யாருக்கு இருக்கிறது
யாருக்கு இல்லையென்று
யாருக்கும் தெரியாது
பாருக்குள் பரவிருக்கு
வேர்விட்டு விருட்சமாய்
ஆகிவிட்ட கொரனாவின்
ஆபத்தை உணராமல்
அனைவருமே உலவுகிறார் !
மருந்துவந்து விட்டதென
செய்திதான் வருகிறது
மாகொரனா தன்னளவில்
மலர்ச்சியுடன் திரிகிறது
விருந்துண்ண யாவருமே
விரும்பியே எழுகின்றார்
வில்லங்கக் கொரனாவை
விளங்காமல் திரிகின்றார் !
மருத்துவர்கள் யாவருமே
பலகருத்தை பகருகிறார்
உள்வாங்கி உளமிருத்த
யாவருமே தவறுகிறார்
பெருநோயோ மெளனமாய்
பரவுதலைத் தொடர்கிறது
அதைமனதில் இருத்தாமல்
அனைவருமே திரிகின்றார் !
நீறுபூத்த நெருப்பாக
கொரனாவா இருக்கிறது
யாருமதை மனங்கொள்ளா
தாறுமாறாய் திரிகின்றார்
அடுத்தவலை எழும்புதற்கு
ஆவலுடன் நிற்கிறது
அதைமனதில் கொள்ளாமல்
அனைவருமே திரிகின்றார் !
பகுத்தறிவு மனிதர்க்கு
கிடைத்த பெருவரமாகும்
பக்குவமாய் இருப்பதனை
மனமிருத்தல் அவசியமே
விளிப்புணர்வு மனெமெல்லாம்
விசுவரூபம் எடுத்துவிடின்
வெருளவைக்கும் கொரனாவா
விழிபிதுங்கி நின்றுவிடும் !
No comments:
Post a Comment