வழக்கு எண் 18/9
டீன் ஏஜ் மாணவர்கள் சிலரின் 'ட்ரைனேஜ்' புத்தி எவ்வளவு பெரிய கொடூரங்களை நிகழ்த்துகிறது? 'செல்'லும் செல்லமுமாக திரியும் பிள்ளைகளின் உலகம் எவ்வளவு ஆபத்தானதாக இருக்கிறது? ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக இருந்து இந்த சொசைட்டிக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். இவரது 'செவுளில் அறையும்' படங்களின் வரிசையில் இந்த வழக்கும் கல்லில் வடித்த எப்.ஐ.ஆர் ஆகியிருக்கிறது. வருஷத்துக்கு ஒரு பட கணக்கோடு வாழும் இயக்குனர்கள் மத்தியில் வாழ்க்கைக்கு ஒரு பாடம் என்ற கணக்கோடு உலா வரும் பாலாஜி சக்திவேல், தமிழ்சினிமாவின் 'திட'சக்திவேல் என்பதில் துளி கூட மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அன்றாட கூலிகளின் திண்டாட்ட வாழ்க்கை ஒருபுறம். மிதமிஞ்சிய கொழுப்போடு திரியும் மேல்தட்டு வாழ்க்கை மறுபுறம். இந்த யானைகள் மிதித்து எலிக்குஞ்சுகள் சாவதைதான் வலிக்க வலிக்க சொல்லியிருக்கிறது படம்.
ஒரு பெண்ணின் முகத்தில் யாரோ ஆசிட் அடித்துவிட, அவளை அரசு ஆஸ்பத்திரியில் வைத்திருக்கிறார்கள். ஊற்றியது யாராக இருக்கும் என்ற சந்தேகத்தில் விசாரணையை ஆரம்பிக்கிறது போலீஸ். பிளாட்பார கடையில் வேலை செய்யும் வேலுவை சந்தேகப்படும் அவர்கள் விசாரணையை துவங்க, ஒருவனின் தலையெழுத்தில் இத்தனை கிறுக்கலா என்று அதிர வைக்கிறது அவனது வாழ்க்கை. அடப்பாவமே என்று அசந்து போகும் போலீசே, சரி போ என்று அனுப்பி வைப்பதும் பின்பு வேறு வழியில்லாமல் அவனை பலிகடா ஆக்குவதும் ஒரு பகுதி.
'நீங்க விசாரிக்க வேண்டியது இன்னொருத்தனையும்தான்' என்று தயங்கி தயங்கி போலீசிடம் சொல்கிற டீன் ஏஜ் மாணவி ஒருத்தியின் பார்வையில் தொடர்கிறது இன்னொரு பகுதி. இரண்டுக்கும் போடப்படுகிற முடிச்சும் அதன் கொடூரமும்தான் க்ளைமாக்ஸ். இவ்விரண்டையும் அழகான பின்னலாக தந்திருக்கும் கோபி கிருஷ்ணாவின் மிக நேர்த்தியான எடிட்டிங் இந்த நேரத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
வேலுவாக நடித்திருக்கும் ஸ்ரீயோ, ஜோதியாக நடித்திருக்கும் ஊர்மிளா மகந்தாவோ, அல்லது படத்தில் நிமிஷங்களில் வந்து போகிற மற்ற கேரக்டர்களோ.... அத்தனை பேரும் ஏதோ பிறந்ததிலிருந்தே நடிப்பை தொழிலாக கொண்டவர்கள் போல பிரமாதப்படுத்துகிறார்கள். அதுவும் ஜோதி? ஒரு வேலைக்காரியின் அழகில்லாத 'நடை'யில் துவங்கியிருக்கிறது அவரது நடிப்பு. இப்படத்தில் இவர் பேசியிருக்கும் வசனங்களை ஒரு சிலேட்டில் எழுதிவிடலாம். ஆனால் பக்கம் பக்கமாக பேசுகிறது அவரது கண்கள்.
துளி அலட்டல் இல்லை இன்ஸ்பெக்டர் குமாரவேலுவிடம். என்னமாய் நடித்திருக்கிறார்? அவ்வளவு பசங்களையும் அள்ளிக் கொண்டுபோய் வைத்துக் கொண்டு 'தாயோளிகளா...' என்று அவர் திட்டுகிற போது நம்மையறியாமல் விசில் பறக்கிறது. ஆனால் தமிழ்சினிமா வழக்கப்படி இவரும் கெட்ட போலீசாகிவிடுகிறார்.
அந்த கூத்துப்பட்டறை சிறுவன் சின்னச்சாமியின் தன்னம்பிக்கை அசர வைக்கிறது. திறமையும்தான்... ஜோதியின் அம்மாவாக நடித்திருக்கும் அந்த 'லொட லொட பேச்சு' பார்வதிக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.
நானும் இருக்கேன்ல என்று வலுக்கட்டாயமாக தலையை நுழைத்து படத்திற்கே 'என்ட் கார்டு' போட்டுவிடும் சில டுபாக்கூர் இயக்குனர்களுக்கு மத்தியில், சின்ன சின்ன கவன ஈர்ப்புகளால் நம்மை ரசிக்க வைக்கிறார் பாலாஜி சக்திவேல். ஒரு காட்சியில், 'இனிமே குடிக்காதக்கா' என்று கெஞ்சுகிற ஸ்ரீ யிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நடக்கும் அந்த பிராஸ்ட்டியூட், யாரோ குடித்துவிட்டு கீழே போட்டுவிட்டு போன கிளாஸ்களை மிதித்துக் கொண்டு நடக்கிற காட்சியை சொல்லலாம்.
பவர் ஸ்டாரை நினைவுபடுத்தும் அந்த ஷுட்டிங் காட்சி ரிலாக்ஸ் டைம் மட்டுமல்ல, ரியல் டைமும் கூட!
இந்த படத்தை ஸ்டில் கேமிராவை கொண்டு ஒளிப்பதிவு செய்திருக்கிறாராம் விஜய்மில்டன். அபாரம். அழகு. ஆச்சர்யம்...
எவ்வித மியூசிக் அலட்டலும் இல்லை. ஆனால் உயிரை சுண்டிவிட்டு போகிறது ட்யூன்களும் குரல்களும். புது இசையமைப்பாளர் பிரசன்னாவுக்கு ரெட்டை நாதஸ்வர வரவேற்பு தரலாம்.
இது வழக்கு அல்ல, ஒவ்வொரு குடும்பமும் ரசித்து படிக்க வேண்டிய தீர்ப்பு!
வழக்கு எண் 18/9
சம்பிரதாயமான ஒரு பாராட்டை முன்னுரையாகத் தருவது கூட, இந்தப் படைப்பின் இயல்புக்கு விரோதமாகி விடுமோ என யோசிக்க வைக்கும் அளவு ஒரு நேர்மையான படம் வழக்கு எண் 18/9.
சாலையோர சாப்பாட்டு கடையில் வேலை செய்யும் அனாதையான ஹீரோ வேலு, அவனது கடைக்கு பக்கத்து அபார்ட்மெண்டில் வேலை செய்யும் ஜோதியை ஒருதலையாக காதலிக்கிறான்.
அந்த அபார்ட்மெண்டில் தங்கியிருக்கும் வேலைக்கு செல்லும் அப்பா, அம்மா. அவர்களது ஒரே மகள் ஆர்த்தி.
அதே அபார்ட்மெண்டில் குடியிருக்கும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த
மாணவன் தினேஷ், ஆர்த்தியின் அழகில் மயங்கி, அவளுக்கு காதல் வலை விரிக்கிறான்.
இவன் பெண்களை செல்போனில் ஆபாசமாக படமெடுத்து ரசிக்கும் வக்கிரபுத்தி கொண்டவன். இது தெரியாமல் தினேஷ் விரித்த வலையில் சிக்குகிறாள் ஆர்த்தி.
தினேஷ் அவளையும் ஆபாசமாக படம் பிடித்து நண்பர்களுக்கு போட்டுக் காண்பித்து ஆனந்தமடைகிறான். ஒரு கட்டத்தில் எதிர்பாராதவிதமாக அவனுடைய செல்போனை பார்க்க நேர்ந்த ஆர்த்தி, அதில் தன்னுடைய ஆபாச படம் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள்.
இதனால் அவனது செல்போனின் மெமரி கார்டை எடுத்து வந்து, அதை வைத்து அவனை பொலிசில் சிக்க வைக்க முயற்சி செய்கிறாள்.
இதை அறிந்த தினேஷ் ஆத்திரமடைகிறான். தான் மாட்டிக் கொள்வோமா என்ற பயத்தில் அவள் முகத்தில் ஆசிட் வீச எண்ணுகிறான். ஆர்த்தி என நினைத்து ஜோதி மீது ஆசிட் வீசிவிட்டு ஓடி விடுகிறான்.
ஜோதிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் தினேஷ்தான் குற்றவாளி என தெரிந்திருந்தும், அவனது அம்மா பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு பெற்றவர் என்பதால் அவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, விசாரணைக்கு அழைத்து வந்த ஹீரோ வேலுவை குற்றவாளியாக்க முயல்கிறார்.
“ஜோதிக்கு சிகிச்சை அளிப்பதற்காக தினேஷ்-ன் அம்மாவிடம் பணம் பெற்றுத் தருகிறேன். நீ குற்றத்தை ஒப்புக்கொள். உனது காதலை ஜோதியிடம் சொல்லி உங்களை சேர்த்து வைக்கிறேன்” என வேலுவிடம் கூறுகிறார்.
இதற்கு சம்மதித்து வேலு சிறைக்கு செல்கிறான். இன்ஸ்பெக்டர் தினேஷ்-ன் அம்மாவிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஜோதிக்கு எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளாமல் விட்டுவிடுகிறார். இறுதியில், வேலுவின் கடையில் வேலை செய்த சிறுவன் ஜோதியை சந்தித்து நடந்ததை கூறி வேலுவின் காதலை புரிய வைக்கிறான்.
இறுதியில் வேலுவின் காதல் என்ன ஆனது? குற்றம் செய்த தினேஷ் தண்டிக்கப்பட்டாரா? துரோகம் செய்த இன்ஸ்பெக்டர் என்ன ஆனார்? என்பதே க்ளைமாக்ஸ்.
தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தப் போகிறேன் என்று தம்பட்டம்
அடித்துக் கொண்டிருக்காமல், சத்தமின்றி அந்த வேலையைச் செய்யும் மிகச் சில படைப்பாளிகளுள் ஒருவர் பாலாஜி சக்திவேல்.
படங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதில் நம்பிக்கையில்லாத, ஜீவனுள்ள படைப்புகளைத் தருவதை மட்டுமே பிரதானமாகக் கொண்ட இயக்குநர்.
தனது முந்தைய காதல், கல்லூரி படங்களை விட பல மடங்கு உயர்வான ஒரு படைப்பை தமிழ் ரசிகர்கள் கண்முன் வைத்திருக்கிறார்.
காதலும் அந்த உணர்வும் எல்லாவுயிர்க்கும் பொதுவானது. அந்தஸ்துகளுக்கு அப்பால் உயர்ந்து நிற்பது என்பதையும், சட்டம் ஏழைகளுக்கு எப்படி எட்டாத உயரத்தில் நிற்கிறது என்ற பேருண்மையை வெகு எளிதாகவும் சொல்லியிருக்கிறார்.
கதையின் முடிவில் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும், ஒரு துயருற்ற மனதுக்கு இளைப்பாறக் கிடைக்கும் சிறு மேடை போல அந்த முடிவு அமைந்திருப்பதால் பலத்த கைத்தட்டலுடன் வரவேற்கிறார்கள் ரசிகர்கள்.
நடிகர்கள்: ஸ்ரீ, ஊர்மிளா மஹந்தா, மனிஷா யாதவ், மிதுன் முரளி, முத்துராமன், சின்னசாமி.
இசை: பிரசன்னா.
ஒளிப்பதிவு: விஜய் மில்டன்.
எழுத்து - இயக்கம்: பாலாஜி சக்திவேல்
nantri viduppu