பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி தனது 75 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் எமது இனிய நண்பர் திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
அவர்களின் சேவைகளை பாராட்டும் முகமாக கொழும்பு தமிழ்ச்சங்கம் அவருக்கு பவளவிழா நிகழ்ச்சியை
ஏற்பாடு செய்திருந்தது.
இவ்வேளையில் தொலை தூரத்திலிருந்து
அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்:டு இந்தப் பதிவை ஆரம்பிக்கின்றேன்.
கந்தசாமி அவர்களுடனான நட்புறவு
எனக்கு 1997 ஆம் ஆண்டின் பின்னரே உருவானது.
நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள் என்று
ஏற்கனவே எனது பத்திகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். அவ்வாறு எனது நண்பர்கள் வட்டத்தில் இணைந்துகொண்டவர்தான்
கலை, இலக்கிய ஆர்வலரும். சமூகப்பணியாளரும், கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கு
உரமூட்டிக்கொண்டிருப்பவருமான திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள்.
இவரது மனைவி சுபா சாமினி
எங்கள் நீர்கொழும்பூரின் கல்விக்கலங்கரை விளக்கம், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின்
இசை ஆசிரியராக பணியாற்றத் தொடங்கிய காலத்தில், கந்தசாமி இவரது கரம் பற்றி இல்லறவாழ்வினை
தொடங்கியிருந்தார்.
சுபா சாமினி எனது உடன்பிறந்த
தங்கை திருமதி பரிமளஜெயந்தி நவரட்ணத்தின் குடும்ப
சிநேகிதி. இவர்களது திருமணத்தின் பின்னணியிலும் எனது தங்கை இருந்துள்ளார்
என்பது எனக்கு பிந்திக்கிடைத்த செய்தி.
1987 முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நான், சுமார்
பதினொரு வருடங்களின் பின்னர் 1997
இல் தாயகம் திரும்பியிருந்தவேளையில், எனது இலக்கியப்
பிரவேச வெள்ளிவிழாவை முன்னிட்டு, என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை
ஆசிரியர் டொமினிக்ஜீவாவுக்கு மிகவும் விமரிசையாக ஒரு பாராட்டு விழாவை எங்கள் நீர்கொழும்பு
இந்து இளைஞர் மண்டபத்தில் நடத்தினேன்.
அவ்விழாவுக்கு கொழும்பிலிருந்து
பல எழுத்தாளர்கள் திரண்டு வந்திருந்தார்கள்.