பொங்கல்தனை இனிமைபொங்கப் “பொங்கலோ பொங்கல்
பொலிந்திடுக” என்றேபுத் தரிசி கொண்டு
பொங்கியதைப்
புடவிவாழப் பொற்கதிர் வழங்கும்
பொற்புமிகு பரிதிக்குப் படையல்செய்து
பொங்கிநிற்கும் இந்நாளில் தமிழ ரெல்லாம்
புகலரிய ஒற்றுமையை மனதிற் பொங்கிப்
பொங்குமின்பத் “தமிழ்த்தாயை’ நினைந்து வணங்கிப்
போற்றிடவே தைமலர்ந்து வருக வருகவே!
பழையபொருள் கழித்திடவே சேர்த்துத் தீயில்
பலர்கூடி எரித்திடுவர் ‘போகி’ யன்று!
கழைவதற்கு மனதிற்குள் பலபல இருந்தும்
கழிவுகளைச் சிலர்என்றும் ஒழிப்ப தில்லை
உழைத்துழவர்
பெற்றபுது அரிசி பொங்கி
உயர்பண்பாம் நன்றிக்கடன் செலுத்து முன்பு
திழைத்திருப்போர்
மனஅழுக்கை எரித்துப் போக்கிச்
சீர்செய்யத் தைமலர்ந்து வருக வருகவே!