தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல் திரைப்படமாகிறது!

.

ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கின்ற தீபச்செல்வன் திரைத்துறையிலும் தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்கின்றார். அவரது பல்வேறு சிறுகதைகள் ஏற்கனவே குறும்படங்களாக மாறியுள்ளன.
கனடாவைச் சேர்ந்த ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள “சினம் கொள்” திரைப்படத்திலும் பாடலாசிரியர் மற்றும் வசன கர்த்தா என தனது பணியைச் செவ்வனே செய்துள்ளார். அண்மையில், அவரது மற்றுமொரு சிறுகதையான “யாழ் சுமந்த சிறுவன்” கதையையும் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் திரைப்படமாக்கப்போகின்றார் என்ற செய்தியையும் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தீபச்செல்வன் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று பதிந்துள்ளார். அதில், “நடுகல் நாவல் திரைப்படமாகிறது. தமிழகத்தின் முன்னணி நட்சத்திரம் ஒருவர் நடிக்கிறார். திரைப்பட பணிகள் துவங்கி விட்டன. ஈழத்திலும் வெளிநாடு ஒன்றிலும் படப்பிடிப்புகள் நடக்கவுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“நடுகல்” நாவல் கடந்த வருடம் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வரும் நிலையில், அதன் கதை திரைப்படமாக வெளிவருகின்றமை தீபச்செல்வனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்பதுடன், இது ஈழத்தமிழர்களாகிய நமக்கெல்லாம் கிடைத்த பெருமையாகவும் கொள்ள முடியும்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் திரைப்படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்சமயம் அதில் தளர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் “நடுகல்” திரைப்படம் குறித்த மேலதிக தகவல்களை தீபச்செல்வனிடம் இருந்து எதிர்பார்க்கலாம். 

No comments: