08/12/2017 இலங்கை பயணி ஒருவருக்கு மெல்போர்ன் நீதிமன்றத்தினால் குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பறந்து கொண்டிருந்த மலேசிய விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி சக பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய இலங்கை பயணிக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மெல்போர்னில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய ஏர்வேஸ் ஆர்128 என்ற விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
அதற்கமைய இலங்கையை சேர்ந்த மனோத் மார்க்ஸ் என்ற 25 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.
விமானம் பறந்து உயர்ந்ததும் கையில் வெடிகுண்டு போன்ற ஒரு பொருளை வைத்திருந்த இலங்கை பயணி அத்துமீறி விமானியின் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார். இதை கண்ட சக பயணிகள் அச்சமடைந்தனர். எனினும் சாதுரியமாக செயல்பட்ட பயணிகள் அந்த நபரை பிடித்து விமான இருக்கையில் கட்டி வைத்தனர். சம்பவத்தை அடுத்து விமானம் மீண்டும் மெல்போர்னுக்கு திருப்பப்பட்டது.
அங்கு விமான நிலையத்தில் பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் அவர் மனநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றவர் என தெரியவந்துள்ளது.
அவர் கையில் வைத்திருந்தது ப்ளுடூத் என தெரிவித்துள்ள பொலிஸார், இந்த சம்பவத்தில் தீவிரவாத நோக்கம் எதுவும்  இல்லை என குறிப்பிட்டுள்ளனர். மெல்போர்னுக்கு திரும்ப கொண்டு வரப்பட்ட பயணிகள் உரிய ஓய்வுக்கு பின்னர் வேறு விமானத்தில் கோலாலம்பூர் புறப்பட்டனர்.
எனினும் இந்த விமானத்தை திசை திருப்பி, பயணிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மெல்போர்னில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக மெல்போர்ன் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
எனினும் இவரது குற்றச்சாட்டுகள் மீளப்பெறலாம் என கூறப்படுகின்றது. நன்றி வீரகேசரி