பித்தர்களின் வசமாகி பெருநெருப்பு விழுங்கியதே !

 


மகாதேவஐயர்  ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

  மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


 

 

     ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து


     நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியாதால்

     ஓடாக உழைத்து நிதம் உருப்படியாய் செய்தமையே

     வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்     எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்

     எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே

     நித்தமும் நாம்படிப்பதற்கு புத்தகமாய் இருக்குமவை

     எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்     நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது


     நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடிடலாம் அறிவையெலாம்

     பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக

     நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்     யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்

     வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்

     தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்

     சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்      எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே


      அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ

      சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள்

      சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள்     கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்தவிடம்

     கண்ணியத்தின் உறைவிடமாய் கருத்திலே நின்றவிடம்

     பெற்றவர்கள் பிள்ளைகளை பெரிதாக்க நின்றவிடம்

     பித்தர்களின் வெறியாலே அத்தனையும் பொசுங்கியதே     கோவிலுக்கு நிகராகக் கொண்டாடும் நூலகத்தை


      கொடுங்கோலர் பலர்சேர்ந்து கொழுத்தியே விட்டார்கள்

     தாவீது எனும்சாது தன்னளவில் தாங்காது

      ஓய்வெடுத்து நின்றதுவே உலுத்தர்களின் செயலாலே     நூல்நிலையம் எரித்தவர்கள் நூறுமுறை பணிந்தாலும்

     தலைசிறந்த படிப்பாளி தாவீது வருவாரா 

     எரித்தவர்கள் மனத்தினிலே இரக்கமே வாராதா

     அரக்ககுணம் இன்னுமே அழியாமல் இருக்கலாமா

 

   குத்தென்றான் ஓராள் கொழுத்தென்றான் மற்றொருவன்

   சொத்தான நூல்நிலையும் சுவாலைக்குள் நின்றதுவே

   எத்தனையே மகான்களது எண்ணிறந்த நூலெல்லாம்

   பித்தர்களின் வசமாகி பெருநெருப்பு விழுங்கியதே

வைகாசி விசாகம் புராண கதை

 Monday, May 29, 2023 - 2:25pm


பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள். ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார்.

அப்பா சொல்லை எந்த பிள்ளைதான் கேட்டிருக்கிறது. ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவறுக்கு வருந்திய அவர்கள் சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்கு பார்வதி அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார்.

மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.   நன்றி தினகரன் 

ஹஜ்ஜுக்கான கூலி சுவர்க்கம்

 Friday, June 2, 2023 - 11:50am

இஸ்லாத்தின் பிரதான கடமைகளில் ஒன்றே ஹஜ். அதனைப் பொருளாதார வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு தடவை நிறைவேற்றுவது கட்டாயமானது. அதனை வருடத்தில் குறிக்கப்பட்ட காலத்தில் ஒரு தடவை தான் நிறைவேற்ற முடியும். இக்கடமையை நிறைவேற்றவென இலட்சோப இலட்சம் முஸ்லிம்கள் உலகின் பல திசைகளில் இருந்தும் புனித மக்கா நகரத்தை நோக்கி புனித பயணத்தை மேற்கொள்கிறார்கள், அங்கு எல்லா முஸ்லிம்களும் சகோதர பாசத்தோடும், நேசத்தோடும், தோளோடு தோள் நின்று ஒன்றாக இக்கடமையை நிறைவேற்றுகின்றனர்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, 'இரும்பில் உள்ள துருவை கொல்லனின் உலை நீக்குவது போன்று வறுமையையும் பாவங்களையும் ஹஜ்ஜும் உம்ராவும் நீக்கிவிடும்' என்றுள்ளார்கள்.

இளையராஜாவுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின்


Saturday, June 3, 2023 - 12:10pm

நேற்று 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இசைஞானி இளையராஜாவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறினர். முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்துக் கூறினர். அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். ஞானதேசிகன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இளையராஜா இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

உண்மையிலேயே இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3 ஆம் திகதிதான். அதேநாள் தான் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இளையராஜாவிற்கு இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அவர் மீது இருந்த மதிப்பு மரியாதையால் தனது பிறந்தநாளை ஜூன் 2 ஆம் திகதி கொண்டாடி வருகிறார் இளையராஜா.

அதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார். “கலைஞர் ஐயா தமிழுக்கு ஏராளமான சேவைகளைச் செய்துள்ளார். அந்த அளவுக்கு நான் ஒன்றும் செய்து விடவில்லை. அதனால் கலைஞரை மட்டுமே தமிழக மக்கள் ஜூன் 3 ஆம் திகதி வாழ்த்த வேண்டும். அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன்” என்று அவர் பலமுறை தெரிவித்துள்ளார்.

பண்ணைபுரம் என்னும் கிராமப்புறத்தை பிறப்பிடமாகக் கொண்ட இளையராஜா 14 வயதில், அவர் தனது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் தலைமையிலான ‘பாவலர் பிரதர்ஸ்’ என்ற இசைக்குழுவில் சேர்ந்தார். தமிழ் திரைப்பட உலகில் கடந்த 40 ஆண்டுகாலமாக இசை இராஜாங்கம் நடத்தி வரும் இளையராஜாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

மஞ்சள்நிற பொன்னாடை அணிவித்து அறிஞர் அண்ணாவின் புத்தகத்தை கொடுத்து இளையராஜாவை வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.   நன்றி தினகரன் 

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்.... கிறிஸ்டி நல்லரெத்தினம்


சார்லிக்கு இன்று என் மீது கோபம். அவன் தட்டில் வைத்த எதையும் இன்று சாப்பிடவில்லை. தினமும் நான் கொடுக்கும் அந்த உலர்ந்த கொடிமுந்திரியைக்கூட தொடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதுதான் அவன் 'பேஃவரிட்'.....அதைக்கூட.....

 காலையில் இருந்து "உர்ர்ர்.....உர்ர்ர்" என்று ஏதோ விசித்திர சத்தம் வேறு எழுப்பிக்கொண்டேயிருந்தான்.

காலையில் எழுந்ததுமே சார்லிக்கு அருகில் சென்று "ஹலோ சார்லி"


என்பேன். பதிலுக்கு "ஹலோ" என்றுவிட்டு கூட்டின் வாசலுக்கு அருகில் வந்து அமர்ந்துகொள்வான். கூட்டின் கதவுகளை அகலத் திறந்து, ஒரு தொட்டில் இருந்து மழலையை தூக்கும் தாயின் கவனத்துடன், மிகப் பவ்வியமாக சார்லியை என் விரல்கள் மூடிக்கொள்ளும். அவனின் பஞ்சுபோன்ற மிருதுவான இறகுகள் என் விரல்களுக்கு ஒரு இதமான மென்மையை அறிமுகப்படுத்தும். என் பெருவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே உருவாகும் அந்த இடைவெளியில் அவன் தலையை வெளித்தள்ளி குறுகுறுவென தலையை பல கோணங்களில் திருப்பி ஒரு புதிய உலகைக் கண்டுகொண்ட ஒரு மாலுமியின் வியப்புமிகுந்த கண்டடைதல் அங்கு நடந்தேறும். என் விரல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மெதுவாய் என் கை வழி ஏறி தோளில் அமர்ந்து கொண்டு என் காதின் ஓரங்களை தன் கூரிய அலகுகளால் கவ்வி விடுவிப்பான். இந்த சீண்டல் பல நிமிடங்களுக்கு நடந்தேறும். எஜமானுக்கு வலி ஏற்படுத்தாத 'செல்லச் சீண்டல்' அது. அவனது அன்பின் அடர்த்தியின் அளவுகோல் அது. எல்லைகள் மீறும் போது "சார்லி!!" என நான் எழுப்பும் அழுத்தமான குரலை புரிந்துகொள்ளும் உணர்தல் அவனுக்கு எப்போதும் உண்டு. அவன் உடனே எனது காதை விடுவித்து தன் கால்களை பின்வாங்கி கழுத்தில் இருந்து பின் நகர்ந்து தோளின் ஓரத்தில் அமர்ந்து தன் கழுத்தைத் திருப்பி 'கோபமா?' எனும் பாணியில் என்னை நோக்கி என் அடுத்த கட்டளைக்கு காத்து நிற்பான்.

"வட்ஸ் றோங் வித் யூ?" எனும் என் சொற்களை அவன் புரிந்து கொண்டதாய் எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அப்படி கடிந்து கொண்டதில் எனக்கு ஒரு திருப்தி. ஒரு எஜமானுக்குரிய அதிகாரத்தை உரிய நேரத்தில் பாவித்துவிட்டதால் பிறந்த திருப்தி அது. புறக்கணிக்கப்பட்ட அத்துமீறல்கள் அங்கீகரிக்கப்பட்ட அத்துமீறல்களாய் மாறிவிடக்கூடாது என்பதில் எனக்கு இருந்த கவனம் பற்றி சார்லிக்கு அக்கறையில்லை.

இருவர் உள்ளம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 தனது வசீகரமான வசனங்கள் மூலம் தமிழ் திரைப் பட ரசிகர்களை


தன் பக்கம் சுண்டி இழுத்தவர் கலைஞர் மு கருணாநிதி. இவர் வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா, மலைக்கள்ளன் , போன்ற படங்கள் திரையுலகில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தின. அவர் எழுதிய வசனங்களை மனனம் செய்து பேசி மகிழ்ந்தவர்கள் ஆயிரக்கணக்காணோர் . அடுக்கு மொழியில் ஆவேசமாக பேசக் கூடிய வசனங்களை எழுதி வந்த கருணாநிதி அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1963ம் ஆண்டு வெளிவந்த இருவர் உள்ளம் படத்துக்கு , காலத்துக்கு ஏற்றாற் போல்

அளவுடன் வசனங்களை எழுதி ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக் கொண்டார். அவரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவின் தொடக்கம் இவ்வாண்டு ஜூன் 3 ம் திகதி முதல் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது!


பிரபல நாவலாசிரியை லக்ஷ்மி எழுதிய பெண் மனம் நாவல் , இந்திய திரைத்துறையின் முன்னோடிகளில் ஒருவரான எல் வி பிரசாத்தின் தயாரிப்பிலும், டைரக்க்ஷனிலும் இருவர் உள்ளமாக படமானது. ஆனாலும் படத்தின் ஆரம்பத்தில் எல்லாருடைய பெயர்களும் காட்டப்பட்ட போதும் கதையை எழுதிய லக்ஷ்மியின் பெயர் காண்பிக்கப் படவே இல்லை! புகழ் பெற்ற பல தலைகள் படத்தில் இடம் பெற்ற போதும் எழுத்தாளரின் பேர் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

படத்தின் நாயகன் செல்வம் செல்வத்தில் மிதப்பவன், நாளுக்கு நாள் புதுப் பெண்களுடன் கொட்டம் அடிப்பவன், அப்படிப்பட்டவனின் காதலை டீச்சர் சாந்தா துச்சமென உதரித் தள்ளுகிறாள். அவள் அவனை உதாசீனம் செய்ய செய்ய அவனுக்கு அவள் மீது காதல் பெருகுகிறது. தன் குடும்ப செல்வாக்கினால் அவளை மணந்து கொள்கிறான் செல்வம். ஆனால் சாந்தா முதல் இரவிலேயே அவனை நிராகிக்கிறாள். பெண் மனம் அவனை கணவனாக ஏற்க மறுக்கிறது. நீண்ட முயற்சிக்கு பின் இருவர் உள்ளமும் ஒன்று சேர தயாராகும் போது செல்வம் மீது கொலைப் பழி ஒன்று சுமத்தப்படுகிறது. அதில் இருந்து அவன் மீள சாந்தா எப்படி உதவுகிறாள் என்பதே மீதிக் கதை.

லக்ஷ்மியின் கதைக்கு திரைக்கதையை அமைத்து வசனம் எழுதினார் கருணாநிதி. சிவாஜி, சரோஜாதேவி இருவரும் வசனங்களுக்கு உயிர் கொடுத்தனர். படத்தில் கதா பாத்திரத்தை பொறுத்தவரை சிவாஜியின் பாத்திரத்தை விட சரோஜாதேவியின் பாத்திரமே முக்கியத்துவம் பெறுகிறது. அதன் சிறப்பறிந்து அதனை மிக நேர்த்தியாக செய்திருந்தார் சரோஜாதேவி. சிவாஜியை அலட்சியம் செய்யும் போதும், பார்வையாலேயே எரிக்கும் போதும், அவரின் நடிப்பு பரிணமிக்கிறது. சிவாஜியும் பத்திரத்துடன் ஒன்றிப் போகிறார். இருவர் நடிப்பும் உச்சம் தொடுகிறது.

சரக்கு புகையிரம் மற்றும் 2 பயணிகள் புகையிரதம் மோதிய விபத்தில் 238 பேர் பலி

 Saturday, June 3, 2023 - 12:36pm

- ஒரு விபத்து இடம்பெற்று சற்று நேரத்தில் மற்றொரு பாரிய விபத்து
- 650 பேர் வரை காயம்; மீட்புப் பணிகள் தொடர்வு
- இந்தியாவின் ஒடிசாவிலுள்ள பாலசோரில் சம்பவம்
- தமிழ் நாட்டில் ஒருநாள் துக்கம் அனுஷ்டிப்பு

இந்தியாவின் ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் புகையிரதங்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது.

இவ்விபத்தில் சுமார் 650 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மலையக மக்கள் குறித்து அதிக கவனம் அவசியம்

 Wednesday, May 31, 2023 - 7:14am

UK தூதுவரிடம் திலகர் வலியுறுத்து

இலங்கையில் மலையக மக்களின் 200 ஆண்டு கால வரலாற்றில் 150 ஆண்டு காலம், அந்த மக்கள் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் அனுபவித்தனர்.

எனவே மலையகம் 200 தொடர்பில் பிரித்தானிய அரசும் கவனம் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஷாரா ஹல்டனிடம், நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை நுவரெலியாவில், பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தபோது மலையக மக்களின் கரிசனைகள் குறித்து அவர், கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.

1823 ஆண்டு காலப்பகுதியில் தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வந்த காலத்தில் இருந்து 1972 ஆண்டு இலங்கைக் குடியரசாகும் வரை மலையகப் பெருந்தோட்டச் சமூகத்தினரின் தொழில் மற்றும் சமூக நிர்வாகத்தினை பிரித்தானியரே மேற்கொண்டனர்.

எனவே இன்று 200 வருட மலையக வரலாற்றில் பெரும்பங்கு பிரித்தானியாவுக்கு உரியது. இந்தநிலையில் பல்வேறு உரிமை மறுக்கப்பட்டவர்களாக இலங்கையில் வாழும் இந்த மக்கள் குறித்த கரிசனையை பிரித்தானியா வெளிப்படுத்த வேண்டும்.

இந்த மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் ஓர் குறைகேள் அதிகாரியை அல்லது குழுவை நியமிக்க வேண்டும். அதன் ஊடாகத் தொகுக்கப்படும் தகவல்கள் ஆவணப்படுத்தப்படுமிடத்து, பல்வேறு உரிமை மறுக்கப்பட்ட இந்த மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் முன்னிலைக்கு கொண்டு செல்லவும் தீர்வு பெறவும் வழியேற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியை கட்டுப்படுத்தும் ஏற்பாடு

 Wednesday, May 31, 2023 - 6:00amநாட்டில் மதநல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான முயற்சிகள் சமீப நாட்களாக முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய கொவிட் 19 பெருந்தொற்று அச்சுறுத்தல், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இயல்புநிலைகளின் பாதிப்பு, அந்நிலைமை சீரடைந்த சொற்ப காலத்திற்குள் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தோடு தோற்றம் பெற்ற பொருளாதார நெருக்கடி என்பன நிலவிய காலப்பகுதியில் இவ்வாறான முயற்சிகள் எதுவும் இடம்பெற்றதாக இல்லை. அவை தொடர்பில் எவரும் சிந்தித்ததாகவும் தெரியவில்லை.

ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நாடு கட்டம் கட்டமாக மீட்சி பெற்று பொருளாதார மறுமலர்ச்சிக்குள் பிரவேசித்திருக்கும் இன்றைய சூழலில்தான் இம்முயற்சிகள் வெளிப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துவரும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் பயனாக நாடும் மக்களும் அடைந்துவரும் பிரதிபலன்களின் பயனாக அவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஜனாதிபதி முன்னெடுக்கும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் உள்நாட்டில் மாத்திரமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளன.

இவ்வாறான சூழ்லில் இவ்விதமான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது என்றால் அவை ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை குழப்புவதற்கான சூழச்சிகளா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி தலைமையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழலில் மதநல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றால் அவை நிச்சயம் திட்டமிட்ட சூழச்சிகளாகவே இருக்கும் என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.

கொவிட் 19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியினால் நாடு அசாதாரண நிலைக்கு உள்ளாகி இருந்த சூழலில் இவ்வாறான முயற்சிகளுக்கான எந்தவித அடையாளமுமே நாட்டில் காணப்படவில்லை.

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிக்கு இடமளிக்கலாகாது!

 Thursday, June 1, 2023 - 6:00amஇலங்கையானது பல மதங்களைக் கடைப்பிடித்தொழுகும் பல மொழிகள் பேசும் பல்லின மக்கள் வாழ்ந்து வரும் ஒரு நாடாகும். இன, மத, மொழி ரீயியிலான பல்வகைமையுடன் இந்நாட்டில் ஐக்கியமாகவும் புரிந்துணர்வுடனும் நீண்ட காலமாக மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் மத்தியில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நீடித்து நிலைத்திருக்கிறது.

பல மதங்களைப் பின்பற்றி பல மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் வாழும் எந்தவொரு நாட்டுக்கும் நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. அது நாட்டின் முன்னேற்றத்திற்கும் சுபீட்சத்திற்கும் இன்றியமையாததாகும்.

இந்நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் மத, இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் சில தனிநபர்களும் சில குழுக்களும் திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுவது தெரியவந்துள்ளது. இது தொடர்பிலான புலனாய்வுத் தகவல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இந்நிலையில் நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷ, 'தாங்கள் விரும்பிய மதமொன்றைப் பின்பற்றி ஒழுகுவதற்கு யாவருக்கும் உரிமை இருக்கின்ற போதிலும் ஏனையவர்களின் மதங்களை அகௌரவப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை. மத நல்லிணக்கத்திற்கு தடை ஏற்படும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைச் செய்திகள்

 யாழ்ப்பாணம் - காரைக்கால் கப்பல் சேவைக்கு அனுமதி

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று

இலங்கைக்கு மேலுமிரு புதிய விமான சேவைகள்

பெருந்தோட்ட பிரச்சினைகளை தீர்க்க பிரித்தானியாவின் பங்களிப்பும் அவசியம்

கே. அசோக்குமாருக்கு கலாவிபூஷண விருது

யாழ்.- சென்னைக்கு தினமும் விமான சேவை நடத்த திட்டம்


யாழ்ப்பாணம் - காரைக்கால் கப்பல் சேவைக்கு அனுமதி

ஜூன் 10 முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கு இலங்கையின் ஹேலீஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இந்த சேவையை நடத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்

 கடன் உச்ச வரம்பை அதிகரிக்க செனட் சபையில் ஆதரவு வாக்கு

ரஷ்ய தலைநகர் மீது மிகப்பெரும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

சீன முதல் பயணி விமானம் பறந்தது

சுவீடன் கடலில் தோன்றிய ரஷ்ய உளவு திமிங்கிலம்

துருக்கி ஜனாதிபதி எர்துவான் மேலும் 5 ஆண்டுகள் ஆட்சிக்கு வெற்றி


 கடன் உச்ச வரம்பை அதிகரிக்க செனட் சபையில் ஆதரவு வாக்கு

அமெரிக்காவில் கடன் உச்ச வரம்பை அதிகரிக்க அந்நாட்டு செனட் சபையில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இரு தரப்பு உடன்படிக்கை எட்டப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் கையொப்பத்திற்கு செல்வதற்கான கடைசி தடையையும் இந்த சட்டமூலம் தாண்டியுள்ளது.