.
"சிறந்த சிறுகதை அது முடிந்த பிற்பாடுதான் தொடங்குகிறது"
அண்டனூர் சுரா எழுதிய "பிராண நிறக்கனவு" கதைத்தொகுதி
தமிழில் சிறுகதை இலக்கியம் வ.வே.சுஅய்யரின் குளத்தங்கரை அரசமரம் என்ற கதையிலிருந்து தொடங்கியிருப்பதாக இலக்கிய ஆய்வாளர்கள் சொல்லிவருகிறார்கள். இலங்கையிலும் தமிழகத்திலும், சிங்கப்பூர், மலேசியா உட்பட தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்நிய தேசங்களிலும் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருப்பதனால், தலை முறை அடிப்படையில் சிறுகதை எழுத்தாளர்களின் வீச்சையும் படைப்பாளுமையையும் விமர்சகர்கள் இனம் கண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிராண நிறக்கனவு கதைத் தொகுப்பினை வரவாக்கியிருக்கும் தமிழகத்தைச்சேர்ந்த அண்டனூர் சுரா எனது தொடர் வாசிப்பு அனுபவத்தில் புத்தம் புதிய தலைமுறையைச் சேர்ந்தவராகவே இனம் காணப்படுகிறார். இவரது கதைகள் ஏற்கனவே இலக்கியப்
பரிசில்களும் பெற்றுள்ளன. அண்மையில்
தமிழ்நாடு தேனியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை
முதல் மாநில மாநாட்டில் அண்டனூர் சுராவின் ‘ பிராண நிறக் கனவு ‘ சிறுகதைத்தொகுப்பு வெளியிடப்பட்டது.
இந்த நூல் குறித்து எனது வாசிப்பு அனுபவத்தை இங்கு பதிவுசெய்கின்றேன்.
புதிய தலைமுறையைச் சேர்ந்தவராயினும் இவரது ஆற்றல் முதிர்ச்சியடைந்த படைப்பாளிகளுக்கு நிகரானது. இத்தொகுப்பில் "மிடற்றுத்தாகம்" முதல் "
ம் " என்ற கதை வரையில் ஒவ்வொன்றும் தனித்துத் தெரிவதும் சிறப்பு.
அதனால் அயர்ச்சியின்றி வாசகரினால் எளிதாக நெருங்கவும் முடிகிறது.இவரது கதைகளில் அவதானிப்பு, பாத்திரச் சித்திரிப்பு, சுற்றுச்சூழல், இந்திய மாநிலங்களின் பண்பாட்டுக்கோலங்கள், பிரதேச பேச்சு மொழி வழக்கு, சமூகச்சிக்கல்கள், குடும்ப உறவுகள், குறியீட்டுப் படிமங்கள், நனவோடை உத்தி, பின் நவீனத்துவம் முதலான அம்சங்கள் அனைத்தும் முழுமை பெற்றிருப்பதனால், ஒவ்வொரு கதையும் ஆச்சரியப்படவைக்கின்றன.