( கடந்த சனிக்கிழமை நடைபெற்ற “ யாதுமாகி “ மின்நூல் மெய்நிகர் வெளியீட்டில் நிகழ்த்தப்பட்ட ஏற்புரையின் முழுமையான பதிவு )
எமது வேண்டுகோளை
ஏற்று இந்த மெய்நிகர்
அரங்கினை தலைமை தாங்கி
நடத்தியிருக்கும்
சகோதரி கலையரசி சின்னையா,
யாதுமாகி நூல் பற்றி தங்கள் வாசிப்பு அனுபவத்தை
இங்கே பகிர்ந்துகொண்ட
திருமதிகள்
விஜி இராமச்சந்திரன், கனகா கணேஷ்,
முனைவர் வள்ளி, மருத்துவர் வாசுகி சித்திரசேனன்
ஆகியோருக்கும்,
இந்த அரங்கினை
ஏற்பாடு செய்து தந்த கன்பரா தமிழ் அரங்கம்
பிரம்மேந்திரன், மற்றும் இந்நிகழ்வின் அழைப்பினை வடிவமைத்த எழுத்தாளர் – ஓவியர் கிறிஸ்டி
நல்லரெத்தினம், இந்நிகழ்ச்சி பற்றி இலங்கை
ஊடகங்கள் வீரகேசரி, தினகரன், தினக்குரல், காலைக்கதிர், ஈழநாடு , தமிழ் முரசு, தீம்புனல் ஆகிய பத்திரிகைகளில் வெளியிட்ட அவற்றின் ஆசிரியர்களுக்கும்
கனடா பதிவுகள்,
தமிழ்நாடு திண்ணை, லண்டன் வணக்கம் லண்டன், அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சு, தமிழ் முரசு
ஆகிய இணைய இதழ்களின் ஆசிரியர்களுக்கும், மற்றும்
இந்நிகழ்ச்சி பற்றி தங்கள் வலைப்பூக்கள் - முகநூல்களில் பதிவேற்றியவர்களுக்கும் லண்டனிலிருந்து என்னை தொடர்புகொண்டு, தமது காணொளி YouTube channel
ஊடாக நேர்காணலை ஒளிபரப்பிய அதன் இயக்குநர்
திரு. எஸ். கே. ராஜென் மற்றும் செய்தியை ஒலிபரப்பிய சிட்னி Focus
Thamil இணைய வானொலி இயக்குநர் சத்தியபாலன் ஆகியோருக்கும்
இந்த அரங்கில் இணைந்திருந்தவர்களுக்கும் கருத்துக்களை
பகிர்ந்துகொண்டவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
பல வருடங்களுக்கு
முன்னர் 1995 ஆம் ஆண்டளவில் எனது நெஞ்சில்
நிலைத்த
நெஞ்சங்கள் நூல் வெளிவந்தபோது,
( இந்நூல்
மறைந்த கலை, இலக்கிய ஆளுமைகள்
12 பேரைப்பற்றிய பதிவு )
சில பெண்கள் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்:
“ இந்த நூலில் இடம்பெற்றிருப்பவர்கள் அனைவருமே ஆண்கள்தான்,
ஏன் பெண்களைப்பற்றி நீங்கள் எழுதவில்லை..? “
அதற்கு நான்
சொன்ன பதில்: “ பெண்களுக்கு ஆயுள் அதிகம். “
எனது இந்தக்கருத்தை
வேடிக்கையாக அல்ல, உண்மையாகவே சொல்கின்றேன்.
உங்கள் குடும்பங்களிலும் இந்த உண்மையை நீங்கள் அவதானித்திருக்க முடியும். இதிலிருந்து பெண்களின் ஆயுளையும் ஆளுமைப் பண்புகளையும்
எம்மால் புரிந்துகொள்ள முடியும்.
குறிப்பிட்ட
நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் நூலில் இடம்பெற்றிருந்தவர்கள் அனைவரும் ஆண்கள்தான். ஆனால், அந்த நூல் மெல்பனில் வெளியானபோது
அந்த நிகழ்வுக்கு
தலைமை தாங்கியவர் எமது மதிப்பிற்குரிய திருமதி பாலம் லக்ஷ்மணன் அம்மையார்.
அவர் தனது உரையில்,
முருகபூபதி,
விருப்பு வெறுப்பு பார்க்காமல் காய்தல் – உவத்தல் இன்றி, தான் சந்தித்த ஆளுமைகளின் மேன்மையான பக்கங்களை மாத்திரமே
பதிவுசெய்துள்ளார். அதாவது அன்னப்பறவையைப் போன்று செயல்பட்டுள்ளார் “ எனத் தெரிவித்தார்.
இதனை அந்தச்
சபையில் கேட்டுக்கொண்டிருந்த - எம்மத்தியில் வாழ்ந்த மதிப்பார்ந்த மூத்த ஓவியக்கலைஞர் கே. ரி. செல்வத்துரை
அய்யா அவர்கள், அடுத்த வாரமே தனது கைவண்ணத்தினால்,
ஒரு அழகிய பெரிய அன்னப்பறவை ஓவியத்தை வரைந்து அதற்கு சட்டமிட்டு எடுத்துவந்து எனக்கு
பரிசளித்தார்.
எங்கள் வீட்டின்
வரவேற்பறையில் அந்தப்படம் காட்சியளிக்கிறது.
1998
ஆம் ஆண்டு எனது மூன்று நூல்கள் சிட்னியில் மறைந்த மூத்த கலைஞர் ‘
அப்பல்லோ சுந்தா
‘ சுந்தரலிங்கம் அவர்களின் அரங்கில் நடந்த போது
அதற்கு தலைமை தாங்கியவர்தான் இன்றைய அரங்கில் தலைமை தாங்கியிருக்கும் திருமதி கலையரசி
சின்னையா அவர்கள். குறிப்பிட்ட நிகழ்ச்சி சுந்தா அரங்கில் நடப்பதை எனது அழைப்பிதழ்
மூலம் அறிந்த சிட்னியில் வதியும் மூத்த ஓவியக்கலைஞர் ‘ ஞானம்
‘ ஞானசேகரம் அவர்கள், தமது கைவண்ணத்தில் சுந்தா
அவர்களின் உருவத்தை வரைந்து சட்டமிட்டு எடுத்துவந்து
அனைவரதும் முன்னிலையில் வழங்கினார்.
அதனையே அவ்வரங்கில்
விளக்கேற்றி, மாலை அணிவித்து நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.
குறிப்பிட்ட
அமரர் சுந்தாவின் ஓவியம், அன்னாரின் குடும்பத்தினரிடம் அதாவது எங்கள் கலை இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி திருமதி
பராசக்தி சுந்தரலிங்கம் அக்காவிடம் சேர்ப்பிக்கப்பட்டது.
இங்கு நான்
குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் நான் எதிர்பாராமல் நடந்தவை. எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை என்று
எனது எழுத்துப்பதிவுகளில் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன்.
இன்று வெளியாகும்
யாதுமாகி நூலை சகோதரி பராசக்தி அக்கா அவர்களுக்கே சமர்ப்பித்துள்ளேன். ஆனால்,
இதுவிடயம் அவர்களுக்கோ மற்றவர்களுக்கோ இதுவரையில்
தெரியாது.
நூலை கிண்டிலில் தரவிறக்கிப்பார்க்கும்போது
அல்லது அதன் மூலப்பிரதி அச்சில் வரும்போது கவனிப்பீர்கள்.
இத்தகைய பாக்கியங்களை
நான் எனது எழுத்துலக வாழ்வில் நிறைய பெற்றிருக்கின்றேன்.
1970
களில் அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் இந்த எழுத்துலகில் பிரவேசித்தபோதே படைப்பிலக்கியவாதியாக மட்டுமன்றி, பத்திரிகையாளனாகவும்
வாழத் தொடங்கிவிட்டேன்.
சில வேளை படைப்பிலக்கியவாதியாக
மாத்திரம் நான் இயங்கியிருப்பேனேயானால், என்னிடத்திலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு
மனப்பான்மை உருவாகி, மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்களின் மேன்மைகளை இனம் காணும்
பண்பு என்னிடத்திலும் இல்லாமல் போயிருக்கும். ஆனால், நான் ஒரு பத்திரிகையாளனாகவும் ஊடகவியலாளனாகவும் தொடர்ந்து பயணிக்கின்றமையால் இந்த விருப்பு வெறுப்பு பார்க்கும் குணாதிசயம் என்னை என்றைக்குமே அண்டவில்லை.