விக்கிப்பீடியாவில் அசத்தும் ஈழத் தமிழன்! விருதுகளை அள்ளிய மயூரநாதன்

.


ன்று விக்கிபீடியாவில் 85,000-க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் குவிந்துகிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது இ.மயூரநாதனின் பெரும் உழைப்பு.
2001-ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.  அதன் எதிர்கால வீச்சை உணர்ந்து, விக்கிப்பீடியாவோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003-ம் ஆண்டில் தொடங்கினார். அதன் அடிப்படைக் கட்டமைப்புக்காக ஒரு வருடம் தனியாளாக உழைத்தார்.
ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி, ஆன்லைன் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று 88,000 தமிழர்கள் விக்கிப்பீடியாவில் பதிவுசெய்துள்ளனர். இலங்கைத் தமிழரான இவர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிகிறார்.
உலகளாவிய பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை, ஆற்றல் வாய்ந்த குழுமமாக உருவாக்கியது இவரது அரிய சாதனை. இவரே தன்னுடைய முனைப்பால் 4,458 கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். உலகப் பன்மொழித் திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன.


இதில் தமிழ்மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசினால், தமிழ் மொழிக்கான ரேங்க் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும். இதற்கு ஒரே காரணம் மயூரநாதன்.
2017ஆம் ஆண்டிற்கான கனடா இலக்கிய தோட்டத்தின் இயல் விருதை பெற்ற மயூரநாதன், 2019ஆம் ஆண்டில் விகடனின் நம்பிக்கை விருதையும் வென்று சாதனை செய்துள்ளார்.
விக்கிப்பீடியாவில் எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?
ஆங்கில மொழி விக்கிப்பீடியா, 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து உலகின் பல மொழிகளிலும் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. ஆனால், தமிழில் அதற்கான ஆரம்ப முயற்சிகூட அப்போது இல்லை. எல்லா மொழி விக்கிப்பீடியா திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் அமெரிக்காவில் இயங்கும் விக்கிமீடியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருந்தது.
அவர்களின் நோக்கத்தை முழுமையாகப் படித்து அறிந்தேன். பிறகு, தமிழில் விக்கிப்பீடியாவை உருவாக்குவதற்கான அடிப்படை மென்பொருட்களைத் தேர்வு செய்வதுடன் சில அறிவியல் கட்டுரைகளை மொழிபெயர்க்கும் பணிகளையும் செய்தேன்.
முதல் ஒன்பது மாதங்கள் வரை ஏறத்தாழ தனியாகவே தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புச் செய்துவந்தேன். 2004-ம் ஆண்டு பிற்பகுதியில் சுந்தர், ரவி, நற்கீரன், சிறீதரன், சிவகுமார், பேராசிரியர் செல்வகுமார் போன்ற பலரும் இணைந்தனர்.
நான் மட்டும் இதுவரை சிறிதும் பெரிதுமாக 4,300-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை அளித்துள்ளேன். மேலும், பிற பயனர்கள் எழுதிய பல நூறு கட்டுரைகளை விரிவாக்கி யுள்ளேன். பல புதிய ஒளிப்படங்களையும் வரைபடங்களையும் உருவாக்கிப் பதிவேற்றியுள்ளேன்.
விக்கிப்பீடியா தமிழ் பக்கங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியா, ஒரு மாதத்தில் 35 லட்சம் முறை பார்க்கப்படுகிறது. அதாவது, ஒரு நாளில் ஒரு லட்சம் தடவைக்கு மேல் பார்க்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்து கின்றனர்.
விக்கிப்பீடியாவில் யாரும் எழுதலாம் என்ற சுதந்திரம் இருக்கிறது. அதில் உண்மைத் தன்மையை எப்படிச் சரிபார்க்கிறீர்கள்?
யாரும் எழுதலாம் என்பது விக்கித் திட்டங்களின் அடிப்படைகளில் ஒன்று. அதன் வியப்பான வெற்றிக்கு இதுவே முக்கியக் காரணம். விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும் எவரும் பிழையான தகவல்கள் குறித்து, பிற பயனர்களின் கவனத்துக்குக் கொண்டுவர முடியும் அல்லது அவற்றைத் திருத்தவோ, திருத்த முடியாததை முற்றாக நீக்கவோ முடியும்.
பொதுவாக விக்கிப்பீடியாவில் தகவல்களைச் சேர்ப் பவர்கள் எவரும் கட்டுரையில் அதற்கான சான்றுகளைத் தரவேண்டும். சான்றுகள் இல்லாத, ஐயத்துக்கு இடமான தகவல்களுக்கு அருகில் `சான்று தேவை’ எனக் குறிப்பு இடுவதற்கு வசதி உண்டு. நீண்டகாலம் சான்றுகள் சேர்க்கப்படாத, சந்தேகத்துக்கு உரிய தகவல்களை நீக்கலாம்.
சர்ச்சைக்குரிய தகவல்கள் குறித்து, ஒவ்வொரு கட்டுரைக்கும் தனித்தனியாக இருக்கும் உரையாடல் பக்கங்களில் பிற பயனர்களுடன் கலந்துரையாடி மேலதிகத் தகவல்களைப் பெற முடியும். தமிழ் விக்கிப்பீடியாவில் மேலும் பல துறை சார்ந்த பங்களிப்பாளர்கள் இணையும் போது கூடிய அளவுக்கு நம்பகத்தன்மையை உறுதிசெய்து கொள்ள முடியும்.
தமிழில் இதுவரை எத்தனை பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன?
சிறியதும் பெரியதுமாக ஒரு லட்சம் கட்டுரைகள் உள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 36 புதிய கட்டுரைகள் உருவாகின்றன. தமிழ் இலக்கியம், வரலாறு, உயிரினங்கள், சமயம், கலைகள், புகழ்பெற்ற மனிதர்கள் என கட்டுரைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையிலானவை.
அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகள் மேலும் விரிவாக்கப்படவேண்டும். இணையத்தில் இயங்கும் தமிழ் ஆர்வலர்கள், விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்பை செயல்படுத்துவதன் மூலம், எதிர்கால தலைமுறைக்கு தமிழை எடுத்துச் செல்லும் பணி இன்னும் எளிதாகும் இன்னும் விரைவாகும்.

No comments: