மரண அறிவித்தல்

 செந்தூரன் சிதம்பரநாதன் சிட்னியில் ஊடகவியலாளர் ஹேமா சச்சிதானந்தன் அவர்கள் காலமானார் - .செ .பாஸ்கரன்

 .

சிட்னியில் ஊடகவியலாளர் ஹேமா சச்சிதானந்தன் அவர்கள் காலமானார் .


ஹேமா அவர்கள் சிட்னியில் பலரும் அறிந்த ஒரு ஊடகவியலாளர். வானொலி

நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் நீண்டகாலமாக பணிபுரிந்தவர். இவர் சென்றவாரம் (06.03.2022 ) மறைந்துவிட்டார்.


சிட்னியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இவரும் இவரது மகனும் காலனால் கவர்ந்து

கொள்ளப்பட்டார்கள். ஹேமா ஆரம்பத்தில் இன்பத் தமிழ் ஒலி வானொலியில்

அறிவிப்பாளராக பணிபுரிந்தவர். அதன்பின்பு அவுஸ்ரேலிய தமிழ்

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலமாக அறிவிப்பாளராக,

நிகழ்ச்சி தயாரிப்பாளராக குறிப்பாக வியாழன் காலையிலே அவருடைய

நிகழ்ச்சியை பலரும் கேட்டு வந்திருக்கிறார்கள். அன்பாக பேசி, உறவாடி

ஒரு இனிய நிகழ்வை படைத்துக் கொண்டிருந்தவர்.


மென்மையான குரல் மட்டுமல்ல மென்மையான உள்ளம் படைத்தவர.

ஹேமா சச்சிதானந்தன் அவர்களுடைய நிகழ்வை கேட்கின்றவர்கள்

கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். அவர் பேசும்போது சிரித்துக்கொண்டே

உரையாடுவார் அவருடைய இறப்பு வானொலி ரசிகர்களுக்கும்

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களுக்கும்

மிகப் பெரும் இழப்பாக இருக்கின்றது.


எல்லோருடனும் அன்பாக பழகுகின்ற ஒரு பெண்ணாக அனைவரையும்

கவர்ந்த ஒருவராக வாழ்ந்து வந்த ஹேமா அவர்கள் சென்ற வாரம்

சிட்னியில் இடம்பெற்ற பெரு வெள்ளப் பெருக்கில் காலமாகிவிட்டார் என்ற

செய்தி பலரையும் துன்பத்தில் ஆழ்த்தி விடுகின்றது. அவருடைய ஆத்மா சாந்தி

அடைய நாங்கள் வேண்டுகின்றோம் அவரது பிரிவால் துயருற்றிருக்கும்

அவரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


தமிழ்முரசு அவுஸ்திரேலியா

நிலவுக்கு ஓர் அஞ்சலி (என்னுயிர் தோழி கேமாவுக்கு ஓர் அஞ்சலி ) - உஷா ஜவஹர்

 .

தோழியே என் உயிர் தோழியே

நீ காணாமல் போனதேனோ

கண்கள் கலங்கி தேடுகிறோம்

உள்ளம் மயங்கி தேடுகிறோம்


உள்ளத்தில் நல்ல உள்ளமடி

உனக்கு ஆனால் நீ

பள்ளத்தில் விழுந்து கிடந்தது

ஏனோ ஏனோ நெஞ்சு தவிக்கிறது

எல்லோரையும் விழுந்து விழுந்து

உபசரித்து மனம் மகிழ்ந்தாய்

ப்போது என்ன செய்கிறாயோ

என ஏங்குது எங்கள் இதயம்


உயிருக்கு உயிராய் நீ

நேசித்த உன் அருமை மகனை

உன் விருப்பம் போலவே

உன்னோடு அழைத்துச் சென்று விட்டாய்


ATBC வானொலி தான்

உன் அருமை உலகம்

நேயர்கள் தான் உன் கண்கள்

பாடல்கள் தான் உன் மூச்சு


நேயர்களின் இதயராணி நீ

ATBC வானொலியில் கலைவாணி நீ

ஞாயிறு போல் திகழ்ந்த நீ

ஞாயிறு அன்று மறைந்தது ஏனோ


சிட்னி முருகன் வருடாந்த திருவிழா

 கொடியேற்றம் 09/03/2022

அதுசொன்ன அத்தனையும் அமுத மொழியன்றோ !


மகாதேவ ஐயர் 
ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... ஆஸ்திரேலியா

 


   காலையிலே எழுந்தவுடன்


   கண்ணெதிரே கண்டேன்

   கவலை இன்றிப் பூத்திருக்கும்

   கட்டழகு ரோஜா

   வேலைசெய்ய விருப்பமின்றி

   சோம்பலிலே கிடந்தேன்

   விருட்டென்று கேட்டதுமே

   வெலவெலத்துப் போனேன்

 

   யாருக்காய் பூக்கின்றோம்

  என்று தெரியாது

  பூக்கின்றோம் பூக்கின்றோம்

  பூத்தபடி நிற்போம்

  பூப்பதிலே சோம்பலின்றி

  பூத்தபடி இருப்போம்

 பூப்பார்த்த வுடனேயே

  பூரிப்பைக் கொடுப்போம்

 

 சோம்பல் வந்துவிட்டதென

 சோர்ந்துவிட மாட்டோம்

 சுறுசுறுப்பாய் இருந்தபடி

 சுகம்கொடுத்து நிற்போம்

 சாந்தம் எங்கள்போக்குவென

 சகலருக்கும் தெரியும்

சந்தோஷம் கொடுப்பதுவே

எங்கள் குணமாகும்

 

கானகம்; ஓங்கிடும் கங்காரு நாட்டில்   கந்தவே ளேபள்ளி எழுந்தரு ளாயே! 

 தடுத்த நிலையிலே அதாவது உருவ நிலையிலே சிவனும் முருகனும் விநாயகப் பெருமானும் வேறாகத் தோன்றினாலும் சொரூபநிலையிலே மூவரும் ஒருவரே. திருப்பள்ளியெழுச்சி என்பது துயிலினின்றும் எழுந்தருளுமாறு இறைவனைத் துதித்து வேண்டும் முறைமை. திருப்பள்ளி எழுச்சிக்குத் திரோதானசுத்தி என்பது தத்துவப்பொருள். துயில் நீக்கிப் பச்சைவண்ண மயில் வாகனத்திலே அமர்ந்து பவனிவந்து அடியார்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் மனமுருகி இயற்றப்பெற்ற பதிகம். த்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் விளங்கித் தனது சொரூப நிலையில் ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கும் முருகனைத் திருப்பள்ளி யெழுச்சி பாடித் துதிப்போமாக. ……

               

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -06 35 ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் பெற்ற முதல் முத்தம் ! முருகபூபதி


எனது  எழுத்தும் வாழ்க்கையும்  தொடரின் இரண்டாம் பாகத்தில் -  அங்கம் 06 இல்,  கடந்த வாரங்களில் வெளியான காலமும் கணங்களும் நெடுங்கதை தொடர்பாக மெல்பன் வாசகி, கலை, இலக்கிய ஆர்வலர் திருமதி ஜோதிமணி சிவலிங்கம் அவர்களின்  ஒரு குறிப்பினையும் பதிவுசெய்கின்றேன்.

இவர் இலங்கையில்  ஆசிரியராக பணியாற்றியவர்.  எனது எழுத்துக்கள் குறித்து அவ்வப்போது  தொலைபேசி ஊடாகவும் மின்னஞ்சலிலும் கருத்துக்கள் தெரிவிப்பவர்.

எனது நடந்தாய் வாழி களனி கங்கை நூல் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தையும் இந்த வருடம் தொடக்கத்தில் மெல்பன் கேசி தமிழ்மன்றம் நடத்திய தமிழர் தின விழாவில் இடம்பெற்ற நூல் அறிமுக அரங்கிலும் சமர்ப்பித்தவர்.

காலமும் கணங்களும் நெடுங்கதையைப்பற்றிய  அவரது வாசிப்பு அனுபவக்குறிப்புடன்,  எனது தொடரின் 06 ஆவது அங்கத்திற்கு வாசகர்களை அழைக்கின்றேன்.

"கனவுகள் ஆயிரம்"   என்ற சிறுகதையுடன்  இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்,   பல வருடங்களுக்குப் பின்னர்  "காலமும் கணங்களும்" என்ற  நெடுங்கதையை  எமக்கு தந்துள்ளார். 

சிறுகதையிலிருந்து   அடுத்த தொட்டிக்குள் நுழைந்து விட்டார். திடீரென பூ… பூப்பது போல் பழைய நினைவுக்குச் சென்று விட்டார்.  அதுவும் 35 வருடங்களுக்கு முன்னர்,  தான் ஈழத்திலிருந்து  ஆஸ்திரேலியா  நோக்கிய  பயணத்தின்  தொடக்க  காலத்தை,   கட்டுரையாகத் தராமல்,  நெடுங்கதையாகவே  தன்னை சந்திரன் என்ற பாத்திரம் ஊடாக அடையாளம் காண்பித்து,  நினைவுகளை பதிவுசெய்கிறார். 

நூல் அறிமுகம்: போருக்குப்பின்னர் வெளிவந்த நூல்களின் வரிசையில் மெல்பன் சுந்தரின் Dare to Differ முருகபூபதி


இலங்கையில் நீடித்திருந்த உள்நாட்டுப்போர் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் நடுப்பகுதியில் முடிவுக்கு வந்திருந்தாலும், அதன் பாதிப்புகள் தொடர்பான விவாதங்கள், விசாரணைகள், ஆய்வுகள்  இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

அந்த கொடிய போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உடன்பிறப்புகள், உறவினர்கள் நடத்திவரும் அறப்போராட்டங்களும் முற்றுப்பெறவில்லை.

அதேசமயம்  நீடித்த அந்தப்போரின் உறைபொருளையும் மறைபொருளையும் பின்னணியாக வைத்து நூல்கள் வெளிவருவதும் முற்றுப்பெறவில்லை.


தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும்  இலங்கை உள்நாட்டுப்போர் அல்லது தமிழ் ஈழ விடுதலைப்போர் என்பதை கருப்பொருளாகக் கொண்டு  சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் பல வெளிவந்தன. வந்தவண்ணமிருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணியில் முக்கிய   பொறுப்பிலிருந்து,  போர் முடிவுற்ற காலத்தில் சரணடைந்து, புனர்வாழ்வு முகாமிலிருந்து வெளியேறிய தமிழினி சிவகாமி எழுதிய ஒரு கூர்வாளின் நிழலில், விடுதலைப்புலிகளினால் கடல்பரப்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த கடற்படையைச் சேர்ந்த கொமடோர் அஜித் போயாகொட எழுதிய காத்திருப்பு,  ஆகிய நூல்கள் சிங்கள – தமிழ் மொழிகளில் வந்திருப்பதுபோன்று,  மேஜர்  கமால்  குணரட்ண எழுதிய Road to Nandikadal  என்ற நூலும் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது.

 

தலையணை உறையை மாற்றுவது தீர்வாகுமா…? அவதானி


ஒரு புறம் வேடன், மறுபுறம் நாகம், இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்   என்ற திரைப்படப்பாடலைக் கேட்டிருப்பீர்கள்.

சமகாலத்தில் இலங்கை நிலைவரங்களைப்  பார்க்கும்போது இந்தப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

கொவிட் பெருந்தொற்று முற்றாக நீங்காத நிலையில் அதன் திரிபடைந்த ஒமிக்ரோன்  பரவியிருக்கும் சூழலில்,  எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம், கேஸ் சிலிண்டர் வெடிப்புகள், வெதுப்பகங்கள் மூடப்படும் சூழல்… என பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்கள் முகம் கொடுத்துவருகின்றனர்.  தினமும் மின்வெட்டும் மக்களை சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறது.

அந்த அழகிய கலைமானுக்குத்தான் இரண்டு புறத்திலிருந்தும்


ஆபத்து, ஆனால்,  ராஜபக்‌ஷ குடும்பத்தினரை பல எதிர்பார்ப்புகளுடன் பதவியில் அமர்த்திய அப்பாவி மக்களுக்கு பல வழிகளிலும்  துயரமும்  நெருக்கடிகளும் தொடருகின்றது.

முன்னரும், பின்னரும் பதவிக்கு வந்த ஆட்சியாளர்களின் தீர்க்கதரிசனமற்ற பல செயற்பாடுகளினால், இன்று இலங்கை தேசத்திற்கு இத்தகைய சோதனை வந்துள்ளது. 

கொவிட் பெருந்தொற்றை காரணம் காண்பித்து காலத்தை கடத்திய ஆட்சியாளர்களுக்கு,  சமகாலத்தில் தோன்றியிருக்கும் ரஷ்ய – உக்ரேய்ன் மோதல் மற்றும் ஒரு காரணத்தை கூறுவதற்கு வழிகோலியிருக்கிறது.


கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் எத்தனை தடவை அமைச்சரவையில் மாற்றங்கள் நடந்துவிட்டன…?

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் நிதியமைச்சரின் வகிபாகம் மிகவும் முக்கியமானது.

அதற்காக முன்பிருந்த நிதியமைச்சரை மாற்றிவிட்டு,  அமெரிக்க குடியுரிமையுடனிருந்த தமது சகோதரரை அழைத்தார்கள் அண்ணன் பிரதமரும், தம்பி ஜனாதிபதியும்.

அவருக்காக தமது கட்சியைச்சேர்ந்த மக்களால் தெரிவான  ஒரு எம்.பி. யை வீட்டுக்கு அனுப்பிவிட்டு,  தேசியப்பட்டியல் ஊடாகவே அவருக்கு நாடாளுமன்றில் அரியாசனம் வழங்கி, அவரது வாழ்வில் மீண்டும் அரசியல் விளக்கை ஏற்றினார்கள்.

ஆனால், வந்திருப்பவரோ வீதிவிளக்குகளை அணையுங்கள் என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்.

2009 ஆம் ஆண்டின்பின்னர்,  நடந்த நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்களில் தமிழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் தமக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தவர்கள்தான் ராஜபக்‌ஷ குடும்பத்தினர்.  அதனால், சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் வாக்குகளை சேகரிப்பதில் மாத்திரமே குறியாகவிருந்து பதவிக்கு வந்தவர்கள்.

இறுதியாக 2019 இல் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபாயவை எவ்வாறாயினும் வெற்றிபெறவைக்கவேண்டும் என்பதற்காக வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்தவர்கள்தான் உதய கம்மன் பிலவும், விமல் வீரவன்சவும்.

விமல்,  மகிந்த ராஜபக்‌ஷவின் செல்லப்பிள்ளையாக, 2010 இற்கு முன்னரும் பின்னரும் அலரிமாளிகையில் வலம் வந்தவர்தான்.

இலங்கைச் செய்திகள்

 தமிழர்களுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பு

உலகிலேயே ஆதிமொழி தமிழ்மொழி ஆகும்

அதிசொகுசு விசேட உல்லாச கப்பல் சேவை

அனுமதியின்றி விற்பனை செய்வதற்கு தடை


தமிழர்களுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பு

TNA தூதுக்குழுவிடம் அமெரிக்க தூதுவர் உறுதி

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உறுதியளித்துள்ளார். 

ஸ்வீட் சிக்ஸ்டி 5 -நெஞ்சில் ஓர் ஆலயம் - - ச சுந்தரதாஸ்

 .

தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று அறியப்பட்டவர் ஸ்ரீதர்.இவர் இயக்கிய கல்யாணப் பரிசு தமிழிலும் ஹிந்தியிலும் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது.அதனைத் தொடர்ந்து தனது சொந்த பட நிறுவனமான சித்ராலயா சார்பில் தேன் நிலவு படத்தை தயாரித்து இயக்கினார்.நகைச்சுவைப் படமான இதைத் தொடர்ந்து அவர் கதை வசனம் எழுதி தயாரித்து டைரக்ட் செய்த படம் தான் நெஞ்சில் ஓர் ஆலயம்.

ஒரு டாக்டர் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலிக்கிறான்.ஆனால் அவளோ சந்தர்ப்ப வசத்தால் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள்.அது மட்டுமன்றி நோயாளியாகி உயிருக்குப் போராடும் தன் கணவனை எப்படியாவது காப்பாற்றும் படி தன் பழைய காதலனிடமே வந்து நிற்கிறாள்.டாக்டரோ தன் காதலை மறந்து,மறைத்து அவள் கணவனை காப்பாற்ற போராடுகிறான்.

இப்படி அமைந்த படத்தின் கதையில் டாக்டர் வேடத்தில் நடிக்க ஸ்ரீதர் தேர்வு செய்தது கல்யாணகுமார் என்ற புதுமுக நடிகரை ஆகும்.கன்னட நடிகரான இவர் மிக மென்மையாக இதமாக பாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்திருந்தார்.கதாநாயகியாக நடிப்பவர் தேவிகா.முதலில் விஜயகுமாரி நடிப்பதாக இருந்த இந்த வேடம் பின்னர் கை மாறி தேவிகா வசமானது.தன்னால் உருக்கமாகவும் நடிக்க முடியும் என்பதை இப் படத்தின் மூலம் நிரூபித்திருந்தார் அவர்.முத்துராமனுக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது.தேவிகாவின் நோயாளிக்கணவராக பாத்திரத்துடன் ஒன்றிப் போய் நடித்திருந்தார்.

சீரியஸான இந்தப் படத்தில் ஓரளவுக்கு ரசிகர்களை தன்னுடைய நடிப்பின் மூலம் சிரிக்க வைத்தவர் நாகேஷ்.ஏற்கனவே சில படங்களில் ஒண்டிரண்டு காட்சிகளில் நடித்திருந்த இவருக்கு இந்தப் படம் திருப்புமுனை ஆனது.ஆஸ்பத்திரி தாதியாக வரும் இவர் பண்ணும் சேட்டைகள் ரசிகர்களை சிரிக்க வைத்தன.அது மட்டும் அன்றி இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரே இரவில் பிரபல நகைச்சுவை நடிகராகி விட்டார் நாகேஷ்.இவர்களுடன் மனோரமா,எஸ் ராமராவ்,குட்டி பதமினி,வீ எஸ் ராகவன்,சந்தியாகுமாரி ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பத்து மூன்று ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 
    பனையில் இருக்கும் பாளையினைச் சீவியே பூத்துணர்ச்சாறு


எடுக்கப்படுகிறது. அதுதான் பின்னர் கள்ளாயும் மாறுகிறது என்றும் பார்த்தோம்.பூந்துணர்ச்சாற்றினைத் தருகின்ற நிலையில் ஆண்பனைகளைவிடப் பெண் பனைகளே அதிகளவில் தருகின்றன என்பது நோக்கத்தக்கதாகும் ,ஆண்பனையானது ஏழு மாதம் தொடக்கம் எட்டுமாதங்கள் வரைக்குமே சாற்றினைத் தந்து நிற்கும்.ஆனால் பெண்பனையானது ஏழு மாதம் தொடக்கம் ஒன்பது மாதம் வரை தந்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.ஆண் பனைகளைவிடப் பெண் பனைகளே அதிகமாகச் சுரக்கின்றன என்பது முக்கியமாகும்.ஆண்பனைகளில் கள்ளெடுக்க்கும் முறையும் பெண்பனைக ளில் கள்ளெடுக்கும் முறை வேறு வேறுவிதமாகவே காணப்படுகிறது.

  பெண்பனையில் பாளைவரும் நிலையில்  - அப்பாளை இளம்


பாளையாக இருக்கும் பொழுது அதனைச் சீவி கள்ளெடுக்கப்படுகிறது. இப்பருவத்தில் கள்ளெடுக்கும் முறையை " தட்டுப்பனை முறை " என்று அழைக்கிறார் கள்.. பெண் பனையின் பாளைகள் முதிர்ந்த நிலையில் அதனிலிருந்து கள் எடுக்கும் முறையை  " காய்வெட்டிப் பனை முறை " என்றும் அழைக்கிறார்கள். ஆண் பனையில் இளம்பாளைப் பருவத்தில் கள்ளெடுக்கிறார்கள். அதற்கு " அரிபனை முறை " என்று பெயரிட்டிருக்கிறார்கள். ஆண் பனையில். முதிர்ந்த பாளைகளிலிருந்து கள் பெறப்படும் முறைக்கு " வழுப் பனை முறை " என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதும் நோக்கத் தக்கதா கும்.இவையனைத்தும் கள்ளோடும் பத நீரோடும் சம்பந்தப்பட்ட தொழில் நுட்பப் பெயர்கள் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது,

கள் குடிப்பது சரியா தவறா என்னும் நிலை சமூகத்தில் எழுச்சி பெற்றிருக்கிறது என்பதையும் கருத்திருத்த வேண்டும்,அதே வேளை கள்ளிறக்குதல் என்பது தொழிலாகவும் வருமானத்தைக் கொடுப்பதாகவும் அமை ந்தும் இருக்கிறது.

 கள்ளினைப் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களே சொல்லுகின்றன. கள்ளுக்கடை மறியல்கள்ளுக்கடைப் போரா ட்டம் என்றெல்லாம் நடைபெற்றிருப்பதையும் அறிய முடிகிறது. கள்ளானது மருத்துவ குணம்மிக்கது என்றும்கள்ளினை அளவுடன் குடிப்பதால் தீங்கு பெரிதும் இல்லை என்றும் கருத்துக்கள் பரவலாக இருப்பதும் நோக்கத் தக்கதாகும்.கள்ளினை விரும்பிக் குடித்துக் கொண்டே ஒரு மன்னன் சங்ககாலத்தில் இருந்தானாம்அவன் கள் ளினை விற்றவர்களுக்கு உரிய பொருளைக் கொடுக்காமல் கடன்காரனாக இருந்தானாம் என்றும் சங்க இலக் கிய வாயிலாக அறிய முடிகிறது. ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் கள்ளினை விரும்பிக் குடித்தார்கள் என்றும் இலக்கியக்கியங்கள் இயம்பி நிற்கின்றன. அதேவேளை தமிழரின் மருத்துவமாகிய சித்த மருத்துவம் கள்ளை மருத்துவ குணம் மிக்கது என்று காட்டுவதும் நோக்கத்தக்கதாகும்.

சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா 08/03/2022 - 20/03/2022

 


உலகச் செய்திகள்

உக்ரைன் தலைநகரை நோக்கி ரஷ்ய படையினர் முன்னேற்றம்: விரைவில் தாக்குவதற்கு வாய்ப்பு

ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு மூன்றாவது வாரத்தைத் தொட்டது

பிரிட்டன், அமெரிக்க நாடுகள் ரஷ்ய எண்ணெய்க்குத் தடை

நேட்டோ உறுப்புரிமை கேட்டு இனி கெஞ்சப்போவதில்லை

போலந்தின் திட்டத்தை அமெரிக்கா நிராகரிப்பு

நட்பற்ற நாடுகளை அறிவித்தது ரஷ்யா

தடைகளுக்கு ரஷ்யா பதிலடி


உக்ரைன் தலைநகரை நோக்கி ரஷ்ய படையினர் முன்னேற்றம்: விரைவில் தாக்குவதற்கு வாய்ப்பு

புதிய நகரங்கள் மீதும் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கியேவின் வடமேற்கில் ரஷ்ய படைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக செய்மதி படங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. தலைநகர் மீது ரஷ்யா அடுத்த சில நாட்களில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பிரிட்டன் நேற்று குறிப்பிட்டது.

இலக்கியவெளி சஞ்சிகை நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 19 " புலம்பெயர்ந்தோரின் அண்மைக்கால சிறுகதைத் தொகுப்புக்கள் - உரையாடல் "


நாள்:
         ஞாயிற்றுக்கிழமை 03-04-2022       

நேரம்:     

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30        

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 


வழி:  ZOOM, Facebook

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09             

Facebook live:

https://www.facebook.com/ilakkiyavelicom/

மேலதிக விபரங்களுக்கு:  - அகில் சாம்பசிவம் - 001416-822-6316

சிறுகதை  நூல்களைப் பேசுவோம்:

வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்'

உரை: சு.குணேஸ்வரன்

சயந்தனின் 'பெயரற்றது'

உரை: ந.குகபரன்

குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்  

உரை: இனியன்

சாத்திரியின் 'அவலங்கள்'
உரை:  தானாவிஷ்ணு