மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவு
இல்லறத்தின் நல்லறமே இனிமையுடன் வாழுவதே
இல்லறத்தில் பிள்ளைச்செல்வம் எல்லோர்க்கும் பெருவரமே
இல்லறத்தில் இணைவார்க்கு பிள்ளையில்லை எனும்பொழுது
இல்லறமே இணைவார்க்கு இன்பமதை அளிக்காதே !
மணமான மறுவருடம் மழலையினைக் காண்பதுதான்
மகிழ்ச்சியது உச்சமாய் வையகத்தில் இருக்கிறது
மழலையது முகம்பார்த்து மனமெல்லாம் நிறைவுபெறும்
வாழ்வுதனை யாவருமே வாஞ்சையுடன் விரும்புகிறார் !
இனிமையுடை வாத்தியங்கள் இசைகொடுத்து நின்றாலும்
மழலைமொழி வள்ளுவர்க்கு மாவிசையாய் இருந்ததுவே
கனிவுநிறை மழலைமொழி காதினிலே நுழைந்துவிடின்
புவிமீது வேறின்பம் புலனேற்க மறுத்திடுமே !
பிள்ளைவரம் வேண்டுமென்று பிராத்தனைகள் பலவாற்றி
நல்லபடி தானதர்மம் நாளுமே ஆற்றிநின்று
எல்லரிய விரதமெல்லாம் எப்படியோ கடைப்பிடித்து
நல்லதொரு பிள்ளைவேண்டி நாளுமே வேண்டிடுவோம் !