வாசிப்பு அனுபவம், ஆளாளுக்கு
வேறுபடும். ஒரு எழுத்தாளரின் புனைவு இலக்கியப் படைப்பினைப் பற்றி, சாதாரண வாசகர் கொண்டிருக்கும் ரசனைக்கும், மற்றும் ஒரு எழுத்தாளர் வைத்திருக்கும் பார்வைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
கனடாவில் வதியும் வ. ந.
கிரிதரனின் கதைத் தொகுதியான கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் நூலை நான் படித்தபோது, வாசகர் மனநிலையிலும், படைப்பாளி மனவுணர்வுடனும்தான் படிக்க நேர்ந்தது.
சரியாக ஓராண்டுக்கு முன்னர்,
07-06-2023 ஆம் திகதி கனடா ஸ்காபரோவில் என்னைச் சந்தித்து விருந்துபசாரம் வழங்கியபோது,
அவர் என்னை வாழ்த்தி தனது கையொப்பத்துடன் தந்த இந்த நூல் பற்றி, ஒரு வருடம் கழித்து எழுது நேர்ந்தமைக்கு, இந்த இடைப்பட்ட
காலத்தில் எனக்கிருந்த பணிச்சுமைகள்தான் அடிப்படைக் காரணம்.
எனக்கிருக்கும் பணிச்சுமைகளுக்கு
மத்தியில்தான் கிடைக்கும்
நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை படிப்படியாக பதிவுசெய்வதற்கும்
நேரம் தேட வேண்டியிருக்கிறது !
யாழ்ப்பாணம் ஜீவநதியின்
194 ஆவது வெளியீடாக வந்திருக்கும் கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள், கடந்த
2021 ஆம் ஆண்டு முதல் பதிப்பினைக் கண்டுள்ளது.
தனது பத்து வயதுப் பராயத்திலிருந்தே
இலக்கியப் பிரதிகளை எழுதிவரும் கிரிதரன், கனடாவுக்கு புலம் பெயர்ந்த பின்னரும் எழுத்தூழியத்திற்கு
ஓய்வு தராமல், தொடர்ந்தும் எழுதிவருகிறார்.
பதிவுகள் இணைய இதழை கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடத்திவரும் கிரிதரன், அதன்
மூலம் உலகெங்கும் வாழும் படைப்பிலைக்கியவாதிகளுக்கு போதியளவு களம் வழங்கி வருகிறார்.
கிரிதரனின் படைப்புகள்
இலங்கை, புகலிட நாடுகள் மற்றும் தமிழகத்திலிருந்து வெளியாகும் ஊடகங்களிலும் வெளியாகின்றன.
தமிழகப் பல்கலைக்கழகங்கள்
சிலவற்றில் இவரது படைப்புகளைப்பற்றி முனைவர் பட்ட, தத்துவமானிப் பட்டப்படிப்புகளுக்காக
ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள
பொந்துப்பறவைகள் சிறுகதை, சிங்கப்பூர் கல்வி அமைச்சினால் உயர் கல்வித் தமிழ்ப்பாடத்திட்டத்தில்
உள்ளடக்கப்பட்டுள்ளது.
கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் தொகுப்பில்
25 சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் சிலவற்றை ஏற்கனவே
பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் நான் படித்திருந்தாலும், மீண்டும் இத்தொகுப்பில்
படிக்கின்றபோது, புதிதாக படித்தமை போன்றதோர்
உணர்வினையே தருகின்றன.
தமது தாயகம் விட்டுச்சென்றவர்களில்
பெரும்பாலான எழுத்தாளர்கள் தொடர்ந்தும் தங்கள் தாயகம் பற்றிய நினைவுகளுடன்தான் எழுதுகிறார்கள்
என்ற குறையை அண்மைக்காலமாக சில தமிழக விமர்சகர்கள் முன்வைத்து வருகிறார்கள்.