“
பேர்த்தில்…. உமக்கு வேலை
எடுப்பது கொஞ்சம் கஷ்டம் சந்திரன். இன்றைக்கு டிலக்ஸ்ஸில் அல்லது அன்ஸட் பயணியரில்
உமக்கு சீட் புக்பண்ணுவோம். “
பாலேந்திரா சொல்வதை அருகே அமர்ந்து கதை கேட்பது போல்
கேட்டுக்கொண்டிருந்தான் சந்திரன்.
“ இன்றைக்கு வேலை இல்லையா..? “
“ இங்கே எமக்கு மாதத்தில் ஒருநாள் ‘ ரொஸ்டர் டே
‘ என்று விடுமுறை தருவார்கள். அதனை
எப்போதும் எடுக்கலாம். இன்றைக்கு எனக்கு நிறைய அலுவல்கள், பேங்க் லோன்… வீட்டின் மோட்கேஜ்
தவணைப்பணம், கார் இன்ஸுரன்ஸ்… யுனிவர்சிட்டியில் ஒரு கோர்ஸுக்காக விண்ணப்பம்… இப்படி…
அதோடு உமக்கும் மெல்பன் போவதற்கு பஸ்ஸில் சீட் புக் பண்ணிவிடலாம் என்று பார்க்கிறன். “
“ உங்கட மிஸிஸுக்கு இன்றைக்கு வேலையாக்கும்…? “
“ ஓமோம்…
சந்திரன்… சொல்ல மறந்திட்டன். நேற்று… வசந்தி
அப்படி கத்தியதை இப்பவும் மனசில் வைத்திருக்கிறீரோ…? “ சிக்னலுக்கு
முன்னே காரை நிறுத்தி, ஸ்டியரிங்கில்
இரண்டு கைகளையும் முழங்கை வரையில் பதிந்து நெஞ்சையும் முகத்தையும் முன்னெடுத்து, முகத்தை
திருப்பிக்கேட்டார் பாலேந்திரா.
“இல்லை… இல்லை… எனக்குப்புரிந்தது “
“வெரி குட்
“
கார் மீண்டும் புறப்பட்டபோது,
சந்திரன் சொன்னான்: “என்னை நீங்கள் இருவரும்
மன்னிக்கவேண்டும் “
“ ஏன்…?
“ பாலேந்திரா சற்று உரத்த தொனியிலேயே கேட்டார்.
“ வந்து… என்ர தம்பியும்… அந்த ‘ஒப்பரேஷன்
‘ ல ஒருத்தனாய் இருக்கவேண்டும் “
“ ஓ… ஐ ஸீ…
அதனாலென்ன சந்திரன்…? நடந்தது நடந்துபோய்விட்டது.
இனி அதைப்பற்றி பேசிப்பயனில்லை. உம்மட தம்பியும்
அதில் ஒருத்தன்தான் என்பதை வசந்தி இப்போது அறிந்தாலும் கோபப்படமாட்டாள். “
“அப்படியென்றால்….?! “
“ சும்மா ஒரு பெருமூச்சுத்தான் விடுவா….”
“ நான் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். இரண்டு
மூன்று நாட்களாக உங்கள் வீட்டில் உப்பைத் தின்றுகொண்டு, அந்த உண்மையை மறைக்க என் மனச்சாட்சி
இடம் கொடுக்கவில்லை. “
“ ஊரில் நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கிறீர்
போலத் தெரியுது…..” பாலேந்திரா சிரித்துக்கொண்டே
கேட்டு அவனது உணர்வை அடக்கினார்.
அன்ஸட் பயணியர்
அலுவலகத்தில் சந்திரனுக்காக ஒரு ஆசனத்தை பதிவுசெய்துவிட்டு திரும்பும்போது, “ இன்றைக்கு இரவுக்கு அந்தப்புலவரின்ட ரெலிபோன்
இலக்கத்தையும் அட்ரஸையும் தாரன். பிறகு ஞாபகப்படுத்தும். “ என்றார் பாலேந்திரா.
“ புலவரா…? யார்…? “