மரண அறிவித்தல்

.

                                       திருமதி . மனோன்மணி செல்லத்துரை
            

                                       
                                                         மறைவு  24.01.2015
வீமன்காமம் வடக்கு, தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், மெல்பேர்ன்
அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி
செல்லத்துரை அவர்கள் 24/01/2015 அன்று சிவபதமடைந்தார்.
இவர் காலம் சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியாரும்,
சறோஜி னி(மெல்பேர்ன்), சாந்தா(அமெரிக்கா), உசா (அமெரிக்கா),
வசந்தா(சிட்னி), காலம் சென்ற கெளரி(லண்டன்) ஆகியோரின் அன்புத்
தாயாரும், சிவனேசன்(மெல்பேர்ன்), ராஜலிங்கம்(அமெரிக்கா),
பாலசுப்பிரமணியம்(இலங்கை), விஜயகுமார்(சிட்னி), வரதன்(லண்டன்)
ஆகியோரின் அன்பு மாமியும், பைரன்,டிலன்,மைரன்(மெல்பேர்ன்),
கம்சன், சேந்தன்(அமெரிக்கா),திருமதி சுகர்ணா பிரகாஷ், மயூரன்,
அரவிந்தன் (அமெரிக்கா), சாலினி, கோகுலன்(சிட்னி) ஆகியோரின்
அன்பு பேத்தியுமாவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்:-
சிவனேசன் - (03)9886 6557
 0421 428 563
0435 085 762

அழுக்ககற்ற முனைந்துநிற்போம் ! - எம். ஜெயராமசர்மா ..

.

  குடுயரசு மலர்ந்தாலும்
  குடிமட்டும் மறையவில்லை
  நடுஇரவில் தனியாக
  நடமாட முடியவில்லை

  வெடிகுண்டு கலாசாரம்
  விட்டெங்கும் போகவில்லை
  நடமாடும் விபசாரம்
  நாட்டைவிட்டு அகலவில்லை

  காந்திசொன்ன சுதந்திரத்தை
  கண்டுகொள்ள முடியவில்லை
  கள்ளத்தனம் புகுந்தெங்கும்
  கழுத்தறுத்து நிற்கிறது

  நீதிநேர்மை எல்லாமே
  நிலைகுலைந்து நிற்கிறது
  சாதிவெறி தலைவிரித்து
  சதிராடி நிற்கிறது

மெல்பன் சந்திப்பு - ரஸஞானி

.
மெல்பன்   சந்திப்பில்  பாடசாலைத்தமிழ் - பத்திரிகைத்தமிழ்  -  படைப்பிலக்கியத்தமிழ் 

புகலிடத்தில்  தமிழ்  கற்கும்  எம்மவர்  பிள்ளைகள், தாயகத்தில்    சர்வதேச  பாடசாலைகளில்  ஆங்கிலம் கற்கும்    எம்மவர்  பிள்ளைகள்.
பெற்றோர்  -  பிள்ளைகள்  சஞ்சரிக்கும்   வேறுபட்ட  மொழிக்கல்வி  உலகம்

                                                                                 
" பாடசாலைத்தமிழ்   மொழி  அறிமுகத்தையும்  மொழி  அறிவையும் தரும்.    பத்திரிகைத்தமிழ்  பாடசாலையில்  பெற்ற  அறிவிலிருந்து செய்தியை  கிரகிக்க  உதவும்.   படைப்பிலக்கியத்தமிழ்  உணர்வுகளை வெளிப்படுத்தும்.    இவ்வாறு  மொழியானது   மாணவர்களிடமும் வாசகர்களிடமும்     இலக்கிய சுவைஞர்களிடமும் எடுத்துச்செல்லப்படுகிறது." -    என்று  கடந்த  சனிக்கிழமை   24  ஆம்   திகதி  அவுஸ்திரேலியாவில் மெல்பனில்    நடந்த  கலந்துரையாடல்  சந்திப்பில்  மூத்த  இலக்கிய திறனாய்வாளர்   திரு. வன்னியகுலம்    உரையாற்றுகையில் தெரிவித்தார்.
பாடசாலைத்தமிழ்  -  பத்திரிகை   ஊடகத்தமிழ் -   படைப்பிலக்கியத்தமிழ்   என்னும்    தலைப்பில்  மெல்பன்  கலை, இலக்கியவாதிகள்    மற்றும்  தமிழ்   ஆசிரியர்கள்  சிலரால் ஒழுங்குசெய்யப்பட்ட  கலந்துரையாடல்    சந்திப்பு   நிகழ்வு    எழுத்தாளர்    லெ.முருகபூபதியின்   தலைமையில்   மெல்பனில் மோர்வல்   என்னும்    இடத்தில்    அமைந்த    திறந்தவெளிப்பூங்காவில் நடைபெற்றது.
திரு.வன்னியகுலம்    அவுஸ்திரேலியாவில்    மெல்பனுக்கு வருகைதந்திருந்ததை    முன்னிட்டு    அவரை   வரவேற்று அவருடனான    சந்திப்பு    கலந்துரையாடல்   ஒழுங்கு   செய்யப்பட்டது.
வன்னியகுலம் ,  யாழ். பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப்பட்டத்திற்காக  ஈழத்துப்புனைகதைகளிற்  பேச்சு வழக்கு   என்னும்    தலைப்பில்    ஆய்வுசெய்தவர்.    இலக்கியத்திற்கும் மொழிக்குமுள்ள    தொடர்பு  பேச்சு மொழியின்    முக்கியத்துவம், ஈழத்துப்    பேச்சுவழக்கின்   பொதுப்பண்புகள்,    அவை தமிழகப்பேச்சுவழக்குடன்    வேறுபடும்    தன்மைகள்   பற்றியெல்லாம் ஆய்வுசெய்திருப்பவர்.

எட்டுத் திக்கும் தமிழ் நின்று நிலைக்க - கானா பிரபா

.

தமிழரது புலப்பெயர்வை எடுத்து நோக்கினால் அது மன்னராட்சிக் காலத்தில் நாடு பிடிக்கப் போன ஆட்சியை நிறுவிய வகையிலும், ஐரோப்பியர் காலத்தில் தேயிலை, இறப்பர், கரும்புத் தோட்டங்களுக்கு வேலையாட்களாகச் சென்ற வகையிலும் அமைந்திருந்தாலும், மூன்றாவதாக கடந்த நூற்றாண்டின் இறுதிக் காற்பகுதியில் இருந்து ஆரம்பித்து தொண்ணூறாம் ஆண்டுகளில் இன்னும் பல்கிப் பெருகிய ஈழத்தமிழர் சமூகத்தினது புலப்பெயர்வு என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதொரு அம்சமாக விளங்குகின்றது.
பொருளாதாரக் காரணிகளுக்காக நாடு பிடித்தவர்கள் தவிர, ஏதிலிகள் என்ற அடையாளத்தோடு எந்த நாடு என்ற இலக்கில்லாது பயணித்து ஈழத்தமிழ்ச் சமூகம் இன்று உலகம் பூராகவும் வியாபித்திருந்தாலும் கனடா, ஐரோப்பிய நாடுகளோடு அவுஸ்திரேலியாவையும் தமது பெரும்பான்மை மக்கள் கூட்டத்தைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். 


இந்த நிலையில் தமிழனுக்கு ஒரு நாடு இல்லை என்ற அறைகூவலோடு போராடக் கிளம்பிய சமூகத்தின் சிதறுண்ட பாகங்களாகக் கருதப்படும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தம் தாய்மொழிக்கு எவ்வளவு விசுவாசமாக இயங்குகின்றது என்பதை இன்றைய நிலையில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அபாயகரமான காலகட்டம் இது.
காரணம், இன்றைய யுகம் என்பது போர்க்காரணிகளால் புலப்பெயர்வைச் சந்தித்த தமிழரது வாழ்வுச் சக்கரம் ஏறக்குறைய முடிவுறும் நிலைக்கு வந்திருக்கிறது.  கடந்த நான்கு தசாப்தங்களாக புலப்பெயர்வைச் சந்தித்தவர்களது  வாரிசுகள் தான் இன்றைய தமிழ்ச்சமூகத்தின் அடையாளமாக இருக்கும் யுகம் இது. 

இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) 26.01.2015 .செ .பாஸ்கரன்

.



இந்திய குடியரசு நாளும் 
அவுஸ்திரேலியாவின் அவுஸ்திரேலிய  நாளும் ஒரே நாளாகும் அதாவது 26.01.2015 அன்று கொண்டாடப்பட்டது . 
இந்திய குடியரசு நாள் 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்று  நினைவுகூர ஜனவரி 26 ஆம் நாள் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
 நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்க்கான வரைவுக் குழுவை  அம்பேத்கர் தலைமையில் உருவாக்கி அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.பின்  1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து ஜனவரி 26ம் நாளை குடியரசு தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.

கே.பாலச்சந்தர் - கலகக்குரல்களின் முன்னோடி

.

 'கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு கர்வமா இருக்கலாம், கர்ப்பமாத்தான் இருக்கக்கூடாது'  - அவள் ஒரு தொடர்கதை என்கிற திரைப்படத்தில் இருந்த இந்த ஒரு வரி வசனத்தில் இருந்த குறும்புத்தனமும் சீற்றமும்தான் யார் இந்த பாலச்சந்தர் என்று என்னை தேடிப் பார்க்க வைத்தது. 'கட்டில் சத்தம் தாங்கலை' என்பது  திருமணமாகாத பெண்ணொருத்தி தன்னுடைய அண்ணியிடம் சொல்லும் அதே திரைப்படத்தில் வரும் இன்னொரு வசனம். 'சக்ஸஸ் சக்ஸஸ்' என்பது போன்ற சென்ட்டிமென்ட் வசனத்துடன் துவங்கும் அப்போதைய தமிழ் சினிமாக்களில் இப்படிப்பட்ட அதிர்ச்சிகர வசனங்கள் எல்லாம் இன்று கூட  நினைத்துக் கூட பார்க்க முடியாதவை. இப்போதைய இயக்குநர்கள் கூட கையாளத் தயங்குபவை. கவிதாவிற்கு திருமணமே ஆகக்கூடாது என்று இயக்குநர் திட்டமிட்டு அடுக்கிய சதிகளின் தொகுப்பாக  கூட இத்திரைப்படம் ஒருவிதத்தில் எனக்கு தோற்றமளிக்கும். கடவுள்களைப் போலவே கதாசிரியர்களும் சாடிஸ்ட்டுகளாக இருந்தால்தான் அந்த புனைவு விளையாட்டுகள் சுவாரசியமாக அமையும் போலிருக்கிறது. என்றாலும் பொறுப்பற்ற ஆண்களின் உலகில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் ஆண்களுக்காகவும் சேர்த்து கடைசி வரையிலும் உழைத்தேதான் தன்னை வருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது எனும் கசப்பான யதார்த்தத்தைதான் அத்திரைப்படத்தில் முன்வைத்திருக்கிறார் என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.

சங்க இலக்கியக் காட்சிகள் 36- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா



வண்டாடும் தலைவனால், திண்டாடும் தலைவி!
சங்க இலக்கியங்களில் அடங்குகின்ற எட்டுத்தொகை நூல்களிலே ஒன்றாக விளங்குவது கலித்தொகை. கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று புகழ்ந்துரைக்கப்படும் கலித்தொகை முற்றுமுழுதாக அகப்பொருளைத் தாங்கிநிற்கும் சிறந்ததோர் இலக்கியமாகத் திகழ்கின்றது.

கலித்தொகையில் மருதக்கலி என்றழைக்கப்படும் மருதத் திணைக்கான பகுதியில் 35 பாடல்கள் உள்ளன. அவை மருதன் இளநாகனார் என்ற புலவரால் பாடப்பட்டவை. வயலும் வயல் சூழ்ந்த இடமுமே மருதநிலம் எனப்படுகின்றது. நெல்விளையும் பூமி. நிறைவான வாழ்க்கை. செல்வச் செழிப்பிலே மக்கள் மிதந்தார்கள். குடும்ப உறவிலே சிறந்தார்கள். ஆடல்பாடல்களில் மகிழ்ந்தார்கள்.

திரும்பிப்பார்க்கின்றேன் - வ.அ.இராசரத்தினம் - முருகபூபதி

.

கிழக்கிலங்கை   மூதூரில்   இழப்புகளே  வாழ்வாகிப்போன   மூத்த  படைப்பாளி   வ.அ.இராசரத்தினம்
அன்பு   மனைவிக்கு  அவர்  கட்டியது  மாளிகையல்ல - இதயத்தால்  படைத்தார்  ஒரு  காவியம்
                                              
வீரகேசரியில்   பணியாற்றிய  காலத்தில்  அடிக்கடி  நான்  செய்திகளில்   எழுதும்  ஊரின்  பெயர்  மூதூர்.   ஒரு  காலத்தில் இரட்டை  அங்கத்தவர்  தொகுதி.   தமிழர்களும்  முஸ்லிம்களும் புட்டும்   தேங்காய்  துருவலும்  போன்று  ஒற்றுமையாக  வாழ்ந்த பிரதேசம்.  அரசியல்  இந்தத்தொகுதியை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது.
தமிழ் - முஸ்லிம்  அரசியல்  தலைவர்களும்  அப்பாவி  பொது மக்களும்   அதிக  அளவில்  கொல்லப்பட்டிருக்கின்றனர்.
 பல   தமிழ்க்கிராமங்கள்  இந்த  ஊரை   அண்மித்திருக்கின்றன. மூதூருக்கு   படகில்  செல்லவேண்டும்  என்றெல்லாம்  சிலர் சொல்லக்கேட்டுள்ளேன்.   ஆனால்,  நான்  இலங்கையிலிருந்த காலப்பகுதியில்   திருகோணமலைக்கோ   அதன்  அயல்  ஊர்களுக்கோ சென்றதில்லை. 

விழுதல் என்பது எழுகையே" - பகுதி 35 எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண்




தொடர்கிறது பகுதி 35

    படிப்பிலே இருவரது கவனமும் இருந்தாலும் இருவரும் தனிமையில் சந்தித்தித்து சிரித்து மகிழ்வதையும் விட்டுவிடவில்லை.சீலனின் காதல் பற்றி தாய்க்கு ஒன்றுமே தெரியாது.ஆனால் சீலனின் தங்கைக்கு மட்டும் ஓரளவு தெரியும்.என்றாலும் அவளும் தாயிடம் இது பற்றிச் சொல்லாமல் இருந்தது சீலனுக்கு நிம்மதியாக இருந்தது.காதல் இப்பவே வந்துவிட்டால் படிப்பு என்னாவது... லட்சியம் என்னாவது... என்று தாய் கவலைப் பட்டுவிடுவார். அதனால் இந்தக்காதல் தாய்க்குத் தெரியவரக் கூடாது என்பதில் சீலன் மிகவும் அவதானமாகவே இருந்தான்.இதனால் கலாவை வெளியில் கூட்டிப் போவதோ அல்லது படத்துக்குக் கூட்டிப்போவது .... எதையும் சீலன் செய்தது கிடையாது. தனிமையில் எங்காவது கதைப்பதும் சிரிப்பதுமே அவனது காதலாக இருந்தது. அதனால் தாய்க்குக் கடைசிவரையும் தனது காதலைக் காட்டிக் கொள்ளாமலே தப்பிவிட்டான் சீலன்.
    தேவையில்லாமல் பிடிபட்டதும் சிறைக்குச் சென்றதும் மருத்துவப்படிப்பு கனவாகிப் போனதும் தாய்பட்ட பாடுகளும் வெளிநாடுவந்தால் விடிவு கிடைக் கும் என்று கனவில் மிதந்ததும்...... யாவும் இப்பொழுது சீலனின் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்ததனது.கதிரையில் இருந்தவன் எந்தவித சலனங்களும் இல்லாமல் வெறித்துப் பார்த்தபடி இருந்தான்.
      .... என்ன சீலா .. இப்ப என்ன நடந்துவிட்டது என்று பேயறைஞ்சது மாதிரி இருக்கிறாய் !உனக்கு என்ன தூக்குத் தண்டனையா தந்திருக்கிறாங்கள்? இது எல்லாம் இங்கு வெரி சிம்பிள் ! தேவையில்லாமல் கவலைப்படாதே. நான் உன்னைக் கண்டதே கூட உனக்குக் கொஞ்ஞமேனும் அதிர்ஷ்டம் இருக்கிற படியால என்று எண்ணு ! நானில்லாமல் வேறுயாராவது உனக்கு மொழி பெயர்க்க வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று .. ஒருக்கால் யோசித் துப்பாரு. எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளு.

சுன்னாகத்தில் இயங்கி வந்த நொதேர்ன் பவர் அனல் மின்நிலையத்தை உடனடியாக மூடுமாறு சம்பிக்க ரணவக்க உத்தரவு

.

சுன்னாகம் பகுதியில் இயங்கி வரும் நொதேர்ன் பவர் அனல் மின்நிலையத்தை உடனடியாக மூடிவிடுமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவித்துள்ளார்.

அமைச்சருடன் இன்று (22.01.14) இடம் பெற்ற சந்திப்பின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

நொதேர்ன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்கள் நிலத்தில் பரவி சுன்னாகம், தெல்லிப்பழை பிரதேசங்கள் எண்ணூறுக்கு மேற்பட்ட கிணறுகளில் சேர்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

நூல் நயப்புரை: "மரம் மாந்தர் மிருகம்" - அருண். விஜயராணி


அமரர்   பொ. கனகசபாபதியின் - மரம்  மாந்தர்  மிருகம்
மாதுளம் கனியின்  மகத்துவம்  அறிந்த  கிரேக்கர்களும் சீனர்களும்
                  

சுபகாரியம்   சீக்கிரம்  என்பார்கள்.  சுபகாரியம்  மட்டுமல்ல - எந்தக்காரியத்தையும்  தாமதிக்காமல்  உரியவேளையில் செய்யத்தவறிவிட்டால்  அதற்கான  பலனையும்  அடைய முடியாமல் போய்விடும்   என்பதும்  நிதர்சனமான  உண்மை.
பல   மாதங்களுக்கு  முன்னர்,   எனது  அக்காவின்  சம்பந்தியான ஸ்ரீஸ்கந்தராஜா   அண்ணா,   என்னிடம்  மரம்  மாந்தர்  மிருகம்  என்ற நூலைத்தந்து,    தனது  ஆசான்  பொ. கனகசபாபதி  அவர்கள் எழுதியது  என்றார்.   அவர்  எப்பொழுதும்  நல்ல  விடயங்களை எனக்கு   அறிமுகப்படுத்துபவர்.
அத்துடன்    நல்ல  இலக்கிய  ரசிகர்.  யாழ்.மகாஜனா   கல்லூரியின் பழையமாணவர்.   இக்கல்லூரியின்  பல  பழையமாணவர்கள்   கலை, இலக்கியவாதிகளாகவும்  ஊடகவியலாளர்களாகவும்  இருப்பதாக அறிவேன்.   மகாஜனா  கல்லூரியில்  விஞ்ஞானப்பட்டதாரி  அதிபராக பணியாற்றியவர்    கனகசபாபதி.
மரம்  மாந்தர்  மிருகம்  நூலை   கையில்  எடுத்தவுடன்,   மரங்களின் தன்மைகளைப்பற்றிய    பட்டியல்  தரும்  நூலாக  இருக்குமோ...?  என்ற   எண்ணத்திலேயே  நூலைப்படித்தேன்.   ஆனால், அதனைப்படிக்கும்பொழுது   எனக்குள்  ஆச்சரியங்கள்  மலர்ந்தன.
தனது   வீட்டில்  பெற்றவர்களினால்  வளர்க்கப்பட்ட   மற்றும் தானாகவே    வளர்ந்துவிட்ட  மரங்கள்,  செடி,  கொடிகள்  வீட்டு மிருகங்கள்    என   மரங்களையும்  மிருகங்களையும்  அவற்றை வளர்த்த    மாந்தர்களின்  மகிமைகள்  பற்றியும்  நாம் அறியத்தவறிவிட்ட   பல   அரிய  தகவல்களுடன்  நூலை   எழுதுகிறார் கனகசபாபதி.

விழுதல் என்பது எழுகையே" - பகுதி 36 ச.நித்தியானந்தன் ,இலங்கை

.
எழுத்தாளர் அறிமுகம் 


பெயர் சகாதேவன் நித்தியானந்தன் 
ஆரம்பக் கல்வி பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம்
உயர்கல்வி யாழப்பாணம் இந்துக்கல்லூரி 
அரசபணி பதவி நிலை உத்தியோகத்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 
கலைப்பணி 
சுமார் பத்துக்கு உட்பட்ட நாடகங்கள் எழுதி நடித்தமை
சொந்தப்பெயரிலும்
நாரதன்
அங்குசன்
சனீஸ்வரன்
என்ற புனை பெயர்களிலும் கவிதைகள் யாழ் உதயன் சஞ்சீவி மித்திரன் போன்ற அச்சு ஊடகங்களிலும்
இணையத்தில் கவிதைகள்இகதை
பண்ணாகம்.கொம் அக்கினிக்குஞ்சு.கொம் பதிவு.கொம் சங்கதி-   தமிழ் மிறர்- இனிஒரு- சரிதம் – தமிழ்வின் – காலச்சுவடு- தமிழ் சி.என. என் -அருவி போன்றவற்றிலும் வெளியாகியிருக்கின்றன.

தகவல்த் தொகுப்பு
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு.எலையா முருகதாசன்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம் -யேர்மனி

கதை பகுதி 36  தொடர்கிறது
வீழ்ந்துவிட்டோம் என்று நீ நினைக்காதே
வெட்டினாலும் வாழை முளைக்கும் மறக்காதே
தாழ்ந்துவிட்டோம் என்று நீ கலங்காதே
நம்பிக்கைதான் வாழ்க்கை அது மறக்காதே
சீலனின் மனம் அங்கலாய்த்தது. 
தொலைபேசி அழைப்பு மணி அடித்து ஓய்ந்தது. தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள் ஒரு தரம், இரண்டு தரம் இல்லை மணி அடிக்கிறது யாரும் எடுக்கவில்லை 
என்ன வாழ்க்கையடா சாமி.
வாழ்க்கையென்றால் சில சோதனைகள் வேதனைகள் இருக்கத்தான் செய்யும் சோதனையே வாழ்க்கை என்றால் 

தமிழ் சினிமா - ஐ



ஷங்கர் மற்றும் விக்ரமின் கடினமாக 2 வருட தவத்திற்கு கிடைத்த பலன் தான் இந்த ஐ. தமிழ் சினிமாவில் பெருமை உலக அரங்கிற்கு எடுத்த செல்லும் முதல் முயற்சியை ஷங்கர் தான் எந்திரன் படத்தில் செய்தார், இதையே ஐ படத்தில் ஒரு படி மேலேயே கொண்டு சென்றுள்ளார்.

ஒரு மனிதன் ஒரு படத்திற்காக இத்தனை சிரமம் எடுக்க முடியுமா? என்றால் அது கமலுக்கு பிறகு விக்ரமிற்கே சாத்தியம் என்று இப்படம் மூலம் மீண்டும் நிருபிக்கப்பட்டது.
கதை
படத்தின் ஆரம்பமே கூன் விழுந்த விக்ரம் , எமி ஜாக்சனை கடத்துவதிலிருந்து தொடங்குகிறது படம். அவர் எப்படி இவ்வளவு விகாரமாக ஆனார் என்பதையே கூறுகிறது மீதி படம்.
சின்னதாக ஒரு ஜிம்மை நடத்திக் கொண்டு மிஸ்டர் மெட்ராஸ் ஆக வேண்டும் மிஸ்டர் இந்தியா ஆக வேண்டும் எனும் பெரிதான லட்சியங்களுடன் வெயிட் லிப்ட்டும் பாடி பில்டப்புமாக சென்னை தமிழ் பேசிக் கொண்டு லீ எனும் லிங்கேசன் விக்ரம், தன் ஆசைபடியே தடைகள் பலவற்றை கடந்து மிஸ்டர் மெட்ராஸ் ஆகிறார்.

கட்டுடலும், கம்பீரமுமாக திரியும் விக்ரமை ஒருநாள் அவரது நண்பர் சந்தானம், விக்ரமுக்கு பிடித்த மாடல் அழகி தியா எனும் நாயகி எமி ஜாக்சனின் பாதுகாப்பிற்காக விளம்பர பட ஷூட்டிங் ஒன்றிற்கு அழைத்து போக, அங்கு விக்ரமின் கைமாறு கருதாத அன்பை கவனத்தில் கொள்ளும் எமி, தன் சக மாடல் நடிகர் ஜானின் செக்ஸ் டார்ச்சர் பொறுக்க முடியாமல் ஜானுக்கு போட்டியாக விக்ரமை பெரிய மாடலாக்கி சீனாவிற்கு ஒரு பெரும் விளம்பர படத்திற்காக கூட்டி போகிறார்.
மிஸ்டர் இந்தியா ஆசையை துறந்து விக்ரமும் சீனா சென்று எமியுடன் இணைந்து நடிக்கிறார். அவரது கூச்சத்தை போக்க, எமியை இயக்குநர், விக்ரமை நிஜமாக காதலிப்பது போல் நடி என அட்வைஸ் சொல்கிறார். இதற்கு முதலில் மறுக்கும் எமி, விக்ரம் ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மீண்டும் ஜானுடன் இணைந்து நடிக்க வேண்டிய இக்கட்டான சூழலை தவிர்க்க விரும்பி விக்ரமை நிஜமாக காதலிப்பது போல் நடிக்கிறார்.

இந்த விளம்பர படம் இயல்பாக வந்து அந்நிறுவன வியாபாரம் பெருக பெரிதும் உதவுகிறது. இதற்குள் விக்ரம் - எமிக்கிடையே உண்மையாகவே காதலும் மலருகிறது. அதன்பின் ராசியான விக்ரமும், எமியும் மீண்டும் மீண்டும் ஜோடி சேர்ந்து மாடலிங் உலகை கலக்குகின்றனர். இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார் ஜான்.
அவரை போலவே மேலும் பல பேர் விக்ரமால் பாதிக்கப்பட்டதாக கூறி அவரை கொலை செய்ய முனைகிறார்கள். உலகுக்கு தெரியாமல் விக்ரமை ஒழித்துகட்ட போடும் திட்டம் தான் ஐ எனும் வைரஸ், சுவிட்சர்லாந்தில் இருந்து வரவழைக்கப்படும் ஐ வைரஸ் விக்ரமின் உடம்பிற்குள் அவருக்கே தெரியாமல் ஊசி மூலம் ஏற்றப்பட, விளம்பரப் படவுலகில் முடிசூடா மன்னனாக இருந்த விக்ரம் முடி இழந்து முகம், பல், சொல் அனைத்தையும் இழந்து கூன் விழுந்து, கொடூரமாக மாறுகிறார். இதற்கு பிறகு எமிக்கு தன் காதலை புரிய வைத்தாரா? தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய வில்லன்களை பழி தீர்த்தாரா? எனபதே மீதிக்கதை.

நடிகர், நடிகைகளின் பங்களிப்பு!
இயக்குனர் ஷங்கர் தனது வழக்கமான பிரம்மாண்ட காட்சிகளால் மிகவும் கவர்கிறார். சண்டைக் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார். விக்ரம் தன் கெட்டப்பிற்காக ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது படத்தில் நன்றாக தெரிகிறது.
படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். இவருடைய பின்னணி இசையாகட்டும், பாடல்களாகட்டும் இரண்டிலும் தான் ஒரு இசைப்புயல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு அழகான விருந்தளிக்கிறது. குறிப்பாக, பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்டார்.

க்ளாப்ஸ்
விக்ரம், விக்ரம், விக்ரம் ஒருவரே ஒட்டு மொத்த கைத்தட்டலையும் பெற்று விடுகிறார். எமி மிக அழகாக இருக்கிறார். டீன் ஏஜ் இளைஞர்களுக்கு செம்ம விருந்து. பின்னணி இசை மற்றும் பி.சியின் இத்தனை ஆண்டு அனுபவ ஒளிப்பதிவு.
பல்ப்ஸ்
படம் கொஞ்சம் நீளம், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் மற்றப்படி ஏதும் இல்லை.
மொத்தத்தில்  தமிழ் சினிமாவின் முத்திரை என்பதை யம் இன்றி சொல்ல வைத்துள்ளத
நன்றி  cineulagam