பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 5 - விளையாட்டுப் பிள்ளை - ச . சுந்தரதாஸ்

.


பிரபல எழுத்தாளரும் கலைஞருமான கொத்தமங்கலம் சுப்பு இரண்டு பிரபல  நாவல்களை எழுதியுள்ளார். ஒன்று  தில்லானா மோகனாம்பாள் மற்றையது ராவ்பகதூர் சிங்காரம்.  தில்லானா மோகனாம்பாள் ஆனந்தவிகடனில் தொடராக வெளியாகி மாபெரும் வரவேற்பை பெறவே  இயக்குனர் ஏபி நாகராஜன் அதனை படமாக்க விகடன் அதிபர் எஸ் எஸ் வாசனிடம்  அனுமதி கேட்டார். வாசனோ  அதனை தானே படமாக்கப் போவதாக கூறி விடவே நாகராஜன் சரி என்று  விட்டு விட்டார் ஆனால் காலம் கடந்ததே தவிர தில்லானாவை ஏனோ  வாசன் படமாக்கவில்லை. நாகராஜன் மீண்டும் வாசனை அனுக்கிக்  கேட்க இறுதியில் அவரின் அனுமதி கிடைத்தது. ஏ பி என்  அதனை இயக்கி படமாக்கினார். தில்லானா மோகனாம்பாள் மாபெரும் வெற்றிப் படமாகி ஜனாதிபதியின்  வெள்ளிப் பதக்கத்தையும் பரிசாக பெற்றது.  

தில்லானா மோகனாம்பாள் வெற்றியைக் கண்டு பிரமித்த வாசன் அதே கொத்தமங்கலம் சுப்புவின் மற்றைய நாவலான ராவ்பகதூர் சிங்காரமத்தை
 படமாக்க முனைந்தார்

படத்திற்கான திரைக்கதையை எழுதி தானே தயாரிக்க ஏபி நாகராஜன் வசனம் எழுதி டைரக்ட் செய்தார். ஜெமினி படநிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு விளையாட்டு பிள்ளை என்று பெயரிடப்பட்டது.  மோகனாம்பாளில்  நடித்த சிவாஜி பத்மினி ஜோடி இதிலும் நடிக்க , பாலையா, சிவகுமார், காஞ்சனா, சோ ,மனோரமா ஆகியோரும் இடம் பெற்றார்கள் . படத்திற்கான பாடல்களை கண்ணதாசன் இயற்ற கேவி மகாதேவன் இசையமைத்திருந்தார்.





 கிராமத்தில் விளையாட்டுப் பிள்ளையாக திரிந்து வரும் முத்தையாவுக்கும்  மரகதத்திற்கும் இடையே காதல் உருவாகிறது ஆனால் மரகதத்தின் தந்தையோ முத்தையா படிப்பறிவில்லாதவன்  எனக்கூறி திருமணத்துக்கு தடை போடுகிறார் அவரை மீறி திருமணம் நடக்கிறது.  இதனால் கிராமத்திலிருந்து மரகதமும்  முத்தையாவும் ஒதுக்கப்படுகிறார்கள். இவற்றிற்கெல்லாம் முத்தையாவின் சித்தப்பாவின் சதியும் காரணமாகிறது. ஆனால் தன் சொந்த உழைப்பால் விவசாயம் செய்து உயர்கிறான் முத்தையா




இவ்வாறு அமைக்கப்பட்ட கதையில் ஆரம்பத்தில் இளைஞனாகவும்  பிற்பகுதியில் நடுத்தர மனிதராகவும் சிவாஜி நடிக்கிறார் பத்மினியும் படத்தில் இளம் பெண்ணாகவும் தாயாகவும் நடித்திருந்தார் இவர்களின் மகனாக இளம் நடிகர் சிவகுமார் நடித்தார் நடிப்பு என்று வரும்போது சிவாஜி பத்மினி இருவரும் ஒன்றும் குறை வைத்ததில்லை இதிலும் பாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பை வழங்கி இருந்தார்கள் சிவாஜியிடம் விடுதலைப் பத்திரம் கேட்கும் காட்சியில் சிவாஜியின் நடிப்பு அருமை காஞ்சனாவுக்கு நடிக்க சந்தர்ப்பம் குறைவு சோ , மனோரமாவின் நகைச்சுவை இந்தப்படத்தில் சுமார்தான்.  ஏரு  பெருசா இல்லை ஊரு பெருசா பாடல் காட்சி நன்றாக படமாக்கப்பட்டிருந்தது.  இதைத்தவிர மாட்டு வண்டி சவாரி போட்டி,  யானையை அடக்கும் காட்சி,  காளையுடன் மோதும் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டுகளும் படத்தில் இடம்பெற்றது.  தில்லானா மோகனாம்பாள் வெற்றியை நம்பி தயாரிக்கப்பட்ட இப்படமும் வெற்றி பெற்றது.  1970ம்  ஆண்டு படம் வெளிவந்த போது அதனை பார்க்க எஸ் எஸ் வாசனும் உயிருடன் இல்லை




No comments: