கம்பன் விழா 2012இல் மாருதி விருது மற்றும் சான்றோர் விருது பெற்ற விருதாளர்கள்.

.
இந்த ஆண்டிற்கான கம்பன் விழாவில் விருதுபெற்ற பெரியோரின், அவர் ஆற்றிய சேவை மற்றும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈட்டித்தந்த பெருமைகளை தமிழர்களாகிய நாம் அறிந்து கொள்ளவேண்டும் என்ற விருப்போடு தமிழ் முரசு அவுஸ்திரேலிய வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றுகின்றோம். இவ்விபரங்களை எமக்காகத் தந்துதவிய நல்ல உள்ளங்களுக்கு எம் ஆத்மார்த்த நன்றிகள்.
நன்றி.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்.

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் உயர் விருதான ~மாருதி| விருது – 2012 பெற்றவர் : இருதய மருத்துவ நிபுணர் திருமிகு. வைரமுத்து மனமோகன் அவர்கள்.
  
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது - 2012
பெற்றவர் : பொன். பூலோகசிங்கம் அவர்கள்


 அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது - 2012
பெற்றவர் : எஸ். பரம் தில்லைராஜா அவர்கள்

  
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது - 2012
பெற்றவர் : எஸ். பொன்னத்துரை (எஸ்.பொ.)


 அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது - 2012
பெற்றவர் : மருத்துவக்கலாநிதி பொன். சத்தியநாதன்


கம்பன் விழா 2012 – ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

 .

படங்கள்: ப. இராஜேந்திரன்   மற்றும் கே. இலட்சுமணசர்மா


அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் சிட்னியில் தம் முதலாவது கம்பன் விழாவினை இனிதே 21.07.2012 அன்று நிறைவேற்றியிருந்தது. முழுநாள் நிகழ்வாக இடம்பெற்ற இவ்விலக்கிய விழா, புகழ்பூத்த தென்னிந்தியப் பேச்சாளர்களின் தனியுரைகள், திறமைமிகு இளைஞர்களின் சுழலும் சொற்போர், தமிழ்ப் பேராளர்களுக்கான விருது வழங்கல், மற்றும் சிறப்புப் பட்டி மண்டபம் என அமைக்கப்பட்டிருந்தது. வருகை தந்திருந்த அறிஞர் பெருமக்கள், தாம் விழாவை மிகவும் இரசித்ததாக மனதாரப் பாராட்டியிருந்தனர். இலக்கியத் தாகத்தோடிருந்த தமிழ் ஆர்வலர்கள், தமக்குத் தரமான நிகழ்வைச் சிறப்பாக அரங்கேற்றியதற்காக, தம் சந்தோஷத்தையும் அன்பையும் தெரிவித்துக் கொண்டனர்.

பெண்மொழி -கவிதை -கிண்ணியா எஸ்.பாயிஸா அலி

.
 நிலவில் பூத்த மல்லிகையாய் என்முதல்பேரன் மண்ணுக்கு  முகங்காட்டிய திருநாள்.நுரையீரலையே புரட்டிப்போடும் டெற்றோல்நெடிமருந்துமாத்திரை மணம்….கூடவேவெள்ளைத்தேவதைகளின் விரட்டல்கள்எவற்றையுமே பொருட்படுத்தாது சாய்ந்திருக்கிறேன்கைகளில் வெந்நீர் போத்தலும் கண்களில் கண்ணீருமாய்அப்பிரசவஅறைக் கதவோரம்.புனர்ஜென்மம் பெற்றுவந்த பூரணத்தோடு மரு(று)மகள்…..எனினும்
மறுகட்டிலில் அவளகவையொத்த இன்னுமொரு சின்னப்பூ!
பாதிவியர்வை மீதி குருதியிலே குளித்த உடலோடு
போராடிக் கிடக்கிறத
இப்பொல்லாத  பூமியிலே, தன்னைப் படைத்தவன்
இப்பரிதாப வேதனையைத் தனக்காய்க்
கொடுத்தவன் – அந்த நாயனவன் நாமங்கள் மொழிந்தபடி.
முழங்கால் மடக்கி மூச்சுப்பிடிப்பதும் பின்
சோர்ந்து வீழ்ந்து முனகுவதுமாய்….
முக்கால் மணிநேரப் போராட்ட முடிவினிலே
செவிப்பறையை நனைத்து அறையை நிறைக்கிறது
அந்தக் குட்டிக்குரல்.


நாடற்றவன் - அ முத்துலிங்கம்


.
ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாகும். வீரர்கள் அணிவகுப்பில் 204 நாடுகள் கலந்துகொள்ளும். அவர்கள்  பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாத படியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அணிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம் அடைந்த தெற்கு சூடான் மக்கள் அத்தனை பேரும் அவன் பின்னே மானசீகமாக செல்வார்கள். உலகத்து நாடற்றவர்கள் கண்கள் அனைத்தும் அவன் மேலேயே இருக்கும். அவன் பெயர் குவோர் மாரியல்.

குவோர் மாரியலுக்கு 28 வயது. தெற்கு சூடானிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாக 12 வருடங்களுக்கு முன்னர் குடிபெயர்ந்தான். அவனுக்கு வசிப்பிட உரிமை கிடைத்தது, ஆனால் குடியுரிமை  கிடைக்கவில்லை. அவன் தீவிரமான மரதன் ஓட்டக்காரன்.  ஆனாலும் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அவன் ஓடமுடியாது என்று கூறிவிட்டார்கள். அப்படி ஓடுவதென்றால் அவனுக்கு ஒரு நாடு வேண்டும். சூடான் அதிபர் அவன் சூடான்  நாட்டுக் கொடியின் கீழ் ஓடலாம் என அழைப்பு விடுத்தார். அவனுடைய எட்டு சகோதர்களைக் கொன்றது சூடான் அரச படை. அவர்களின் அட்டூழியம் தாங்கமுடியாமல்தான் அவன் 12 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அகதியானான். சூடான் நாட்டு கொடியின் கீழ் அவன் எப்படி ஓடமுடியும்? தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்திருந்தாலும் அதனிடம் ஒலிம்பிக் குழு இல்லை. அதனால்தான் இப்பொழுது இந்த நாடற்ற மனிதனுக்கு ஒலிம்பிக் கொடியின் கீழ் ஓட அனுமதி கிடைத்திருக்கிறது.

மாலை மரியாதை - கார்த்திகா கணேசர்

.


திரு முருகபூபதி அவர்கள் இலக்கிய வாழ்வில் பங்குபற்றிய கருத்தரங்குகளில் ஏற்ப்பட்ட சலிப்பால் குருத்தரங்குகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும் எனும் கட்டுரையை எழுதியிருந்தார். தமிழ் இலக்கியத்தை வழர்க்கும் பொறுப்புள்ள எழுத்தாளர்கள் மகாநாட்டிலே நடக்கும் பிரச்சினைகளை பொதுமக்களும் அறியக்கூடியதாக இருந்தது.



மங'கல விளக்கேற்றல் பொன்னாடைகள், பூமாலைகள், வெறும் புகழாரங்கள் அத்தனையும் கருத்தரங்கிற்கு சம்பந்தமில்லாத சம்பிரதாயங்கள் பற்றிக் கூறியிருந்தார். இதை வாசித்தபோது நான் நான் அறிந்த விசயத்தை பிறரும் அறிந்திருக்க வேண்டும் என எண்ணுவதால் இங்கு அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் சென்னையில் கல்வி கற்றபோது பாதுகாவலராக இருந்தவர் திரு கண முத்தையா அவர்கள். இவர் தமிழ்ப்புத்தகாலயம் என்ற பிரபல நூல் வெளியீட்டு நிறுவனத்தின் அதிபர்மட்டுமல்ல யுத்த காலத்திலே நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்அவர்களின் செயலாளராகவும் பணிபுரிந்தவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோசுடன் இணைந்து வேலை செய்யும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியிருந்தார்

அணிற்பிள்ளை - சிறுகதை - ஆக்கம் பொறி தி. ஈழமலர்


 .

பிறந்து ஓரிரு நாட்களேஆன, இவ்வளவுசிறிய அணிற்பிள்ளையை இந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே பார்த்து இரசிக்கும் வாய்ப்புசின்னக்குட்டி அழகனைத்தவிர வேறு யாருக்கும் கிட்டியிராதுதான். அழகன் - பெயருக்கு ஏற்றாற்போல்அழகும் அறிவும் மிகுந்த துடிப்பான 3 வயதுக் குழந்தை.
அந்த அணில், இவர்கள் புதுமனை புகும்பொழுது பழைய வீட்டில் கிடைத்த பரிசு. அன்று, அந்தப் புது வீட்டில் அனைவரும் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த பொழுது, அழகன்மட்டும் தாத்தாவின் அறையை அடிக்கடி நோட்டமிட்டு இருந்ததை அவன் அண்ணனைத் தவிரப்பிறர் கவனித்து இருக்க மாட்டார்கள். தாத்தாவின் சிறிய அறையில் உள்ள பழைய கூடைதான், அந்த அணிலின் புதுவீடு! இதற்கு முன், அழகன்கைக்குழந்தையாக இருந்த பொழுது, அவனது துணிகளை அடுக்கப் பயன்பட்டது; அதற்கும் முன், அவன் அண்ணன் அறிவனின்விளையாட்டுப் பொம்மைகளைச் சுமந்தது; இன்று வேண்டாத துணிகளால் ஆன, மெத்தையிடப்பட்டுஅணிலைத் தாலாட்டும் தொட்டிலாகிவிட்டது அந்தக் கூடை.
மணிக்கு மும்முறைஅணிலைப் பார்த்தால்தான் அண்ணனுக்கும் தம்பிக்கும் பொழுதே நகரும். ஆனால், இவர்களின் அப்பாவிற்குஇது தெரிந்தால், முதுகுத்தோலை உரித்து விடுவார் என்னும் பயம் தாத்தாவிற்கு. தாத்தா, தன் மகன் வீட்டில்தங்கி உள்ளார். பேரப்பிள்ளைகள் மீது கொள்ளை அன்பு கொண்டவர்; தற்சமயம் அணிற்பிள்ளைமீதும்! ஆனால், அவருக்குத்தெரியாது, தன்மகனுக்குத் தன் மீதும் தன் அறை மீதும் வந்த சந்தேகத்தைப் பற்றியும் அதனால், மாலை வீச விருக்கும்சூறாவளியைப் பற்றியும்!
உணவருந்திவிட்டுவிருந்தினர் அனைவரும் சென்று விட்டனர். அண்ணனும் தம்பியும் அணிற்பிள்ளையைப்பார்க்க ஓடோடி வந்தனர். ‘‘தாத்தா!தாத்தா! என்ன செய்கிறீர்கள் தாத்தா? ’’ - இஃது அழகன். ‘‘அடடே! வாங்க! வாங்க! சின்னக் குட்டிகளா! இங்கபார்த்தீர்களா, உங்கள்குட்டி அணில் பால் குடிப்பதை! ’தாத்தாவிற்கு அளவற்ற ஆனந்தம், அணிலின் பசி ஆற்றியதைக்குறித்து. “எப்படித்தாத்தா அணில் பால் குடிக்கும்? நானும் பார்க்கிறேன் தாத்தா.

வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 41 – மழையோ மழை!


 .

ஞானா:      அப்பா அன்டைக்கு மழை, கடவுளின்ரை அருட் சக்தியின் வெளிப்பாடு எண்டு
சொன்னியள். கொஞ்ச நாளைக்கு முந்தி மழை செய்த அருள் விளையாட்டைப் பாத்தனியள்தானே.

அப்பா:      அவுஸ்திரேலியாவிலை குவீனஸ்லன்ட் மாநிலம் எல்லாம் வெள்ளத்தாலை அழிவு,
           இலங்கையிலை மன்னார், மட்டக்களப்பு மாநிலம் எல்லாம் மழையாலை அழிவு,
சனங்கள் எல்hம் அல்லோல கல்லோலப்பட்டுத் துன்பத்திலை வாடித் தவிச்சிது உயிர்ச்சேதம்    கூட நடந்திருக்கு, இதுதானோ கடவளின்ரை அருள் எண்டு கேக்கவாறாய்     ஞானா.

ஞானா:      வேறை என்ன அப்பா. எங்கடை திருவள்ளுவரும் “வான் சிறப்பு” எண்டு சொல்லி
           மழையைப் புகழ்ந்து பத்துக்குறள் எழுதிவைச்சிட்டுப் போயிருக்கிறார்.

சுந்தரி:      நல்லாய்ச் சொன்னாய் ஞானா. “வானின்று உலகம் வழங்கி வருதலால்
                                  தானமிழ்ம் என்றுணரற் பாறு.
           எண்டு உயிர்களைச் சாகாமல் வைச்சிருக்கிற அமிழ்தம் எண்டு வேறை, குறள்
           எழுதிவைச்சிருக்கிறார். மழை உயிர்களைச் சாகடிக்கும் என்டு வள்ளுவருக்குத்
           தெரியேல்லையே அப்பா?

உலகச் செய்திகள்


 .
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விரும்புவதாக கியூப ஜனாதிபதி அறிவிப்பு

சிரியாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கவுள்ள அலெப்போ மோதல்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விரும்புவதாக கியூப ஜனாதிபதி அறிவிப்பு 
28/7/2012


  அமெரிக்காவுடன் பேச்சுவார் த்தை நடத் து வதற்கு விரும்புவ தாக கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். புரட்சி தின வைபவமொன்றில் வியாழ க் கி ழமை உரையாற்றுை க யி லேயே அவர் இவ் வாறு தெரிவி த்து ள் ளா ர்.

அவர் கடந்த இரு வருடங்களாக புரட்சி தின வைபவங்களின் உரையாற்றுவதை தவி ர் த்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குவான்டனமோ மாகாண த் தில் இடம்பெற்ற வைபவத்தில் ராவுல் காஸ் ட்ரோ உரையாற்றுகையில், ‘‘ அமெரி க் காவு க்கும் கியூபாவுக்குமிடையிலான கலந் து ரை யாடல்களில் சமத்து வம் பேணப்படும் நிலையில் அமெரிக்காவு டன் பேச்சுவார்த் தைகளில் ஈடுபட விரும்பு வ தாக கூறினார்.

வரலாற்று புகழ் மிக்க நல்லூர் கந்தன் கொடியேற்றம்..24.07.2012

.


Nantri:yarl.com

இலங்கைச் செய்திகள்

 பாஸ் நடைமுறையால் மன்னார் மீனவர்களுக்கு பாதிப்பு

 துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு நீதிபதி பொலிஸாரைப் பணித்தார் : ஜம்இயத்துல் உலமா சபை

 மணியோசை வரும் முன்னே... 

 “திட்டங்கள்’ சிறப்பானவை தான் ஆனால் “தீர்வு’ தான் முடிவிலி 

நீதித்துறையை “ஏவல்’ கருவியாக்க ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது

 என்றுமே மறக்க முடியாத ஜூலை 83


பாஸ் நடைமுறையால் மன்னார் மீனவர்களுக்கு பாதிப்பு 

28/7/2012


  மன்னார் மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருப்பதினால் தாம் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தின் அனைத்து மீன் பிடி துறைமுகங்களுக்கு அருகாமையிலும் கடற்படையினருடைய சோதனைச்சாவடிகள் காணப்படுகின்றன.




 .
இரக்கமுள்ள அன்பர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்
அவுஸ்திரேலியாவில் இயங்கும் கல்வி நிதியத்தின் கோரிக்கை
“அன்னசத்திரம்  ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்”

                                -மகாகவி பாரதி-

இலங்கையில் நீடித்த போரினால் தமது பெற்றவர்களை இழந்து கல்வியைத்தொடரமுடியாமல் பாதிப்பிற்குள்ளான ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு கடந்த 23 வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவிலிருந்து நூற்றுக்கணக்கான அன்பர்களின் ஆதரவுடன் உதவி வழங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கு சமீபத்தில் மேலும் பல மாணவர்களின் உதவி கோரும் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களான வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவுரூபவ் யாழ்ப்பாணம் ரூபவ் மட்டக்களப்பு திருகோணமலைரூபவ் அம்பாரை ஆகிய மாவட்டங்களிலிருந்து சமீபத்தில் கிடைக்கப்பெற்றுள்ள போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில்  அவசர உதவி தேவைப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஊடாக ஆயிரக்கணக்கான ஏழைத்தமிழ் மாணவர்கள் நிதியுதவி பெற்று கல்வியைத்தொடர்ந்து அவர்களில் பலர் பல்கலைக்கழகங்களிலும் பிரவேசித்துள்ளதுடன் தொழில்வாய்ப்புகளும் பெற்றுள்ளனர்.

இரக்கமுள்ள அன்பர்களின் ஆதரவினால்தான் இந்த நற்பணி சாத்தியமாகியுள்ளது.

ஒரு மாணவருக்கு மாதாந்தம் 20 வெள்ளிகளை($20.00 Dollars) நன்கொடையாக வழங்குவதன் மூலம் இந்தப்புனிதப்பணிக்கு எவரும் ஆதரவு வழங்கலாம். மூன்று மாதங்களுக்கு ஒருதடவை நிதியுதவி குறிப்பிட்ட தமிழ்ப்பிரதேசத்தில் இயங்கும் கல்வி நிதியத்தின் கிளை அமைப்புகள் மற்றும் குறிப்பிட்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் ஊடாக நிதியுதவி அனுப்பப்படுகிறது.

 உதவும் அன்பர் இலங்கைசெல்லும் சந்தர்ப்பங்களில் தமது உதவியைப்பெற்றுக்கொண்டு கல்வியைத்தொடரும் மாணவரை நேரடியாக சந்தித்து உரையாடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 நிதியுதவி பெறும் மாணவர் நிதி பெற்றுக்கொண்டதை அத்தாட்சிப்படுத்தும் நன்றிக்கடிதம் கல்வி முன்னேற்றச்சான்றிதழ் என்பனவும் உதவும் அன்பரின் கவனத்திற்கு கல்வி நிதியத்தினால் சமர்ப்பிக்கப்படும்.

அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் இங்கு பதிவுசெய்யப்பட்ட(Incorporated) அமைப்பாகும்.

 கல்வி நிதியத்தின் வங்கிக்கணக்கு விபரம்(Bank Details)
A/C Name: Ceylon Students Educational Fund (inc)
Bank: Commonwealth Bank of Australia
Branch: Brunswick, Victoria 3056, Australia
 BSB No: 063 111      A/C No: 1063 4651
மேலதிக விபரங்களுக்கும்உதவிதேவைப்படும் மாணவர்களின் பூரண விபரங்களுக்கும்:-

     மருத்துவக்கலாநிதி மதிவதனி சந்திரானந்த் (தலைவர்) 00 61 (03) 9708 1218
     திரு. எஸ். கோர்ணேலியஸ்          (செயலாளர்)  00 61 (03) 9308 5510
      திருமதி வித்தியா ஸ்ரீஸ்கந்தராஜா  (நிதிச்செயலாளர்) 00 61 (03) 9444 6916
       திரு. லெ. முருகபூபதி    (துணை நிதிச்செயலாளர்) 00 61 (03) 9308 1484

                    E.Mail : kalvi.nithiyam@yahoo.com     Web: www.csefund.org
                                                                      (தகவல்: லெ.முருகபூபதி)

லண்டன் ஒலிம்பிக்: கோலாகலமாக தொடங்கியது





உலகில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. br>
பிரிட்டன் தலைநகர் லண்டனில் போட்டி நடைபெறும் இடமான ஒலிம்பிக் பார்க் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. லண்டன் நகரில் திரும்பும் திசையெல்லாம் கொடிகளும், பெரிய அளவிலான பலூன்களும் பறக்கவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

ஒலிம்பிக் போட்டியைக் காண 60,000 இற்கும் மேலானவர்கள் திரண்டிருந்தனர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா, பிரிட்டிஷ் அதிபர், பிரதமர், ஐரோப்பாவைச் சேர்ந்த மன்னர் குடும்பத்தினர், லண்டன் நகர மேயர் போரிஸ் ஜான்ஸன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர். br>
உலகம் முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர். மொத்தம் 17 நாள் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 204 நாடுகளைச் சேர்ந்த 10,000 இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

தீனித் தின்னிகள் -ஜி.ஆர்.சுரேந்திரநாத்


.
அப்போது எனக்கு ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும். ஒரு முறை ஜெயங்கொண்டம் தாத்தா வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பியபோது, அரியலூர் பஸ்ஸ்டாண்டில் உள்ள சந்த்ர பவன் ஹோட்டலுக்கு அப்பா அழைத்துச் சென்றார்.
பொதுவாக நாங்கள் ஹோட்டலுக்கு செல்லும்போது, சிறிய தம்பி முரளி அல்வா, ரவாதோசை என்று எது வாங்கினாலும், பாதிக்கு மேல் திங்க முடியாமல் வைத்துவிடுவான். நான் என்னுடையதை வேகமாக தின்று முடித்துவிட்டு, அவன் எப்படா மிச்சம் வைப்பான் என்று பார்த்துக்கொண்டிருப்பேன். அவன் மீதம் வைத்தவுடன் சந்தோஷத்துடன் எடுத்து தின்பேன். பொதுவாக சற்று ஜென்டில்மேனான என் பெரிய தம்பி தினகர் இதில் பங்கு கேட்கமாட்டான்.
முரளி, முக்கி முக்கி ரவா தோசையை தின்று கொண்டிருந்தான். எந்த நிமிடத்திலும் அவன் போதும் என்று சொல்லிவிடக்கூடும். நான் சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவாமல், ஆவலுடன் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். முரளி பாதி தோசையை தாண்டியிருந்தான். பொதுவாக பாதி தோசையை நெருங்கும்போதே நெளிவான். வளைவான். இந்த முறை அவன் இலையிலிருந்து கண்களை எடுக்காமல், வேகமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தான். பசி போல. போன முறை இப்படித்தான் காத்துக்கொண்டிருந்தபோது, கொஞ்சமும் எதிர்பாராமல் முழு தோசையையும் தின்று, என் வாழ்வின் முதல் மாபெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தான். இந்த முறையும் கவிழ்த்துவிடுவானோ என்று பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவன் நிமிர்ந்து என்னைப் பார்க்க,‘‘என்னடா… சாப்பிட முடியலையா?’’ என்றேன் நாக்கைத் தொங்கப் போட்டபடி. ‘‘முடியுதே…’’ என்று அவன் தோசையின் அடுத்த துண்டை, கெட்டிச் சட்னியோடு உள்ளே லபக்கென்று தூக்கிப் போட, நான் நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தினகரை கவனித்தேன். அவனும் சாப்பிட்டு முடித்துவிட்டு, கை கழுவப் போகாமல் முரளியின் இலையையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். எனக்கு திகிலடிக்க ஆரம்பித்தது. மிச்ச தோசைக்கு இவனும் அடிபோடுகிறானோ என்று தோன்ற அவனிடம் விரோதத்துடன், ‘‘நீ கை கழுவல?’’ என்றேன். ‘‘நீ முதல்ல கழுவு…’’ என்று அவன் கூறிய தோரணையிலிருந்தே அவனும் ஒரு முடிவோடு உட்கார்ந்திருக்கிறான் என்று தெரிந்தது.

தமிழ் சினிமா

நான் ஈ
 
அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் நாயகி சமந்தா அண்ணியுடன் வசித்து வருகிறார்.
சமூக சேவை நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு அண்ணியும் உறுதுணையாக இருந்து வருகிறார்.
இவருக்கு எதிர் வீட்டில் குடியிருப்பவர் நானி. இவரும் சமந்தாவும் ஒருவருக்கொருவர் காதலைச் சொல்லாமலேயே காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமந்தா தான் நடத்தி வரும் சமூக சேவை நிறுவனத்திற்கு நன்கொடை பெறும் பொருட்டு, தொழிலதிபர் சுதீப்பை சந்திக்கச் செல்கிறார்.
முதல் சந்திப்பிலேயே சமந்தாவை பிடித்துப் போக அவரை எப்படியாவது அடைய நினைக்கிறார் சுதீப். இதனால் சமந்தா நடத்தி வரும் சமூக சேவை நிறுவனத்திற்கு ரூ. 15 லட்சம் நன்கொடை அளிக்கிறார்.
அதன்பின் சமந்தாவிடம் அடிக்கடி சந்திப்புகளை ஏற்படுத்தி தன்பக்கம் இழுக்க நினைக்கிறார். இதில் துளியும் ஆர்வமில்லாத சமந்தா அவரை விலக்கிவிட நினைக்கிறார்.
இந்நிலையில் சமந்தா நானியை காதலிப்பது சுதீப்புக்கு தெரியவர, நானியை தீர்த்துக் கட்ட நினைக்கிறார். அதன்படி நானியை அடியாட்கள் வைத்து கொலையும் செய்து விடுகிறார்.
கொலை செய்யப்பட்டதும் நானியின் ஆவி ஒரு ஈயின் கருப்பையில் புகுந்து கொள்கிறது. அதன்பின் ஈயாக மறு ஜென்மம் எடுக்கிறார் நானி.
பல அச்சுறுத்தல்களை தாண்டி சுதீப்பின் மேல் சென்று அமரும் ஈ-க்கு அப்பொழுது தான், முன் ஜென்மத்தில் நாம் என்னவாக இருந்தோம் என தெரிய வருகிறது.
அதன்பிறகு சமந்தாவிடம் தான் யார் என்பதை புரிய வைத்து, வில்லனை பழிவாங்க சமந்தாவுடன் சேர்ந்து களத்தில் குதிக்கிறது ஈ. முடிவில் வில்லன் பழிவாங்கப்பட்டாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
படத்தின் முதல் கதாநாயகன் கிராபிக்ஸ் வேலைகள் தான். கிராபிக்ஸ் காட்சிகளில் நெருடல் இல்லாமல் ரசிக்கும்படி செய்திருப்பது அசத்தல் ரகம். அதுவும் அந்த ஈ டிசைன் அட்டகாசம். சைகை காண்பிப்பது, பாவனை செய்வது என ஒவ்வொன்றும் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.
இரண்டாவது கதாநாயகன் வில்லன் சுதீப். படம் முழுவதும் இவரது ராஜ்யம்தான். இப்படத்தில் இவருக்கு ஒரு கலக்கலான கதாபாத்திரம். அதை திறம்பட செய்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டலாம்.
அதன்பிறகு நாயகன் நானி. படத்தின் பெயருக்கும் பொருத்தமான கதாநாயகனாக தேடியிருப்பார்கள் போல. கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
படம் தொடங்கி அரை மணி நேரத்திற்குள்ளாகவே இறந்து விடுவதால் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. இருந்தாலும் படத்தில் வரும் வரை தனது கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்.
நாயகி சமந்தா செம அழகு. கண்ணியமான உடைகளில் சமூக சேவகியாக நம்மைக் கவர்கிறார். சந்தானம் சில காட்சிகளில் வந்தாலும் கலகலப்பூட்ட வைக்கிறார்.
படத்திற்கு இன்னொரு பிளஸ் பாய்ண்ட் கிரேசி மோகனின் வசனங்கள். குறிப்பாக சமந்தா, அழுதா வருத்தம் குறைஞ்சிடும்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு அழ அழ அது அதிகமாகுது என்பது போன்ற வசனங்கள் கல் நெஞ்சையும் கரைய வைக்கும் ரகம். அவருடைய கலட்டாவான வசனங்களும் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன.
கற்பனைக்கு எட்டாத கதைக் களத்தை, தைரியமாக கையிலெடுத்து, அதை நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குனர் ராஜமௌலிக்கு பலத்த கைத்தட்டல்களை கொடுக்கலாம்.
இதுவரை நாய், யானை, குரங்கு என பலவிதமான விலங்குகள் தமிழ் சினிமாவில் நடித்திருந்தாலும், ஒரு ஈ-யின் முகபாவனைகள் எப்படியிருக்கும் என சிந்தித்து, அதை திரையில் கொண்டுவந்த அவரது வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள்.
மரகதமணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக பின்னணி இசையில் நம்மை மிரள வைக்கிறார். செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் பாடல்களில் குளுமையும், காட்சிகளில் பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் நான் ஈ நீண்ட தூரம் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நடிகர்: நானி, சுதீப், சந்தானம்.
நடிகை: சமந்தா.
இயக்குனர்: எஸ்.எஸ். ராஜமௌலி.
இசை: மரகத மணி.
ஒளிப்பதிவு: செந்தில் குமார்.

நன்றி விடுப்பு