.
தனுஷின் “3” திரைவிமர்சனம்
தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் பெரும்எதிர்பார்ப்பிற்கு பின்பு தனுசின் “3“ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
திரைக்கதை தனுஷின் வாழ்க்கை பள்ளிப் பருவத்திலிருந்து ஆரம்பமாகிறது. பள்ளிப் பருவத்தில் காணப்படும் நாயகன் தனுஷ் தன்னுடைய பள்ளிப் பருவத்திற்கே திரும்பியுள்ளார்.
நாயகன் தனுசும், நாயகி ஸ்ருதியும் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களாக வருகிறார்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே காதல் ஆரம்பமாகிறது.
பள்ளிப் பருவத்தில் நாயகி ஸ்ருதியை கவர நாயகன் தனுஷ் செய்யும் விளையாட்டுகள் ரசிகர்களை கை தட்ட வைக்கிறது.
பின்னர் கல்லூரி வரை செல்லும் இந்த காதலர்கள் வழக்கம் போல திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். திருமணத்திற்கு பெற்றோரிடம் சம்மதம் கேட்க, ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு, இவர்களது திருமணம் நடைபெறுகிறது.
திருமணத்திற்கு பின்பு நாயகன் தனுஷ், நாயகி அம்மாவாக நடித்துள்ள ரோகிணியிடம் பேசும் காட்சிகள் எதார்த்தமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் சிவாகார்த்திகேயன் தன்னுடைய டைமிங் நகைச்சுவையால் கலக்குகிறார்.
இந்நிலையில் தனுஷின் “கொலைவெறி” கிறுக்குத்தனம் ஆரம்பமாகிறது.
அதாவது தனுஷ் “பை போலார் டிஸ் ஆர்டர்” என்ற மனநோயால் பாதிக்கப்படுகிறார். இந்த வியாதியை திருமணத்திற்கு பின்பு தன் மனைவி ஸ்ருதியிடமிருந்து மறைக்கிறார். இதற்கு பின்பு என்ன நடக்கிறது என்பது தான் “3” திரைப்படத்தின் திரைக்கதை.
”கொலைவெறி” பாடல் மூலம் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டதால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.
அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய காட்சிப் பிழைகள், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை “3” ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவை புகழ்வதில் தவறில்லை.
இருப்பினும் செல்வராகவனின் உதவியாளர் என்பதால் துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன போன்ற படங்களின் சாயல்களை “3” திரைப்படத்தில் காணமுடிகிறது.
ஆனால் இப்படத்தின் மூலம் ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை என்ற நிலை உறுதியாக வந்துவிட்டது. திரையுலகில் “3” படம் அவருக்கென்று தனி மதிப்பை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.
நாயகன் தனுஷ் சாதரணமாக நடிப்பதை விட கிறுக்கனாக நடிப்பதில் திறமையாக செயற்படுகிறார். ஆனால் இனி அடுத்து வரும் படங்களில் ரசிகர்கள் தனுஷை சைக்கோவாக பார்ப்பதை விரும்ப மாட்டார்கள்.
நாயகி ஸ்ருதியின் நடிப்பு ஏழாம் அறிவில் இருந்து ஒரு படி முன்னேறியே உள்ளது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் ரசிகர்களால் சகிச்ச முடியவில்லை.
இயக்குனர் ஐஸ்வர்யா என்பதை மறந்து தனுசும், ஸ்ருதியும் படத்தில் அநியாயத்துக்கு நெருக்கம் காட்டியுள்ளனர். சிவகார்த்திகேயன் காமெடி கலட்டா மிகப் பிரமாதம், சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது. சந்தானம் ஏதோ வந்து போகிறார். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.
இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து(நண்பன் ஒருவனைத் தவிர), மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி. லாஜிக் மீறல் கொஞ்சம் அதிகம்.
அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும் படியாக உள்ளது. உலகமெங்கும் ஹிட்டான ”கொலவெறி” பாடலே இதற்கு சாட்சி. வேல்ராஜின் ஒளிப்பதிவு அருமை.
இளைஞர் பட்டாளத்திற்கு “3” திரைப்படம் நிச்சயம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. “3” படத்தின் மூலம் ஐஸ்வர்யாவுக்கு திரையுலகில் மதிப்பு இனி அதிகரிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதி ஹாசன், இளையதிலகம் பிரபு, பானுப்பிரியா, ரோஹிணி, சந்தானம், சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
எழுத்து, இயக்கம்: ஐஸ்வர்யா தனுஷ்
நன்றி தினக்குரல்