தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
வாங்க….வாங்க…என்னங்க வேகமா வர்ரீங்க…என்ன போனவாரம் கேட்ட கேள்விக்கு விடையக் கண்டுபிடிச்சிட்டீங்களா…?என்ன இல்லையா…? முயற்சி பண்ணினேன் ஆனா விடையத் தெரிஞ்சுக்கவே முடியலேன்னு சொல்றீங்களா…? பராவாயில்லை. நீங்க முயற்சி பண்ணிருக்கீஙகள்ள…அதுவரையிலும் பாராட்டணும்… சில பேரு எதுவுமே செய்யாம எல்லாம் நடக்கணும்ணு நெனக்கிறாங்க.. அது முடியுமா…? ஒங்களப் போல முயற்சியாவது செய்யணும்…
முயற்சி பயிற்சியைத் தரும்…அந்தப் பயிற்சி வாழ்க்கையில பெரிய வெற்றியத் தரும்…. இதப் புரிஞ்சிக்கணும்…நம்ம வள்ளுவப் பெருமான்கூட “முயற்சி திருவினையாக்கும்” அப்படீன்னு சொல்லியிருக்கார்ல..இப்படி முயற்சி செய்யறவங்கதாங்க ஊழை(விதியை) வெல்லக் கூடியவங்க.. வள்ளுவர் கூறிய வழியில முயற்சியால ஏழ்மையிலிருந்து விடுபட்டு உலகமே புகழும் அளவுக்கு உயர்ந்தவருதான் மைக்கலாஞ்சலோ அப்படீங்கற ஓவியர். ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலத்துல சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, கவிதைக்கலை என்ற நான்கு கலைகளுக்கும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவரு இந்த ஓவியர்தான். ஐரோப்பிய வரலாறு இவரை நான்கு உயிர்கள் கொண்ட உன்னதக் கலைஞனாக வருணிக்கின்றது. அவரப் பத்திச் சொல்றேன் கேளுங்க…
பிறப்பும் கலைகளில் ஆர்வமும்
1475-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் நாள் இத்தாலியில் உள்ள கேப்ரெஸ் (Caprese) என்ற நகரில் பிறந்தார். அவருடைய முழுமையான பெயர் மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி என்பதாகும். அவர் பிறந்த நேரம் அவரது குடும்பம் ஏழ்மையில் உழன்று கொண்டிருந்தது. அவரைப் படாதபாடுபட்டு அவருடைய பெற்றோர் வளர்த்தாங்க.
ஒரு கட்டத்துல அவருக்குச் சரியாச் சாப்பாடுகூடக் கொடுக்க முடியாத நிலையில மைக்கலாஞ்சலோவை ஒரு கல்தச்சர் வீட்டில் அவருடைய பெற்றோர் விட்டுட்டாங்க. அந்தச் சிறுவயதிலிருந்தே மைக்கலாஞ்சலோ உளியையும், சுத்தியலையும் பயன்படுத்தி சிற்பங்களைச் செதுக்கத் தொடங்கினார். இருப்பினும் ஓவியத்தின் மீது மைக்கலாஞ்சலோவிற்கு அலாதியான விருப்பம் இருந்தது.