நிம்மதியைக் கொடுத்திடுவோம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் .... ஆஸ்திரேலியா


தென்னையைப் பார்ப்போம்
       தெரிவோம் நல்லதை
எடுத்துண்ட  நீரை
       இளநீராய்  ஈய்கிறதே
கருக்குநிறை பனைமரம்
       காலிருந்து தலைவரைக்கும்
செருக்கின்றிக் கொடுக்கிறதே
         சிந்தித்தால் சிறப்பாகும்   !

கொடுக்கின்ற கனியாலே
       மரத்துக்கு  ஏதுபயன்
விதம்விதமாய்  சுவைகொண்ட
        பலகனிகள் வருகிறதே
அதையுண்டு சுவையறியும்
      ஆனந்தம் எமக்கன்றோ
உணர்வின்றி மரமழித்தல்
        உவப்பான  செயலாமோ  !

ஊர்நடுவே ஆலமரம்
       கிளைபரப்பி நிற்கிறது
யார்வருவார் யார்செல்வார்
      ஆலமரம் பார்ப்பதில்லை
வெப்பமதை உணராமல்
        வந்திருப்பார் மகிழ்வடைய
ஆலமரம் அமைவதனை
        அகமிருத்தல் அவசியமே  !

மங்கையரில் மஹாராணியான திருமதி புவனேஸ்வரி அருணாச்சலம் அவர்களுக்கு ஓர் அஞ்சலி - உஷாஜவகர் (அவுஸ்திரேலியா)


திருமதி புவனேஸ்வரி அருணாச்சலம் 
(23/04/1937---- 08/02/2020)

புவனேஸ்வரி அம்மாள்  சின்னத்தங்கம் ராமச்சந்திரா தம்பதிகளுக்கு கடைசி மகளாக 23/04/1937 அன்று இலங்கையில் நுகேகொடை என்னும் இடத்தில்  பிறந்தார். இவர் நான்கு அண்ணன்மாருக்கும் இரண்டு அக்காமாருக்கும் பாசமிகு தங்கையாக வளர்ந்தார்.
சிறுவயதில் கொள்ளுப்பிட்டியில் உள்ள செயின்ட் அந்தோணி பாடசாலையில் கல்வி கற்று பின் அங்கு இரண்டு வருடங்கள் கற்பித்தார். 1960ஆம் ஆண்டு London A /L படித்த பின் 1964ஆம் ஆண்டு Jaffna College இல் BA London பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்தார்.
 அவரது தகப்பனார் அமரர் இராமச்சந்திரா அவர்களின் வழியில் சிறுவயதிலிருந்தே தமிழ்,இந்துசமயம்,இசை போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.சிறுவயது முதல் இவரும் இவரது சகோதரி தனலக்ஷ்மியும் இராமச்சந்திரா சகோதரிகளாக பல இடங்களில் இசைக்கச்சேரிகள் நடத்தி உள்ளனர். தங்களது தாயாரின் நினைவாக 1992 ஆண்டில் 'சிவாஞ்சலி ' எனும் இசைப்பதிவை இருவரும் பாடி வெளியிட்டனர்.அப்பதிவு இப்பொழுதும் பல நாடுகளில், வீடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
 1965ஆம் ஆண்டு திரு அருணாச்சலம் அவர்களைக் காதல் திருமணம் செய்து,இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார். பின்னர் நான்கு பெண் குழந்தைகளுக்கு பாசமிகு அம்மம்மாவானார்.
 இவர் தனது வாழ்நாளில் தமிழில் பல உரைசித்திரங்கள், நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் எழுதி உள்ளார். கொழும்பில் பல பாடசாலைகளுக்கு முக்கியமாக திருக்குடும்ப கன்னியர் மட  கலைவிழாக்களுக்கு நாடகங்கள்  எழுதி இயக்கினார்.                                                                                             
இவர் நயினை பிள்ளை தமிழை வைத்து எழுதிய நாட்டிய நாடகம் கொழும்பிலும் அவுஸ்திரேலிய பிரிசபன் நகரிலும் மேடையேற்றப்பட்டது.  
புவனேஸ்வரி அம்மாள் இலங்கையில் Official Language Department இல் Assistant Research Officer ஆக பணி புரிந்தார்.இவரது மொழி ஆற்றல் English to Tamil glossary உருவாக்க உதவியது.
 அவுஸ்திரேலியாவுக்கு குடி புகுந்த பின்னரும் ஹோம்புஷ் பாடசாலையில் புதன் கிழமைகளில் பாடசாலை நேரம் ஆங்கிலத்தில் இந்து சமயத்தைக் கற்பித்து வந்தார். ஹோம்புஷ் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற சைவப்பாடசாலையிலும் சைவசமயத்தைக் கற்பித்து வந்தார்.

அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் (1945 – 2019) நினைவுகள் நினைவு தினம் இம்மாதம் 11 ஆம் திகதி செல்வத்துரை ரவீந்திரன் – அவுஸ்திரேலியா ( தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம்)


லங்கையில் வடக்கே உடுவில் – மானிப்பாய் பங்குகளில் சமயப்பணிகளில் ஈடுபட்டுவந்த  தம்பதியர் சாமிநாதர் குருசாமி பத்திநாதன்  -   செலின் அன்னரத்தினம் பத்திநாதன் ஆகியோரின் புதல்வனாகப் பிறந்த ஜேம்ஸ் அவர்கள்  பிறந்த கதையும் பின்னாளில் அவர் வணக்கத்திற்குரிய மதகுருவாக வளர்ந்த கதையும்   சுவாரசியமும் ஆன்மீகமும்  உணர்ச்சியும்     கலந்திருப்பது.
1945 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அருட் தந்தை ஜேம்ஸ் அவர்கள் தனது முதல் திருப்பலியையும் பிரசங்கத்தையும் மானிப்பாய் பங்கிலுள்ள மல்வம் தேவாலயத்திலேயே நிகழ்த்தினார். இந்த  புனித நிகழ்வு 1970 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 06 ஆம் திகதி நடந்தது.
சுமார் அரைநூற்றாண்டு காலத்தின் பின்னர், கடந்த 2019 ஆண்டு ஜூலை மாதம்  இதே காலப்பகுதியில், யாழ்ப்பாணம் பெருந்தேவாலயத்தில் (Cathedral) அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடல்,  அவரது குடும்ப அங்கத்தவர்கள், ஊர்பொதுமக்கள், வணக்கத்துக்குரிய பிதாக்கள் புடைசூழ கண்ணீர் அஞ்சலியைப்பெற்றது.
அவரது குடும்பத்திலிருந்து எதிர்பாராத சூழ்நிலையில் குருத்துவம் கற்கச்சென்று, தங்கு தடையின்றி இறைபணியைத் தொடர்ந்து, மக்களுடனேயே  வாழ்ந்து,  அவர்கள் பணியே  மகேசன் பணியென  அன்புருவாக  வாழ்ந்தவரின்   வாழ்வும் பணிகளும் முன்மாதிரியானவை.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தமது முதலாவது  பிரசங்கத்தை நடத்தியது முதல், கடந்த ஆண்டு, மக்களிடமிருந்து நிரந்தர ஓய்வுபெற்று இறையிடம் தன்னை ஒப்படைக்கச்சென்ற காலம் வரையில்  நிகழ்ந்த சம்பவங்கள்,  சமயப்பணிகளுடன் மாத்திரமல்லாமல், நாட்டு நிலைமையுடனும்  விடுதலைப்போராட்டங்களுடனும்  இரண்டறக்கலந்தவை. இவற்றைப்பிரித்துப்பார்க்க இயலாது.
அருட்தந்தை ஜேம்ஸ், தான் சார்ந்த மறையை மக்களுக்கு போதித்து வளர்த்து வளம்படுத்தும் பணியில் மாத்திரம் தனது இறைபணியை வரையறுத்துக்கொள்ளவில்லை. அதற்கும் அப்பால் சென்று மனிதநேயத்தையும் அவர் வளர்த்தார். மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்று, மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுத்தார்.   எல்லாவற்றுக்கும் மேலாக  இறை அன்பு என்பதை உதட்டளவில் சொல்லாது, அன்பு செலுத்தி உணரவைத்தார்.

இயக்குநர் வசந்தபாலன் பிறந்த நாள் ஸ்பெஷல்: யதார்த்தத்தையும் பிரம்மாண்டத்தையும் இணைக்கும் படைப்பாளி

.

தமிழ் சினிமாவில் புத்தாயிரத்துக்குப் பின் வந்த இயக்குநர்களில் மிகக் குறைவான படங்களின் மூலம் பெருமதிப்புக்குரிய இடத்தைப் பெற்றிருப்பவரான இயக்குநர் வசந்தபாலனின் பிறந்த நாள் ஜூலை 12
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் அவர் இயக்கிய முதல் நான்கு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வசந்தபாலன் 2002-ல் வெளியான 'ஆல்பம்' படம் மூலம் இயக்குநரானார். இப்போது ஜி.வி.பிரகாஷை வைத்து 'ஜெயில்' என்னும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் இயக்கும் ஆறாவது படம் 'ஜெயில்'.
விருதுநகர் மக்களின் வாழ்வியல் பதிவு
வசந்தபாலன் இயக்கிய முதல் படமான 'ஆல்பம்' ஒரு அழகான காதல் கதை. அடுத்ததாக இயக்கிய 'வெயில்' தமிழ் சினிமா அதுவரை கண்டிராத வெப்ப பூமியான விருதுநகரில் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் பதிவாக அமைந்தது. 'வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே' என்ற பாடல் தொடங்கி படம் முழுவதும் உலகம் முழுவதும் வாழும் ரசிகர்களை விருதுநகரின் வெயிலின் தகிப்பை உணரவைத்தது. 

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் - 01 கனவுகள் ஆயிரத்தில் ஆரம்பித்த இலக்கிய வாழ்வு ! முருகபூபதி


இன்று ஜூலை 13 ஆம் திகதி.
இற்றைக்கு 69 ஆண்டுகளுக்கு முன்னர் இதே திகதியில்  காலைவேளையில் இந்த உலகத்தை நான் எட்டிப்பார்த்தபோது, எனது தாத்தா, எனது அழுகுரல் கேட்டதும், பாட்டியை அழைத்து  “ ஆணா – பெண்ணா ,..?  “ எனக்கேட்டாராம்.
பாட்டி  “ ஆம்பிளைப்பிள்ளை  “ என்றதும், வீட்டின் கூரையில் ஏறி ஓடுகளைத்தட்டினாராம்.  அயலில் வசித்தவர்கள், பொலிஸாருக்கு என்ன நேர்ந்தது..? என்று வியந்து கேட்டார்களாம்.
அவர் பிரிட்டிஷாரின் காலத்தில் பொலிஸ் சார்ஜன்ட்டாக பணியிலிருந்தவர்.  அதனால் அவரை ஊர் மக்கள் பொலிஸார் என்ற அடைமொழி வைத்தே அழைத்தனர்.
 “  எங்களுக்கு பேரன் பிறந்துள்ளான்.  பேரன் பிறந்துள்ளான்  “
இதனைச்சொல்வதற்கு வீட்டின் கூரைமீது ஏறவேண்டுமா…? அவரது மாதகல் ஊரில் அக்காலத்திற்கு முன்பிருந்தே அப்படி ஒரு மரபு இருந்ததாம்.
 “ பெண்பிறந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்… ?  “   என்று நான் பிறந்த நாளன்று நடந்த கதையை என்னிடம் பின்னாளில் சொன்ன பாட்டியிடம் கேட்டேன்.
அதற்கு அவர்கள்  “ பெண்ணாகப் பிறப்பதே பாவமடா…?   “  எனச்சொல்லிவிட்டு தங்கள் வம்சத்தில் முன்னர் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை சொன்னார்.
மஞ்சள் கிழங்கு உட்பட மளிகைச்சாமான்கள் விற்பனை செய்யும்   வணிகர் குலத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தையை மிகவும் கட்டுப்பாடாக வளர்த்தார்களாம். அக்கால வழக்கத்தின் பிரகாரம் அக்குழந்தை பருவமாகும் முன்பே பால்ய விவாகம் செய்து வைத்துவிட்டனர். எதிர்பாராதவகையில், அக்குழந்தைக்கு திருமணம் செய்து வைத்த ஆண் நோயுற்று இறந்துவிடவும், அந்தப்பெண்குழந்தைக்கு மொட்டை அடித்து மூலையில் இருத்திவிட்டார்கள்.

சிறிலங்காவின் பாராளுமன்றத் தேர்தலும் தலைப்பு செய்தியாக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளும் - 1 - பரமபுத்திரன்


இலங்கையில் தமிழர் சிங்களருக்கான இனச்சிக்கல் ஆரம்பித்து ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. ஆனாலும் பாராளுமன்ற அரசியலில்  1948ன் பின் அதிலும் பண்டாரநாயக்க எனும் ஒரு  தனி மனிதனால் மொழி மூலம் இனச்சிக்கல் வலுப்படுத்தப்பட்ட ஒன்று எனலாம். சிங்களமொழி என்ற ஒன்றை மையமாக  வைத்தே அவர் ஆட்சியை சுலபமாகப் பிடித்து தனது அரசுத்தலைமை (1956) ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். இலங்கையில் பாராளுமன்ற ஆட்சியைப் பிடிக்க சிறப்பான  கருப்பொருள் சிங்களமொழி என்று தெளிவாகக் காட்டினார்.  அதன்பின்  சிங்களர் அதனைக் கெட்டியாகப் பிடித்தார்கள். அடுத்து வந்த சிறிமாவோ பெளத்த மதத்தினையும் மொழியுடன் இணைத்தார் (1972). அரசுத்தலைவராக வெற்றியுடன் வலம் வந்தார். ஆனாலும் பண்டாரநாயக்க தனது ஒருதடவை ஆட்சி முடிவடைய முன்பு சிங்களராலேயே அதுவும் பெளத்த பிக்கு ஒருவரால் சுடப்பட்டதும் (26 செப்ரொம்பர் 1959), சிறிமாவோ 1977ன் பின் அதிகாரமுள்ள ஒரு தலைவராக வரமுடியவில்லை என்பதும், இன்று பண்டாரநாயக்க ஆரம்பித்த கட்சி அவரின் வாரிசுகளுக்கே உரித்தில்லா நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது என்பதும் இங்கு அவதானிக்கக்  கூடியது. தொடர்ந்து சிங்களத் தலைமைகள் பெளத்தம், சிங்களம் இரண்டையும் கருப்பொருளாக்கி, பின்னர் புலிகளையும் அதனுடன் இணைத்து  இலங்கை தங்கள் நாடு என்ற சரியான இலக்கில் வெற்றியுடன்  பயணிக்கின்றது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

மெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் வாராந்த காணோளி ஒன்றுகூடலில்


(அமரர் ) பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவுப்பகிர்வு
                                                                             ரஸஞானி
மெல்பன் கேசி தமிழ்  மன்றத்தின்  மூத்த பிரஜைகள்  அமைப்பினர் நடத்தும் வாராந்த காணோளி ஒன்றுகூடல் மற்றும் வானொலி நிகழ்ச்சி இன்று 12 ஆம் திகதி  ஞாயிறு மாலை  நடைபெற்றது.
இன்றைய ஒன்றுகூடல்,  இக்காலப்பகுதியில் பிறந்த தினத்தை கொண்டாடுபவர்களை வாழ்த்தும் நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது.   கடந்த வாரம்  பிறந்த தினத்தை கொண்டாடிய திருமதி சரோஜினி தேவி ஆசீர்வாதம் அவர்கள்,  இலங்கையில் தாம்  வாழ்ந்த காலப்பகுதியில் குழந்தைப்பருவத்தில் இலங்கை வானொலி சிறுவர் மலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிய 1953 வெளிவந்த ராஜ்கஃபூர் நடித்த அவன் திரைப்படத்தில் ஜிக்கி பாடிய பாடலை விரும்பிக்கேட்டு தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

ஆக்காண்டி....ஆக்காண்டி....
சண்முகம் சிவலிங்கம் ஈழத்தின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவர். அடிப்படையில் விஞ்ஞான ஆசிரியரான இவர் கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் பலவற்றை எழுதி அவை நூலுருப் பெற்றும் உள்ளன, அவற்றுள் நீர் வளையங்கள் என்ற கவிதைத் தொகுதி குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர், இலக்கியம் கடந்து தமிழ் இன உணர்வாளராக வாழ்ந்து மடிந்தவர். டிசம்பர் 191936 – ஏப்ரல் 202012)

My mind is always agile - கே.பாலசந்தர் 90 - கானா பிரபா

.


இப்படியொரு ஆங்கிலத்தனமான தலைப்போடு நான் தொடங்க காரணமே இதை உள்ளதை உல்ளவாறு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர் வாயால் சொன்ன போது தான். அப்போது அவர் எண்பதைக் கடந்து விட்டிருந்தார்.

ஒரு மனிதனின் சுறு சுறுப்பான இயக்கத்துக்கு உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, தன்னைப் புதுப்பித்துக் கொண்டே புதிய புதிய சிந்தனைகளோடு ஓடிக் கொண்டிருக்க வேண்டும். என் அப்பாவுக்கு அடுத்து இப்படியானதொரு சுறு சுறுப்பானதொரு இயக்கத்தை எட்ட நின்று பார்த்தது கே.பாலசந்தர் போன்றவர்கள் வழி தான்.

மேடை நாடகம்.
சினிமா,
சின்னத்திரை நாடகம்
ஆகிய களங்களில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கொடுத்த விரிவான பங்களிப்பை இனியொருவர் தமிழ்ச்சூழலில் கொடுக்கவே முடியாது.
ஒவ்வொரு களத்திலும் முந்திய களத்தின் பாதிப்பே இருக்காது. ஏனெனில் சினிமாவுக்கு மேடை நாடகம் போட்ட இயக்குநர்களின் படங்களையும் பார்த்திருக்கும் அனுபவம் தான் இப்படியெல்லாம் எண்ண வைக்கிறது.

“என்ன இடைஞ்சல்கள் வரட்டும், அதை மீறிப் போராடித் தன்னைப் பரிபூரணமா நம்பி இறங்கியவர்கள் யாரும் வெற்றி அடையாமல் இருக்கவே முடியாது” - கே.பாலசந்தர்

“1972ல் ஹார்ட் அட்டாக், 6 மாத ஓய்வின்போது புதுசு புதுசாக படம் பண்ண யோசனை தோன்றி கலாகேந்திராவை ஆரம்பித்தோம்” என்கிறார் இயக்குநர் சிகரம். இதையெல்லாம் அவர் வாழ்ந்திருந்த காலத்தில் கொடுத்த பேட்டிகள் வந்த போது குறிப்பெடுத்து வைத்திருந்தேன். இன்று அவரின் 90 வது பிறந்த நாளுக்கு ஒப்புவிக்கக் கால நேரம் கூடியிருக்கிறது.

இந்தியாவையும் சீனாவையும் யுத்தத்திற்குள் தள்ளும் சதி முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்

.
அமெரிக்காவும் கனடாவும் 8993 கிமீ நீளமான உலகின் மிக நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. 18இ 19இ 20 ஆம் நூற்றாண்டுகளில் இரு நாடுகளுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களின் மூலம் இரு நாடுகளும் சுமூகமாக தமது எல்லையை காலத்திற்காலம் நிர்ணயம் செய்து கொண்டன. இதனால் இரு நாட்டு மக்களும் எதுவித எல்லைப் பதற்றமுமின்றி நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியா ஏறத்தாள தனது 15இ100 கிமீ நீளமான எல்லையை ஏழு நாடுகளுடன் (பங்களாதேஷ்இ மியன்மார்இ சீனாஇ பூட்டான்இ நேபாளம்இ பாகிஸ்தான்இ ஆப்கானிஸ்தான்) பங்கிட்டுக் கொள்கின்றது. இதில் இந்தியாவிற்குஇ சீனா (3488 கிமீ)இ பாகிஸ்தான் (3323 கிமீ) ஆகிய இரு நாடுகளுடனுனான எல்லைப்பிணக்கு நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். இதற்குக் காரணம் இந்தியா பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர்இ இன்னமும் பல இடங்களில் இரு நாட்டுக்குமிடையிலான எல்லைகள் சரியாக நிர்ணயிக்கப்படாததே. இதனால் இந்தியாவிற்கு சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தியா – சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டு எல்லை (டுiநெ ழக யுஉவரயட ஊழவெசழட – டுயுஊ) வரையறுக்கப்படவில்லை. அதனால்இ கடல் மட்டத்திலிருந்து 4200 மீற்றர் உயரமான மிகவும் குளிரான நிலைகளில் இருநாட்டு இராணுவங்களும் முன்னேறுவதும்இ பின் வாங்குவதுமான சூழ்நிலையுள்ளது. இதனால் அவ்வப்போது பதற்றம் ஏற்படுகிறது. இறுதியாக 2013இ 2017 களில் இந்திய – சீன எல்லையில் பதற்ற நிலைமைகள் தோன்றி மறைந்தன. மீண்டும் இவ்வருடம் மே மாதத்திலிருந்து கிழக்கு லடாக் (டுயனயமா) பிராந்தியத்தில் இரு நாட்டு இராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்துஇ சுமார் 6 வாரங்களாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் ஜுன் 15ந் திகதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் (புயடறயn ஏயடடநல) இந்தியஇ சீன இராணுவத்தினர் மீண்டும் மோதிக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசியும் நேரடிக் கைகலப்பிலும் ஈடுபட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது. இந்த மோதலில்இ தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 20 இந்திய இராணுவத்தினர் பலியானதாக இந்தியத்தரப்பு தெரிவித்துள்ளது.. இந்திய இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படைக்கு ஏற்பட்ட சேதங்கள் தெரியாது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இராணுவம் இடையேயான மோதலில் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இரு நாடுகளுக்கு இடையே முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.


'மறதி நோய்' -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-🎯 🎯 🎯

செலக்டிவ் அம்னீசியா – தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவங்களின் நினைவு இழப்பு.
இது ஒரு பாதிப்பில்லாத – ஆனால், பாரதூரமான நோய். என் நண்பனின் தாத்தாவுக்கு இருந்நது. 
விசித்திரமாக இருக்கும் அவர் நடவடிக்கை. என்னை எப்ப பார்த்தாலும், என் பெயர் சொல்லி அழைத்து, 'ரிசிட்டார் எப்படி?' என்று என் தாத்தாவை விசாரிப்பார். 'அவருக்கு என்ன இப்ப 81, 82 வயசிருக்குமே' என்று சரியாகச் சொல்லி அசத்துவார்.
ஆனால், எங்களது மற்றொரு நண்பனை அவருக்கு நினைவில் இருப்பதே இல்லை. ஒவ்வொரு முறையும், 'நீ யார் தம்பி? யாரிட்ட வந்தனீ?' என்று கேட்பார். காலையில் கண்டு கதைத்து பின் மாலையில் வந்தாலும் இதே நிலைமைதான். திரும்பவும் கேட்பார். அவனை அவரால் ஞாபகத்தில் வைத்திருக்கவே முடிந்ததில்லை. 
இம்மறதி நோய்தான் செலக்டிவ் அம்னீசியா. அனைத்தையும் மறப்பதில்லை. ஆனால், கடந்தவற்றுள் சிலவற்றை மட்டும் நினைவிற் கொள்ள முடியாது போய்விடுவது.
அதனால் அவர் கேள்விகளுக்கு யாரும் அதிகம் மினக்கெடுவதில்லை. அவருக்கு வயசால் வந்த மறதி என்று உறவுகள் இலகுவாகக் கடந்து போய்விடும். 
இவ் அனுபவத்தால், வயசானவர்களுக்கு மட்டும் வரும் நோய் இது என்றுதான் நான் நினைத்திருந்தேன் - இந்தத் தேர்தல் காலப் பரப்புரைகளைக் கேட்கும் வரைக்கும்.
என் நினைப்பை மாற்ற வேண்டியதாயிற்று, பின்வரும் காட்சிகளைப் பத்திரிகைகளில் படித்தபோதும்,  தொலைக்காட்சியில் பார்த்தபோதும்.
🎯 🎯 🎯

வரந்தருவாய் முருகா ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .....மெல்பெண் ...அவுஸ்திரேலியா


வரந் தருவாய் முருகா - வாழ்வில்
நிரந் தரமாய் உன்னை
நினைந்துமே நான் வாழ
வரந் தருவாய் முருகா

சிரமேறும் ஆணவம் குறைத்திடுவாய் - வாழ்வில்
மரமாக இருப்பதையும் ஒழுத்திடுவாய்
உணர்வோடு உனைநினைக்க உதவிடுவாய் - என்றும்
உயிர்ப்போடு வாழ்வதற்கு அருளிடுவாய்   ( வரந்தருவாய் முருகா )

குறைகூறும் மனமகல உதவிடுவாய் - வாழ்வில்
கறையுள்ள செயலனைத்தும் களைந்தெறிவாய்
திறலுடை பெரியோரை இணைத்திடுவாய் - என்றும்
மறவாமல் உனைத்துதிக்க வரமருள்வாய் (வரந்தருவாய் முருகா )

மாறுபடு சூரரினை திருத்தியவா - வாழ்வில்
வேறுமுகம் அமையாது காத்திடுவாய்
காரிருளை கருணையினால் களைந்திடுவாய் - என்றும்
கரிசனைய என்மீது காட்டிடுவாய்  ( வரந்தருவாய் முருகா )


துலையப்போகிறது நம் இனம்! -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-லகம் இயற்றிய கடவுளை, 'பரந்து கெடுக!' எனத் திட்டினான் வள்ளுவன்.
அதுபோலத்தான் நம் ஈழத் தமிழனத்தையும் திட்டத் தோன்றுகிறது.
மண்ணுக்காகத் தம்மைத் தியாகம் செய்த எத்தனையோ இளைஞர்களின்,
இரத்தத்தினதும், தசையினதும் ஈரலிப்பு இன்னும் காயாத நம் மண்ணின் மேல் நின்றுகொண்டு,
கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பதவி ஆசையும், சுயநலமும் பிடித்து,
தமது தேவை நிறைவேற்றுவதற்காய் உரிமை, உணர்ச்சி எனப் பொய்மைபேசி,
மக்களைப் பாதாளம் நோக்கி இழுத்துச் செல்லும் தலைவர்கள் ஒருபுறம்.
🗳 🗳 🗳
தமக்கு நடக்கும் துரோகத்தின் வீச்சைக் கூடத் தெரிந்துகொள்ளாமல்,
பலிபீடத்தில் தாமாய்க் கழுத்தைக் கொண்டுபோய் வைக்கும் ஆடுகள் போல,
அந்த சுயநலத் தலைவர்களின் 'உசுப்பேத்தலுக்கு' ஆட்பட்டு,
'உருவாடி'க் கொண்டிருக்கும் மக்கள் இன்னொரு புறமுமாக,
தேர்தலையொட்டி அசிங்கங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
🗳 🗳 🗳
தமது வீழ்ச்சியைத் தாமே கொண்டாடிக் கொண்டிருக்கும் நம்மக்களையும்,
தம் சொந்த மக்களையே ஏமாற்றிப் பிழைக்க நினைக்கும் தலைவர்களையும் காண,
சகிக்கமுடியாத எரிச்சல் உண்டாகிறது.
இப்படியுமா ஒரு இனம் முட்டாள்த் தனத்தோடு இயங்கும்?
அருவருப்பாக இருக்கிறது.
மாற்றம் வராவிட்டால் - துலையப்போகிறது நம் இனம்.
🗳 🗳 🗳

'வடிவினை முடியக் கண்டார்?' பகுதி 03: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-லகளந்த இறைவனை, அளந்து அறிதல்,

எவர்க்கும் இயலாத காரியம் எனக் கண்டோம்.
இராமனின் தோள், தாள், தடக்கை எனும் பகுதிகளைத் தனிதனி கண்ட,
மிதிலைப் பெண்கள் தாம் இராமனைக் கண்டுவிட்டதாய் நினைந்தாற்போலவே,
தத்தம் சமயங்களினூடு இறைவனைக் காண்போர்,
இறையின் ஒவ்வோர் பகுதிகளை மட்டும் கண்டுவிட்டு,
தாம் இறையைக் கண்டுவிட்டதாய் உரைப்பதனைச் சொல்லி,
அங்கும் ஒரு கேள்வி பிறப்பதாய்க் கூறி சென்ற அத்தியாயத்தை நிறைவு செய்திருந்தேன்.
இனி அவ்வினா என்ன? என்பதைக் காண்பாம்.
🏹 🏹 🏹
சிற்றறிவுடைய ஆன்மாக்களின் அறிவால்,
பேரறிவுடைய இறையின் ஒரு கூறினைத்தானும்,
முழுமையாய்க் காணுதல் கூடுமா?
அங்ஙனம் காணின்,
ஆன்மாக்களின் சிற்றறிவுக்கு அகப்பட்ட குற்றம்,
இறைக்கு ஆகுமன்றோ!
அங்ஙனம் இருக்க,
தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே

எனக் கம்பன் உரைத்தது எங்ஙனம் பொருந்தும்?
இதுவே அவ்வினா.

நாடகத் துறையும் அரசியல் தலைவர்களும் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

.
பெரியாரும் அறிஞர் அண்ணாவும்கலைமூலம் நசுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் உயர்வும் தேட வேண்டும்; சுபீட்சம்  கிட்ட வேண்டும் என்று உழைத்த கலைஞர்களுக்கு உலக அரங்கில் முக்கியமான இடம் உண்டு.

கல்வி அறிவு இல்லாத மக்கள்; எதுவும் கற்று அறிய முடியாதவர்கள்; மூட நம்பிக்கை என்ற இருளிலே வாழ்ந்து மடிபவர்கள்; ஜாதி அடக்குமுறையின் தாங்க முடியாத கஸ்டங்களை அனுபவிப்பவர்கள்; அத்தனைக்கும் காரணம் தம் முற்பிறப்பில் செய்த பாவம் என நம்பும் அப்பாவிகள் மலிந்த இடமாக இருந்தது தமிழ்நாடு.

தாழ்த்தப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்தார் ஒருவர். அவர்தான் பிற்காலத்தில் மக்களால் பெரியார் எனப் போற்றப்பட்ட ஈ.வே.ராமசாமி நாயக்கர். படிப்பறிவற்ற  மக்களுக்கு நாடகம் மூலம் அறிவுக்கண்ணைத் திறந்தார் பெரியார். அதனால் அதுவரை அடிமைத் தனமே தமது வாழ்வு என நம்பியிருந்த மக்கள் சிந்திக்க வழி பிறந்தது. திராவிடக்கழகமும் அதன் ஊழியர்களும் இவரோடு முன்னின்று உழைத்தார்கள். அவர்களில் முக்கியமானவர் க.நா. அண்ணாத்துரை என்ற கலைஞர்.


பெரியாரின் சிந்தனைக்கு நாடக வடிவம் கொடுத்து மக்களின் சிந்தனையைத் தூண்டியவர் அண்ணாத்துரை. பட்டி தொட்டி எங்கும் இவர்களின் நாடகங்கள் நடந்தன. க.நா. அண்ணாத்துரையின் நூல்களை வெளியிட்ட பாரி புத்தக நிலைய அதிபர் செல்லப்பன் ஒருமுறைஇ’ நாடகம் நடக்கும் இடங்களிலே இருக்கைகள் இருக்காது; தென்னோலைகளை வெட்டிக் கிடுகாகப் பின்னி அதன் மேல் உட்கார்ந்துஇ வெட்ட வெளிகளிலே தான் கிராமங்களிலே அண்ணாவின் நாடகங்களை மக்கள் பார்த்தார்கள்’ எனக் கூறினார். ஆனாலும் அடக்கப்பட்டவர் என வாழ்ந்த சமூகத்தின் வாரிசுகள் இன்று தலைநிமிர்ந்து மற்றவர்களுக்குச் சமமாகக் கல்வியிலும் தொழில் முறையிலும் வளர்ந்துள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் அன்று திராவிடக்கழகம் செய்த அயராத முயற்சிகளே எனலாம்.


கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் 21 மாணவர் - ஆசான் நல்லுறவு காலம் தந்திருக்கும் பெருங்கொடை ! மலையகத்தின் வீரம்மா அவுஸ்திரேலியாவிலும் ஒலித்தாள் !!எனது ஆசிரியப்பணியில் கூடுதலான காலம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில்தான் கழிந்தது. என்னிடம் கற்ற ஏராளமான மாணவர்கள் எமது தாயகத்திலும் புகலிட நாடுகளிலும் பரந்து வாழ்கின்றனர்.
அவர்களின் பெயர்கள் அனைத்தையும், எனது முதுமை காரணமாக  நான் மறந்திருக்கலாம். ஆனால், அவர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
ஒவ்வொரு பிள்ளையும் தமது பெற்றோரிடம் செலவிடும் நேரத்தைவிட தத்தமது ஆசிரியரிடம் செலவிடும் நேரம்தான் அதிகம். ஒரு பிள்ளை தனது பெற்றோரின் பெயரை எவ்வாறு மறக்காதிருக்குமோ, அவ்வாறே தனது ஆசிரியரின் பெயரையும் மறந்துவிடாது என்பதையும் அறிவீர்கள்.
அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று எமது முன்னோர்கள்  நால்வரைக்குறித்து விதந்துரைத்திருக்கின்றனர். ஆனால், பாருங்கள் தெய்வத்தை இறுதியாகத்தான் சொல்கிறார்கள்.
அம்மாவிடம் அன்பையும், அப்பாவிடம் அறிவையும், ஆசிரியரிடம் கல்வியுடன் உலக அனுபவங்களையும்தான் ஒவ்வொரு பிள்ளையும் பெற்றுக்கொள்கிறது.
நான் ஆசிரியனாக பணியாற்றிய காலத்திலேயே இலக்கியத்திலும் ஈடுபாடுகாண்பித்தவன். சிறுகதையில் தொடங்கி, கவிதைக்கு வந்து ஆய்வுத்துறையிலும்  எனது கவனத்தை செலுத்தினேன்.
தமிழர் அரசியல் என்னை கவிஞனாக்கிப் பார்த்தது.  இரசிகமணி கனகசெந்திநாதனின் தூண்டுதலால்  மருத்துவத்தமிழ் முன்னோடி கிறீன் பற்றிய ஆய்வுக்குள் பிரவேசித்து, அமெரிக்கா வரையும் செல்ல வைத்து, பாப்புவா நியூகினி, மொரீசியஸ், கனடா, அவுஸ்திரேலியா என்று அலைந்துழன்று உலகலாவிய தமிழரும்,  யாதும் ஊரே, World Wide Tamils என்றெல்லாம் எழுதத் தூண்டி, ஆய்வாளன் என்ற  அடையாளத்தையும் தமிழ் சமூகம் வழங்கியது.
இதிலெல்லாம் எனக்கு பெருமை இருப்பதாகப்படவில்லை.  ஏராளமானவர்களை நன்மாணாக்கராக்கி, சமுதாயத்தில் அவர்கள் நல்லதோர் நிலைக்கு உயர்வதற்கு காரணமாகியிருக்கின்றேன் என்பதுதான் பெருமை என்றும் கருதுகின்றேன்.
இன்றும் பல மாணவர்கள் என்னுடன் தொடர்பிலிருக்கின்றனர். எங்கு காணநேரிட்டாலும்  “ சேர் , சேர் … “   என்று அன்பொழுக அவர்கள் பேசும்போதும், தொலைபேசியில் உரையாடும்போதும் எனது மனம் பூரிப்படைகிறது.
உங்களில் பலருக்கு நன்கு தெரிந்த எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், சிறுவர்களுக்கென்றே பிரத்தியேகமாக நாடகங்கள் எழுதுவதில் வல்லவர், அத்துடன் கல்வி, சமூக விழிப்புணர்வு, இயற்கை விவசாயம் முதலான பல பணிகளில்  ஈடுபாடு மிக்கவரான  மாவை நித்தியானந்தனும் எனது அபிமான மாணவர்தான்.