மரண அறிவித்தல்

  ஜோன் பத்திநாதன்


     

தோற்றம்:  07-01-1944                                     மறைவு: 30 -01 – 2021


இலங்கை உடுவிலை  பிறப்பிடமாகவும்,  அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் பண்டூராவை வதிவிடமாகவும் கொண்டிருந்த, 

                                   ஜோன் பத்திநாதன்

இறைவனுடனான நிரந்தர துயிலுக்கு 30-01-2021 ஆம் திகதி சனிக்கிழமை அழைக்கப்பட்டார்.

அன்னார் காலஞ்சென்ற திருமதி றஞ்சி பத்திநாதனின் அன்புக்கணவரும், பற்றிக் சுரேஷ், சிரோமி, ரதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் – தமயந்தி, சுரேஷ் நித்தியானந்தன் ஆகியோரின் அன்பார்ந்த மாமனாரும், றொஷான், றியான்னா, றோவனா, கீயாரா, அய்டீன் ஆகியோரின் அன்பு நிறைந்த பேரனுமாவார்.

யாழ்ப்பாணம் உடுவிலைச்சேர்ந்த அமரத்துவம் எய்திய திரு, திருமதி பத்திநாதன் தம்பதியரின் நான்காவது அருமைப்புதல்வருமான, ஜோன் பத்திநாதன், ஜோசப்பின், ஜோசேப்பு, ஜோய், ( அமரர் ) அருட்தந்தை ஜேம்ஸ், மற்றும் ஜெஸி, மார்கிரட், ஜெனட், ஜெபம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் – ஞானராசா, சபாநாதன், ரவீந்திரன், விஜி சாமுவேல், ( அமரர் ) தேவா அமரசிங்கம், சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அமரத்துவம் எய்தியிருக்கும் ஜோன் பத்திநாதனின் இறுதி நிகழ்வுகள்,  எதிர்வரும் 06 ஆம் திகதி ( 06-02-2021) சனிக்கிழமை முற்பகல் 10-15 மணிக்கு பண்டூரா பரிசுத்த தேமியன் தேவாலயத்தில் ( No 06 , Settlement Road, Bundoora,  Victoria - 3083  ) ஆரம்பமாகி, அதன் பின்னர் இலக்கம் 2265 பிளன்ரி வீதி, விட்டில்ஸீ (   2265, Plenty Road, Whittlesea  3757  ) மயானத்தில் நிறைவுபெறும்.

கொவிட் 19 தொற்றின் காரணமாக சமூக இடைவெளி பேணவேண்டியிருப்பதனால், குடும்ப உறவுகளும் அழைக்கப்பட்ட சிலருமே இறுதி ஆராதனையில் பங்கேற்கத்தக்க சூழ்நிலை உருவாகியுள்ளது.

அமரத்துவம் எய்தியிருக்கும் ஜோன்பத்திநாதனுக்கு பாசத்தின் நிமித்தம் பூங்கொத்துகளோ, மலர்வளையங்களோ சமர்ப்பிக்க விரும்புவோர், தமது மலர்க்காணிக்கையை பணமாக ஜோனின் தம்பியார்                      ( அமரர் ) அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின் நினைவாக வன்னியில் அமைந்துள்ள கல்வி விரிவாக்க நிறுவனத்திற்கு JPM – VEEF – ( JAMES PATHINATHAN MEMORIAL – VANNI EDUCATIONAL ENHANCEMENT FOUNDATION ) செலுத்தலாம்.

வங்கிக்கணக்கிலக்கம் விபரம்:

Hatton National Bank.

JAMES PATHINATHAN MEMORIAL – VANNI EDUCATIONAL ENHANCEMENT FOUNDATION

 A/C No: 183020003083

Swift Code: HBLILKX

மேலதிக தகவல்களுக்கு  அன்னாரின் சகோதரி மார்கிரட் சாமுவேல் அவர்களை  0425 816 590  தொடர்புகொள்ளலாம். 

 

வாசம் பரப்பிய மல்லிகை வாடி வீழ்ந்தது மண்ணில் !


கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 




வாசம் பரப்பிய மல்லிகை
     வாடி வீழ்ந்தது மண்ணில்
தேசம் தெரியும் ஜீவா
     தேசம் விட்டேகினார் விண்ணில் 

வெள்ளுடை வேந்தனாய் ஜீவா
     வீதியில் நடந்துமே திரிந்தார் 
கல்லிலும் முள்ளிலும் நடந்தார்
      கருத்துடன் எழுதியே உயர்ந்தார்

எள்ளவும் அஞ்சவும் மாட்டார்
     எடுத்தை முடித்துமே நிற்பார்
கள்ளமில் மனமுடை  ஜீவா
     காலனின் கையிலே சென்றார் 

மூலையில் ஒதுங்கியே நில்லா
     முயற்சியை கையினில் எடுத்தார்
நாளையே எண்ணியே உளத்தில்
      நம்பிக்கை எழுத்தினில் விதைத்தார் 

இரண்டு இலக்கிய போராளிகளுக்கு எமது அஞ்சலி - செ.பாஸ்கரன்


 


புதிய வருடத்தில் நெஞ்சு கனக்கும் படியான இரண்டு செய்திகள். இலக்கிய போராளிகள் இரண்டு பேருடைய இறப்புச் செய்திகள் தான் அந்த இரண்டு செய்திகளும். நீண்டகாலமாக தேனி என்ற இணையதளத்தை கொடுத்துக்கொண்டிருந்த நண்பர் ஜெமினி கங்காதரன் அவர்களுடைய இறப்பு அதைத் தொடர்ந்து வெளிவந்த முற்போக்கு இலக்கியவாதி, இலக்கிய ஆளுமை மல்லிகை பந்தல் தந்த டொமினிக் ஜீவா அவர்களுடைய இறப்புச்செய்தி வந்து சேர்கிறது.

ஜெமினி சமுதாய நலனுக்காக, பத்திரிகை சுதந்திரத்திற்காக ,காத்திரமான பங்களித்தவர்.  மாற்றுக்கருத்துக்கள் கூற நினைப்பவர்களுக்கு எழுத்து சுதந்திரத்தை கொடுத்து நன்மை தீமைகளை அலசி ஆராய களம் அமைத்துக் கொடுத்த தேனீ இணையத்தளம் நடத்தியவர்.கருத்துக்கள் முரண்பாடாக இருந்தாலும் அதை கருத்து முரண்பாடாக வே பார்க்கின்ற ஒரு மனிதர். தனிமனிதரோடு எந்த விதமான முரண்பாடும் இல்லை கருத்தோடுதான் முரண் படுகின்றேன் என்ற ஒரு மனிதன் அவர் இறந்துவிட்டார், இவ்வுலகை விட்டு சென்று விட்டார்.





அதைத்தொடர்ந்து 46 ஆண்டுகள் தனிமனிதனாக ஒரு இலக்கியச் சஞ்சிகையை

தந்த டொமினிக் ஜீவா அவர்கள். முற்போக்கு இலக்கியம் படைத்துக் கொண்டிருந்த ஒருவர். யாழ்பாணம் சாதித் தீண்டாமையில் மூழ்கடிக்கப்பட்டுக் கிடந்த காலத்தில் ஒரு புரட்சி போராளியாக, எழுத்து போராளியாக, இலக்கிய போராளியாக, சமூகப் புரட்சி புரிந்த ஒரு மனிதன். இவருடைய மல்லிகை பந்தல் எத்தனை எழுத்தாளர்களை உருவாக்கி இருக்கிறது. இன்று பிரபலமாக இருக்கும் பல எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தது இந்த மல்லிகை பந்தல்.


எழுத்தாளர் தளையசிங்கம் அவர்கள் இறந்தபோது " ஒரு உலக எழுத்தாளனை கொன்றுவிடடார்கள்" என்று ஆவேசக் குரலில் ஜீவா அவர்கள் உரையாற்றியது இன்றும் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.


இந்த இரண்டு எழுத்து போராளிகளுக்கும் எமது அஞ்சலிகள், துயரத்தால் வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலிய தமிழ்முரசின் ஆறுதல்கள்.


வரலாறாக திகழும் இலக்கியக்குரல் மல்லிகை ஜீவா ---- முருகபூபதி



யாழ்ப்பாணத்தில் ஜோசப் – மரியம்மா தம்பதியருக்கு 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பிறந்திருக்கும் டொமினிக் ஜீவா,  மல்லிகை எனும் கலை, இலக்கிய மாத இதழை 1966 ஆம் ஆண்டுமுதல், 2012  ஆம் ஆண்டு வரையில்  வெளியிட்டார். அதன் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இருந்து சுயமுயற்சியோடு  அதனை வெளியிடத்தொடங்கியதும்,  மல்லிகை ஜீவா என பரவலாக அறியப்பட்டார்.

அவரது இந்த நாமம் இலங்கையெங்கும் மட்டுமல்ல தமிழகத்தில் இலக்கியவாதிகள் மத்தியிலும் பரவியிருந்தது.

சாதாரண மத்திய தரக்குடும்பத்தில் பிறந்து,  உயர்கல்வியை பெறுவதற்கும் வாய்ப்பு வசதிகளை இழந்து,  அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே  படிக்காத மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா,   இம்மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் புறநகரமான மட்டக்குளியவில் காக்கை தீவில் ஏகபுதல்வன் திலீபனின் இல்லத்தில் தமது 93 வயதில் மறைந்தார். 

இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பின் நூறுவயதையும் எட்டியிருப்பார். 

ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளரகவே இலக்கிய உலகில் பிரவேசித்தவர். அவரது முதலாவது கதைத்தொகுதி தண்ணீரும்  கண்ணீரும். 

அதற்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்தது. அதுவே இலங்கையில் தமிழில் தேசிய மட்டத்தில்   இலக்கியத்திற்காக அவ்வாறு கிடைத்த முதல்விருதுமாகும்!

 

விருதை  வாங்கிக்கொண்டு  யாழ்ப்பாணத்துக்கு  ரயிலில்              திரும்பிவருகிறார்.  ஊர்மக்கள்  அச்சமயம்  யாழ்ப்பாண               மேயராக  பதவியிலிருந்த  துரைராஜாவின்   தலைமையில்    மாலை   அணிவித்து  அவரை  வரவேற்றனர்.

ஈழத்து மூத்த இலக்கியவாதி டொமினிக் ஜீவா நினைவேந்தல்

 அந்தப் பதிவைக் காண

டொமினிக் ஜீவா என்ற இலக்கிய ஆலமரம்

கானா பிரபா


நம்மை விட்டு நேற்று மறைந்தார் என்ற வருத்தமான செய்தியோடு இன்றைய காலை விடிந்திருக்கிறது.

ஈழத்தின் மிக நீண்ட இலக்கிய வரலாற்றைத் தன்னுள் சுமந்த சமூகப் போராளியை விடை கொடுத்து அனுப்புவோம் 🙏

ஜீவா குறித்து முன்னர் நான் பகிர்ந்து கொண்டது.

"திட்டோ பாராட்டோ நான் கவனிக்கப்படுகின்றேன்" டொமினிக் ஜீவா அவர்கள் சொன்ன இந்தக் கருத்து வாழ்வியலில் பல சந்தர்ப்பங்களில் கை கொடுத்திருக்கிறது. 
ஈழ மண்ணில் பிறந்து இருபது முளைக்கையில் நான் புலம்பெயர்ந்து விட்டாலும் இன்றும் என் தாயக நினைவுகளில் மறக்கமுடியாதவை எங்கள் மண்ணில் விளைந்த முக்கியமான எழுத்தாளர் சிலரை  அவர்கள் பரபரப்பாக இயங்கிய காலகட்டத்திலேயே கண்டிருக்கிறேன், பேசியிருக்கிறேன் என்பது தான். 

ஆதர்ஷ எழுத்தாளர் செங்கை ஆழியானின் எழுத்துகளைத் தேடித் தேடிப் படித்த காலத்தில் அப்போது அவருடைய பல சிறுகதைகளின் ஊற்றுக் கண்ணாய்த் திகழ்ந்த மல்லிகை சஞ்சிகை என் வாசிப்பனுபவத்தின் புதிய பக்கங்களைத் திறந்து விட்டது. எழுத்தாளர் சுதாராஜ் அண்ணர், மேமன் கவி உள்ளிட்ட பல ஈழத்து எழுத்தாளர்கள் எனக்கும் அறிமுகமானது மல்லிகையால் தான். அப்போது மல்லிகையின் கடைசி நான்கு பக்கங்களில் வெளியாகும் ஜீவாவின் பதில்களை முதலில் படித்து விட்டுத்தான் மற்றைய பக்கங்களைப் புரட்டுவேன்.


மல்லிகைஜீவாவின் (1927 -2021 ) வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் தனது சைக்கிளை பறிகொடுத்தார் ! 79 வயதிலும் காதலிக்க விரும்பினார் ! ! தன்னை அடையாளம் காண்பிக்காமல் பிச்சை எடுக்கவும் விரும்பினார் ! ! முருகபூபதி


ஈழத்தின் தர்மாவேசக்குரல் மல்லிகை ஜீவா, தனது குரலை  இம்மாதம் 28 ஆம் திகதி நிரந்தரமாக நிறுத்திக்கொண்டாலும், கடந்த சில வருடங்களாகவே இலங்கை தலைப்பட்டினத்திற்கு அப்பால்  புறநகரமான மட்டக்குளியவில் அமைந்த காக்கைதீவு என்ற இடத்தில் ஏகபுதல்வன் திலீபனின் இல்லத்திலிருந்தவாறு மௌனத்தவமியற்றிக்கொண்டிருந்தார்.

மல்லிகை ஜீவாவுடன் எனக்கிருந்த உறவு நான்கரை தசாப்தங்களுக்கும் மேற்பட்டது.  1971 முதல் 1987 தொடக்கம் வரையில் ஒவ்வொரு மாதமும் அவருடன் பல மணிநேரங்களை செலவிட்டிருக்கின்றேன்.

அவருடன் இலங்கையில் பல பிரதேசங்களுக்கும்


இலக்கியப்பயணம் மேற்கொண்டேன். தலைநகரில் அவருடன் வீதிவீதியாக சுற்றியலைந்தேன்.  அவருக்குப்பிடித்தமான உணவகங்களில் பசியையும் போக்கினோம். அவருடனான பயணம் தமிழகம் வரையும் வியாபித்திருந்தது.

அதனால்,  அவரது  93 வயது முதுமையில்  அவரது உடல் நிலையை கருதி,  மறைவுச்செய்தி  எந்தநிமிடத்திலும் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டதாயிருந்தாலும்,  அச்செய்தி உறுதியானபோது உள்ளம் சமநிலையின்றி தவித்துப்போனது.

மின்னஞ்சல் ஊடாகவும் காணொளிகள் வாயிலாகவும் வந்துகொண்டிருந்த பதிவுகளை கண்ணுற்றபோது,  மனம் பேதலித்து தொண்டை அடைக்கிறது.  விம்மலை அடக்க பிரயத்தனப்படவேண்டியிருக்கிறது.

மல்லிகை ஜீவாவின் மறைவில் இன்னுமொரு வரலாறு எழும் ! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகர் அனுதாபச் செய்தி


 “ சிறு வயதிலேயே தானும் தனது சமூகமும் முடக்கப்படுகிறோம் என தான் உணர்ந்த நாளில் இருந்து தான் இறக்கும் நாள் வரை ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தின் குரலாக ஒலித்தவர் 'மல்லிகை' இலக்கிய இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா. அன்னாரின் மறைவில் இருந்து இன்னுமொரு வரலாறு எழும்  “ என்று  எழுத்தாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் விடுத்திருக்கும்

அஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கிய உலகில் வலம் வந்த எழுத்தாளரும் இலக்கிய செயற்பாட்டாளருமான டொமினிக் ஜீவா தனது 94 வது வயதில் கடந்த வியாழன் அன்று கொழும்பில் காலமானார். அன்னாரின் மறைவை அடுத்து விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பிலேயே எம். திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“  ஜீவா என்றதும் ஈழத்து இலக்கிய பரப்பில் முதலில் நினைவுக்கு வரும் தோற்றம் அந்த வெள்ளைக் கதராடையும் வேட்டியும் அணிந்த கம்பீரத்தோற்றம். அவரது நடையில், உடையில், பேச்சில் என எல்லாவற்றிலும் ஒரு கர்வம் கலந்த கம்பீரம் இருந்து கொண்டே இருக்கும். 

இலக்கிய உலகில் சிறு சஞ்சிகைக்கு என தனி வரலாறு உண்டு. தொடங்கி இரண்டு மூன்று இதழ்களில் நின்று போவதுதான் அந்த வரலாறு. ஆனால்,  தான் தொடங்கிய               ' மல்லிகை' எனும் இலக்கிய இதழை பல ஆண்டுகாலம் வெளியிட்டு சாதனை படைத்தவர் டொமினிக் ஜீவா.

மல்லிகை ஜீவாவுக்கு இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும் யாழ்ப்பாணத்தில் நினைவு மண்டபமும் அமைக்கப்படல் வேண்டும் நேற்றைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்பு


 “ மல்லிகை ஜீவா
அவர்கள் ஈழத்து தமிழ்த்தேசிய இலக்கிய வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்.  ஈழத்து எழுத்தாளர்கள் பலருக்கு களம் வழங்கி  ஈழத்து இலக்கிய செல்நெறிக்கு உந்துசக்தியாக விளங்கியவர்.

 

சாதாரண அடிநிலை சமூகத்தில் பிறந்து  அச்சமூகத்தின் குரலாக இலக்கியத்தில் ஒலித்தவர்.  ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு வளம்சேர்ப்பதற்காக யாழ்ப்பாணத்தில்  1966 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மல்லிகை மாசிகையை ஆரம்பித்தவர்.

 

இடையில் போர்க்காலம் தோன்றியவேளையிலும் சளைக்காது


குறைந்த வளங்களுடன் மல்லிகையை வெளிக்கொணர்ந்தவர்.

 

இலங்கையில் தமிழ் படைப்பு இலக்கியத்திற்கு முதல் முதலில் தேசிய சாகித்திய விருதும் பெற்றவர்.  அத்துடன் தேசத்தின் கண் என்ற உயரிய விருதையும் சாகித்திய இரத்தினா விருதையும், கனடா இலக்கியத்தோட்டத்தின்  "இயல்விருது “ உட்பட  பல விருதுகளும் பெற்றவர்.

 

மூவின இலக்கியவாதிகளால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இன நல்லிணக்கத்திற்காக மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கும் தமது மல்லிகை இதழில் முன்னுரிமை வழங்கியவர்.

 

நூற்றுக்கணக்கான மூவின கலை, இலக்கிய ஆளுமைகள் மற்றும் சமூகப்பணியாளர்கள் மற்றும்  இலக்கிய பேராசிரியர்களின் படங்களை  மல்லிகை இதழ்களின் முகப்பில் பதிவுசெய்து பாராட்டி கௌரவித்து  மல்லிகை  இதழிலே  அவர்கள் பற்றிய கருத்துச்செறிவு மிக்க ஆக்கங்களையும் வெளிவரச்செய்தவர்.

தகப்பன் சாமியின் தைப்பூசத் திருநாள் !

  


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்  மெல்பேண் ... ஆஸ்திரேலியா 


     கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக கந்தப்பெருமான் விளங்குகின்றார். அவரது அருங்கருணையால் அனைவருக்கும்  அல்லல் அகன்று அகமகிழ்வு ஏற்பட வழி பிறக்கிறது.அடியார் ஒரடி நடந்தால் ஆண்டவன் நூறடிவருவான்.அடியார் நூறடி நடந்தால் ஆண்டவன் ஆயிரமடி வருவான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். முருகா என்று ஒருமுறை அழைத்தால் - இம்மைக்கும் மறுமைக்கும் என்றுமே நல்லதையே முருகப்பெருமான் நல்குவான்.அந்த அளவுக்கு அளப்பெரும் ஆற்றல் கொண்டவன் முருகப்பெருமான்.

    கலியுகத்தில் எவர் வாயிலும் முதலில் வருகின்ற வார்த்தை " முருகா " என்பதே யாகும்.ஓம்முருகா - ஓம்முருகா - என்று அழைக்கும் பொழுது , உள்ளமெலாம் பூரிக்கின்றது ! உடலிலே ஒருவித பரவசம் உருவாகிறது ! உணர்வுகள் தூய்மை அடைகின்றன.

     அழகுஆற்றல்,கருணைநிரம்பிய முருகப்பெருமானுக்கு பல விசேட தினங்கள் இருந்தாலும் " தைப்பூசம் " மிகவும் சிறப்பானதாக அடியவர்களால் முருகனுக்குரிய சிறப்புத் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தைமாதத்தில் பெளர்ணமியில் வருகின்ற பூச நட்சத்திரத்தன்று முருகனுக்கு உகந்த தினமாக நீண்ட காலமாக தைப்பூசப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது எனலாம்.

    இந்த விழா இன்று நேற்று ஏற்பட்டதல்ல.தேவாரம் பாடிய செல்வக் குழந்தை திருஞானசம்பந்தர் காலம் முதல் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.பழைய இலக்கியங்களிலும் இவ்விழா பற்றி சொல்லப்பட்டிரு க்கிறது.

வினை விதைத்தவன் வினையே அறுப்பான்! விழி பிதுங்கி தவிக்கும் கோட்டாபய அரசு - பகிரங்க தகவல்


26/01/2021  எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி போய் தத்தளிக்கிறது. வினை விதைத்தவன், வினையையே அறுப்பான் என்ற சான்றோர் மொழிக்கு உதாரணமாக திகழ்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இது இவர்களது இனவாத பரம்பரை பழக்கம். எமது நல்லாட்சியின் போது தேசிய இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச தீர்வு திட்டத்தை, புதிய அரசியல் அமைப்பாக நாம் கொண்டு வர முயற்சி செய்த போது, அதை எதிர்த்து நாட்டில் பேரினவாத தீயை பற்ற வைத்தவர்கள் இவர்களாகும். இவர்களை ஒதுக்கி தள்ளி ஆரம்பித்த பணியினை முடிக்க, அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முதுகெலும்பு இருக்கவில்லை.

அதைபோல், அமெரிக்க அரசுடன் எம்சிசி ஒப்பந்தம் குறிந்து நாம் பேசிய போது, அதை எதிர்த்து நாட்டை தீ வைத்து கொளுத்தி, இதுபற்றி ஒன்றுமே தெரியாத, வண. உடுதும்பர காஸ்யப்ப என்ற பெளத்த தேரரை கொண்டு வந்து எம்சிசிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வைத்தவர்கள், இவர்களாகும்.

வீதிக்கு இறங்க நேரிடும் - ராஜபக்ஷ அரசை எச்சரிக்கும் தேரர்


27/01/2021  கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க வீதிக்கிறங்கி போராடவும் தயார் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்துமைத் அவர்,

நல்லாட்சி அரசாங்கம் மக்களது ஆணைக்கு முரணாக செயற்பட்டதால் தான் ஜனநாயக ரீதியில் புறக்கணிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சி மீது நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளார்கள்.

மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும்.

சாதுரிய மாகநாமும் வாழ்வில் உயரச் சத்தியமே எமைக்காக்துத் தருமே வெற்றி!

               


 ...........பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்.



வானிலொளி பரப்பத்தினம் கதிரவன் உதிப்பான்!

   வயதான அவன்வாழ்வில் ஒளியே இல்லை

மேனியிலே ஆடையில்லை! மானங் காக்கும்

   மிகக்கிழிந்த பழுப்புநிறக் கந்தல் துண்டு!

ஏனின்னும் வாழ்கின்றேன் என்று தின மேங்கி

   இறைவனையே துதித்தவண்ணம் வீதி யோரம்

கூனிநின்று வாய்பொத்திப் பிச்சை ஏற்கக்

   கொண்டபொருள் ஒன்றேதான் தகர 'டப்பா'!


வழமைபோல வீதியெலாம் சுற்றிச் சுற்றி

   வந்தகளைப்(பு) ஆறிடவோர் சாலை ஓரம்

நிழலைமட்டும் தந்தஎழில் மரத்தின்  அடியில்

   நீட்டியகை யுடனமர்ந்து பகற்கனாக் கண்டான்!

மழமழவென்(று) அப்பாதை செல்வோரக்(கு); அவனின்

   வறுமைநிலை கண்களிலே தோற்ற வில்லை!

'இளமுருகா! இன்றும்நான் வெறும்வயிற் றுடனே

   இங்கேதான் தூங்குவதா? என்றழுத வேளை...

ஸ்வீட் சிக்ஸ்ட்டி (1961) கப்பலோட்டிய தமிழன் - ச. சுந்தரதாஸ் -1

இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஆரம்பகாலத்து சுதந்திர வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை, செக்கிழுத்த செம்மல் என்று பாராட்டப்படும் இந்த தியாகியின் வாழ்க்கையை பிரபல தயாரிப்பாளரும் டைரக்டருமான பிஆர் பந்துலு 1961இல் படமாக்கினார். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர்களின் வரலாறு என்பதால் அவர்களின் பாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் கவனமாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

வ உ சியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிக விரும்பி வேடம் பூண்டார். மகாகவி பாரதியாராக எஸ் வி சுப்பையா , சுப்பிரமணிய சிவாவாக டி கே சண்முகமம் நடித்தார்கள். நடித்தார்கள் என்பதை விட அந்த நாயகர்களாக வாழ்ந்தார்கள் என்று கூறலாம்.

ஏற்கெனவே வரலாற்று நாயகனான வீரபாண்டிய கட்டபொம்மனின் கதையை படமாக்கி மாபெரும் வெற்றி கண்ட பந்துலு மிகுந்த நம்பிக்கையோடு இந்தப் படத்தையும் தயாரித்தார். அவரின் இலட்சிய படமாக இது உருவானது. எஸ் டி சுந்தரம் படத்தின் வசனங்களை எழுத சிலம்புச் செல்வர் ம பொ சிவஞானம் படத்தின் கதையை படத்திற்கு ஏற்றாற்போல் அமைத்திருந்தார். மிகை நடிப்பு எட்டிப் பார்க்காத விதத்தில் எல்லோரும் நடித்திருந்தார்கள்.


இலங்கைச் செய்திகள்

கொவிட் தடுப்பூசி முதல் தொகுதி ஜனாதிபதியிடம் கையளிப்பு

கிழக்கு முனையம் தொடர்பில் நெருக்கடி; நாளை முதல் சட்டப்படி வேலை செய்ய தீர்மானம்

இந்துக் கோவிலை காணவில்லை பொலிஸில் புகார் செய்த ரவிகரன்

துறைமுக சேவைகள் அத்தியாவசியமானவை; வர்த்தமானி வெளியீடு

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரி ஊடக அமைப்புக்கள் போராட்டம்

புதிய சட்டம் நடைமுறையில்; பழைய வழக்குகளை மீளப்பெறவும்


 கொவிட் தடுப்பூசி முதல் தொகுதி ஜனாதிபதியிடம் கையளிப்பு

கொவிட் தடுப்பூசி முதல் தொகுதி ஜனாதிபதியிடம் கையளிப்பு-India's COVID19 Vaccine Officially Hands Over to President Gotabaya Rajapaksa

- நாளை முதல் தடுப்பூசி வழங்கப்படும்
- பிடிக்காதவர்கள் எடுக்காதிருக்கலாம்

இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் முதல் தொகுதி, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் இன்று (28) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பைடன் முதல்முறை தொலைபேசி உரையாடல்

ட்ரம்ப் மீதான விசாரணைக்கு குடியரசு உறுப்பினர் எதிர்ப்பு 

ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கு பிரிட்டனின் சிறப்பு 'விசா' அறிமுகம்

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இணைய அமெரிக்கா நிபந்தனை


ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பைடன் முதல்முறை தொலைபேசி உரையாடல் 

தேர்தல் தலையீடு பற்றி எச்சரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் முதல்முறை தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தேர்தல் தலையீடு பற்றி எச்சரிக்கை விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் தற்போது இடம்பெறும் எதிர்க்கட்சியனரின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமெரிக்கா–ரஷ்யாவுக்கு இடையே கடைசியாக எஞ்சியிருக்கும் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பிலும் இந்த உரையாடலில் பேசப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள் அளித்த இந்த பரிசுக்கு நன்றி. ஆஸி வீரர் நாதன் லயன் வெளியிட்ட புகைப்படம்.

Jan 28, 2021, 10:54AM IST 

இந்திய அணியை கொடுத்த இந்த பரிசுக்கு மிகவும் நன்றி என நாதன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அந்த கையெழுத்திட்ட ஜெர்ஸ்ஸியின் புகைப்படத்தில் அனைவரும் கையெழுத்திட்டு இருக்க அதில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட் மட்டும் கையெழுத்திட்டு ஒரு ஸ்மைலி வரைந்து வைத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இந்திய அணி இத்தொடரை முழுவதுமாக இழக்கும் என்று கூறிய நிலையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது. அதிலும் குறிப்பாக 32 ஆண்டுகள் கழித்து பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது.

சிட்னியில் புதிய சித்திரை தேர்


சிட்னி முருகன் ஆலயத்தில் புதிய சித்திரை தேருக்கு வேலைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.  மார்ச் மாதம் 27ம்  திகதி தேர்த் திருவிழா நடைபெறும்.

யாழில் தனியார் காணியில் அமையவுள்ள பௌத்த விகாரைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் சவேந்திர சில்வாவால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு!

30/01/2021  வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சமய வழிபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் நிரந்தரக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நாடப்பட்டுள்ளது.

தையிட்டி பெண்கள் காவலரனுக்கு அருகாமையில் இந்த விகாரை தனியார் காணியில் அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் இடம்பெற்றுள்ளன.

“தைப்பூசம்” விசேஷமாக கொண்டாடப்படுவதற்கு காரணம் என்ன? நல்ல காரியங்கள் தொடங்கலாமா? சாஸ்த்திரம் கூறும் உண்மைகள்

தை மாதம் பிறந்து விட்டாலே வரிசையாக தெய்வ வழிபாட்டிற்கு உரிய நாட்களும் வந்து பக்தி பரவசத்தை ஏற்படுத்தும். அந்த வரிசையில் வியாழக்கிழமை இன்று பூச நட்சத்திரத்தில் முருகனுக்கு விசேஷ வழிபாடுகள் செய்யப்படும். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் இந்த தைப்பூசம் அனைத்து முருகன் கோவில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

நாள் முழுவதும் பூச நட்சத்திரம் இருப்பதால் காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருந்து முருகனை தரிசித்து, வழிபாடுகள் செய்தால் வறுமை நீங்கி செல்வமும், வசதி வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். இந்த நாளில் குரு பகவானையும், சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுவது விசேஷம்.

மேலும் இறைவன் ஒளி வடிவில் இருக்கிறார் என்பதை உணர்த்திய மற்றும் மக்களின் பசி தீர்க்க இன்றும் அவர் பெயரில் அன்னதானம் நடந்து கொண்டிருக்கும் ஜீவ ஜோதியில் இரண்டர கலந்த வள்ளலார் பெருமானையும் தைப்பூசத்தில் வணங்குபவர்களுக்கு, அவர் பெயரை சொல்லி உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்வதும் நோயற்ற, வறுமை இல்லாத ஆரோக்கியமான வாழ்வை தரும்.

கபடதாரி - திரைவிமர்சனம்

 கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாமல் இருந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்கில் வெளியானது. மேலும் அந்த இரண்டு திரைப்படங்களுக்கும் மக்கள் கொடுத்த வரவேற்பை அடுத்து திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கபடதாரி. இப்படமும் அத்தகைய வரவேற்பை பெறுமா? பார்ப்போம்.

கதைக்களம்


சக்தி ஒரு போக்குவரத்து துணை ஆய்வாளர், அவர் விரைவில் குற்றப்பிரிவிற்கு மாற விரும்புகிறார். உயர் அதிகாரிகள் அவரின் கோரிக்கைகளை பலமுறை நிராகரிக்கின்றனர். ஒரு நாள், இறந்த மூன்று நபர்களின் எலும்புகள் அவரது பணியிடத்திற்கு அருகில் தோண்டப்படுகின்றன.

கடமையில் இருக்கும் காவல்துறையினர் அதிக முயற்சி எடுக்கவில்லை என்பதால், சக்தி அந்த கேஸை தனது கையில் எடுத்து வழக்கை தீர்க்க முடிவு செய்கிறார். அதை எவ்வாறு தீர்ப்பது மற்றும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து கூறியுள்ளது தான் இந்த கபடதாரியின் கதை.

படத்தை பற்றிய அலசல்

இது ஒரு திடமான கதையைக் கொண்டிருந்த கன்னட திரைப்படமான காவலுடாரி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். கபடதாரி எந்தவிதமான பெரிய மாற்றங்களும் இல்லாமல் தமிழுக்கு ஏற்றார் போல் சிறப்பாக கூறியுள்ளது என்று தான் கூறவேண்டும். இதுவே இந்த படத்திற்கும் ஒரு பலமாகிறது.

இப்படம் 1975-ல் தொடங்குகிறது, மேலும் அந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் சிறப்பாக உள்ளது, தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில்அந்த காட்சிகள் அசலாக வந்துள்ளது.

சிபிராஜ், நாசர் மற்றும் ஜெயபிரகாஷ் அனைவரும் அவர்களின் நடிப்பில் பிரகாசிக்கிறார்கள். மற்ற நடிகர்களின் நடிப்பும் சிறப்பாக இருந்திருந்தால் அது நிச்சயம் படத்திற்கு மேலும் ஒரு வலுசேர்த்திருக்கும். அதுமட்டுமின்றி படத்தின் மிகப்பெரிய பலம் ஹேமந்த் M. ராவ் எழுதிய கதை தான், எழுத்து மிகவும் வலுவாக உள்ளதால், பார்ப்போர்கள் கவனத்தை ஈர்க்கவும், கடைசி வரை உங்களை ஈடுபடுத்தவும் செய்கிறது.

முதல் சில நிமிடங்கள் இன்னும் நேர்த்தியுடன் கையாளப்பட்டிருக்கலாம், ஏனென்றால் இது படத்தின் மற்ற பகுதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிகிறது. படம் முக்கிய எண்ணத்தில் குதித்தவுடன், படம் எப்படியாவது உங்களை கவர்ந்திழுக்கும். மேலும் சைமன் கிங்கின் பின்னணி இசை படத்தை என்னும் விறுவிறுப்பாகிறது.

படத்தின் திரைக்கதை சிறப்பாக உள்ளது.மேலே குறிப்பிட்டுள்ள படி, மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், படம் உங்களை ஈடுபடுத்துகிறதா? என்றால் பதில் ஆம். ஆனால் சிறப்பான ரீமேக்கா என்று பார்க்கையில் கபடதாரி கொஞ்சம் குறைவு தான். முதலில் கபடதாரியை பார்ப்பவர்களுக்கு, இது நிச்சயமாக தமிழ் சினிமாவில் வந்த த்ரில்லர் வகை படங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கும்.

க்ளாப்ஸ்

சிபிசத்யராஜ், நாசர், ஜெயபிரகாஷ் நடிப்பு

சைமன் கிங்கின் பிண்ணனி இசை

கதைக்களம்

பல்ப்ஸ்

படத்தின் நீளம்

மொத்தத்தில் கபடதாரி டீசண்ட் ரீமேக், முதன் முறை பார்ப்பவர்களுக்கு நல்ல திரில்லராக அமையும்.

ன்றி CineUlagam