற்றில் பெரும்பாலானவை நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை. அத்தோடு காலத்துக்குக் காலம் முன்வைக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவையும் அவ்வாறு முழுமை பெறாமல் அல்லது ஏதோ காரணத்திற்காக தடைப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கு நிலையற்ற அரசியல், ஸ்திரமற்ற அரசாங்கம், வகுக்கப்படும் திட்டங்களை முறையாக முன்னெடுக்கப்படாமை, பொருத்தமில்லாத துறை சார்ந்த தலைமைகள் எனப் பல காரணங்களைக் கூறலாம்.

மட்டக்களப்பில் வறிய குடும்பங்களுக்கு வீடுகள்




கிராமத்திற்கு ஒரு வீடு: ஜனாதிபதியின் நிகழ்ச்சித் திட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபிட்சமான நோக்கு' எனும் எண்ணக்கருவுக்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில் 'உங்களுக்கு வீடு, நாட்டுக்கு எதிர்காலம்' எனும் திட்டத்திற்கமைய 'கிராமத்திக்கு ஒரு வீடு' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலக பிரிவின் சந்திவெளி பிரதேசத்திலும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவின் ஐயங்கேணி பிரதேசத்திலும் தலா ஆறு இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இரு வீடுகள் கடந்த வியாழனன்று பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
கிரான் பிரதேச செயலகப் பிரிவின் சந்திவெளி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டின் திறப்பு விழா இப்பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக நாடாவை வெட்டி திறந்து வைத்து வறிய குடும்பம் ஒன்றிடம் புதிய வீட்டினைக் கையளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவின் ஐயங்கேணி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டினை அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா திறந்து வைத்து தெரிவு செய்யப்பட்ட மற்றொரு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பயனாளிக்கு கையளித்ததாக மாவட்ட செயலக ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இலங்கைச் செய்திகள்


கதிர்காம யாத்திரைக்கு இந்து பக்தர்களை அனுமதிக்குமாறு மட்டு. தேரர் கோரிக்கை

பொறுப்பை தட்டிக் கழிக்க வேண்டாம்; ஜனாதிபதி காட்டம்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பலம் மிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

தனியாருக்கு மணல் அகழ அனுமதி வழங்கியதற்கு எதிராக போராட்டம்

கருணா யார் என்பது கிழக்குக்கு மட்டுமல்ல முழு உலகுக்குமே தெரியும்

காணி எல்லைப்படுத்தலுக்கு புதுக்குடியிருப்பில் எதிர்ப்பு

ரணில், மைத்திரி உள்ளிட்ட நால்வரிடம் வாக்குமூலம் பெற உத்தரவு

தமிழர்கள் ஒன்றுபடாவிட்டால் இருப்பை இழந்து கையேந்தும் நிலைமை ஏற்படும்

திரையரங்குகள் ஜூலை 27 இல் திறப்பு

வடக்கு, கிழக்கில் த.தே.கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும்!

5 மணிநேரத்தின் பின் CIDயிலிருந்து ரிஷாட் வெளியேறினார்

புலனாய்வு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு

பொத்துவிலில் சலசலப்பு; கட்சிபேதமின்றி களமிறங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்




கதிர்காம யாத்திரைக்கு இந்து பக்தர்களை அனுமதிக்குமாறு மட்டு. தேரர் கோரிக்கை



ஜனாதிபதி, பாதுகாப்பு துறையினருக்கு அவசர கடிதம்
கதிர்காம பாதயாத்திரைக்கு எமது இந்து மக்கள் சென்று  நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிவிட்டு உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்பு துறையினரை மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் கேட்டுக் கொண்டுள்ளார்.   

உலகச் செய்திகள்


நியூசிலாந்தில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: அதிகாரி பலி

கொவிட்-19: ஆண்டிறுதியில் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய வாய்ப்பு

கறுப்பினத்தவரை கொன்ற அதிகாரி மீது குற்றச்சாட்டு

பீஜிங்கில் வைரஸ் பரவல் கட்டுக்குள்

ஆப்கானில் அமெரிக்க படையை 8,600 ஆக குறைப்பதற்கு திட்டம்

சீன அதிகாரிகளுக்கு தடை விதிக்க டிரம்ப் கையொப்பம்

நீருக்கடியிலான கேபிளிலும் சீனா – அமெரிக்கா பதற்றம்

உலகில் இடம்பெயர்ந்தோர் 80 மில்லியனை நெருங்கியது

நேபாளத்தின் புதிய வரைபடம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

ஜோர்தான் அமைச்சர் பலஸ்தீனம் விரைவு

தெற்கின் தூதர்களை வடகொரியா  நிராகரிப்பு



நியூசிலாந்தில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: அதிகாரி பலி



நியூசிலாந்து ஒக்லாந்து நகரில் வழக்கமான போக்குவரத்து தரிப்பிடம் ஒன்றில் பொலிஸார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மற்றுமொரு பொலிஸார் காயமடைந்துள்ளார்.
வாகனத்தில் வந்திருக்கும் துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதோடு அவர் பிடிபட்டாரா என்பது பற்றி விபரம் வெளியாகவில்லை.
எனினும் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்று சுமார் நான்கு மணி நேரத்தின் பின் வீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் இருவரை கைது செய்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூசிலாந்து பொலிஸார் வழக்கமாக துப்பாக்கிகளை வைத்திருப்பதில்லை என்பதோடு, பணியின்போது அதிகாரி ஒருவர் கொல்லப்படுவது மிக அரிதான ஒன்றாக உள்ளது. கடைசியாக 2009 ஆம் ஆண்டே வீடொன்றில் தேடுதலில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸார் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளார்.   நன்றி தினகரன் 

மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 41 முருகபூபதி


ஜீவிகா, வீட்டு வாசலுக்குப்போவதும் திரும்பி வருவதுமாக இருந்தாள். இதுவரையில் எத்தனைமுறை அவ்வாறு நடந்திருப்பாள் என்று அபிதா மனக்கணக்குப்போட்டவாறு வெங்காயம் நறுக்கினாள்.
வரப்போவது யாராக இருக்கும்…? இன்னமும் ஜீவிகா சொல்லவில்லை. வரப்போகும் விருந்தினரின் பெயரும் தெரியாது! ஆணா, பெண்ணா என்பதும் தெரியவில்லை.
 “ என்னம்மா… கால் வலிக்கவில்லையா…? குட்டிபோட்ட பூனையைப்போன்று அங்கும் இங்கும் நடந்துகொண்டிருக்கிறீர்கள்…? அப்படி யார்தான் வரப்போகிறார்கள்…?  “ அபிதா கேட்டாள்.
 “ கொஞ்சம் பொறுங்க. வந்துவிடுவார்.  ஜா- எல கடந்துவிட்டதாகச் சொன்னார். “
 “ அப்படியென்றால், கொழும்பிலிருந்துதான் வருகிறரா…?  “
“  இல்லை, அதற்கும் அப்பால் பம்பலப்பிட்டியிலிருந்து வருகிறார். அவர் ஒரு கெமராமேன்.  எங்கள் அலுவலகத்தின் படப்பிடிப்பாளர்.  நான் செல்லும் ஊடகச்சந்திப்புகளுக்கெல்லாம் வாரவர்தான். அபிதா,  உங்களைப்பற்றியும் அவரிடம் சொல்லியிருக்கின்றேன். உங்கள் கைப்பக்குவத்தையும் அவர் ருசி பார்த்திருக்கிறார். இன்றைக்கு உங்களை நேரிலேயே பார்க்கப்போகிறார். மற்றது அபிதா,  அவர் வந்ததும்,  நான் அவருடன் வெளியே போய்வரவேண்டியிருக்கும்.  இந்த நிகும்பலையில் கடற்கரைப்பக்கம், டுவரிஸ்ட்  ஹோட்டல் பக்கம் எல்லாம் அவரை அழைத்துப்போகவேண்டியிருக்கும்.  படங்கள் எடுக்கவேண்டும் என்றார் “
 “ அப்படியா…? காரில் வருகிறாரா..? “ 
 “ இல்லை… அவரிடம் மோட்டார் சைக்கிள் இருக்கிறது. அதில்தான் வருவார்.  “

காணொளி ஆய்ரங்கம்





பென்குயின் திரை விமர்சனம்


தமிழ் சினிமா மெல்ல டிஜிட்டல் தளத்திற்கு வந்துக்கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் வந்து மாபெரும் வெற்றிகை பெற தற்போது பென்குயின் படமும் டிஜிட்டல் தளத்தில் ரிலிஸாகியுள்ளது, இந்த படம் எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
கீர்த்தி சுரேஷ் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்னுடைய குழந்தையுடன் பிரிந்து வாழ்க்கையை நடத்தி வருகின்றார். அப்போது தன் குழந்தைக்கு நிறைய கதை சொல்லி வளர்க்கின்றார்.
ஒரு கட்டத்தின் அவருடைய குழந்தை காணமல் போகிறது, இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் கீர்த்தி தன் மகனை தேடி வருகிறார்.
அதே நேரத்தில் மனதை சரி செய்துக்கொண்டு இரண்டம் திருமணம் செய்துக்கொள்கிறார்.
அப்போது அவருடைய மகன் கிடைத்துவிடுகிறார், இத்தனை நாட்கள் குழந்தையை கடத்தியது யார்? அதை தொடர்ந்து என்னென்ன நடக்கிறது என்ற சஸ்பென்ஸ் தான் இந்த பென்குயின்.
படத்தை பற்றிய அலசல்
கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகத்திற்கு பிறகு வரும் சோலோ ஹீரோயின் படம். அதனாலேயே இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது, எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றப்படியே கீர்த்தி மிரட்டியுள்ளார்.
அதோடு படத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்துள்ளனர், படத்திற்காக தேர்ந்தெடுத்த லொக்கேஷன் தான், திகில் காட்சிகளுக்கு மேலும் திகிலை ஏற்படுத்துகிறது.
அதிலும் கீர்த்தி சொல்லும் கதைகளுக்கு ஏற்றது போலவே படத்தின் காட்சிகளும் நகர்வது சுவாரஸ்யம். ஆனால், படம் கொஞ்சம் ராட்சசன் சாயல் இருப்பதை தவிர்க்க முடியவில்லை.
அதோடு, படத்தில் ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல் காட்சிகளை கவனித்திருக்கலாம். அதே நேரத்தில் படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் அதிலும் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை மிரட்டியுள்ளது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவும் இரவின் அசத்தை கடத்துகிறது.
க்ளாப்ஸ்
கீர்த்தி சுரேஷ் நடிப்பு,
படத்தின் கிளைமேக்ஸ் டுவிஸ்ட்
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.
பல்ப்ஸ்
கொஞ்சம் ராட்சசன் சாயல்,
சில லாஜிக் மீறல்கள், கடைசி அரை மணி நேரம் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் திரில்லர் ரசிகர்களை பென்குயின் திருப்திப்படுத்தும்.